முன்னுரை
தமிழகத்தில் கோடை வெயில் சதத்தைத் தாண்டித் தகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வெப்பத்தையும் மீறி மக்களை ஒருபுறம் சிரிக்கவும் மறுபுறம் சிந்திக்கவும் வைத்துக் கொண்டிருக்கிறது தேர்தல் களம்.
ஐந்து ஆண்டுகள் பொதுமக்களின் கண்களுக்குப் புலப்படாமல் இருந்த பலர், தேர்தல் வந்தவுடன் திடீரென மக்களின் நடுவில் தோன்றுவது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசியல் நாடகத்தின் வழக்கமான காட்சியாக மாறிவிட்டது.
வேட்பாளர்களின் விஸ்வரூப ‘நடிப்பு’ அவதாரங்கள்
தேர்தல் வந்துவிட்டால் போதும், அதுவரை குளிரூட்டப்பட்ட அறைகளிலும் சொகுசு கார்களிலும் வலம் வந்தவர்கள் திடீரென “மண்ணின் மைந்தர்கள்” ஆக மாறிவிடுகிறார்கள். ஐந்து ஆண்டுகள் காணாமல் போனவர்கள், ஐந்து நிமிட வீடியோவுக்காக மண்ணில் இறங்கும் அதிசய காலம் இதுதான்.
- களத்தில் இறங்கிய ‘விவசாயிகள்’: சேற்றில் இறங்கி நாற்று நடும் வேட்பாளர், அந்த நாற்றைத் தலைகீழாகப் பிடித்திருப்பது கூடத் தெரியாமல் கேமராவுக்குப் போஸ் கொடுக்கிறார்.
- தொழிலாளர் அவதாரம்: சிமெண்ட் தொழிலாளியாக மாறி ஹாலோ பிளாக் கல் வடிப்பது, டீக்கடையில் வடை சுடுவது, காய்கறி கடையில் தராசு பிடித்து வியாபாரம் செய்வது என இவர்களின் நடிப்புக்கு எல்லையே இல்லை. துணி துவைக்கும் பெண்ணிடம் இருந்து துணியைப் பிடுங்கி, 'வாஷிங் மெஷின்' தோற்கும் அளவுக்குத் துவைத்துக் காட்டும் வேட்பாளர்களும் உண்டு.
- அப்பளம் முதல் பிரியாணி வரை: ஒரு வேட்பாளர் அப்பளம் காய வைக்கிறார், தோசை சுடுகிறார்; மற்றொருவர் லாவகமாகப் பிரியாணி பொட்டலம் கட்டித் தருகிறார். சாலையில் செல்லும் பாட்டியின் காலில் விழுவது முதல், குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவது வரை இவையனைத்தும் 'பெர்ஃபார்மன்ஸ்' என்பதே அனைவருக்கும் தெரிந்த உண்மை.
சின்னம் மாறும் சித்து விளையாட்டுகள்
கூட்டணி அரசியலில் நடக்கும் குழப்பங்கள் தனி ரகம். நேற்று வரை ஒரு கட்சியின் கொடியைத் தன் வாகனத்தில் கட்டியவர், இன்று சீட் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கொடியைக் கழற்றிவிட்டுப் புதிய கொடியைக் கட்டுகிறார். கொடி மாறும் வேகம் தேர்தல் காற்றின் திசையை விட வேகமாக இருக்கும்.
சில இடங்களில் உச்சகட்டக் காமெடியாக, கூட்டணி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை மறந்துவிட்டு, தன் பழைய கட்சியின் சின்னத்திற்கோ அல்லது பக்கத்துத் தொகுதி சின்னத்திற்கோ வாக்கு சேகரிக்கும் காட்சிகளும் அரங்கேறுகின்றன.
‘பல்’ இளிக்கும் புகழுரைகள்
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்குத் தேர்தல் காலமே பெரிய சான்று. நேற்று வரை மேடைக்கு மேடை யாரைத் தரம் தாழ்ந்து விமர்சித்தார்களோ, இன்று அதே நபரை “நல்லவர், வல்லவர், ஆற்றல் மிக்கவர்” என்று பல் இளித்துக் கொண்டே புகழ்கிறார்கள்.
நேற்று விமர்சனங்கள் மழையாகப் பொழிந்த மேடைகளிலேயே இன்று புகழ்ச்சிகள் மலர்கின்றன. அரசியலில் “நினைவிழப்பு நோய்” மிக வேகமாகப் பரவும் தொற்றுநோயாகத் தோன்றுகிறது.
சட்டமன்ற உறுப்பினர்: உரிமையும் அறியாமையும்
ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அடிப்படை உரிமை என்ன, கடமை என்ன, ஒரு சட்டம் எப்படி உருவாகிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சிலர் களத்தில் குதிக்கிறார்கள்.
“வானத்தை வில்லாக வளைப்பேன்”, “வைகையை வண்டலூருக்கு கொண்டு வருவேன்” போன்ற சாத்தியமற்ற வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. இவர்களின் பேச்சைக் கேட்கும் போது இது ஜனநாயகத் தேர்தலா அல்லது ஜகஜால வித்தைக்காரர்களின் திருவிழாவா என்ற சந்தேகம் எழுகிறது.
நரகலில் நல்லரிசி தேடும் படலம்
இந்தக் காட்சிகள் எல்லாம் வெளிப்படையாகப் பார்த்தால் நகைச்சுவையாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் ஒரு கசப்பான உண்மை இருக்கிறது.
நான் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் (ம.க.இ.க) முன்பு களப்பணியில் இருந்தபோது அடிக்கடி பயன்படுத்திய ஒரு வாசகம் உண்டு:
“நரகலில் நல்லரிசி தேடுவதுதான் இந்தத் தேர்தல்.”
இன்றும் அந்த நிலை பெரிய மாற்றமின்றித் தொடர்கிறது. இத்தனை வேஷங்களையும், பொய்களையும், அரசியல் நாடகங்களையும் தாண்டியே மக்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.
காமெடி பீசுகளும் ஆபத்தான அரசியலும்
இந்தத் தேர்தல் காமெடிகளை நாம் சிரித்தபடியே கடந்து செல்லலாம். ஆனால் அதே நேரத்தில் சமூக சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பின்னோக்கித் தள்ளக்கூடிய சனாதன மதவாத சக்திகள் அரசியல் களத்தில் அமைதியாக முன்னேறிக் கொண்டிருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
ஒரு வேட்பாளரின் காமெடி என்பது தனிப்பட்ட ஏமாற்றமாக முடிந்துவிடலாம். ஆனால் சனாதன சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் அது மிகப்பெரும் ஆபத்தில் முடியும்.
பிழைப்புவாதிகளும், காமெடி பீசுகளும், சனாதன சக்திகளும் கோலோச்சும் இந்தத் தேர்தல் அரசியலில், நேரடியாகப் பங்கேற்காமல் இதுவரை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த புரட்சிகர சக்திகள் இனிவரும் காலங்களிலாவது நேரடியாகக் களம் இறங்கி மக்களிடையே செல்வாக்கு செலுத்தவில்லை என்றால் இந்த அவலம் தொடரவே செய்யும்.
முடிவுரை
தேர்தல் களம் ஒரு காமெடி மேடையாக மாறியிருக்கலாம். ஆனால் அந்த மேடையில் நடக்கும் நாடகங்களைத் தாண்டியும் வாக்காளர்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது.
“நரகலில் நல்லரிசி தேடுவது” போன்ற கடினமான சூழ்நிலையிலும், சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தான சக்திகள் முன்னேறாதபடி காமெடியன்களைச் சகித்துக் கொண்டாலும், சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தான சக்திகளைத் தடுத்து நிறுத்துவதுதான் இன்றைய காலத்தின் முக்கிய பொறுப்பு.
தமிழ்மணி

No comments:
Post a Comment