Sunday, 19 April 2026

தேர்தல் கால 'எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்': அரசியல் அலப்பறைகள்!

முன்னுரை

தேர்தல் வந்துவிட்டாலே போதும். நம் அரசியல்வாதிகள் திடீரென ‘சகலகலா வல்லவர்கள்’ ஆகிவிடுகிறார்கள். நேற்று வரை ஏசி அறையில் ஓய்வை நாடியவர்கள், இன்று மாட்டுத் தொழுவத்தில் பால் கறப்பதும், மாட்டு வண்டியில் அமர்ந்து ஊர்வலம் வருவதும் பார்ப்பதற்கு உண்மையிலேயே ‘ஆஸ்கார்’ விருதுக்கான நடிப்புதான்.

கோப்புப் படம்

'மினிஸ்டர் ஒயிட்': அழுக்கை மறைக்கும் வெள்ளைத் திரை

வெயில் காலத்திற்கு வெள்ளை உடை பொருத்தமானது. ஆனால் ஆண்டு முழுவதும் ஆண் அரசியல்வாதிகள் ‘மினிஸ்டர் ஒயிட்’டில் மட்டுமே வலம் வருவது ஏன்? பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க ‘ஃபேரன் லவ்லி’ கிரீம் பூசுவது போல, இவர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ள கறையை மறைக்க இந்த வெள்ளை உடையை ஒரு கவசமாகப் பயன்படுத்துகிறார்களோ என்ற எண்ணத்தான் தோன்றுகிறது.

பெண் அரசியல்வாதிகள் வண்ணமயமான ஆடைகளில் வலம் வருகிறார்கள். அவர்களுக்கு மட்டும் வெயில் உரைக்காதா? அல்லது வெண்மை அவர்களுக்கு ஆபத்தா? சரி, உடையைப் பற்றி விவாதிப்பதை விட, உள்ளத்தில் இருக்கும் நேர்மையைப் பற்றி பேசுவது மிகவும் அவசியம்.

கற்பூர ஒளியும் 'கரன்சி' ரகசியமும்

சிலர் தேவாலயத்தில் மண்டியிடுகிறார்கள். சிலர் ஆலயங்களில் ஆசி பெறுகிறார்கள். தெருவுக்கு தெரு மகளிர் திரண்டு வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். இந்த உற்சாகத்திற்குப் பின்னால், ஆரத்தித் தட்டுகளுக்கு அடியில் ஒட்டியிருக்கும் கரன்சி நோட்டுகள் நம் கண்களுக்குத் தெரியாத ரகசியமாகவே இருக்கின்றன.

வேட்பாளருக்கு அணிவிக்கப்படும் பிரம்மாண்டமான மாலைகள், அளிக்கப்படும் பளபளக்கும் வாள்கள் — இவை வெறும் மரியாதை அல்ல. அவற்றுக்கும் வேட்பாளருக்கும் இடையில் கைமாறும் ‘சன்மானம்’ ஒரு பரம ரகசியமாகவே தொடர்கிறது.

‘இல்லை’களின் பட்டியல் – "சூமந்திரக் காளி" வித்தை

தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் அடுக்கும் “இல்லை”களின் பட்டியல் நீளமானது.

“சாலை இல்லை, குடிநீர் இல்லை, சாக்கடை இல்லை… இல்லை... இல்லை...இல்லை..., நான் வந்தால் இதையெல்லாம் சரி செய்வேன்.”

நாடு விடுதலை அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை என்பதை இவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். எம்.எல்.ஏ. பதவி கிடைத்தால் ஒரே இரவில் ‘சூமந்திரக் காளி’ வித்தை செய்து எல்லாவற்றையும் கொண்டு வந்துவிடுவார்கள் என நம்ப வைக்கிறார்கள்.

உண்மையில், இவை உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டிய பணிகள். ஆனால் அதைச் சுட்டிக்காட்டாமல், தாங்களே எல்லாவற்றையும் செய்வதாக வாக்குறுதி அளிப்பது வெறும் ஏமாற்று வித்தையே.

காணாமல் போன கரைத் துண்டுகள்

திமுக, அதிமுக உள்ளிட்ட பழைய கட்சிகளின் தோளில் இன்று கட்டம் போட்ட புதிய துண்டுகள்தான் தெரிகின்றன. ஒரு காலத்தில் கரை வேட்டிக்குச் சமமான மரியாதையைப் பெற்ற ‘கரைத் துண்டு’ இன்று வெறும் வியர்வைத் துடைக்கும் துண்டாக மாறியிருப்பது கால மாற்றத்தின் கோலமோ?

இந்த 'எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்' காட்சிகளைப் பழைய கட்சிகள் முதல் புதிதாக முளைத்த கட்சிகள் வரை அனைவரிடமும் காண முடிகிறது.

முடிவுரை

தேர்தல் என்பது மக்களுக்குச் சேவை செய்யும் களம் என்பதை மறந்துவிட்டு, அது ஒரு பெரிய ‘நடிப்புத் திருவிழா’வாக மாறிவிட்டது வேதனையான உண்மை. பால் கறப்பதாலும், மாட்டு வண்டி ஓட்டுவதாலும், எதுவும் மாறிவிடாது.

மக்கள் எப்போது இந்த அலப்பறைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை உணர்ந்து, வெறும் நடிப்பை அல்ல, செயல்பாட்டைப் பார்த்து வாக்களிக்கிறார்களோ — அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

ஊரான்

No comments:

Post a Comment