Thursday, 15 April 2021

இழி குணம்: 'பெல் சிட்டி’ ஊழல்! …..14, இறுதிப்பகுதி

வாழ்க்கையின் அடிப்படை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பொருள் ஈட்டினால் போதுமானது; தேவைக்கு அதிகமாகச் சொத்து மற்றும் நகை வாங்குவது ஆடம்பரத்திற்கே வழிவகுக்கும் என்பதால் இயக்கப் பெண்கள் சிலர் நகை அணிவதையே அருவருப்பாகக் கருதினர். 1990-களின் தொடக்கத்தில் டிவிஎஸ் 50 இருசக்கர வாகனம் வைத்துக் கொள்வதே நுகர்வுக் கலாச்சாரம் என விமர்சிக்கப்பட்டதால் அன்று வாங்கிய ஒரு பழைய டிவிஎஸ் 50 ஐ விற்றவன் நான்.

வட்டித் தொழில் செய்வது மக்கள் விரோதச் செயலாகக் கருதப்பட்டது. சேமிப்பு என்ற பெயரில் நடத்தப்படும் எலச்சீட்டு முறையே அடுத்தவன் துன்பத்தில் காசு சேமிக்கும் கயமைத்தனம் என்பதால் தொடக்க காலம் முதல் இன்றுவரை அதைத் தவிர்த்தே வந்துள்ளேன். சொந்தத் தேவைகளுக்காகக்கூட அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் தரக்கூடாது; மாறாக லஞ்ச ஊழல் முறைகேடுகளுக்கு எதிராகப் போராட வேண்டும் என்ற கொள்கைப் பிடிப்பு இருந்ததால்தான் திருச்சி 'பெல்' நிறுவன 'கேண்டீன்' ஊழலுக்கு எதிராகப் போராடினேன். இதனால் பின்னாலில் எனது வேலையும் பறிபோனது பற்றி ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

சொத்துடைமைச் சமூகத்தைத் தகர்த்துப் பொதுவுடைமைச் சமூகம் படைக்கப் புறப்பட்ட நமக்குச் சொத்து எதற்கு எனக் கருதியதால் சொத்து சேர்ப்பதில் நான் நாட்டம் செலுத்தவில்லை. பொதுவாக கைநிறைய ஊதியம் பெறுவோர் வீட்டு மனைகளை வாங்குவதற்கு முனைப்பு காட்டுவர். தனியாகவோ அல்லது சங்கம் அமைத்துக் கொண்டு கூட்டுறவு முறையிலோ வீட்டு மனைகள் வாங்குவது வழக்கம். மோசடிகள் முறைகேடுகள் ஏதும் இன்றி வீட்டுமனை ஒன்றை வாங்கி வீடு கட்டிக் கொள்வதில் தவறேதும் இல்லை.

வீட்டு மனைகள் வாங்குவதற்காக சென்னை ‘பெல் பைப்பிங் சென்டரில்’ பணிபுரிந்த ஊழியர்கள் சிலர் சேர்ந்து தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட நிர்வாகிகளைக் கொண்ட ‘ஹவுசிங் சொசைட்டி’ ஒன்றை 2012 இல் ஏற்படுத்தி உள்ளனர். சென்னை, இராணிப்பேட்டை, திருச்சி மற்றும் திருமயம் ‘பெல்’ நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் இந்த ‘சொசைட்டியில்’ உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டடுள்ளனர். சென்னை புறநகரில், பழைய மகாபலிபுரம் சாலை, தாழம்பூர் பகுதியில் நிலம் தேர்வு செய்து, ‘பெல் சிட்டி’ என்ற பெயரில் மனைகளாகப் பதிவு செய்வதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளனர்.

சத்தியநாராயணா ரெட்டிக்குச் சொந்தமான நிலம் என்று சொல்லி தெரிவு செய்யப்பட்ட இடம் ஒரு அனாதீன நிலம் என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு, மனை வேண்டாம் எனக்கூறி கொடுத்தப் பணத்தை திரும்பிப் பெற்றுக் கொண்டு நூற்றுக்கணக்கானோர் ஒதுங்கி உள்ளனர். ஆனால் இறுநூற்றுக்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் தொடர்ந்து இருந்துள்ளனர். இதில் நடைபெறும் முறைகேடுகளுக்கு இவர்களும் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்தானே?

அனாதீன நிலங்களைக் கண்டறிந்து, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, போலியான ஆவணங்களை உருவாக்கி அதை விற்பனை செய்யும் ‘ரியல் எஸ்டேட்’ தொழில் போன்றதுதான் இதுவும். போலி ஆவணங்களை உருவாக்கிப் பட்டா பெறும் வேலைகளை மேற்கொள்வதற்கு என ‘கமிசனுக்கு’ அமர்த்தப்பட்ட இடைத்தரகர்கள், இரண்டு வாடகைக் கார்கள், சகலவசதிகளோடு கூடிய அலுவலகம், கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ள சம்பளத்துக்கு அமர்த்தப்பட்ட ஒரு மேலாளர் என கணஜோராய் இவர்களது அலுவலகம் செயல்பட்டு வந்துள்ளது. ஆண்டுகள் கடந்தன. ஆனால் லட்சக் கணக்கில் பணம் கட்டியவர்களுக்கு வீட்டு மனைப்பட்டா மட்டும் கைக்கு வந்தபாடில்லை. பெரும்பாலும் மேற்கண்ட வேலைகள் அனைத்தும் ‘சொசைட்டி’ செயலாளர் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஒரு சமயம் இடைத்தரகர்களுக்குத் தரவேண்டிய ரூ.2 கோடிக்கான காசோலையை ‘சொசைட்டி’ செயலாளர் தனது மகன் பெயருக்குக் கொடுத்ததாக எழுந்தப் புகாரைத் தொடர்ந்து, ‘சொசைட்டி’ செயலாளர் மீது பல கோடி ரூபாய் பணம் கையாடல், ஆடி கார், சொத்துக் குவிப்பு என அடுக்கடுக்கான புகார்கள் எழத் தொடங்கின. ‘சொசைட்டி’ செயலாளர் சாதாரண ஒரு நபராக இருந்திருந்தால் இந்தப் புகார்கள் எல்லாம் பத்தோடு பதினொன்றாக முடிந்து போயிருக்கும். இப்படித்தானே வெளி உலகிலும் நடந்து கொண்டிருக்கிறது. 

ஆனால் அவர் ‘பெல் பைப்பிங் சென்டர்’ நிறுவனத்தில் முழுநேரமாகப் பணியாற்றிக்கொண்டே, ஒரு மார்க்சிய-லெனினிய அமைப்பின் முழுநேரப் புரட்சியாளராகவும் மற்றும் அந்த மார்க்சிய-லெனினிய அமைப்பின் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளராகவும் இருந்தவர். இத்தகையப் பொறுப்பில் உள்ளவர் மீது புகார் வந்தால், அது மொத்த அமைப்பையும் அல்லவா நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்பதால் அமைப்பின் அரசியல் தலைமைக்கு வந்தப் புகாரின் அடிப்படையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு அவர் மீதான புகார்களில் முகாந்திரம் இருப்பதாக உறுதி செய்து 2019 நவம்பரிலேயே தலைமையிடம் விசாரணை அறிக்கை ஒப்படைக்கப்பட்டது.

‘சொசைட்டி’ செயலாளரை அரசியல் ரீதியாக இயக்கிய ஒருவருக்கும் ‘சொசைட்டி’ செயலாளரோடு உடன் தங்கி இருந்த அரசியல் தலைமையின் செயலாளருக்கும், ‘சொசைட்டி’ வேலைகள் பெரும்பாலும் ஏற்கனவே தெரிந்தவைதான் என்பதாலும், பணம் கட்டியவர்களுக்கு மனையைப் பெற்றுக் கொடுத்துவிட்டால் ‘சொசைட்டி’ செயலாளர் மீதானப் புகாரை மூடி மறைத்துவிடலாம் எனக் கணக்குப் போட்டு விசாரணை அறிக்கையை பெற்றுக் கொண்ட அரசியல் தலைமையின் செயலாளர் அதை கிடப்பில் போட்டுவிட்டடார். ஆனால் ‘சொசைட்டியின்’ முறைகேடுகளை நக்கீரன் இதழ் வெளியிட்டு பொது உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டதால் அமைப்பின் மீதான நற்பெயருக்கு மிகப் பெரும் கலங்கம் ஏற்பட்டுவிட்டது. இதற்குப் பதில் சொல்ல வேண்டிய முழு பொறுப்பும் அரசியல் தலைமையின் மீது விழுந்ததால் இதிலிருந்து தப்பிக்கும் ஒரு யுக்தியாகத்தான், ஏற்கனவே தலைமைக் குழுவிலிருந்து இருவர் விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமையைத் தேர்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவில் உள்ள ஒருவர் மீது சதிக்குற்றச்சாட்டுகளை ஜோடித்து அமைப்பை உடைத்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டனர். இந்த உண்மைகள் தெரியாத ஒருசில அப்பாவிகளும் அவர்கள் பின்னே சென்றுவிட்டனர். நியாயத்தின் பக்கம் நின்ற பெரும்பான்மையினர் எப்பொழுதும் போல எழுச்சியோடு தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் “சொசைட்டி“ செயலாளர் மீதான புகாரை விசாரணை செய்தக் குழுவில் இருந்த இருவர், ‘சொசைட்டி’ செலாளார் தவறு செய்வதை தெரிந்தே அனுமதித்த அரசில் தலைமையின் சிறுபான்மைக்குப் பின்னால் ஓடியதுதான். இப்படி ஓடியவர்கள், ஒன்று முறைகேடுகளைக் கண்டு ஆத்திரம் கொள்ளாத சொரணையற்றவர்களாக இருக்க வேண்டும்; அல்லது இவர்களே இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடுபவர்களாகவோ அல்லது துணைபோகின்றவர்களாகவோ இருக்க வேண்டும்.

பாலியல் பாவிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளும் வழக்குரைஞராவதற்கு இலாயக்கற்றவர்கள் என்பதால்தான் வழக்காடிகள் இழிகுணம் அற்றோராய் இருக்க வேண்டும் என விதி வகுத்துள்ளனர் என்பதை ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளேன். அப்படினால் பொதுவாழ்வில் உள்ளோர், அதுவும் சமூகத்தைப் புரட்டிப் போடும் புரட்சிப் பணியில் ஈடுபடுவோர், அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லவா? அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, போலியான ஆவணங்களை உருவாக்கி, அனாதீன நிலத்தைப் பட்டாவாக மாற்றும் இழிகுணம் கொண்ட ஒரு ‘கிரிமினல்’ வேலையை ‘சொசைட்டி’ செலாளர் தெரிந்தே செய்துள்ளார். அரசியல் தலைமையாகச் செயல்பட்ட, உடனிருந்த இருவர் இவற்றை எல்லாம் தெரிந்தே கண்டும் காணாமல் அனுமதித்துள்ளதால் அவர்களும் ‘சொசைட்டி’ செயலாளரின் இழிகுணங்களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். இத்தகைய இழிகுணம் கொண்டோர் பொது வாழக்கையிலிருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள். அப்படிப்பட்டவர்கள் எந்தப் பெயரில் வந்தாலும் அவர்களை பொதுச் சமூகத்திலிருந்து விலக்கி வைப்பதன் மூலம்தான் நாட்டில் நல்லதொரு மாற்றத்தைக் காண முடியும். இத்தகைய இழிகுணம் கொண்டோரை கண்டும் காணாமல் மௌனமாக இருப்பீர்களேயானால் வரலாறு உங்களையும் மன்னிக்காது.

முற்றும்

தமிழமணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: கருத்து முரண்களும் பண்பாட்டுச் சீர்கேடுகளும்!....13

இழி குணம்: போராளிகள் தடம் புரளும் தருணங்கள்!.....12

இழி குணம்: பெல்லில் இரண்டாவது அத்தியாயம்.....10
இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9
இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8
இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7
இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6
இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5 
இழி குணம்: மட்டவெட்டும் மலைபடுகடாமும்!.....1

இழி குணம்: மட்டவெட்டும் மலைபடுகடாமும்!.....1

Wednesday, 14 April 2021

இழி குணம்: கருத்து முரண்களும் பண்பாட்டுச் சீர்கேடுகளும்!....13

எளிமையானவர்கள், வெளிப்படையானவர்கள், கொண்ட கொள்கைக்காக எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க துணிச்சல்காரர்கள், நேர்மையானவர்கள், விலை போகாதவர்கள், தீயொழுக்கம் இல்லாதவர்கள் என்று பெயர் எடுத்தவர்கள்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் பயணிப்பவர்கள், அதனால்தான் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மாற்று இயக்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் உள்ளிட்ட பலரும் இவ்வியக்கத் தோழர்களை மதிக்கின்றனர்.

இத்தகைய இயக்கத்தைத் தோற்றுவிப்பவர்களோ அல்லது புதிதாக வருபவர்களோ யாரும் வானத்திலிருந்து குதித்து வருவதில்லை. அடித்தட்டு உழைப்பாளிகள் முதல் பணக்கார விவசாயிகள், சிறு வியாபாரிகள், சிறு குறு தொழில் முனைவோர், அரசு ஊழியர் உள்ளிட்ட சற்றே வசதிபடைத்த நடுத்தரப் பிரிவினர் என பலரும் பொதுவுடைமையின்பால் ஈர்க்கப்பட்டு இயக்கத்திற்கு வருகின்றனர். சாதி-மதப் பிணக்குகள் கொண்ட, சுயநலம், பொய், பித்தலாட்டம், பண மோசடி, ஊழல், போதை, பாலியல் அத்துமீறல், பெண்ணடிமை, ஆணாதிக்கக் குணங்கள் மலிந்த இச்சமூகத்திலிருந்துதான் இவர்களும் வருகின்றனர்.

பல்வேறு தரப்பட்ட வர்க்கப்பிரினர் இருப்பதால் கொள்கை ரீதியான கருத்து வேறுபாடுகளும், பலதரப்பட்ட குணமுடையவர்கள் இருப்பதால் பண்பாட்டுச் சீர்கேடுகளும் எந்த ஒரு இயக்கத்திலும் தலைதூக்குவது தவிர்க்கமுடியாதவைதான்.. கொள்கை அளவில் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசித்தீர்த்து, பெரும்பான்மை முடிவை அமுல்படுத்தும் போதும், பண்பாட்டுச் சீர்கேடுகளைக் கண்டறிந்து அவற்றை நெறிப்படுத்தும் போதும் மட்டும்தான் ஒரு இயக்கம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்க முடியும். மாறாக ஆளாளுக்கு ஒரு கருத்தைப் பேசுவதும், இயக்கத்தில் செயல்படுவோரின் தீயொழுக்கப் பண்பாட்டுச் சீர்கேடுகளை ஒருவருக்கொருவர் கண்டும் காணாமல் இருப்பதும் ஒரு இயக்கத்தின் பின்னடைவுக்கே வழிவகுக்கும்.

பணமோசடி செய்ததற்காகவும், பாலியல் குற்றச்சாட்டிற்காகவும் முக்கியப் பொறுப்பில் இருந்தவர்கள்கூட கடந்த காலங்களில் ஈவிரக்கமின்றி அமைப்பிலிருந்து அவ்வப்பொழுது வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இத்தகைய நடவடிக்கைகள் அமைப்பின் மீதான நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியது.

புதிய ஜனநாயகப் புரட்சி என்ற தொலைநோக்குத் திட்டத்தை கொள்கையாகக் கொண்டாலும் அதை அடைவதற்கு அவ்வப்பொழுது எழும் அரசியல் சூழ்நிலைமைகளைக் கணிப்பதில் கருத்து வேறுபாடுகள் எழலாம். தொண்டர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிற சரியான கருத்தை முன்வைப்பவர்களும், செயல்படுபவர்களுமே தலைவர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். தவறான கருத்தை முன்வைப்பவர்களும் செயல்படாதவர்களும் எவ்வளவுதான் அறிவுசார்ந்தவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டாலும் அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். அப்படி ஒரு நிலை ஏற்படும் போது நிராகரிக்கப்பட்ட ஒருவர், தான் வீழ்த்தப்பட்டதாகக் கருதி தனக்கு வேண்டிய ஒரு சிலரைத் தூண்டிவிட்டு தலைமையில் உள்ளவர்களுக்கு எதிராகச் சீர்குலைவு வேலைகளில் ஈடுபடுவார். 2019 தொடக்கத்தில் அப்படி ஈடுபட்ட ஒருவரைப் பாதுகாக்கும் முயற்சியில் அரசியல் தலைமையாக இருந்தவர் முயன்றபோதுதான் அதனால் அதிருப்தியுற்ற இருவர் தலைமைக் குழுவிலிருந்து விலகுகின்றனர்.

இருவரது விலகலில் நியாயம் இருப்பதைப் புரிந்து கொண்ட பலரும் தலைமைக்கு எதிராகக் கேள்விக் கணைகளைத் தொடுத்த போது தார்மீகப் பொறுப்பேற்று தலைமையில் இருந்தவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய தலைமையைத் தேர்வு செய்வதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அதற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதுதான் ‘பெல் சிட்டி’ ஊழல் நக்கீரனில் வெளிவந்து, மொத்த அமைப்பையும் நிலைகுலைய வைத்தது.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்


Sunday, 11 April 2021

தஞ்சையில் "தமிழக உழவர் இயக்கம்" தொடக்கம்.

"அனைத்து விவசாய அமைப்புகள் , இயக்கங்களை ஒன்றிணைக்கும் பொது மேடையாகவும், உழவர் படையாகவும் 'தமிழக உழவர் இயக்கம்' செயல்படும்" என்றார் தமிழக உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு.

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கத்தில் 10-04-2021 மாலை 6 மணிக்கு  தமிழக உழவர் இயக்கம்  துவக்கப்பட்டது. 

தலைமை உரையாற்றிய திருநாவுக்கரசு தமது உரையில் "தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகள் விவசாயிகளின் கோரிக்கைகளுக்காகவும், பிரச்சனைகளுக்காகவும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எட்டு வழிச் சாலை உள்ளிட்ட விவசாயிகளின் போராட்டங்களும்  தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விவசாயிகளின் தீர்க்கப்பட முடியாத ஆதார விலை உள்ளிட்ட பிரச்சனைகளளுடன்  விலைவாசி உயர்வால் நாளுக்கு நாள் மக்கள் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

அனைத்து மக்கள் கோரிக்கைகளுக்காகவும் "தமிழக உழவர் இயக்கம்"  குரல்கொடுக்கும்.   அனைத்து விவசாய அமைப்புகள், இயக்கங்களை ஒன்றி ணைக்கும் பொது மேடையாகவும், உழவர் படையாகவும் " தமிழக உழவர் இயக்கம் செயல்படும்" என்றார்  திருநாவுக்கரசு.  

வேளாண் சட்டங்களை நீக்குவதற்கு பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்டவேண்டும், குறைந்தபட்ச ஆதார விலையையும், அரசாங்க கொள்முதலையும், சட்ட ரீதியான உரிமையாக்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வுக்கு ஏற்ப  குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், கொள்முதல் அமைப்புகள் முன்பிருந்தபடி நீடிக்கவேண்டும், சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும், விவசாயத்திற்காக டீசல் விலையில் 50% மானியம் அளிக்க வேண்டும், மின்சார சட்டம் 2020, சுற்றுச்சூழல் வரைவுத் திட்டம் 2020 ரத்து செய்யப் பட வேண்டும்.

மத்திய அரசு மாநிலத்திற்கான துறைகளில் தலையிடக்கூடாது , டெல்லியிலே போராடி வருகின்ற  மற்றும் தமிழ்நாட்டில் போராடி வருகின்ற விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தோழர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.

சிறையில் அடைக்கப்பட்ட விவசாய தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்நிகழ்வில் விவசாயிகளுக்கும்  விவசாயத்துக்கும் எதிரான மோடி அரசு கொண்டு வந்திருக்கிற மூன்று வேளாண் சட்டங்களின்   தமிழ்  மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. 

சிபிஐ(எம்எல்) (மக்கள் விடுதலை) தலைவர் தோழர். ஜெ.சிதம்பரநாதன் வெளியிட மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர் தோழர். காளியப்பன் பெற்றுக்கொண்டார். 

அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர்  தோழர். க.பாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார்.

சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர். சு.பழனிராஜன், சிபிஐ எம்எல் (மக்கள் விடுதலை) மாவட்டச் செயலாளர் தோழர்.  இரா. அருணாச்சலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் தோழர். அருண்ஷோரி, சுற்றுச்சூழல் ஆர்வலர் வேதாரண்யம் தோழர். பி.பார்த்தசாரதி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

ஏஐடியூசி மாவட்ட துணைச் செயலாளர் தோழர். துரை. மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார்.   மக்கள் கலை இலக்கியக் கழக மாநகர செயலாளர் தோழர்.ராவணன் நன்றி கூறினார். இறுதியாக டில்லி விவசாயிகள் போராட்டத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி கூட்டம் நிறைவு செய்யப்பட்டது.

11-04-2021









திருமாவுக்குப் பின்னால் படித்தவர்கள் இல்லையா?

ட்டமன்றத் தேர்தல் முடிந்த கையோடு அரக்கோணம் சோகனூரில் பட்டியலின வகுப்பைச் சார்ந்த இரு இளைஞர்கள் பாட்டாளி மக்கள் கட்சினரால் சாதி வெறியூட்டப்பட்ட ஒரு சில ‘வன்னியச் சாதி’ வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் 10.04.2021 அன்று தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பாஜக, பாமக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகளைத் தவிர பிற அனைத்து அரசியல் கட்சிகளும் ஜனநாயக இயக்கங்களும் படுகொலைகளைக் கண்டித்ததோடு கண்டன ஆர்ப்பாட்டங்களிலும் பங்கேற்றனர். கடும் கண்டனங்களுக்குப் பிறகுதான் ஒரு சில கொலையாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகவும் பின்தங்கிய வன்னிச் சாதி மக்களை அன்புமணி தவறாக வழிநடத்தியதன் விளைவுதான் இந்தப் படுகொலைகளுக்குக் காரணம் என்பதை தமிழகமே உணரத் தொடங்கியதால் “படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை என அன்புமணி உளரத் தொடங்கி விட்டார்.

அன்புமணியின் இந்தக் உளரலைக் கண்டித்து திருமாவளவனுக்கு ஆதரவாக தற்போது #MyLeaderThiruma என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக இயக்கங்களில் உள்ள வன்னியர் உள்ளிட்ட இதர என்னற்ற சாதியினரும் தங்களது பட்டங்களைப் பட்டியலிட்டு “நாங்கள் திருமா பக்கம்” என சமூக வலைதளங்களைக் கலக்கி வருக்கின்றனர்.

 

என்னைப் பொருத்தவரையில் பட்டப் படிப்புகளைத் தாண்டி பல்வேறு தரப்பட்ட மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் உழைப்புச் சுரண்டல், வேலையின்மை, வறுமை, பசி, பஞ்சம், பட்டினி, கல்வி, மருத்துவம், சுகாதராம், சுற்றுச்சூழல்கேடு, சாதி, தீண்டாமை, பெண்ணடிமை உள்ளிட்ட சமூகச் சிக்கல்களிலிருந்து மனித சமூகத்தை விடுவிக்கின்ற அறிவைப் பெற்று களமாடுபவர்களையே படிப்பாளிகளாகப் பார்க்கிறேன். மருத்துவப் பட்டம் பெற்றவன் நோயாளிகளுக்கு வேண்டுமானால் மருத்துவம் பார்க்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூகத்தையும் விடுவிக்கப் போராடுபவனையே சமூக மருத்துவன் என்கிறது உலகம்.  

 

திருமாவுக்குப் பின்னால் படித்தவர்கள் இல்லையா?

 

படித்தவர்களும் படிக்காதவர்களும் எல்லாக் கட்சிகளிலும்தான் இருக்கின்றனர். இலஞ்ச ஊழல், மணல் கொள்ளை,. கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்ட வேலைகளில் அனைத்து கட்சிகளிலும், அனைத்து சாதிகளிலும் உள்ள படித்தவன் படிக்காதவன் என பலரும்தான் ஈடுபடுகின்றனர். பொதுவுடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சிலர் தடம் புரளும் காலம் இது. தற்போதைய சொத்துடைமைச் சமூகத்தின் இழிந்த நிலை இதுதான். இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களைக் களை எடுப்பதோடு இருப்பவர்களையும் பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்தினால் மட்டுமே சமூக விடுதலையை நோக்கி அவர்களை அழைத்துச் செல்ல முடியும்.


அரக்கோணம் படுகொலைகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பாக இராணிப்பேட்டை, முத்துக்கடை பகுதியல் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகக் கேள்விப்பட்டு 10.04.2021 அன்று காலை எனது இணையருடன் அங்கு சென்றேன். ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கான அறிகுறி எதுவும் இல்லை. சிறிது நேரத்தில் அங்கே மேடை அமைக்கும் பணிகள் தொடங்கின. விசாரித்த போது காலையில் சென்னை ஆர்ப்பாட்டத்தில் திருமா கலந்து கொள்வதால் மாலையில்தான் இங்கு ஆர்ப்பாட்டம் என விடுதலை சிறுத்தைகளின் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அவரிடம் உரையாடியபோது ”முன்பெல்லாம் குடித்துவிட்டு பிறர் சொன்னதைக் கேட்டு ஆட்டம் போட்டிருக்கிறோம், தகராறு செய்திருக்கிறோம் ஆனால் தற்போது அண்ணனின் பேச்சைக் கேட்ட பிறகு நிறையவே பாடம்  பயின்றிருக்கிறோம், அதற்கு ஏற்ப எங்களை எவ்வளவோ மாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று பொறுப்போடு பதில் அளித்தார். உண்மையில் திருமாவின் பேச்சு சிறுத்தைகளை மாற்றுகிறதா என எண்ணியவாறு வீட்டிற்கு வந்து விட்டோம்.


மாலை ஐந்து மணிக்கெல்லாம் முத்துக்கடை சென்று விட்டேன். உடன் மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் வந்திருந்தனர். தப்பாட்டக் கலைஞர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் பாடல்களோடு தொடங்கியது ஆர்ப்பாட்டம். விடுதலை சிறுத்தைகளின் பொறுப்பாளர்களும், மனித நேய மக்கள் கட்சி, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரமுகர்களும் கண்டன உரையாற்றினர். போடப்பட்டிருந்த இருக்கைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மாலை ஏழு மணிக்குப் பேசத் தொடங்கிய திருமா எட்டரை மணிக்குத் தனது உரையை முடித்தார்.

சோகனூர் படுகொலை மட்டுமன்றி, மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகள், மணல் கொள்ளை, இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு, சாதித் தீண்டாமை, பாஜகவின் சனாதனக் கோட்பாடு என சகல பிரச்சனைகளையும் தொட்டு நீண்ட உரை ஒன்றை நிகழ்த்தினார். ‘பின் டிராப் சலைன்ஸ்’ என்று சொல்வார்களே அது போல ஆயிரக் கணக்கில் திரண்டிருந்த கூட்டம் ஆடாமல் அசைவின்றி அவரது உரைக்கு செவிமடுத்தது. ஐந்தரை மணிக்கு இருக்கையில் அமர்ந்த எவரும் எட்டரை மணிவரை எழவில்லை. குறிப்பாக ஒரு மணிநேரத்திற்கும் மேல் மொத்தக் கூட்டத்தையும் தனது பேச்சால் கட்டிப் போட்டிருந்தார். தனது உரையில் தனிப்பட்ட முறையில் எவர் மீதும் அவர் வன்மத்தைக் கக்கவில்லை. பக்குவப்பட்ட அரசியலை சிறுத்தைகளுக்கு அவர் ஊட்டிக் கொண்டிருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.


தான் யாருக்கும் எதிரானவன் இல்லை என்பதால் தனது பாதுகாப்பிற்கு ரவுடிகளையும் உடன் வைத்துக் கொள்வதில்லை, காவல் துறையும் தனக்குத் தேவையில்லை, மாறாக படிப்பாளிகளை மட்டுமே உடன் வைத்துக் கொண்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்ட போது ”அண்ணனின் பேச்சைக் கேட்ட பிறகு நிறையவே பாடம்  பயின்றிருக்கிறோம், அதற்கு ஏற்ப எங்களை எவ்வளவோ மாற்றிக் கொண்டிருக்கிறோம்” என்று காலையில் ஒரு சிறுத்தை சொன்னதை நெஞ்சில் அசைபோட்டவாறு இல்லம் திரும்பினேன்.


பட்டம் படித்தக் கூட்டம் மட்டுமல்ல, புத்தனையும், மகாத்மா ஜோதிராவ் புலேவையும், அம்பேத்கரையும், பெரியாரையும், மார்க்சையும் படிக்கும் பெருங்கூட்டமும் திருமாவுக்குப் பின்னால் நிற்கிறது. அன்புமணி அவர்களே! உங்களுக்குப் பின்னால் காடுவெட்டியை மட்டுமே படிக்கும் கூட்டம் மட்டுமே நிற்கிறது. மாவீரன்களுக்கு கொம்பு சீவுவதை விட்டுவிட்டு ‘பாட்டாளிகளை’ 'படிப்பாளிகளாக' மாற்ற முயலுங்கள். இல்லையேல் தைலாபுரத்தில் தனிமரமாய் நிற்பதை வரலாறு பதிவு செய்யும்.

 

தமிழ்மணி

Saturday, 10 April 2021

ம.க.இ.க என்ற பெயரில் வெளியான பொய்ச் செய்திக்கு மறுப்பு - கண்டனம்!

ம.க.இ.க என்ற பெயரில் வெளியான பொய்ச் செய்திக்கு மறுப்பு - கண்டனம்!

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, ஆதரவாளர்களே,

செவ்வணக்கம்! 

கடந்த ஏப்ரல் 02 அன்று வினவு தளத்திலும், சிலரது முகநூல் பக்கங்களிலும் “வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க. உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள்” என்ற தலைப்பிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பெயரை உபயோகித்து பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு பகுதிக்கிளைகள், மாநில செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு என்ற அமைப்புக் கட்டமைப்புடன் இயங்குகிறது.  கொரோனா ஊரடங்கிலும் ம.க.இ.க. கொள்கைக்கும், அமைப்பு விதிகளுக்கும் உட்பட்டு மாநில செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு முறையாக இயங்கி வருகிறது. இந்நிலையில் ம.க.இ.க. கொள்கை விதிகளுக்கு எதிராக, 03 பேர் கொண்ட சிறுபான்மையினர், முன்னணியாளர் கூட்டம் கூட்டி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கூறி பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், "அமைப்பு விதிகளின் படி மாநாடு நடத்தாதது, கிளைகளை இயக்காததால் அவைகள் கலைந்து போனது, சதி செயலில் ஈடுபட்டது, போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்ற கொள்கைக்கு எதிராக செயல்பட்டது, பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காகவும், சுயநல சீரழிவு கலாச்சாரத்திற்கு ஏற்பவும் அவரவர் விருப்பம் போல் பிரச்சாரம் செய்வது" என தங்களது மனம் போன போக்கில் குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் அடுக்கியுள்ளனர்.

எமது அமைப்பில் செயல்பட்டு வந்த மருதையன், நாதன் அமைப்பின் அரசியல் தலைமை மீது அதிகாரத்துவம் உள்ளிட்ட சில விமர்சனங்களைக் கூறி தங்களது விலகலை பொது வெளியில் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து அணிகளும் அரசியல் தலைமையின் அதிகாரத்துவத்திற்கு எதிராக கடுமையாகப் போராடினார்கள். இதனால், அரசியல் தலைமை மக்கள் திரள் அமைப்புக்களில் தங்களுக்கு சாதகமான சிறுபான்மையினரைக் கொண்டு பெரும்பான்மையாக உள்ள முன்னணியாளர்களை நீக்குவது, அமைப்புகளை பிளவுபடுத்துவது என தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த அடிப்படையில் தான் தற்போது ம.க.இ.க. பெயரில் இராமலிங்கம் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்க்க வேண்டும் எனக் கோருகிறோம். 24 பேர் கொண்ட பொதுக்குழுவில் தங்களுக்கு சாதகமான 3 பேரை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாகவும், அக்கூட்டத்தில் தோழர்கள் காளியப்பன், கோவன், சத்யா ஆகியோரை நீக்கியதாகவும் கூறுவது ஜனநாயக முறைக்கு எதிரான செயலாகும். எனவே, பிளவுபடுத்தும் நோக்கத்துடன் ம.க.இ.க. ஒருங்கிணைப்புக்குழு என்கிற பெயரில் இராமலிங்கம் உள்ளிட்ட சிறுபான்மையினரால் வெளியிடப்பட்ட பொய்யான, அவதூறு தகவல்களை கொண்ட அறிக்கையினை தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் யாரும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

எனினும், அவதூறுகள், பொய்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டதால் அவர்களது அறிக்கை எவ்விதத்தில் பொய்யானது என விளக்கி, அதற்கான எமது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவிப்பது எமது கடமை என்ற வகையில் இச்செய்தியை வெளியிடுகிறோம்.

மாநில மாநாடு நடத்தப்படவில்லை என்கின்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி: 

 ம.க.இ.க.-வின் கொள்கை விதிப்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு கூட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 2014-க்குப் பிறகு 2016-ல் மாநாடு நடத்த திட்டமிட்ட போது, அப்போதிருந்த அரசியல் தலைமை பல்வேறு காரணங்கள் கூறி மாநாட்டை தள்ளி வைத்தது. இதனால், எமது மாநில செயற்குழு சார்பாக அரசியல் தலைமை மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்ட பிறகே, 2019 இறுதிக்குள் மாநாடு நடத்துவது என 2018-ல் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் முடிவாக்கப்பட்டது.

இம்முடிவின் படி மாநாட்டு தயாரிப்பு வேலைகள் மற்றும் மாநாட்டு அறிக்கைகளை கதிரவன், சத்யா, கோவன் ஆகிய தோழர்கள் பொறுப்பேற்று தயாரித்தனர். இந்நிலையில், 2019-ல் அமைப்பின் மீது சீர்குலைவுவாதிகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த அவதூறு செய்திகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மீண்டும் மாநாடு நடத்துவது தள்ளிப் போனது. இது தொடர்பாகவும் ம.க.இ.க.-வின் மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், அதன்பிறகு தான் 2020-ல் மருதையன் மற்றும் நாதன் விலகல், அதனையொட்டி அமைப்பின் அரசியல் தலைமையில் ஏற்பட்ட பிளவு மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகியவை காரணமாக மாநாடு நடத்துவது தள்ளிச் சென்றது. இவை அனைத்தும், கதிரவன் மற்றும் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பொதுக்குழுவில் பேசி விவாதிக்கப்பட்டுத் தான் முடிவாக்கப்பட்டது. மாநாட்டுத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்த கதிரவன் மற்றும் இது தொடர்பாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் கலந்து கொண்ட இராமலிங்கம் இருவரும் தற்போது மேற்கண்ட எல்லா உண்மைகளையும் மறைத்து மாநில செயற்குழு,  மாநாட்டை நடத்தவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ஜனநாயக பூர்வமாக பொதுக்குழுவில் விவாதித்தே முடிவு செய்யப்பட்டது. எனவே, அணிகளின் ஜனநாயக உரிமை பறிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

மாநில செயற்குழு தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனில், பொதுக்குழுவைக் கூட்டியே முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு பொதுக்குழு கூட்டப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் எவருக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம், தோழர்கள் காளியப்பன், கோவன், சத்தியா ஆகியோர் மீது இவர்கள் வைக்கும் பொய்க் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயகத்தைக் கூட கடைபிடிக்கவில்லை. இவர்கள் தான் அணிகளின் ஜனநாயகம் பறிக்கப்பட்டிருப்பதாகப் பேசுகிறார்கள். மேலும், பொதுக்குழு கூட்டாமல் 3 பேர் சேர்ந்து பேசி முடிவெடுத்து முன்னணியாளர்கள் கூட்டம் என அறிவித்துக் கொண்டனர். இது போன்ற. முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளுக்கு முன்னணியாளர் கூட்டம் கூட்டி முடிவெடுப்பது ம.க.இ.க. அமைப்பு கொள்கை விதிகளுக்கு எதிரானதாகும். எனவே, தோழர்கள் மீதான குற்றச்சாட்டு அவதூறு என்பதாலும், அமைப்பு விதிகளுக்கு எதிராக 3 பேர் கொண்ட சிறுபான்மையினரால் கூட்டப்பட்ட கூட்டம் என்பதாலும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், அக்கூட்டமும் செல்லாததாகும்.

மருதையன், நாதனுடன் இணைந்து கொண்டு சதி செயல்களில் ஈடுபட்டதாக கூறும் அவதூறு பற்றி:

தோழர்கள் காளியப்பன், கோவன், சத்யா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் ம.க.இ.க.-வில் எந்தவித சதி செயல்களிலும் ஈடுபடவில்லை. இவர்கள் கூறும் சதி என்னவென்பதும்  விளக்கப்படவில்லை. மேலும், சதி தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பு சார்பாக எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.  இப்படி எந்தவிதத்திலும் சதி பற்றிய குற்றச்சாட்டை நிரூபிக்காமல், போகிற போக்கில் சதி செய்வதாக அவதூறு செய்வது கண்டனத்துக்குரியதாகும். மேலும், கதிரவன் மற்றும் இராமலிங்கம் உள்ளிட்ட சிறுபான்மையினர் தான் தற்போது, ம.க.இ.க. பற்றியும், அதன் செயற்குழு உறுப்பினர்களைப் பற்றியும் பொய்யான அவதூறு செய்திகளை வெளியிட்டு அமைப்புக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பது அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்தே தெரிகிறது.

போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்! என்ற ம.க.இ.க.-வின் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பற்றி:

40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் – சமூக நிலைமை, அப்போது இருந்த அரசு வடிவம் – அதன் தன்மை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். அதனடிப்படையிலேயே கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு என்ற அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நாங்கள் இந்த தமிழக தேர்தல் பிரத்யேகமானது. குறிப்பாக பாசிசத்திற்கு  தேர்தல்வழியே சட்ட அங்கீகாரம் கோருவது என்பதால் "பாசிச பா.ஜ.கவையும் அதன் அடிமை அ.தி.முகவையும் தோற்கடிப்பீர்!" என்ற முழக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் பாதை மூலம் தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று நாங்கள் எப்போதும், எங்கும் கூறவில்லை. மாறாக, பாசிசத்திற்கு எதிராக  தேர்தலையும் ஒரு  கருவியாக பயன்படுத்துகிறோம் என்பதே எமது நிலையாகும். அதேபோல தோழர்கள் மருதையனும், நாதனும் தி.மு.க.விற்கு வாக்களிக்கவேண்டும் என்று கூறுவதற்கும்  எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. பார்ப்பன பாசிசம் ஏறிதாக்கி வரும் சூழலில், பாராளுமன்ற - சட்டமன்ற வடிவங்களை தனது பாசிச சர்வாதிகாரத்திற்கு உகந்ததாகவும் மக்களின் நம்பிக்கையாக உள்ள தேர்தல் ஜனநாயகத்தை ஒரு வழிமுறையாகவும் பாசிஸ்டுகள் பயன்படுத்துகிறார்கள் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் ஒரு புதிய நிகழ்ச்சிப் போக்காக மாறியுள்ளது. இவற்றை அவதானித்து குறிப்பான சூழலில் தேர்தலில் பிற கட்சிகளை போல அல்லாமல் பாசிசத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாஜக மற்றும் அதன் அடிமை அதிமுக கூட்டணியை புறக்கணிப்பீர்! தோற்கடிப்பீர்! என்று சொல்வதைக் கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

குறிப்பிட்ட தருணத்தின் அரசியல் சூழலை கணக்கில் கொள்ளாத இவர்களின் அரசியல் தற்குறித்தனத்தையும், தேர்தல் என்பதுதான் ஜனநாயகம் என்று கருதும் பெரும்பான்மை மக்களின் உளவியல் பற்றி அறியாத ’அறைவாசிகள்’ என்பதும் மக்களுடன் கிஞ்சித்தும் தொடர்பற்ற கம்யூனிச மேட்டுக்குடிகள் என்பதும் இவர்களின் அறிக்கையில் இருந்து தெளிவாகிறது.

இவர்களின் அரசியல் அறியாமையை பாசிச எதிர்ப்பு போராளி தோழர், டிமிட்ரோவ் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்.

“ஆனால், பாசிஸ்டுகள் தலைதூக்கத் தொடங்கிய காலத்தில் கம்யூனிஸ்டுகள் அதே பழைய நிலையை நீடித்து அனுசரிக்க முடியுமா? உதாரணமாக 1932-ல் ஜெர்மனியில் பாசிஸ்டுகள் லட்சக்கணக்கான தங்கள் அதிர்ச்சிப் படைகளை தொழிலாளி வர்க்கத்திற்கெதிராக உருவாக்கி ஆயுதபாணிகளாக்கி கொண்டிருந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் பழைய நிலையை கைக்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. பல நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் தவறு, குறிப்பாக, ஜெர்மனியின் நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனிக்க அவர்கள் தவறிவிட்டார்கள். பழைய கோஷங்களையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருந்த அதே உபாயங்களையே கையாண்டார்கள். குறிப்பாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டம் உடனடி பிரச்சினையாக இருந்த போது 1918 – 20 ஆம் ஆண்டுகளில் போல ஜெர்மனியின் எதிர்ப்புரட்சி சக்திகள் அனைத்தும் வெய்மர் குடியரசின் பதாகையின் கீழ் திரண்டிருந்த காலத்தில் கையாண்ட அதே உபாயங்களையே இப்போதும் நீடித்துக் கையாண்டார்கள். (ஐக்கிய முன்னணி தந்திரம் – தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ்)

மேற்கண்ட மேற்கோள் இவர்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

பிழைப்புவாத ஓட்டுபொறுக்கி அரசியலுக்காகவும், சுயநல சீரழிவு கலாச்சாரத்திற்கு ஏற்பவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிரச்சாரம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பின் அரசியல் தலைமை குறிப்பிட்ட தருணத்தின் அரசியல் சூழலைக் கணித்து எடுத்த முடிவின் படியே பாசிச பாஜக-வையும், அதன் அடிமை அதிமுக கூட்டணியையும் தோற்கடிப்பீர்! என முழக்கம் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டோம். இம்முடிவு தொடர்பாக தோழமை அமைப்புக்கள் மற்றும் எமது அமைப்பு செயல்படும் பகுதிகளில் உள்ள முன்னணியாளர்கள் கொண்ட கூட்டம் கூட்டப்பட்டு அங்கு விளக்கி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிரச்சாரம் செய்கின்றனர் என்பது தவறாகும். மேற்கண்ட கூட்டத்திற்கு இராமலிங்கம் மற்றும் கதிரவன் செயல்படும் பகுதிகளுக்கும் தகவல் தரப்பட்டது. அவர்கள்  இருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், புரட்சிர பாடகர் கோவன் மீதும், தோழர் காளியப்பன் மீதும் தேசதுரோக வழக்கு போடப்பட்டவுடன் ‘பிழைப்புவாத’ ஓட்டுக்கட்சிகளைப் போய்ப்பார்த்ததும், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அமைப்பிற்கு ஏற்பட்ட நெருக்கடியினை தீர்க்க ‘பிழைப்புவாத’ ஓட்டுக்கட்சிகளைப் பார்த்து ஆதரவு திரட்டுவது, அவர்களுடன் கூட்டு நடவடிக்கை குழு கட்டி இயங்குவது போன்ற வேலைகளைச் செய்யச் சொல்லி அப்போதைய அரசியல் தலைமை வழிகாட்டியது. தற்போது பிளவு ஏற்பட்ட பிறகு பிரிந்து சென்ற அதே அரசியல் தலைமை, மக்கள் மீதான பாசிச தாக்குதலை சட்டபூர்வமாக்க பாசிச பாஜக ஆட்சியதிகாரத்திற்கு வருவதை தடுக்க பாசிச பாஜகவையும் அதன் அடிமை அதிமுக கூட்டணியையும் தோற்கடிப்பீர்! என்று பிரச்சாரம் செய்தால் பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கி அரசியல் என "இது வேற வாயி" என்பதுபோல அவதூறு செய்கின்றனர். இது தான் அவர்களின் அரசியல் நேர்மை.

கிளைகளை முறையாக கூட்டி இயக்காததால், கலைந்து போனது என்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பு செயல்படும் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் கிளைகள் முறையாக கூட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. எந்த கிளைகளும் கலையவில்லை. குறிப்பாக, கொரோனா ஊரடங்கிலும் மாநில செயற்குழு, பொதுக்குழு மற்றும் கிளைகளின் கூட்டங்கள் கூட்டப்பட்டன. தோழர் கதிரவன் 15 நாட்கள் முன்பு வரை, எங்களோடு தொடர்பில் இருந்ததுடன் கடைசியாக நடைபெற்ற மாநில செயற்குழுவிலும் கலந்து கொண்டார். அக்கூட்டத்திலேயே தனக்கு அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடு இருந்தாலும், ம.க.இ.க.-வில் இருக்கவே விரும்புகிறேன் என செயற்குழுவில் தெரிவித்தார். உண்மை நிலை இவ்வாறு இருக்க, தங்களிடம் பெரும்பான்மை இல்லை என்பதால் கிளைகள் கலைந்து விட்டது என பொய்யான தகவல் கூறி தாங்கள் தான் ம.க.இ.க. என நிறுவ முயற்சித்துள்ளனர்  இந்த சிறுபான்மையினர்.

ஓட்டுச் சீட்டு அரசியல் நடவடிக்கையாலும் பிழைப்புவாத நடவடிக்கையாலும் அணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பு தோழர்களில் பெரும்பான்மையினர் இன்னும் அமைப்பில் தான் எங்களுடன் பயணிக்கின்றனர். எவரும் அதிருப்தியடையவில்லை. எனவே தான் 07.04.2021 அன்று நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் பெரும்பான்மைத் தோழர்கள் கலந்து கொண்டதுடன் எமது அரசியல் நடவடிக்கை சரியே என ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அரசியல் தலைமையில் பிளவு ஏற்படுத்தி சென்றுவிட்ட சிறுபான்மைக் கும்பல், டிசம்பர் 2020-ல் தங்களது அணிகளுக்கு அனுப்பிய அறிக்கைகளின் 5-வது பகுதியில் 307-ஆம் பக்கத்தில் 32-வது வரியில் "ம.க.இ.க. அமைப்பை கலைப்பதாக" அறிவித்து விட்டனர். டிசம்பர் மாதம் கலைப்பதாக தங்களது அணிகளுக்கு அறிவித்து விட்டு, தற்போது இராமலிங்கம் மூலம் ம.க.இ.க.-வை முறைப்படுத்தி இயக்கப் போவதாக பொது வெளியில் அறிவிப்பதும், ஏற்கனவே அவர்கள் கலைத்ததாக அறிவித்த அமைப்பில் தற்போது சிலரை நீக்குவதாக அறிவிப்பதும் நகைப்புக்குரியதாகும். இவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் ‘புரட்டுவாதிகள்’ என்பதை நிரூபித்து விட்டனர்.

ம.க.இ.க. அமைப்பு கொள்கை விதிகளின் படி, அமைப்பை முறையாக பராமரித்து நடத்தி வருகிறோம். மேற்படி சிறுபான்மையினர் வெளியிட்ட பொய்யான மற்றும் அவதூறு செய்தி தொடர்பாக விவாதிப்பதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ம.க.இ.க. உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்குழுக் கூட்டம் 07.04.2021 அன்று முறையாகக் கூட்டப்பட்டது. கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) 07.04.2021 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவிற்கு தோழர் கதிரவனுக்கும், மாநில பொதுக்குழுவிற்கு தோழர் இராமலிங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அழைப்பை குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தோழர்கள் கதிரவன் மற்றும் இராமலிங்கம் ம.க.இ.க. பற்றியும், அதன் செயற்குழு தோழர்கள் பற்றியும் பொய்யான அவதூறு செய்திகளைப் பொதுவெளியில் வெளியிட்டு அமைப்பை பிளவுபடுத்தும் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அமைப்பு சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரும், ம.க.இ.க. அமைப்பிலிருந்து நீக்கப்படுகின்றனர் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) மாநில செயற்குழுவில் புதிதாக வேலூர் கிளையில் செயல்பட்டு வரும் தோழர் வாணி அவர்களை இணைப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) அமைப்புக் கொள்கைக்கு உட்பட்டு வருகின்ற ஆகஸ்டு மாதத்தில் அமைப்பின் 9-வது மாநில மாநாடு மற்றும் பார்ப்பனிய இந்து மதவெறி பாசிச எதிர்ப்பு மாநாடு நடத்துவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

4) கார்ப்பரேட் – காவி பாசிசம் அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஏற்படுத்தி வரும் தாக்குதல்களை எதிர்த்து நின்று முறியடிக்கும் வகையில் நீண்ட நெடிய போராட்டத்திற்குத் தயாராகும் வகையில் அமைப்பின் செயல்பாடுகளைக் கட்டியமைப்போம்!

****

இன்று பாசிசம் ஏறித் தாக்கி வரும் சூழலில், அதை வீழ்த்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை செயல்படுத்தாமல் அமைப்பு ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதற்காகப் புறப்பட்டு விட்ட, இராமலிங்கம் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சிறுபான்மையினரது அறிக்கை என்பது, மிகவும் கேடான வகையில் பொய்களாலும், அவதூறுகளாலும் நிரம்பி உள்ளது. எனவே, இந்தப் பொய்யான அறிக்கையை நிராகரிக்கிறோம். பெரும்பான்மைத் தோழர்களுடன் அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே, தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் எமது அமைப்புக்கு இதுவரை அளித்துவந்த ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

தோழர். காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

தொடர்புக்கு: 94431 88285



அரக்கோணம் ஆதிக்கச்சாதிப் படுகொலைக்கு எதிராக சிறுத்தைகளுடன் மக்கள் அதிகாரம்!

 திருச்சி

அரக்கோணம் ஆதிக்கச் சாதிவெறிப் படுகொலை! தடுக்காத தேர்தல் ஆணையமே முழு பொறுப்பு! 

வாக்குப்பெட்டிக்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு!

ஓட்டுப்போட்ட மக்களுக்கு வாய்க்கரிசி!

பானை சின்னத்திற்கு வாக்களித்த தலித்துகளின் படுகொலையை தடுக்கத் தவறிய உளவுப்பிரிவு, காவல் துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடு!

கொலையானவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையுடன், தலா 50 லட்சம் இழப்பீடு வழங்கு!

ஆதிக்க சாதி வெறி தாக்குதலில் தப்பி உயிர்பிழைத்து சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு 10 லட்சம்  நிவாரணம் வழங்கு!

கொலைக்குக் காரணமான மணல் கொள்ளையர்கள், பா.ம.க, அதிமுக ஆதிக்கச் சாதி வெறியர்கள் அனைவரையும் வன்கொடுமைச் சட்டத்தில் உடனே கைது செய்!  

மக்களைப் பிளவுபடுத்தி மோதவிடும் ஆதிக்கச் சாதி வெறி, மதவெறிக்  கட்சிகளைத் தமிழக மக்கள் புறக்கணிப்பதுடன் அவற்றைத் தடை செய்யப் போராட வேண்டும் !

என்ற முழக்கத்துடன்...

10.04.2021 காலை திருச்சி அண்ணா சிலை எதிரில் ... .

அரக்கோணம் ஆதிக்கச் சாதி வெறிப் படுகொலையைக் கண்டித்து  விடுதலை சிறுத்தைகள் கட்சி  நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.செழியன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் ராஜா, ஆனந்த், அம்சா உள்ளிட்ட மக்கள் அதிகாரம் தோழர்களும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் ஜீவா தலைமையில் ம.க.இ.க தோழர்களும் கலந்து கொண்டனர். ம.க இ.க கலைக்குழுவினர் தோழர்.லதா தலைமையில் சாதி ஆதிக்கத்தைக் கண்டித்து எழுச்சியான பாடல்களைப் பாடினர்.



தகவல்:
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

மதுரை

அரக்கோணம் ஆதிக்கச்சாதிப் படுகொலைக்கு எதிராக...

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
மக்கள் அதிகாரம் மதுரை தோழர்கள் கலந்து கொண்டனர்.




கடலூர்

அரக்கோணம் சாதிவெறிப் படுகொலையை கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.



செய்தி : 
மக்கள் அதிகாரம் 
கடலூர்

சென்னை

அரக்கோணம், சோகனூர் தலித் இளைஞர்கள் இரட்டைப் படுகொலையைக் கண்டித்து நடைபெற்ற சென்னை ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் பங்கேற்பு!

அரக்கோணம் சோகனூரில் பா.ம.க - அ.தி.மு.க ஆதிக்கச் சாதிவெறியர்களால் தலித் இளைஞர்கள் இரட்டைப் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்  சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மக்கள் அதிகாரம் தலைமைக்குழு உறுப்பினர் தோழர்.கணேசன் தலைமையில் சென்னையில் இருந்து  தோழர்கள் கலந்துகொண்டனர். 

வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம் அருகில் காலை 10 மணியளவில்  தோழர்கள் ஒன்றுகூடி  கொடி ஏந்தி, பா.ம.க - அ.தி.மு.க ஆதிக்க சாதி வெறி கும்பல் செய்தப் படுகொலையைக் கண்டித்தும், உழைக்கும் மக்களை ஆதிக்க சாதி, மதவெறி ஊட்டி பிளவுபடுத்தும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை அம்பலப்படுத்தியும், முழுக்கம் எழுப்பியவாறு ஊர்வலமாக வந்து கலந்து கொண்டனர்.


இராணிப்பேட்டை

அரக்கோணம் ஆதிக்கச்சாதிப் படுகொலைக்கு எதிராக...

இராணிப்பேட்டை, முத்துக்கடையில் 10.04.2021 மாலை, தொல்.திருமாவளவன் தலைமையில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்...
ஆம்பூர் மக்கள் அதிகாரம் மற்றும் வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்கள் கலந்து கொண்டனர். ஆயிரக்கணக்கானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.




தருமபுரி

அரக்கோணம் இரட்டைப் படுகொலையைக் கண்டித்து 
விடுதலை  சிறுத்தைகள் கட்சி சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  10.04.2021 அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விசிக
மாவட்டச் செயலாளர். தோழர். ஜெயந்தி தலைமை தாங்கினார். கண்டன உரை:
தோழர். நந்தன், மண்டலச் செயலாளர், விசிக .
வழக்கறிஞர் தோழர்.ஜானகிராமன்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம்.
தோழர்.பாலன், மாவட்ட அமைப்பாளர், புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி. தோழர். பாண்டியன் மண்டல செய்தித் தொடர்பாளர். விசிக  ஆகிய தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். 



தகவல்:
மக்கள் அதிகாரம், 
தருமபுரி, 
தமிழ்நாடு. 
9597138959.

Thursday, 8 April 2021

மகஇக பொதுக்குழுத் தீர்மானங்கள்!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக 07.04.2021 அன்று திருச்சியில் மாநிலப் பொருளாளர் தோழர்.வெங்கடேசன் தலைமையில் பொதுக்குழு கூடியது. அதில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர்.காளியப்பன் அவர்கள் அறிவித்தார்.

தகவல்:

மக்கள் கலை இலக்கியக் கழகம்,

தமிழ்நாடு,

தொடர்புக்கு:94431-88285