தமிழ்த் தேசியம் என்றால் அது சீமான்தான் என்கிற கருத்து இன்று இளைஞர்கள் மத்தியில் மிகத் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. தமிழரை உய்விக்க வந்த மாயோனாக, சீயோனாக சீமானை சில இளைஞர்கள் பார்க்கின்றனர். முப்பாட்டன் முருகன் தொடங்கி பெரும்பாட்டி ஔவை, ஓபிஎஸ்–இபிஎஸ் சித்தப்பாக்கள், சித்தி சசிகலா, வழி காட்டி திருவரங்கம் சங்கர் அப்பா என இவருக்குச் சொந்த பந்தம் ஏராளம் என்பதாலும், அண்ணனின் ஆமைக்கறியால் இவரது தசைகள் முறுக்கேறியதாலும், கிரீன் பெல்ட்-பிளாக் பெல்ட் என விளாசிக் கொண்டிருக்கிறார். இவரது விளாசலில் திராவிடமே திக்குமுக்காடுவதாகத் தம்பிகள் வேறு சாட்டையைச் சுழற்றுகின்றனர். தமிழ் மண்ணையே ஆளத் துடிக்கும் இவருக்கு, பாவம் சொந்தமாக ஒரு வீடு இல்லை என்கிற ‘பெருந் துயரத்தைத்’ தவிர இவரது உல்லாசத்திற்குக் குறை ஒன்றுமில்லை.
‘நாம் தமிழர்’ சீமானின் தமிழ்த் தேசியம்!
தமிழின மீட்சி, தமிழீழத் தனியரசு, மாநிலங்களின் தன்னுரிமை, இறையாண்மைக் குடியரசுகளின் கூட்டு இணையாட்சி-அதற்கேற்ப அரசியல் சட்டத் திருத்தம், ஆட்சி மொழி-வழிபாட்டு மொழி-வழக்காடு மொழி-தமிழில் படித்தவருக்கே வேலை வாய்ப்பு என எங்கும் தமிழ், சமதர்மப் பாதையமைக்கக் கூட்டுறவு முறை, நிலமற்றோருக்கு நிலமும் மனையும், அறிவியல்-தொழில் நுட்ப வளர்ச்சி, உலகத் தமிழர் ஒன்றிணைப்பு, சமனியத் தமிழரசு, வருண–சனாதன அழிப்பு, சாதி-சமய ஆதிக்கம் ஒழிப்பு, சமயம் சாரா அரசு, தனியார் மயம்–கள்ளப் பணம் ஒழிப்பு, மருத்துவம் அடிப்படை உரிமை, ஆண்-பெண் சுயஉதவிக் குழுக்கள், தேசிய இன நட்புறவுக் கழகம் (எ.கா:தமிழர்-வங்காளி) என ஒரு குடுகுடுப்பைக்காரன் குறி சொல்வது போல நீள்கிறது இவரது கொள்கைப் பிரகடனங்கள்.
யாரிடமிருந்து தமிழின மீட்சி? திமுக அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் ‘திருட்டு’ திராவிட திமுக-விடமிருந்து என்பார் சீமான். ஆனால் (திராவிடத்தால் துளிர்த்த) இலை மலர்ந்தால் இவர் ஆமைக் கறியோடு இளைப்பாறி விடுவார்.
தமிழீழ தனியரசு–புலம்பெயர் தமிழரிடமிருந்து பணம் கரப்பதைத் தவிர வேறு ஒரு வெங்காயத்தையும் இவரால் உரிக்க முடியாது.
சாதி ஆணவப் படுகொலையை “குடிப்பெருமை கொலை” என பெருமை பேசும் இவர், சாதி ஆதிக்கத்தையும் வருண-சாதியையும் ஒழிக்கப் போகிறாராம்? கிருஸ்தவமும் இஸ்லாமும் ஐரோப்பிய–அரேபிய சமயங்கள்; சைவமும்–மாலியமும் மட்டும்தான் தமிழர் சமயங்கள் என கதை அளந்து கொண்டே, சமயம் சாரா அரசு அமைக்கப் போவதாகச் சரடு விடுகிறார்.
பன்னெடுங்காலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கர்களையும், மலையாளிகளையும், கன்னடர்களையும் எதிரிகளாகக் கட்டமைத்துக் கொண்டே தேசிய இன நட்புறவுக் கழகம் பற்றி நரித்தனம் பேசுகிறார்.
திரைப்படங்களில் கச்சைக் கட்டி குத்தாட்டம் போட்டு கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கும், இடுப்பில் பச்சைத் துண்டு கட்டிக் கொண்டு ‘தமிழர் முன்னணி’ ஆட்டம் போடும் இவருக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை; இரண்டிலும் இளைஞர்கள் சீரழிவதைத் தவிர!
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். ஆனால் இங்கோ, குட்டி எட்டடி பாய்ந்தால் தாய் பதினாறடி பாய்கிற கதையாகி விட்டது, ஐயா மணியரசனின் கதை. சீமானாவது இந்து மதம் தமிழர் மதமே இல்லை என்கிறார். ஆனால் மணியரசனோ, தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்று சொல்லி சைவத்தை மீட்டெடுக்கும் திருநாஞானசம்பந்தராய் அவதாரம் எடுத்து வச்சிரநந்தியைக் கழுவிலேற்றுகிறார்.
இவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்தால், வேத-எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிடக் கருத்தியலை, தமிழர் நெஞ்சங்களிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்வதைத் தவிர தமிழர்களுக்கு வேறொரு பயனும் கிட்டப் போவதில்லை.
தோழர் ஸ்டாலினின் சொற்களில் சொல்லவேண்டுமானால், இவர்கள் இருவரும் தமிழ்த் தேசிய இனத்தைப் பழைய சமூக முறைக்குத் திரும்பச் செல்வதற்கு முயற்சி செய்பவர்கள்; அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும் கூட இந்த முடிவை கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்க முடியாது. இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் பிழையானது என்பதற்கு, பல்வேறு தேசிய இன மக்களுக்கிடையே பகைமையை வளர்ப்பது, பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சீர் குலைப்பது என வேறு பல காரணங்கள் இருந்தாலும் தமிழ்த் தேசிய இனத்தைப் பழைய முறைக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரே காரணத்திற்காக இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
பார்ப்பனரல்லாதோர் இயக்கம்-நீதிக்கட்சி தொடங்கி, பெரியார்-அண்ணா-கலைஞர்-ஸ்டாலின் காலம் வரை திராவிடக் கருத்தியலை, பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக எதிர்ப்பது ஏன்? இட ஒதுக்கீடு உள்ளிட்ட திராவிடக் கருத்தியலின் சமூக நீதிக் கோட்பாடுகளால், சூத்திரர்கள் இருந்த இடத்தில் பார்ப்பனர்களையும், பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் சூத்திரர்களையும் வைத்ததால்தான் பார்ப்பனர்கள் பெரியார் மீது கடும்கோபம் கொள்ளக் காரணம். அனைத்து சாதி அர்ச்சகர் இதற்கு சமீபத்திய எடுப்பான உதாரணம்.
வட இந்தியாவில் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மத்திய- மாநில அமைச்சர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் பார்ப்பனர்களால் வரமுடிகிறது. ஆனால் தமிழகத்திலோ ஒரு வார்டு உறுப்பினராக வருவதற்கே திண்டாட வேண்டியிருக்கிறது. வடக்கும், தெற்கு போல ஆகிவிடுமோ என்ற அச்சம் பார்ப்பனர்களை அச்சுறுத்தியதால்தான், உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து அதிகாரத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சி செய்கின்றனர் போலும்.
பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகளால் ஆதிக்கத்தை இழந்தவர்கள் அலருவதில் அர்த்தம் உண்டு. ஆனால் பெரியாரால் ஆதாயமடைந்தவர்கள் அலருகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?
தொடரும்
தமிழ்மணி
நன்று
ReplyDelete