Friday, 31 July 2026

தமிழ் மக்கள் இசை விழா சிறக்க நிதி தாரீர்!

வணக்கம் நண்பர்களே, தோழர்களே!

"தானாக நிகழ்பவை எல்லாம் வரலாறல்ல... மனித சமூகத்திற்குப் பயன்படும் வகையில், இயற்கை அளித்த சூழலைப் பயன்படுத்தி வாழ்க்கையை மேலும் செழுமைப்படுத்தும் மனிதர்களின் உழைப்பும் போராட்டங்களுமே வரலாறாக மாறுகின்றன!"

உலக வரலாற்றின் போக்கு இதுதான். மனித உழைப்பால் உருவான இத்தகைய மகத்தான முயற்சிகள் சில வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன; சில மறைந்துபோயுள்ளன.
இன்றைய நவீன காலத்தில் நிகழ்வுகள் அனைத்தும் எழுத்து வடிவிலும், ஒலி-ஒளி காணொளிகளாகவும் இன்ன பிற வடிவங்களிலும் உடனடியாகப் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், தொழில்நுட்ப வசதிகள் இல்லாத முற்காலத்தில், மக்களின் எழுத்துக்கள், பயன்பாட்டுப் பொருட்கள், தொல்லியல் சான்றுகள் மற்றும் இலக்கியங்கள் மட்டுமே கடந்த கால வரலாற்றைப் பதிவு செய்தன.


கற்பனைப் புனைவா? வரலாற்றுச் சான்றா?

மறுபுறம், எந்தவிதமான தொல்லியல் சான்றுகளும் இல்லாமல், வெறும் கற்பனைப் புனைவுகளை மட்டுமே கொண்டு வரலாறு எழுதும் அபாயகரமான போக்கும் இங்கே நிலவுகிறது. அத்தகைய ஒரு போலித்தனமான போக்குதான் 'சரஸ்வதி நதி நாகரிகம்’ என்ற பெயரில் ஒரு கற்பனையை அடிப்படையாகக் கொண்ட 'வேத நாகரிகம்'!
இதற்கு இலக்கியச் சான்றுகளோ, தொல்லியல் சான்றுகளோ, கல்வெட்டுகளோ எதுவுமே கிடையாது. ஆற்றுப் படுகைகளில்தான் மனித நாகரிகங்கள் தோன்றி வளர்ந்தன என்கிற பொதுவான புரிதலை மட்டும் வைத்துக்கொண்டு, வரலாற்றில் அறியப்படாத 'சரஸ்வதி' நதியை வைத்து வேத நாகரிகத்தைக் கட்டமைக்க முயல்கிறார்கள்.

இத்தகைய சூழலில்தான், தமிழ்நாட்டின் வைகை நதிக்கரையில் நடைபெற்ற கீழடி அகழ்வாய்வு, ஆரிய-வேதப் புராணக் கதைகளை அடியோடு தகர்த்தெறிந்துள்ளது! 2,600 ஆண்டுகளுக்கு முன்பே சாதி, மதம் மற்றும் ஆன்மீகத் தடயங்கள் அற்ற, எழுத்தறிவு பெற்ற உயரிய நகர நாகரிகமாகத் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. "இந்திய வரலாற்றின் மிக முக்கியப் புள்ளி கீழடிதான்!" என்பதை அறிவியல் பூர்வமாக நிறுவியுள்ளது.

கீழடியை முடக்க முயலும் ஒன்றிய அரசு

இந்த வரலாற்று உண்மையை மூடிமறைக்கவே, கீழடி ஆய்வறிக்கையை முடக்கி, தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களை ஒன்றிய மோடி அரசு பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்தது.
இங்கே 'ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு' என்று சனாதனப் பாசிசத்தைத் திணித்து, பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் சாதிய நச்சை விதைக்கிறார்கள். மற்றொருபுறம், கார்ப்பரேட் சுரண்டலாலும் சனாதன அடக்குமுறைகளாலும் உழைக்கும் மக்களைத் தொடர் இன்னல்களில் தள்ளிவிடுகின்றனர்.

இதற்கு மாற்று மருந்து — கீழடி முன்வைக்கும் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற சமத்துவப் பண்பாடே ஆகும்!

தஞ்சை 'தமிழ் மக்கள் இசை விழா' — ஒரு பண்பாட்டுப் போர்!

வேத நாகரிகப் பொய்மைகளை ஒழித்து, கீழடி தரும் சமத்துவப் பண்பாட்டை தமிழர் நெஞ்சங்களில் ஆழப் பதியச் செய்யும் மகத்தான பண்பாட்டுப் போரை மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) கையில் எடுத்துள்ளது!
அதன் ஒரு பகுதியாக, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தஞ்சை மண்ணில் மாபெரும் "தமிழ் மக்கள் இசை விழா" நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கீழடி அகழ்வாய்வின் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் காட்சிப்படுத்தும் சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கீழடி உண்மைகளை உலகுக்குச் சொன்ன தொல்லியல் ஆய்வறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களும் தனது அனுபவங்களை நேரில் பதிவு செய்யவிருக்கிறார்.

கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு பயணிக்கும் நானும், இதில் எனது நேரடிப் பங்களிப்பைச் செலுத்தி வருகிறேன். தொலைநோக்கு அரசியல் பார்வையும், எவருக்கும் அஞ்சாத சமரசமற்ற போர்க்குணமும் கொண்ட அமைப்புதான் 'மகஇக' என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.

நண்பர்களே, தோழர்களே, உழைப்பையும் நிதியையும் தாராளமாகத் தாருங்கள்!

உடல் உழைப்பையும் பெரும் பொருட்செலவையும் கோரக்கூடிய ஒரு மாபெரும் நிகழ்வுதான் இந்தத் தமிழ் மக்கள் இசை விழா. எனவே, இந்நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற:

1.களத்தில் இறங்கி நேரடியாக உழைப்பைச் செலுத்தக்கூடிய தோழர்களும் நண்பர்களும் ஆர்வமுடன் முன்வர வேண்டும்!

2.கடந்த காலங்களில் தாராளமாக நிதி வழங்கி பேராதரவு தந்த நண்பர்களும் தோழர்களும், சனாதன எதிர்ப்புச் சிந்தனையாளர்களும் இந்த முறையும் பெரிய அளவில் நிதி உதவி செய்ய வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

"தாங்கள் வழங்கும் ஒவ்வொரு ரூபாயும் சனாதனப் பாசிசத்தின் மீது விழும் அடி! கீழடியை உயர்த்தும் பண்பாட்டுத் தூண்!"

தோழமையுடன்,

பொன். சேகர் @ தமிழ்மணி
Ex. BHEL

குறிப்பு:
சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அனைவரையும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அரிதாக இருப்பதால், தங்களது நிதிப் பங்களிப்பை Google Pay (GPay) மூலம் கீழ்க்கண்ட எண்ணுக்கு அனுப்பி வைக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

GPay எண்: 94868 80758

QR Code:



Wednesday, 22 July 2026

வடலூருக்குத் தேவை 'தூய்மை'... 'புனிதம்' அல்ல!

வள்ளலார் வாழ்ந்த வடலூரைப் 'புனித நகரமாக' அறிவிக்கக் கோரி, வள்ளலாரின் சீடர்கள் என்ற பெயரில் ஒரு கும்பல் நடைபயணம் மேற்கொண்டு வருகிறது. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது ஏதோ ஆன்மீகக் கோரிக்கை போலத் தோன்றினாலும், இதன் பின்னணியில் இருப்பது உழைக்கும் மக்களின் அடிப்படை வாழ்வுரிமையையும் உணவு உரிமையையும் பறிக்கும் மிகக் கொடூரமான பாசிச எண்ணமே ஆகும்!


'புனிதம்' என்றால் என்ன?

வடலூரைப் 'புனித நகரமாக' அறிவித்தால் அங்கு என்ன நடக்கும்?

வடலூர் நகர எல்லைக்குள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் (கவிச்சிக் கடைகள்) முற்றிலுமாகத் தடை செய்யப்படும். மக்கள் தங்கள் வீடுகளில் கூட அசைவம் சமைக்க முடியாது!

இறைச்சி சாப்பிட விரும்பினால், மக்கள் வடலூர் நகரை விட்டு வெளியே சென்று, அங்கேயே சாப்பிட்டு, அதைச் செரித்து, அங்கேயே கழிவை வெளியேற்றிவிட்டுப் புனிதர்களாகத்தான் வடலூருக்குத் திரும்ப வேண்டும்!

என்னவொரு அராஜகமான கோரிக்கை இது! மனிதர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் இந்த வன்கொடுமையை என்னவென்று சொல்வது?

'கவிச்சி' (அசைவம்) என்பது அருவருப்பானது, தீட்டானது என்பது அப்பட்டமான பார்ப்பனிய-சனாதனக் கருத்து.

வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு உணவு மறுக்கப்பட்ட போது, அவர்கள் உயிர் வாழச் செத்த மாட்டையும் விலங்குகளையுமே உண்ண வேண்டிய சூழல் இருந்தது. தீண்டத்தகாதவர்கள் கவிச்சி உண்ணுவதால் கவிச்சியும் தீட்டாகக் கருதப்பட்டது. காலப்போக்கில், அசைவ உணவே உடலுக்கு வலு சேர்க்கும் மலிவான சத்துணவு என்பதால் அது உழைக்கும் மக்களின் முதன்மை உணவாக மாறியது.

'புனித' நகரமான ஹரித்துவாரில் அசைவ உணவு கிடைக்காமல் மக்கள் எங்ஙனம் அவதிப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்தவன் நான். எனவே, வடலூரைப் 'புனித நகரமாக' அறிவிக்கக் கோரி உழைக்கும் மக்களின் உணவு உரிமையில் கைவைக்கும் இந்த நபர்களின் கோரிக்கையை, அசைவப் பிரியர்களும் உழைக்கும் மக்களும் உறுதியாக முறியடிக்க வேண்டும்!

வடலூருக்கு தேவையானது புனிதமா? தூய்மையா?

வடலூருக்கு உண்மையில் தேவையானது புனிதம் அல்ல; தூய்மை. சாக்கடை நீர் ஓடாத தெருக்கள், குப்பைகள் இல்லாத பொதுவெளிகள், அனைவருக்கும் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கொண்ட நகரம்தான் மக்களுக்கு தேவை. ஆனால் மக்களின் உணவுத் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் 'புனித நகரம்' யாருக்குத் தேவை?

வள்ளலாரை சனாதன உலைக்களத்திற்குள் தள்ளும் சதி!

உண்மையிலேயே வள்ளலார் விலங்கு வதைக்கு எதிராகப் பேசியதை விட, சனாதன-பார்ப்பனிய வதைக்கு எதிராகப் பேசியதுதான் அதிகம்! அவர் ஒரு சமரசமற்ற சனாதன எதிர்ப்புப் போராளி. அப்படிப்பட்ட வள்ளலாரை மீண்டும் சனாதனப் பிடிக்குள் தள்ளி, அவரது பெயரால் 'புனிதக் கூச்சல்' போடுவது அவரது தத்துவத்திற்கே செய்யும் துரோகமாகும்.

வள்ளுவரின் புலால் மறுப்பும் காலச் சூழலும்

வள்ளுவர் கூட 'புலால் உண்ணாமை' குறித்துத் திருக்குறளில் (அதிகாரம் 26) பத்து குறட்பாக்களை எழுதியுள்ளார். வேளாண் உற்பத்தி பெரிய அளவில் பெருகாத, வேட்டையாடி உண்பதே வழக்கமாக இருந்த அக்காலகட்டத்தில் உயிர் பலியைத் தடுப்பதற்காக வள்ளுவர் அதை எழுதி இருக்கக்கூடும்.

ஆனால், அன்றைய வரலாற்றுச் சூழலில் எழுதப்பட்ட ஒன்றை இன்றைக்கும் அப்படியே பொருத்த முடியாது. இன்றைக்கு அசைவ உணவே உழைக்கும் மக்களுக்கு மலிவாக வலு சேர்க்கக்கூடிய உணவாக இருக்கும் போது, வள்ளுவரை அப்படியே பின்பற்ற முடியாது.

எந்தவொரு அறநெறியையும் அந்தந்தக் காலச் சூழலுக்கு ஏற்பப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர, அதில் ஆன்மீகப் பொருள் தேடி மூர்க்கமாகப் பின்பற்றுவது அறிவீனம்!

அசைவமும் குற்றமும்: அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதை!

"அசைவம் சாப்பிட்டால் முரட்டு குணம் வரும், குற்றம் செய்வான்" என்று சனாதனம் பேசுகிறது. இது முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதை! அசைவ உணவு உண்பவர்கள் மட்டும்தான் குற்றம் செய்கிறார்களா? சைவப் போர்வையில் வலம் வரும் உத்தமர்கள் யாரும் குற்றம் செய்வதில்லையா?

தூய்மை-தீட்டு (purity-pollution) என்கிற உயர்மை-தாழ்மை என்கிற இந்து மதக்கோட்பாடுதான் சாதியத் தீட்டையும் வாழ்வியல் தீட்டையும் வரையறுக்கிறது. எங்கெல்லாம் புனிதம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தீட்டும் சேர்ந்தே இயங்குகிறது.

முடிவுரை

வடலூரைப் புனித நகரமாக அறிவிக்கக் கோருவதன் உள்ளே ஒளிந்திருப்பது மறைமுகத் தீண்டாமையே அன்றி வேறில்லை. எனவே, 'புனிதம்' என்ற பெயரில் மக்களின் உணவு உரிமையைப் பறிக்கவும் சாதியத் தீட்டைத் திணிக்கவும் யார் பேசினாலும், அவர்கள் மீது வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!

வள்ளலார் வாழ்ந்த வடலூரை குப்பைகள் இல்லாத, சாக்கடைகள் இல்லாத, நோய்நொடியற்ற "தூய்மை நகரமாக" மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதுதான் மக்கள் வாழத் தகுதியான நகரமாக இருக்கும். அதை விடுத்து, 'புனித நகரம்' என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமையை உணவோடு சேர்த்துப் பறிக்க நினைப்பது அப்பட்டமான சனாதன பாசிசமே!

— ஊரான்

Monday, 13 July 2026

மறையும் முன்பே தணிந்த அக்கினி!

இந்தியப் பொதுவுடமை இயக்க வரலாற்றில் 1967 நக்சல்பாரி பேரெழுச்சி ஆளும் வர்க்கத்தை நடுநடுங்க வைத்ததோடு, அரசியல் மாற்றத்தை விரும்பிய இளைஞர்களைக் காந்தமாய் ஈர்த்தது. வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் தொடக்க காலப் பாதையிலிருந்து, 1980-களின் தொடக்கத்தில் மக்களைத் திரட்டும் புதிய பாதையை நோக்கி நக்சல்பாரி இயக்கம் பயணித்தது. அந்த வரலாற்றுப் பின்னணியில் உருவானதுதான் மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக).

அக்காலத்தில், தமிழ்நாட்டின் மேடைகள் கம்பன் கழக இலக்கியச் சொற்பொழிவுகளாலும், இலக்கற்ற பட்டிமன்ற அரட்டைகளாலும், வழக்கமான பகுத்தறிவு மற்றும் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரங்களாலும் மட்டுமே சூழப்பட்டிருந்தன. அந்தச் சூழலில், “புதிய ஜனநாயகப் புரட்சி” எனும் மாற்று அரசியலை அதிரடியாக முன்வைத்து, மேடைகளில் நக்சல்பாரி அரசியலை முழங்கியவர்கள் மகஇக தோழர்கள். கடந்து செல்வோரையும் காதுகொடுத்துக் கேட்க வைத்து, கட்டிப்போடும் ஆற்றல் கொண்டதாக மகஇக-வின் மேடைப் பேச்சுகளும் பாடல்களும் விளங்கிய காலம் அது.

தோழர் கதிரவன்

தோழர்கள் காளியப்பன், சீனிவாசன், தமிழ்மணி, கதிரவன் என மகஇக-வின் மேடைப் பேச்சாளர்கள் புரட்சிகர மேடைப்பேச்சு வரலாற்றில் ஒரு புதிய தடத்தைப் பதித்தனர். தோழர் காளியப்பனின் உரை மடைதிறந்த வெள்ளமென ஓடும்; தமிழ்மணியும் சீனிவாசனும் மேடைகளில் அதிரடி காட்டுவர்; அதற்குப் பிறகு தோழர் மருதையனின் மேடைப்பேச்சு புதிய மைல் கல்லைத் தொட்டது.

இந்த வரிசையில், மாற்று அரசியலை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மதுரையைச் சேர்ந்த  தோழர் கதிரவன் @ அக்கினியின் பங்கு அளப்பரியது.
தோழர் கதிரவனின் உரை படபடக்கும் வெடிகளைப் போல வெடித்துச் சிதறுவது மட்டுமல்ல, மக்களின் நெஞ்சங்களை உருக்கும் ஆற்றல் வாய்ந்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில், வரதட்சணைக் கொடுமைகளை விவரித்து அவர் ஆற்றிய உரையைக் கேட்டு, அங்கிருந்த முதியோர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவெனக் கொட்டியது.

"போராட்டத்திற்கு அவர் மேடையில் அறைகூவல் விடுத்தால், தோழர்கள் அணிஅணியாய்த் திரளும் அசாத்திய வலிமை அவரது பேச்சிற்கு இருந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த  தோழர் கதிரவனின் தலைமையில்தான் எனது திருமணமும் நடைபெற்றது. 

தொடக்க காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் களப்பணியாளராகவும், மேனாள் மாநில செயலாளராகவும், மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர் அவர்.

சிறு சிறு செயல்களைக்கூட விளம்பரமாக்கி முகநூலில் புகழ் தேடும் சமூக ஊடகக் காலம் இது. ஆனால் அன்றைய தோழர்களின் அளப்பரிய உரைகள் கேட்போர் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை முறைப்படி பதிவு செய்யப்படாமலேயே கால ஓட்டத்தில் மறைந்து போனது பெருஞ்சோகம்.

2020-ஆம் ஆண்டு வாக்கில் அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிக்கலால், மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு இருந்த உறவை துண்டித்துக் கொண்டு ஒரு சிறு குழுவினரோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால், அன்றிலிருந்து அமைப்பில் அவருடைய செயல்பாடுகள் முடங்கிப் போயின. கதிரவன் தனது மகஇக அடையாளத்தையும் இழந்து,  மறையும் முன்பே தணிந்து போனதால், அவரோடு எமக்கு இருந்த தோழமை உறவும் அறுந்துபோனது.

அரசியல் ரீதியாக எமது உறவுகள் அறுந்துபோனாலும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயற்குழுவில் அவரோடு இணைந்து பயணித்த 20 ஆண்டு கால நினைவுகள் மட்டும் என்றும் எம்மை விட்டு நீங்காது.

தோழர் கதிரவன் அவர்களுக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்மணி

Thursday, 9 July 2026

நோபல் பரிசும் ஏகாதசி விரதமும்: அறிவியல் உண்மையா? ஆன்மீகப் புனைவா?

சமூக ஊடகங்களில் சமீபகாலமாக ஒரு பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஏதேனும் ஒரு புதிய அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்து அதற்கு நோபல் பரிசு வழங்கினால் போதும்; உடனே சிலர் கிளம்பி விடுவார்கள்—"இதைத்தான் எங்கள் சனாதன தர்மம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது" என்று வக்காலத்து வாங்க.


முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். ஏகாதசி விரதம் இருப்பது தவறு என்று யாரும் கூறவில்லை. மத நம்பிக்கையின் அடிப்படையிலோ, ஆன்மீக ஒழுக்கத்தின் அடிப்படையிலோ அல்லது உடல்நலக் காரணங்களுக்காகவோ ஒருவர் விரதம் இருப்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. கேள்வி அதுவல்ல.

இன்று நவீன அறிவியல் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு உண்மையையும், "இதைத்தான் எங்கள் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டார்கள்" என்று கூறுவது அறிவியல் அணுகுமுறையா என்பதுதான் கேள்வி.

ஒரு பழக்கத்தில் சில உடல்நல நன்மைகள் இருப்பது ஒரு விஷயம்; அந்தப் பழக்கத்தை உருவாக்கியவர்கள் நவீன உயிரியல் அறிவியலை முழுமையாக அறிந்திருந்தார்கள் என்று கூறுவது வேறு விஷயம். இந்த இரண்டையும் குழப்பக் கூடாது.

இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை பகுத்தறிவுப் பார்வையோடு அணுக வேண்டியது அவசியம்.

1.யோஷினோரி ஓசுமியின் கண்டுபிடிப்பு என்ன? (ஆட்டோஃபேஜி என்றால் என்ன?)

2016-ல் ஜப்பான் விஞ்ஞானி Yoshinori Ohsumi நோபல் பரிசு பெற்றது உண்மைதான். ஆனால் அவர் கண்டுபிடித்த "ஆட்டோஃபேஜி" (Autophagy) என்பது நீங்கள் நினைப்பது போல மனிதர்கள் "ஏகாதசி விரதம்" இருப்பதைக் குறிப்பது அல்ல.

அவர் 'ஈஸ்ட்' (Yeast) எனப்படும் ஒருசெல் பூஞ்சை உயிரினங்களின் செல்களை ஆராய்ந்து, செல்லுக்குள் இருக்கும் கழிவுகள் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்ற உயிரியல் செயல்முறையை விளக்கினார். இதற்காகத்தான் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உண்ணாவிரதம் அல்லது உணவுக் கட்டுப்பாடு சில சூழல்களில் ஆட்டோஃபேஜியைத் தூண்டக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அதற்கும் பதினோராவது திதியான "ஏகாதசி"க்கும் நேரடியான அறிவியல் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.

வாரத்தில் ஒருநாள் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் உணவைக் குறைத்துக் கொள்வது உடலுக்கு நன்மை தரலாம் என்பது ஒரு பொதுவான மருத்துவக் கருத்து. இதை உலகின் பல்வேறு சமூகங்களும், பல மதங்களும், பல்வேறு வடிவங்களில் பின்பற்றியுள்ளன. எனவே இதை ஒரு குறிப்பிட்ட மதத்தின் தனிப்பட்ட அறிவியல் சாதனையாகக் காட்டுவது தவறான அணுகுமுறையாகும்.

2. வளிமண்டல அழுத்தக் கட்டுக்கதை

ஏகாதசி அன்று பூமியின் வளிமண்டல அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும் என்றும், அதனால் அன்றைய தினம் உணவு உட்கொள்வது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுவது அறிவியல் ஆதாரமற்ற கூற்றாகும்.

பூமியின் வளிமண்டல அழுத்தம் என்பது அந்தந்தப் பகுதியின் காலநிலை, வெப்பநிலை, காற்றழுத்த மாறுபாடுகள் மற்றும் புவியியல் அமைப்புகளைப் பொறுத்து மாறுகிறது. அது ஏகாதசி திதியோடு தொடர்புடையது என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

நிலவின் ஈர்ப்பு விசை கடல் அலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் ஏகாதசி திதிக்கும் மனிதர்களின் செரிமானக் கோளாறுகளுக்கும் இடையே காரண-காரியத் தொடர்பு இருப்பதாக அறிவியல் நிரூபிக்கவில்லை.

வானியல் (Astronomy) என்ற பெயரில் ஜோதிடக் கருத்துக்களை அறிவியல் உண்மைகளாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

3. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித அறிவு எங்கு இருந்தது?

"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் முன்னோர்கள் ஆட்டோஃபேஜி மற்றும் செல் சுழற்சியைத் துல்லியமாக அறிந்திருந்தார்கள்" என்று கூறுவது வரலாற்று ரீதியாக நிலைக்க முடியாத வாதமாகும்.

மனித குல வரலாற்றில், செல்களின் இருப்பு பற்றிய அறிவே மிகவும் பிற்காலத்தில் உருவானது. 17-ஆம் நூற்றாண்டில் Robert Hooke நுண்ணோக்கி வழியாக செல்களைப் பார்வையிட்ட பிறகுதான் "செல்" என்ற உயிரியல் கருத்து அறிவியல் உலகில் தெளிவாக அறியப்பட்டது.

கத்தி, கோடாரி போன்ற அடிப்படை கருவிகளைக் கண்டறிவதற்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்த மனித சமூகம், செல்லுக்குள் நடைபெறும் மூலக்கூறு அளவிலான செயல்முறைகளை அறிவியல் ரீதியாக அறிந்திருந்தது என்று கூறுவது ஆதாரமற்ற மிகைப்படுத்தலாகும்.

அக்கால மனிதர்கள் தங்களது அனுபவங்களின் அடிப்படையில் சில பழக்கவழக்கங்களை உருவாக்கியிருக்கலாம். "தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உடலுக்கு சிரமம் ஏற்படுகிறது; சில நேரங்களில் உணவைக் கட்டுப்படுத்தினால் உடல் லேசாக இருக்கிறது" போன்ற அனுபவ அறிவுகள் அவர்களிடம் இருந்திருக்கலாம்.

அதில் எந்த மறுப்பும் இல்லை.
ஆனால் அந்த அனுபவ அறிவை, நவீன உயிரியல் அறிவியலுக்கு இணையான அறிவாக மாற்றிக் காட்டுவது வரலாற்றையும் அறிவியலையும் குழப்புவதாகும்.

4.அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பழைய நம்பிக்கைகளின் மீது ஏன் பொருத்திப் பார்க்க வேண்டும்?

இது ஒரு முக்கியமான உளவியல் மற்றும் அரசியல் போக்காகும்.
இன்றைய அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக ஆய்வகங்களில் உழைத்து கண்டுபிடிக்கும் உண்மைகளை, தங்களின் பழைமைவாத நம்பிக்கைகளுக்கான ஆதாரங்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

அப்படியானால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தன என்றால்:
  • ஏன் காலரா, அம்மை, பிளேக் போன்ற நோய்கள் வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள்?
  • ஏன் தடுப்பூசிகள், கிருமிக் கோட்பாடு, பென்சிலின் போன்ற மருத்துவ முன்னேற்றங்கள் நவீன அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகுதான் உருவாகின?
  • ஏன் மனிதகுலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நோய்களுடன் போராட வேண்டியிருந்தது?
உண்மை என்னவென்றால், பழங்கால வழக்கங்களில் இருந்த சில எதேச்சையான நன்மைகளை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு இக்கால அறிவியல் சாயம் பூசி, பழைமைவாத நம்பிக்கைகளுக்கு புதிய நியாயங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

முடிவுரை: வரலாற்றை வரலாற்றுப் பார்வையில் அணுகுவோம்

கடந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த இயற்கை அறிவின் அடிப்படையில் சில பழக்கவழக்கங்களை உருவாக்கினர். அறிவியல் வளராத அக்காலத்தில், சடங்குகளும் மத நம்பிக்கைகளும் மட்டுமே அந்தப் பழக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களாக இருந்தன.
அந்தப் பழக்கங்களில் சில உடல்நல நன்மைகள் இருந்திருக்கலாம். ஆனால் அதனால் அவற்றை உருவாக்கியவர்கள் நவீன உயிரியல், மருத்துவம் அல்லது மூலக்கூறு அறிவியலை அறிந்திருந்தார்கள் என்று முடிவு செய்ய முடியாது.

கடந்த கால நம்பிக்கைகளை வரலாறாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய அறிவியலை அறிவியல் முறையின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளை மத நம்பிக்கைகளுக்கான ஆதாரங்களாகவும், மத நம்பிக்கைகளை அறிவியல் உண்மைகளாகவும் மாற்ற முயலும் போக்குகளை விமர்சனப் பார்வையோடு அணுக வேண்டும்.

அறிவியலை அறிவியலாகவும், வரலாற்றை வரலாறாகவும் புரிந்துகொள்வதே ஒரு முற்போக்கான சமூகத்தின் அடையாளமாகும்.

— ஊரான்


Wednesday, 8 July 2026

அமைச்சர் கீர்த்தனாவின் ‘ரீல்ஸ்’ அரசியலும் அரசுப் பள்ளி மாணவர்களின் மரியாதையும்

பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவைச் சோதிக்கிறேன் என்ற பெயரில், அரசுப் பள்ளி மாணவர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் காணொளிகள் வெளியிடுவது கல்வி மீதான அக்கறையின் வெளிப்பாடு அல்ல; அது அதிகார மனோபாவத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.

அமைச்சர் கீர்த்தனா

ஒரு அமைச்சர் மாணவர்களிடம் கேள்வி கேட்கலாம். அவர்களின் கற்றல் நிலையை அறியலாம். ஆனால் அதனை சமூக ஊடகக் காட்சிப் பொருளாக மாற்றி, மாணவர்களின் தடுமாற்றங்களை “ரீல்ஸ்” உள்ளடக்கமாகப் பரப்புவது கல்வித் தரத்தை உயர்த்தாது. மாறாக, மாணவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.

மாணவர்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் பருவத்தில் உள்ளவர்கள். அவர்களிடம் குறைகள் இருப்பது இயல்பானது. ஆனால் ஒரு அரசுப் பிரதிநிதியின் கடமை, அந்தக் குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுவது அல்ல; அவற்றைக் களைவதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் உருவாக்குவதுதான்.

அரசுப் பள்ளிகளை இகழ்வது என்பது வெறும் மாணவர்களை இகழ்வதல்ல. பல தலைமுறைகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் அறிவொளி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியர்களின் உழைப்பையும் அவமதிப்பதாகும்.

நானே மலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய கிராம அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்றவன். எழுத்தறிவு குறைந்த சமூகச் சூழலில் இருந்த என்னை எழுத்துலகிற்கும் அறிவுலகிற்கும் அழைத்துச் சென்றது அரசு பள்ளி ஆசிரியர்கள்தான். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலும்தான் என்னை தொழில்நுட்பக் கல்விக்கும், சட்டக் கல்விக்கும், உயர்கல்விக்கும் இட்டுச் சென்றது.

இது என்னுடைய கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கதையும் இதுதான். அவர்களில் பெரும்பாலோர் அரசு பள்ளிகளின் பிள்ளைகள்.

நாம் சாதனை மனிதர்களைப் பற்றியே பேசுகிறோம். ஆனால் அமைதியாகத் தங்கள் துறைகளில் பணியாற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நின்றிருக்கும் எண்ணற்ற அறிவாளிகளும் அரசு பள்ளிகளில் உருவானவர்கள்தான்.

உண்மையான கல்வி என்பது ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசுவதால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அது சிந்திக்கும் திறன், மனிதநேயம், நாவடக்கம், பணிவு மற்றும் பிறரை மதிக்கும் பண்புகளால் அளவிடப்படுகிறது.

பதவி கிடைத்தவுடன் மாணவர்களைச் சோதித்து 'ரீல்ஸ்' எடுப்பது எளிது. ஆனால் அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவது, நூலகங்களையும் ஆய்வகங்களையும் வலுப்படுத்துவது, மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்துவது ஆகியவையே ஒரு அமைச்சரின் உண்மையான சாதனைகளாக இருக்க வேண்டும்.

மாணவர்களின் அறியாமையை வெளிக்காட்டுவது பெருமையல்ல; அவர்களின் அறிவை வளர்ப்பதுதான் கல்வியின் நோக்கம்.

அரசுப் பள்ளி மாணவர்களின் மரியாதையையும், ஆசிரியர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது அரசின் கடமை. கல்வி என்பது காட்சிக்கான பொருள் அல்ல; எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு.

மாணவர்களை அவமானப்படுத்தும் 'ரீல்ஸ்' அரசியலை விட, மாணவர்களை முன்னேற்றும் கல்வி அரசியலே தமிழ்நாட்டிற்குத் தேவை.

பொன். சேகர், B.E., M.L., M.Phil.,
வழக்கறிஞர்