Tuesday 19 September 2023

உங்களுக்குக் கோபம் வராதா?

மார்க்சிய கோட்பாடு பேசக்கூடியவர்கள், பெரியார்-அம்பேத்கர் இருவரின் சிந்தனைகளைப் பேசக் கூடியவர்கள், தமிழ்த் தேசியம் பேசக் கூடியவர்கள், அனைவருமே இன்று சனாதனத்தை எதிர்த்துப் பேசுகின்றனர், முடிந்த அளவு போராடவும் செய்கின்றனர். 


ஆனால், இவர்கள் குட்டி குட்டியாய் பல நூறு அமைப்புகளாய் சிதருண்டுக் கிடக்கின்றனர். அற்பக் காரணங்களுக்காக இவர்கள் பிளவுபடுவது அன்றாட வாடிக்கையாக  மாறிவிட்டது. இத்தகையப் பிளவுகளின் போது, குட்டி குட்டி அமைப்புகளில் உள்ள கீழ்மட்டத் தொண்டர்களின் அரசியல் புரிதலின்மை காரணமாகவும், பழக்க தோசத்தாலும், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் சாதியப் பாசத்தாலும், தங்களுக்கு ஏற்ற ஒரு அணியில் இவர்கள் ஐக்கியமாகி விடுகின்றனர். 

தங்களுடைய கோட்பாடும் நடைமுறையும்தான் ஆகச்சிறந்தது என்று இவர்கள் ஒவ்வொருவரும் கருதிக் கொள்கின்றனர். நாலு பேரைக் திரட்டி, ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டால், சமூக ஊடகங்களில் நாலு வரிக்கு ஒரு மீம்சை போட்டுவிட்டால், அதற்கு நாலு லைக்கும் வந்துவிட்டால், தமிழ்நாடே இவர்கள் பின்னால் இருப்பது போலக் கனவுலகில் மிதக்கின்றனர். 

ஆனால், பெரும்பாலான குட்டி குட்டி அமைப்புகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் தமிழ்நாட்டுக் குடிகளில் சில நூறு பேருக்குக்கூட தெரியாது என்பதே எதார்த்தம். 

ஐம்பது அமைப்புகள் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் நூறுபேரைக்கூட திரட்ட முடியவில்லை. இன்றைய அரசியல் சூழலில் நாலு பேர்கூட இல்லாதவர்களுக்கெல்லாம் எதற்குத் தனி இயக்கம்? கட்சி? 

எனவே, ஏற்கனவே ஒன்றாய் இருந்து பிரிந்து போன குட்டி குட்டி இயக்கங்கள் தங்களை சுயபரிசீலனை செய்து, கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக முன்வைத்துப் பேசி, மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இத்தகைய அமைப்புகளில் உள்ள ஒரு சில பிழைப்புவாதிகள் இதற்கு முட்டுக் கட்டை போடக் கூடும். இவர்கள் இயக்கத் தலைமையாகக்கூட இருக்கலாம். அத்தகையோரை இனம் கண்டு ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒன்றிணைவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல் கட்டமாக,

மார்க்சியம் பேசக்கூடிய கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணையவும்,

அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளைப் பேசக் கூடிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணையவும், 

தமிழ்த் தேசியம் பேசக்கூடிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணையவும், வேண்டும். 

ஓராண்டு காலத்திற்குள் இது நடந்தால் நாட்டுக்கு நல்லது. அதற்கு அடுத்த கட்டமாக மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் ஒரே அமைப்பாக ஒன்றிணைய வேண்டும். 

இதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  இத்தகைய கட்சிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை ஒவ்வொரு மாவட்டத்திலும், உடனடியாக உருவாக்கி வெளிப்படையான திறந்த விவாதங்களை கீழிருந்து முன்னெடுக்க வேண்டும்.

இது இன்றைய காலத்தின் கட்டாயம். மார்க்சை, பெரியாரை, அம்பேத்கரை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

கோபம் உங்களுக்குள் இருக்கக் கூடாது. மாறாக உங்களுடைய கோபம் சனாதனத்திற்கு எதிரானதாக, சுரண்டல் ஒடுக்குமுறைக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

இத்தகைய கோபக்காரர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. இல்லையேல் வரலாறு நம்மை மன்னிக்காது

தமிழ்மணி

No comments:

Post a Comment