Friday 1 January 2021

இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6

தெருமுனைக் கூட்டங்கள்தான் என்னை பொதுக்கூட்டப் பேச்சாளராக தரம் உயர்த்தியது. காளியப்பன், கதிரவன், சீனிவாசனோடு மகஇக-வின் மையப் பேச்சாளரானேன். 

சென்னை, வேலூர், திருப்பத்தூர், ஊத்தங்கரை, நல்லம் பள்ளி, பென்னாகரம், கோவை, பரமத்தி வேலூர், சேந்த மங்கலம், கரூர், துறையூர், பெருவளப்பூர், விழுப்புரம், நெய்வேலி, அரியலூர், ஊரணிபுரம், வேதாரண்யம், அதிராமப்பட்டினம், இராமேஸ்வரம், மானாமதுரை, முதுகுளத்தூர்,  உசிலம்பட்டி,  இராஜபாளையம்-தேவிபட்டினம், திருச்சி என எண்ணற்ற ஊர்களுக்குக் கலைக்குழுவோடு பயணித்திருக்கிறேன். சிறப்புரை முடிந்து கலைக்குழுவில் கோரசும் பாடுவதுண்டு.  

1987 ஆம் ஆண்டு அதிமுக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் நான் பேசியதாக கைது செய்யப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது,

1989 ஆம் ஆண்டு திருச்சி நேரு சிலை குண்டுவெடிப்பின் போது கைது செய்யப்பட்டு துப்பாக்கி முனையில் சிபிசிஐடி போலீசாரால் மிரட்டப்பட்டதோடு சில நாட்களுக்கு அவர்களின் 'கஸ்டடியில் கடுமையான கசையடிக்கும் ஆட்பட்டது, 

1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அன்றைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா கொடும்பாவி எரிப்புத் தொடர்பாக திருச்சி பாலக்கரை போலீசாரின் கடுமையான தடியடிக்கு ஆட்பட்டது, 

ஒரு முறை சங்கராச்சாரி பிரச்சனையையொட்டி, புத்தூர் அக்ரகாரம் அருகே தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்ட போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டது, 

புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஏடுகளைத் தனித்தும், சக தோழர்களோடும் திருச்சி மட்டுமன்றி மதுரை, கரூர், நாமக்கல், சேலம், துறையூர், பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை,  புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் தனியாகவும் தோழர்களோடு இணைந்தும் பேருந்துகளிலும், திருச்சி உள்ளிட்ட சில ஊர்களில் தெருமுனைக் கூட்டங்களிலும் விற்பனை செய்தது, 

மாநாடுகள் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கான விளம்பரச் சுவரெழுத்து, சுவரொட்டி ஒட்டுதல், தனிநபர்-பேருந்து-குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் நிதி வசூல் செய்வது, பல்வேறு பிரச்சனைகளுக்கு நீண்டதூரத்தையும் பொருட்படுத்தாமல் மிதிவண்டிப் பிரச்சாரம் செய்தது, குறிப்பாக திருச்சியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சை சென்று செங்கிப்பட்டி வழியாக மீண்டும் திருச்சி வந்தது,

அகில இந்திய அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பின் கல்கத்தா மாநாடு,  அகில இந்திய புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் திருவனந்தபுரம் மாநாடுகளில் நானும், அகில இந்தியப் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் கொச்சி மாநாட்டில் குடும்பத்தோடும் பங்கேற்றது,

உள்ளூர் அளவிலும் தமிழக அளவிலும் நடைபெற்ற எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகளில் தனிப்பட்ட முறையில் வேலை செய்ததோடு அவற்றில் குடும்பத்தோடு பங்கேற்றது, குறிப்பாக அமைப்பின் மாநாடுகள் மற்றும் தஞ்சை தமிழ் மக்கள் இசை விழாக்கள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பெரும் பங்காற்றியது, மகஇக ஒலிப்பேழைகளின் முகவராக செயல்பட்டது,

உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்ற தகுதியில் நானும்,

பாரதிய ஜனதா கட்சியின் இந்துமதவெறி பாசிச அரசியலுக்கு எதிராகத் திருச்சி திருவரங்கம் கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தில் சந்திரனின் இணையர் அஜிதாவோடு கருவறைக்குள்ளேயே சென்று வந்ததோடு மட்டுமன்றி வாணி, உஷா, நிர்மலா, அஜிதா, ஜெயக்கொடி ஆகியோர் ஆண்களோடு கைதாகி சுமார் மூன்று மாத காலம் சிறை வாசம்,

சீர்காழி இறால் பண்ணை அழிப்புப் போராட்டத்தில் சுமார் ஒரு மாத காலம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தங்கியிருந்து களப்பணி மற்றும் போராட்டத்தில் பங்கேற்று 99 பெண் தோழர்களுடன் கைதாகி சுமார் ஒரு மாதம் சிறைவாசம்,

திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரானப் போராட்டத்தில் இறுதியாக நடந்த தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதானது, 

1994 ஆம் ஆண்டு பிரேமானந்தா சாமியாருக்கு எதிராகத் தீப்பந்த ஊர்வலம் நடத்திக் கைதாகி சில நாட்கள் சிறைவாசம், 

அமைப்பு முன்னெடுக்கும் எண்ணற்ற உள்ளூர் மற்றும் மையப் போராட்டங்களில் பங்கேற்றுக் கைதானது, 

புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மற்றும் அமைப்பின் வெளியீடுகளை கடைவீதி, குடியிருப்புகளில் விற்பனை செய்வது, மேலும் போராட்டங்களுக்கு மேற்கண்ட பகுதிகளில் நிதி வசூல் செய்வது,

நான் பெல் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் குடும்பச் சுமையைக் குறைக்க சோடா பாட்டில் கம்பெனியில் வேலை செய்து கொண்டே விலைவாசி எதிர்ப்புப் பெண்கள் போராட்டக் குழு, பிறகு பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பின் ஆதாரமாய்த் திகழ்ந்ததோடு எண்ணற்ற வேலைகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றது, 


என பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பாளர் என்ற தகுதியில் எனது வாழ்க்கை இணையர் வாணியும், 

இயக்கப் வேலைகளில் இணைந்தே களப்பணியாற்றினோம்‌. 

இயக்க வேலைகளின் போது பத்து வயதுக்குட்பட்ட எமது பிள்ளகளை எனது இணையர் இல்லாத போது நானும், நான் இல்லாத போது எனது இணையரும் பராமரிப்பது இயல்பாய் மாறிப்போனது.

உரையூர்-செந்தண்ணீர்புரம்-மீண்டும் உறையூர் என இயக்கத்தை வளர்க்க சுமார் ஒன்பது முறை வசிப்பிடம் மாறினோம். போராட்டம், கைது, சிறை எனக் கேள்விப்பட்ட உடனை வீட்டு உரிமையாளர்கள் அச்சப் பட்டதால் சில சமயம் வேறு வீடு மாறியதும் உண்டு. சில இன்னல்கள் இருப்பினும் பிள்ளைகளுக்குத் தமிழ் வழிக் கல்வியையே புகட்டி வந்தோம். 

திருச்சியில் சுமார் 17 ஆண்டுகளும், வேலூரில் கடந்த 22 ஆண்டுகளாகவும் இருவரின் இயக்கப் பணிகள் தொடர்கின்றன. இராணிப்பேட்டைக்கு வந்த பிறகு உடல் நலிவால் எனது வேலைகள் குறிப்பிட்ட அளவு குறைந்து விட்ட போதும், எனது இணையரின் வேலை முன்னிலும் கூடுதலாகவே இருந்தது.

ஒவ்வொரு அனுபவமும் தனித் தனிக் கட்டுரையாக எழுதுவதற்கு உரியவை என்றாலும், களப்பணி அனுபவங்களை மிகச் சுருக்கமாகவே குறிப்பிட்டுள்ளேன்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள் 

இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5 









2 comments:

  1. மதுரையில் தாங்கள் பேசியதாக நிணைவில்லை...

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் நான் பேசியது இல்லைதான். அதனால்தான் மதுரையைக் குறிப்பிடவில்லை. ஆனால் மானாமதுரையில் பேக்கரி தோழர் வீட்டில் உணவருந்தியதும், கூட்டத்தில் பேசியதும் நினைவில் உள்ளது.

      Delete