Thursday, 22 July 2021

பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!

மார்க்சியம் பேசுவோர் மத்தியில் அதிகமாகப் புழங்கும் சொற்களில் ‘அறிவுஜீவிகள்’ (intellectuals) என்ற சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஆனால் தோழர்களுக்கிடையில் பிணக்குகள் எழும்போது இச்சொல் படாதபாடுபடுகிறது.

பூவுலக மாந்தர்கள் அனைவருமே, தங்கள் வாழ்வியில் தொடர்பானவற்றில் குறிப்பிட்ட அளவு அறிவுத் திறனைப் பெற்றிருந்தாலும், சிலர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட துறையிலோ அல்லது பல்வேறு துறைகளிலோ ஆழமானப் புரிதலையும், அறிவையும் பெற்றிருக்கின்றனர். இவர்கள்தான் ‘அறிவுஜீவிகள்’ என்று கருதப்படுகின்றனர். தமிழும் வடமொழியும் கலந்த இச்சொல்லைவிட அறிவாளிகள் அல்லது அறிஞர்கள் என்று சொல்வதே சாலப் பொருந்தும். அறிவாளிகள் என்ற சொல் பொருத்தமான சொல் என்றாலும், ”மற்றவர்கள் எல்லாம் முட்டாள்களா?” என்று குதர்க்கம் செய்ய வாய்ப்பு இருப்பதால் இத்தகையோரை அறிஞர் (intellectual) / அறிஞர்கள் (intellectuals) என்றே இனி பயன்படுத்துவோம்.

“நடுநிலைப் பள்ளி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி பயின்றோர், மற்றும் அதற்கு இணையான கல்வியைப் பயின்றோர் அனைவரும் அறிஞர்கள் என்றே அறியப்படுகின்றனர். நடுநிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், தொழிற்சார் பிரிவினர் (professionals), பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் (technicians) ஆகிய அனைவரும் இதில் அடங்குவர். இவர்களில் நடுநிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.” அறிஞர்கள் பற்றிய மாவோவின் வரையறை இது.

மேற்கண்ட அறிஞர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட துறையில் மாற்றமோ, வளர்ச்சியோ அல்லது சமூக மாற்றமோ, புரட்சியோ சாத்தியமில்லை. அதனால்தான், “புதிய சீனாவை கட்டியமைப்பதற்கான போராட்டத்திற்கு வலு சேர்க்கவும், இலட்சக் கணக்கான உழவர்களை அணி திரட்டவும், புரட்சிகரப் பண்பாட்டு இயக்கத்தை வளர்த்தெடுக்கவும், புரட்சிகர ஐய்க்கிய முன்னணியை விரிவுபடுத்தவும் அறிஞர்களைப் பெருமளவில் கட்சியில் இணைக்க வேண்டும். அறிஞர்களின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை” என்கிறார் மாவோ.


“கட்சி, படை, அரசாங்க உறுப்புகள், பண்பாட்டு இயக்கம் மற்றும் மக்கள் திரள் உள்ளிட்டவைகளில் பெருமளவில் அறிஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர். ஆனால் கட்சியில் உள்ள ஒரு சிலர், அறிஞர்களை அச்சத்தோடு அணுகி, அவர்களிடம் பாகுபாடு காட்டியதோடு, அவர்களின் வாயை அடக்கவும் முயற்சி செய்தனர். உள்ளூர் கட்சி அமைப்புகள், அறிஞர்களை இணைப்பதற்கு முனைப்பு காட்டுவதில்லை. புரட்சியில் அறிஞர்களின் முக்கியத்துவத்தை உணராதது மட்டுமல்ல, அறிஞர்களை வழிநடத்துகிற அளவுக்குக் கட்சி திறன் வாய்ந்தது என்பதை புரிந்து கொள்ளத் தவறியதன் விளைவாகத்தான் ஒரு சிலர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.”

“எனவே, கடினமாகப் பணிபுரிகிற, துன்பத்தைத் தாங்கக்கூடிய அறிஞர்கள் அனைவரையும் பெரும் அளவில் சேர்க்க வேண்டும். பல்வேறு தளங்களில் அவர்கள் வேலை செய்வதற்கு உதவ வேண்டும். கட்சியில் இணையத் தகுதி பெறாதவர்கள் அல்லது விரும்பாதவர்களோடு நல்லுறவைப் பேண வேண்டும். அவர்களின் பணிகளுக்கு உதவ வேண்டும்”.

“எதிரிகளால் அனுப்பப்படும் ஊடுருவல்காரர்கள், விசுவாசம் இல்லாதவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும். ஆனால் நியாயமான, பற்று கொண்ட அறிஞர்கள் மீது ஐயம் கொள்ளக் கூடாது”.

“அறிஞர்கள் அனைவருக்கும் உகந்தப் பணியை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் கல்வி மற்றும் வழிகாட்டுதல் கொடுப்பதன் மூலம் அவர்கள் தங்களது பலவீனங்களைக் களைந்து கொள்வதோடு, புரட்சிகரத் தன்மையை வளர்த்துக் கொண்டு பழைய கட்சி உறுப்பினர்கன், உழவர்கள் மற்றும் தொழிலாளர்களோடு ஐய்க்கியப்படுவார்கள்”.

“நமக்கு ஆதரவாக உள்ள, அதே வேளையில் கட்சியில் சேராத அறிஞர்களை பண்பாட்டு இயக்கத்திலும், ஐயக்கிய முன்னணிப் பணியிலும் இணைக்க வேண்டும்”.

“அறிஞர்கள் குறித்த சரியானப் பார்வை, புரட்சியின் வெற்றிக்கு முக்கிய முன்நிபந்தனையாகும். இதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அறிஞர்களின் உதவியின்றி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அறிஞர்களை உருவாக்க இயலாது. இது குறித்து கட்சிக் குழுக்கள் மற்றும் தோழர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்”. 

அறிஞர்கள் குறித்த மாவோவின் மேற்கண்ட வழிகாட்டுதலை இந்தியப் பொதுவுடமை இயக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே புரட்சியை நேசிப்போரின் அவாவாகும்.

தமிழ்மணி

Ref: பெரும் எண்ணிக்கையில் அறிஞர்களைச் சேர்ப்பீர்!” - மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி-2, விடியல் பதிப்பகம்

தொடர்புடைய பதிவுகள்

நீங்கள் குட்டி முதலாளியா?

Sunday, 18 July 2021

கை மாறும் மணல் கடத்தலும் பன்னீரின் கண்ணீரும்!

தமிழ் நாட்டில் மணல் கடத்தல் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும், ஏரிகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

திருச்சி மணப்பாறை அருகில் முத்தபுடையான்பட்டியிலும், புதுக்கோட்டை காரையூர் அருகில் கீழத்தானியம் பகுதியிலும் மணல் கடத்தல் நடப்பதாகவும், தடுக்க முயன்ற காவல் துறையினரைக் கொல்ல முயன்றதாகவும் ஆளும் கட்சியினர் மீது குற்றம் சுமத்துகிறார் பன்னீர். இது போன்ற மணல் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருவதாக அவருக்குத் தகவல்கள் வருகிறதாம்.

ஏரிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதாம்; இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் கருத்து கண்ணாயிரமாக அவதாரம் எடுக்கிறார் பன்னீர். சுற்றுச்சூழலை நாசப்படுத்திய ஸ்டிடர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூடக் கோரி போராடிய மக்களைப் படுகொலை செய்த ஓநாய், மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து கையாள மருத்துவ மனைகளுக்கு அறிவுரைகள் வழங்க உத்தரவிட வேண்டும் என இப்பொழுது சுற்றுச் சூழலுக்காக ஓலமிடுகிறது.

“குப்பைகளை கொட்டி ஏரியை சூறையாடும் அ.தி.மு.க அரசு” : 
பல்லாவரம் புத்தேரியை பாதுகாக்க திரண்ட பொதுமக்கள்!
(“குப்பைகளை கொட்டி ஏரியை ...)
மருத்துவக் கழிவுகள் மட்டுமல்ல ஊராட்சி, நகராட்சிக் கழிவுகள் எதுவாக இருந்தாலும் அவை எடுபிடி ஆட்சியின் போது ஆறுகளிலும், ஏரிகளிலும் கொட்டப்பட்ட போது நீங்கள் மிக்சர் மென்றதை நாங்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா பன்னீர்?

ஆட்சி மாறினால் மணல் கொள்ளை மட்டுமல்ல ‘காண்டிராக்ட்’ கொள்ளைகளும் கைமாறும் என்பதுதானே கடந்த கால வரலாறு. 'கழிசன்' கைமாறுகிறதே என்பதைத் தவிர பன்னீருக்கு வேறென்ன கவலை? ஆள்பவர்கள் வேறாக இருந்தாலும் அதிகார வர்க்கம் மாறாத போது குப்பை கொட்டுவது மட்டும் மாறி விடுமா என்ன?

தமிழ்மணி

செய்தி ஆதாரம்: தமிழ் இந்து, 16, 17 ஜூலை 2021.

Saturday, 3 July 2021

நீங்கள் குட்டி முதலாளியா?

பொதுவுடைமை அமைப்பு என்றாலே அது பாட்டாளிகளுக்கான அமைப்பு என்ற எளிமையான புரிதல்தான் பலருக்கும் உண்டு. மருத்துவர் இராமதாஸ்கூட தனது கட்சிக்குப் பாட்டாளி மக்கள் கட்சி என்றுதான் பெயர் வைத்துள்ளார். அப்படியானால் அது பாட்டாளிகளுக்கான கட்சியா? பல்வேறு கட்சிகள் இயக்கங்கள்கூட தாங்கள் பாட்டாளிகளுக்காகப் பாடுபடுவதாகத்தான் கூறிக் கொள்கின்றன.

பாடுபடுபவன் - உழைப்பவன் – அதாவது வியர்வை சிந்தி உழைப்பவன் -பாட்டாளி என்று எளிமையாகப் புரிந்து கொள்ளலாமா? வசதி படைத்தவன்-பணக்காரன்கூடத்தான் பாடுபடுகிறான்; தான் முன்னேற ‘கடுமையாய்’ உழைக்கிறான். அப்படியானால அவனும் பாட்டாளியா?

பொதுவுடைமை சார்ந்த இயக்கத்தவர்கள் தங்களுக்குள் கருத்து முரண் ஏற்படும் போது குட்டி முதலாளி என்கிற சொற்பிரயோகத்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள். சமூகவலைதளங்களிலும் குட்டி முதலாளி என்கிற சொல் பாடாய்ப் படுவதைக் காண முடியும். அதை ஒரு வசைச் சொல்லாகவேப் பயன்படுத்துகின்றனர்.

தனக்குக் கீழே சில-பல ஆட்களை வைத்துக் கொண்டு ஒரு தொழிலைச் செய்பவரை முதலாளி என்றுதான் பாமரனும் புரிந்து வைத்திருக்கிறான். அப்படியானால் குட்டி முதலாளி என்பவன் யார்? முதலாளி என்பவன் பெரிய பணக்காரன், குட்டி முதலாளி என்பவன் சிறிய பணக்காரன் என்று புரிந்து கொள்ளலாமா?

சமூகத்தில் முதலாளி - தொழிலாளி மட்டுமல்ல விவசாயிகள், கைவினைஞர்கள், அரசு ஊழியர்கள், படிப்பாளிகள், வழக்குரைஞர்கள், வணிகர்கள், தினக்கூலிகள் என எண்ணற்ற மக்கள் பிரிவினர் உள்ளனர். இந்தப் பிரிவு மக்களை பொதுவுடைமை மொழியில் வர்க்கம் என்று விளிக்கின்றனர். ஒரு பொதுவுடைமை சமூகத்தை அமைக்க இவர்களில் யார் யார் ஒத்துழைப்பார்கள், யார் யார் எதிராக நிற்பார்கள், இவர்களின் தன்மை என்ன என்பதைப் புரிந்து கொள்வது பொதுவுடைமைவாதிகளுக்கு அவசியமாகிறது.

சீன சமுதாயத்தில் வர்க்கங்களை மிகச் சரியாக மாவோ பகுப்பாய்வு செய்ததால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது. இந்தியாவில் உள்ள வர்க்கங்களின் பகுப்பாய்வைப் புரிந்து கொள்ள சீன பகுப்பாய்வு முறை பயன்படக் கூடும் என்பதால் சீன பகுப்பாய்வு குறித்த சிலவற்றைப் பார்ப்போம்.

சீன சமுதாயத்தில வர்க்கங்கள்

1.நிலக்கிழார் வர்க்கமும் (Landlord Class) தரகு முதலாளி வர்க்கமும் (Comprador Class): பெரும் நில உடைமையாளர்கள் மற்றும் முதலாளிகள் இதில் அடங்குவர். இவர்கள் தங்களின் இருத்தலுக்கும் வளர்ச்சிக்கும் முழுமையாக ஏகாதிபத்தியத்தைச் சார்ந்து இருப்பவர்கள். தரகர்கள் என்பவர்கள் அந்நிய மூலதனத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர்கள். அந்நியப் பொருளாதார நலனுக்குச் சேவை செய்பவர்கள். இவர்களின் நலனைக் காக்க இவர்களுக்கான அரசியல் இயக்கங்கள் உண்டு. இயல்பிலேயே இவர்கள் புரட்சியை விரும்பாதவர்கள்; புரட்சிக்கு எதிரானவர்கள்.

திருமண அழைப்பிதழ்களில் தன்னை நிலக்கிழார் எனப் பெருமை பேசும் நம்ம ஊர் ஒரு ஏக்கர் உழவனை இந்தப் பிரிவில் சேர்க்கலாமா?

2.நடுத்தர முதலாளிகள் (Middle Bourgeoisie): நகர்ப் புறங்களிலும் கிராமப் புறங்களிலும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழில் செய்யும் முதலாளிகள். இவர்களை தேசிய முதலாளிகள் என்று அழைக்கலாம். அந்நிய மூலதனத்தின் இடர்பாடுகளின் கீழ் துன்பங்களை அனுபவிப்பவர்கள். இவர்கள் தங்களுக்கான அரசமைப்பை உருவாக்க விழைபவர்கள். புரட்சியின்பால் ஊசலாடும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களில் ஒரு சாரார் புரட்சிக்கு ஆதரவாகவும் மற்றொரு சாரார் எதிராகவும் போகக்கூடியவர்கள்.

3.குட்டி முதலாளி வர்க்கம் (Petty Bourgeoisie): கைவினைஞர்கள், மாணவர்கள், தொடக்கப்பள்ளி-உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், அரசாங்க கீழ்நிலை ஊழியர்கள், அலுவலக எழுத்தர்கள், சிறு வழக்கறிஞர்கள் போன்ற கீழ் மட்ட அறிவுஜீவிகள், சிறிய வணிகர்கள், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உழவர்கள். கைவினைஞர்கள், சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உழவர்கள் சிறுவீத உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் இதில் அடங்குவர்.

குட்டி முதலாளிகள் பிரிவில் மூன்று வகை உண்டு.

1.உடலுழைப்பு அல்லது மூளை உழைப்பின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்துவதைக் காட்டிலும் அதிகம் சம்பாதித்து பணமாகவோ அல்லது தானியமாகவோ கூடுதலாக வைத்திருப்பவர்கள். பணக்காரர்களாக-நடுத்தர முதலாளிகளாக ஆக அதிகம் விரும்புபவர்கள். புரட்சி குறித்து சிறிது அச்சப்படுகின்ற பயந்தாங்கொள்ளிகள். புரட்சியை சந்தேகிக்கக் கூடியவர்கள். இவர்கள் சிறு எண்ணிக்கையிலானவர்கள். இதில் உள்ள ஒரு சிலர் வலதுசாரிப் பிரிவாக உருக்கொள்வர்.

2.பொருளாதார நீதியாக தற்சார்பு உடையவர்கள். முதல் பிரிவினருடன் முற்றிலும் மாறுபட்டவர்கள். இவர்களும்கூட பணக்காரர்களாக மாற விரும்புபவர்கள் இவர்கள் வாழ்வதற்காக அதிகாலையில் எழுந்து நீண்ட நேரம் பணிபுரிபவர்கள். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கத்தில் சேரத் தயங்குபவர்கள். நடு நிலை எடுக்க விரும்புபவர்கள். ஆனால் இவர்கள் புரட்சியை ஒருபோதும் எதிர்ப்பதில்லை  இவர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்.

3.சரிந்து கொண்டிருக்கும் வாழ்க்கைத்தரம் கொண்டவர்கள். ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து சரிந்து வெறுமனே தங்களைப் பராமரித்துக் கொள்வதே கடினம் என்றுள்ளவர்கள். ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறையைக் காண்பவர்கள். கடன் சுமை ஏறுவதால் வாழ்க்கை மேலும் மேலும் துன்பகரமானதாக உள்ளவர்கள். எதிர்காலத்தைக் கண்டு திகைப்படைபவர்கள். பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள். இவர்கள் புரட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இடதுசாரிப் பிரிவினரான இவர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்.   

மேற்கண்ட மூன்று பிரிவினரிடையெ புரட்சி குறித்து மாறுபட்ட மனப்பான்மை உண்டு என்றாலும் புரட்சி மேலோங்கி வெற்றி கண்ணில் தெரிகிற போது இவர்கள் அனைவருமே புரட்சியில் சேர்ந்து கொள்வர்.

இந்தியாவில், பொதுவுடைமை இயங்கங்களில் செயல்படும் மேற்கண்ட பிரிவினரும் தாங்கள் குட்டி முதலாளிகளா இல்லையா என்பதை உரசிப் பார்த்துக் கொள்வது நல்லது.  

பிறரை குட்டி முதலாளிகள் என சமூக வலைதளங்களில் ஊளையிடுவோர் முதலில் தாங்கள் யார் என்பதை தங்களது வர்க்கத்தன்மையைக் கொண்டு உரசிப் பார்த்துவிட்டு பிறகு உளையிட்டால் நல்லது.

4.அரைப் பாட்டாளி வர்க்கம் (Semi Proletariat): இதில் ஐந்து வகையினர் உண்டு.

1.தங்கள் சொந்த நிலங்களில் பகுதி அளவிலும், பிறரிடமிருந்து பெற்ற குத்தகை நிலங்களில் பகுதி அளவிலும் உழைக்கக்கூடிய அரை-சொந்த நில உழவர்கள்.

2.ஏழை உழவர்கள்

3.சிறிய கைவினைஞர்கள்

4.கடை உதவியாளர்கள்

5.சிறு வணிகர்கள்

இதில் முதல் இரண்டு வகையினரும் கிராமப்புறங்களில் அதிகமாக இருப்பவர்கள். உழவர் சிக்கல் என்பது முக்கியமாக இவர்களுடைய சிக்கலே ஆகும். இவர்களின் பொருளாதார நிலைக்கேற்ப இவர்கள் மேல், நடுத்தர மற்றும் கீழ் மட்டம் என மூன்று வகையாக உள்ளனர்.

அரை-சொந்த நில உழவர்கள் - குட்டி முதலாளித்துவப் பிரிவைச் சோந்த நிலம் வைத்திருக்கும் உழவர்களைக் காட்டிலும் அரைப் பாட்டாளி வர்க்கப் பிரிவைச் சேர்ந்த அரை-சொந்த நில உழவர்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள். ஒவ்வோராண்டும் இவர்களுக்கு உணவுத் தேவையில் பாதி பற்றாக் குறை ஏற்படுகிறது. பிறரிடமிருந்து பெற்ற குத்தகை நிலங்கள் மூலமோ, சிறு வணிகம் செய்தோ அல்லது வேலைக்குச் சென்றோ, கடன் பெற்றோ இப்பற்றாக்குறையை ஈடுசெய்கின்றனர். ஆனாலும் இவர்கள் ஏழை உழவர்களைக் காட்டிலும் வசதியானவர்கள். ஏழை உழவர்களுக்குச் சொந்த நிலம் கிடையாது.

ஏழை உழவர்கள் - குத்தகை உழவர்களான ஏழை உழவர்கள் நிலக்கிழார்களால் சுரண்டப்படுகிறார்கள். பொருளாதார நிலைக்கேற்ப இவர்களில் இரு வகை உண்டு.

ஒரு வகை, தேவையான அளவு உழு கருவிகளையும், ஓரளவு நிதியையும் பெற்றிருப்பவர்கள். இவர்கள் ஊடுபயிர் செய்தோ,மீன் வளர்த்தோ, கோழி-பன்றி வளர்த்தோ அல்லது பகுதி நேரமாக வேலைக்குச் சென்றோ பற்றாக்குறையை ஈடுசெய்கிறார்கள். இவர்கள் அரை-சொந்த நில உழவர்களைக் காட்டிலும் புரட்சிகரமானவர்கள்.

மற்றோரு வகை, தேவையான அளவுக்கு உழு கருவிகளின்றி, நிதியின்றி, போதுமான எருவுமின்றி, பயிர்கள் கருகி இருக்கின்ற நிலையில் குத்தைகை செலுத்திய பின்பு மிஞ்சியதைக் கொண்டும், பகுதி நேரமாக வேலைக்குச் சென்றும் தேவையை ஈடுசெய்பவர்கள். நெருக்கடியான நேரங்களில் இவர்கள் தங்களது உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் மிகவும் வருந்தி உதவி கேட்டு சில நாட்களுக்கான தானியத்தைப் பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்களின் கடன் சுமை எப்போதும் ஏறிக்கொண்டேதான் இருக்கும். உழவர்களிலேயே மிகவும் வறியவர்கள் இவர்கள். புரட்சிகரப் பிரச்சாரத்தை உயர்வாக ஏற்றுக் கொள்பவர்கள்.

சிறிய கைவினைஞர்கள் -  சுய வேலை வாயப்பும், ஓரளவு எளிய உற்பத்திச் சாதனங்களை சொந்தமாகப் பெற்றிருந்தாலும் இவர்களும் கூட பகுதி அளவுக்கு வேலைக்குச் செல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளது. பொருளாதார நிலையில் ஏழை உழவர்களைப் போல உள்ளனர். வேலை இல்லாத் திண்டாட்டத்தின் அபாயத்தையும், ஏழ்மையின் நிரந்தர வேதனையையும் அனுபவிப்பவர்கள்.  

கடை உதவியாளர்கள் – கடைகளிலும், சேமிப்புக் கிடங்குகளிலும் பணி செய்து கொண்டு மிகக் குறைந்த சம்பளத்தில் குடும்பம் நடத்துபவர்கள். ஒவ்வோர் ஆண்டும் விலைவாசி உயர்ந்தாலும், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே இவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதால் எல்லையற்ற துன்பங்களுக்கு ஆளாகிறவர்கள். பொருளாதார நிலையில் சிறிய கைவினைஞர்கள் மற்றுத் ஏழை உழவர்களை ஒத்திருப்பவர்கள். இவர்கள் புரட்சிகரப் பிரச்சாரத்தை உயர்வாக ஏற்றுக் கொள்பவர்கள்.

சிறு வணிகர்கள் – விற்பனைப் பொருள்களை சுமந்து சென்று விற்பவர்கள், நடைபாதை கடைகள் மூலம் விற்பனை செய்பவர்கள் இதில் அடங்குவர். மிகச் சிறிய வருவாயைக் கொண்டு தங்களது உணவு-உடைத் தேவைகளைக்கூட ஈடுசெய்ய முடியாமல் வாழ்பவர்கள். ஏறத்தாழ ஏழை உழவர்களின் நிலையை ஒத்தது இவர்களின்  நிலை. இவர்களும் புரட்சிக்கு மிகவும் தேவையானவர்கள்.

5.பாட்டாளி வர்க்கம் (Proletariat): கப்பல் கட்டுதல், நெசவாலைகள், கடல் சார்ந்த போக்குவரத்து, சுரங்கம் மற்றும் ரெயில்வே ஆகியவைகளில் பணி புரியும் பாட்டாளிகள். மிகவும் முன்னேறிய வர்க்கம். புரட்சிகர இயக்கத்திற்கு தலைமை சக்தி. புரட்சியில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அதற்குக் காரணம் ஒன்று இவர்கள் ஓரிடத்தில் ஒன்று குவிக்கப்பட்டிருப்பது; மற்றொன்று இவர்களின் அடிமட்டப் பொருளாதார நிலை. இவர்களுக்கு கைகளைத் தவிர இழப்பதற்கு ஏதுமில்லை. எப்போதும் பணக்காரர்கள் ஆக முடியாது என்ற நம்பிக்கை உடையவர்கள். எப்போதும் முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியங்களால் ஈவிரக்கமின்றி நசுக்கப்படுபவர்கள். அதனால்தான் இவர்கள் நல்ல போராளிகளாக இருக்கின்றனர். 

மேலும் நகர்ப்புறங்களில் உள்ள ரிக்ஷா ஓட்டுபவர்கள், குப்பை வண்டி ஓட்டுபவர்கள், துப்புறவுப் பணியாளர்கள் போன்ற கூலிகளும் மிகவும் கவனத்தை ஈர்க்கக்கூடிய பாட்டாளி வர்க்கச் சக்திகளாவர். தங்கள் கைகளைத் தவிர இழப்பதற்கு ஏதுமற்ற இவர்களும் பொருளாதார நிலையில் ஆலைத் தொழிலாளர்களைப் போலவே இருப்பவர்கள்.

இவை தவிர நாள்-மாத-ஆண்டு வாடகைக்கு நவீன பண்ணைகளில் பண்ணைக் கூலிகளாக வேலை செய்பவர்கள், நிலம்-உழு கருவி-பணம் இன்றி குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் வேலை செய்யும் கூலிகள் இதில் அடங்குவர்.

இவை எல்லாவற்றிற்கும் அப்பால், வேலை கிடைக்காத கைவினைஞர்களும், தங்களின் நிலத்தை இழந்து விட்ட உழவர்களும் பெருமளவில் உதிரிப் பாட்டாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மிகவும் இடர் நிறைந்த வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்கள் தீரமிக்கப் போராளிகள், ஆனால் அழிவை ஏற்படுத்தக் கூடியவர்கள். முறையான வழிகாட்டுதல் கொடுத்தால் இவர்களை புரட்சிகரமான சக்திகளாக மாற்ற முடியும்.

தொகுப்பாகப் பார்க்குமிடத்து, ஏகாதிபத்தியத்துடன் அணிவகுக்கும் அதிகார வர்க்கம், பெரும் நிலக்கிழார் வர்க்கம், தரகு முதலாளி வர்க்கம் இவர்களுடன் இணைந்துள்ள அறிவுத் துறையினருள் பிற்போக்குப் பிரிவினர் நமது எதிரிகளாவர்.

புரட்சியில் தலைமை சக்தி ஆலைப் பாட்டாளி வர்க்கம். ஒட்டு மொத்த அரைப் பாட்டாளி வர்க்கமும், குட்டி முதலாளித்துவ வர்க்கமும் நமது நெருங்கிய நண்பர்கள்.

ஊசலாடும் நடுத்தர முதலாளிகளைப் பொருத்தவரை இவர்களின் வலதுாரிப் பிரிவு நமது எதிரிகளாக மாறக் கூடும். இவர்களின் இடதுசாரிப் பிரிவு நண்பர்களாக மாறக் கூடும். ஆனால் நாம் தொடர்ச்சியாக எச்சரிக்கையோடு இருப்பதுடன் நமது அணிகளுக்குள் குழப்பத்தை உருவாக்க அனுமதிக்கக் கூடாது.

மேற்கண்டவாறு சீன சமுகத்தில் வர்க்கப் பகுப்பாய்வை மாவோ செய்துள்ளார். இந்தியாவிலும் இத்தகைய பகுப்பாய்வும் அதற்கு ஏற்ற நடைமுறையும் காலத்தின் கட்டாயம்.

தமிழ்மணி

Ref: மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி-1,விடியல் பதிப்பகம்

 

Friday, 18 June 2021

வேலூர்: கேள்விக்குரியாகும் ஆட்டோத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம்!

கரோனா பெருங்தொற்றின் இரண்டாவது அலை தமிழ் நாட்டையும் இந்தியாவையும் புரட்டிப் போட்டுள்ளது. சமூக இடைவெளி, முகக் கவசம், வெளியில் செல்லாமல் வீட்டிலேயே தனித்திருந்தல் மற்றும் தடுப்பூசி இவற்றைத் தவிர நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள  வேறு வழியே இல்லை என்று சொல்லி அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் அன்றாட வருவாயை நம்பி வாழும் ஆட்டோத் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 'இ-பாஸ்' இல்லாமல் ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது என விதி உள்ளதால் கிட்டத்தட்ட முக்கால்வாசி ஆ்டோக்கள் முடங்கிக் கிடக்கின்றன்; ஆட்டோக்கள் மட்டுமல்ல அவற்றை நம்பி வாழும் ஆயிரமாயிரம் குடும்பங்களும் வாழ வழியின்றித் தவிக்கின்றனர்.

எனவே ஆட்டோத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கக் கோரி வேலூர் மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த ஆட்டோத் தொழிலாளர்கள் தோழர் ஆல்வின் தலைமையில் தோழர்கள் திருமலை, செல்வம் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர் இராவணன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் 18.06.2021 அன்று வேலூர் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து,

ஆட்டோக்களுக்கு இ-பதிவு முறையை இரத்து செய்ய வேண்டும்,
ஆட்டோத் தொரிலாளர்களுக்கு மாதம் ரூ.7500- நிவாரணம் தர வேண்டும், 
ஆட்டோக்களில் மூன்று பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும், 
ஊரடங்கு காலத்தில் வங்கிக் கடனுக்கான தவணைத் தொகையைச் செலுத்த கால அவகாசம் வேண்டும்,
ஆட்டோத் தொழிலாளர்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறை மற்றும் ஆட்டோக்களை காவல் நிலையங்களில் முடக்குவதைக் கைவிட வேண்டும் 

உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மனு கொடுத்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியரும் ஆவன செய்வதாகக் கூறி உள்ளார்.





தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்


Saturday, 22 May 2021

மக்கள் அதிகாரம்: ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாமாண்டு நினைவஞ்சலி!

 காளையார் கோவில்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் நகர் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்புத் தோழர்களால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானத் தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலிக் கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களைத் தியாகிகளாக அறிவித்து துப்பாக்கிச் சூட்டில் பலியான இடத்தில் நினைவுச் சின்னம் அமைத்திடவும், வேதாந்தா நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குச் சட்டமியற்றிடவும், துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான காவல் துறை, வருவாய்த்துறையினருக்கு உரிய தண்டனை வழங்கிடவும் வலியுறுத்தி தமிழக அரசிற்குக் கோரிக்கை முழக்கம் எழுப்பப்பட்டது.

நன்றி.

செய்தியாளர் மற்றும் தோழர் வைகைசரவணன்
மக்கள் அதிகாரம்
சிவகங்கை மாவட்டம்..

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்

மதுரை
மக்கள் அதிகாரம்
தூத்துக்குடி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
தனிச் சட்டம் இயற்ற ஸ்டெர்லைட்டை மூடு!
மூன்றாம் ஆண்டு நினைவு நாள் கோரிக்கை!
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மே 22 தூத்துக்குடி தியாகிகளுக்கு வீரவணக்கம்!
மக்கள் அதிகாரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மதுரை ஒத்தக்கடை பகுதிகளில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.

திருச்சி
நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி!
ஆக்சிஜன் தயாரிப்புக்காக திறக்கப்பட்ட தூத்துக்குடி நாசகார ஸ்டெர்லைட் நச்சு ஆலையை சிறப்பு சட்டம் இயற்றி நிரந்தரமாக இழுத்து மூடவும் நச்சு ஆலைக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 22.05.2021 காலை 9.30 மணிக்கு திருச்சி தில்லைநகர் 10-வது கிராஸ் மேற்கு 80 அடி சாலையில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் நடைபெற்றது.
மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் தோழர் ஆனந்த் தலைமை வகித்து பேசினார். பின்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தின் கலைக்குழு தோழர் லதா, விடுதலை சிறுத்தைகள் கட்சி காந்திபுரம் பகுதி பொறுப்பாளர் தோழர் விடுதலை, மக்கள் அதிகாரத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு நினைவு மண்டபம் அமைக்க வேண்டும், அவர்களை சுற்றுச்சூழல் போராளி என தமிழக அரசு அறிவிக்க வேண்டும், நிரந்தரமாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் இயற்றி அகற்றவேண்டும், ஆக்சிஜன் வழங்கி தன்னை மக்கள் நல காவலன் போல காட்டிக்கொள்ளும் ஸ்டெர்லைட் கம்பெனி ஒரு கொலைகார கம்பெனி நடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் மோடி அரசு இந்தியா முழுவதும் மக்களுக்கு குறைந்த நோயிலிருந்து பாதுகாக்காமல் தடுப்பூசி ஆக்ஸிஜன் போன்றவை தயாரிப்பிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையை தடுக்காமலும் இருப்பதால் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரை விடுகின்றனர். இதை கண்டித்து உரையாற்றினர்.

இறுதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராளிகளின் படத்திற்கு மலர்துவியும், ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலிக் கூட்டத்தில் ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சம்சுதீன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் மா.பா.சின்னத்துரை, மக்கள் கலை இலக்கியக் கழக பாடகர் தோழர் கோவன், அமைப்புசாரா தொழிலாளர்கள் இயக்க தோழர் இலியாஸ், தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட தலைவர் தோழர் ரமணா, ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், தோழர்கள், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்கள், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கத்தினர் என ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து, 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலர் தோழர் ஜீவா நன்றி கூறினார். பின்பு கலந்து கொண்ட அனைவருக்கும், பொது மக்களுக்கும் கபசுரக் குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கி நோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.
தகவல்:
மக்கள் அதிகாரம்
திருச்சி
தொடர்புக்கு:94454 75157






கரூர்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே
வணக்கம் !

மே 22, சனிக்கிழமை காலை 9-00 மணிக்கு, மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு ஜனநாயக இயக்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளுக்கு மெழுகுவத்தி ஏந்தியும் , ஸ்டெர்லைடை மூட சிறப்பு சட்டம் இயற்று , ஸ்டெர்லைடை அகற்று எனவும் இன்னுயிர் இன்ற தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது ..
கரூர் தாந்தோன்றிமலை பகுதியில் நடைபெற்றது
தகவல் :
மக்கள் அதிகாரம்
கரூர்
கடலூர்
மக்கள் அதிகாரம்

கடலூரில் மக்கள் அதிகாரம் ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ல் நச்சு ஆலை ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 14 பேருக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி 22.05.2021 கடலூர் பேருந்து நிலையம் அருகே எஸ்என் சாவடி சிபிஐ அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்றது. மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு தலைமை தாங்கினார். கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் தோழர் கஜேந்திரன். தராசு மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர் தோழர் துறைமுகம். துரை வேலு. வெள்ளி கடற்கரை வியாபாரிகள் சங்க தலைவர் தமிழர் கழகம் மாவட்ட தலைவர் பரிவாணன் பேருந்து நிலைய உட்புற வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமார். தனியார் பேருந்து தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தோழர் செல்வம்.புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் தோழர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி உரையாற்றினார்கள். வட்டார குழு உறுப்பினர்கள் தோழர் ராஜேஷ் செந்தில்குமார் ஆனந்தி உள்ளிட்ட பெண் தோழர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு மலர் தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வேதாந்தா ஆலையை அகற்ற வேண்டும், இதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டெர்லைட்டை அகற்றி அங்கேயே பொதுமக்களுக்கு மருத்துவமனை திறக்க வேண்டும். என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நிகழ்ச்சியின் நிறைவாக மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர் தோழர் ரவி நன்றி கூறினார் .

தகவல்
தோழர். பாலு
மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர்
கடலூர்





புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
மே 22 தூத்துக்குடி நாசக்கார அலையை எதிர்த்து போராடிய மக்களை சுட்டு கொன்ற நாள்...தூத்துக்குடி தியாகளுக்கு 3 ஆம் ஆண்டு நினைவஞ்சலி
செலுத்தப்பட்டது.. நிரந்தரமாக ஸ்டெர்லைட் அலையை மூடக்கோரியும் செந்தநாடு கிராமத்தில் நடத்தப்பாட்ட்து..
தகவல்:
புரட்சிகர மாணவர் -இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்
சேத்தியாத் தோப்பு
ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகள் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி
சேத்தியாத்தோப்பு கிராமத்தில் நடைபெற்றது.
இதில் தோழர்கள் மாணவர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏற்றி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆம்பூர்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வெக்கிளி பகுதியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு 3-ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது!
1.சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்று!
2.உயிர் நீத்த போராளிகளை சுற்றுச்சூழல் தியாகிகளாக அறிவித்து நினைவிடம் அமைத்திட வேண்டும்!
3.பொது மக்களை கொலை செய்த போலீஸ்,வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
4.பொது மக்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்ப பெறு!
5.ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் மீது சுற்றுச்சூழல் மாசுபடுத்திய குற்றத்திற்காக கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
6.நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும்! என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
தகவல்
மக்கள் அதிகாரம்
ஆம்பூர்

கோத்தகிரி
கோத்தகிரி மக்கள் அதிகாரம் சார்பாக , ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளுக்கு மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
22.05.2021 சனிக்கிழமை அன்று தோழர்கள் தத்தமது இல்லங்களில் சமூக இடைவெளியுடன் நினைவஞ்சலி செலுத்தினர்
குழந்தைகள், பெண்கள் ஆர்வமுடனும் உணர்வுடனும் கலந்து கொண்டனர்.
"நாசகார, கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தங்களது போராட்டம் ஓயாது" என்றும் ,நிரந்தரமாக மூடுவதே உயிர் தியாகம் செய்த, படுகாயமடைந்த மக்களுக்கு சரியான தீர்வாக இருக்கும் .
செய்தி: மக்கள் அதிகாரம் கோத்தகிரி.



தேனி
தேனி மாவட்டம், நாராயண தேவன் பட்டியில்,
மக்கள் அதிகாரம் கிளை சார்பாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்
செலுத்தப்பட்டது.

தஞ்சை

ஸ்டெர்லைட் தியாகிகள் மூன்றாவது ஆண்டு நினைவேந்தல் ! தஞ்சாவூர்.!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றக்கோரியப்
போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மூன்றாமாண்டு நினைவஞ்சலி தஞ்சையில் இன்று மாலை நடைபெற்றது.
மக்கள் கலை இலக்கியக் கழக மாநகரச் செயலர் இராவணன் தலைமையில், திலகர் திடல் மார்க்கெட் சங்க தலைவர் எம்.பாலமுருகன் முன்னிலையில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழுஉறுப்பினர் வெ. சேவையா, ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் , மக்கள் அதிகாரம் மாநகரநகரக் குழு உறுப்பினர் அருள் மற்றும் சீனிவாசபுரம் சேவப்பன் தெருவினர் பங்கேற்றனர்.

கடந்த 2018 மே மாதம் மக்கள் வாழ்க்கையை நாசகரமாக்குகின்ற, சுற்றுச் சூழலைக் கடுமையாகப் பாதித்த ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தி தொடர்ந்து நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தில் காவல்துறையால் ஈவு இரக்கமின்றி போராட்டம் நடத்தியவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவேந்தலில்
வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலையை தமிழ் நாட்டில் இருந்து வெளியேற்றவும், சேலம் எட்டுவழிச்சாலை உள்ளிட்டு, காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோகார்ன் திட்டம் உள்ளிட்ட சுற்றுச்சூழலைப் பாதிக்கும் எந்தவொரு திட்டத்தையும் அனுமதிக்கக் கூடாது,
பல்வேறு மாவட்டங்களில் கால்பதித்துள்ள வேதாந்தா நிறுவனத்தை தமிழகத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்து உறுதியேற்கப்பட்டது.

தகவல்
துரை.மதிவாணன்.
இராவணன்



இணைய வழிக் கூட்டம்

மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜூ தலைமையில் மாலையில் நடைபெற்ற இணைய வழி அஞ்சலிக் கூட்டத்தில் பத்திரிக்கையாளர் தோழர் அய்யநாதன், மே 17 இயக்கம் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சே.வாஞ்சிநாதன் ஆகியோர் உரையாற்றினர்.

செய்தித் தொகுப்பு
தமிழ்மணி

Saturday, 1 May 2021

தமிழகம் - புதுச்சேரியில் மே நாள் எழுச்சி!

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக தமிழகமெங்கும் மே நாள் விழா மிக எழுச்சியோடு கொண்டாடப்பட்டது.

கும்மிடிப் பூண்டி

MHH ஆலையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில்மே நாள் கூட்டம்

லிட்விண்ட் ஸ்ரீராம் ஆலையில்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில்  மே நாள் கொடியேற்றம்

SRF

திருவள்ளூர் மாவட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கம் சார்பாக‌ நடைபெற்ற மே தின நிகழ்ச்சியில்,‌ சங்கத்தின் தலைவர் #தோழர்_மகாராஜன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் #தோழர்_விகந்தர் கொடியேற்றினார்.
அதன்பிறகு சங்கத்தின் சிறப்பு தலைவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமைக்குழு உறுப்பினருமான #தோழர்_சுதேஷ்‌_குமார் சிறப்புரையாற்றினார். அதன்பிறகு முழக்கமிட்டு, மே நாள் சூளுரை ஏற்கப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் மாவட்டம்.



சென்னை
சென்னை #சத்தியபாமா_கிளை சங்கத்தில் புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் டெக்னிசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் #இரா_ஜெயராமன் கொடியேற்றினார். தலைவர் தோழர் #இல_தெய்வீகன் உரையாற்றினார்.
புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் டெக்னிசியன்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் #தோழர்_சிவசங்கரன் கொடியேற்றினார். ஆலோசகர் #தோழர்_இல_பழனி உரையற்றினார்.


வேலூர்
வேலூர் மாவட்டம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தரைக்கடை வியாபாரிகள் சங்கம், மீன் மார்க்கெட் மற்றும் அண்ணா கலையரங்கம் கிளைகளில் மே நாள் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது.
தோழர் சுப்ரமணி தலைமையில் நடைபெற்ற விழாவில் தோழர் சேட்டு கொடியேற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் இராவணன் மற்றும் அகிலன் சிறப்புரையாற்றினர். கிளைச் சங்கத் தோழர்கள் பலர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர் மாவட்டம்


கடலூர்

மே நாள் தொழிலாளர்கள் தினத்தை ஒட்டி வடலூர், மற்றும் நெய்வேலி கடைவீதி பகுதியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மண்ணையும் மக்களையும் சூறையாடும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவோம் என பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர் மாவட்டம்
9788808110


வடலூர்
மே 1 நாள் சூளுரை:
மண்ணையும், மக்களையும் சூறையாடும் கார்ப்பரேட் -காவி பாசிசத்தை வீழ்த்துவோம்!
வடலூர் பேருந்து நிலையம் அருகே காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை:
தோழர் மணியரசன்.
கண்டன உரை:
தோழர் வெங்கடேசன் (மாவட்ட செயலாளர்)
புரட்சிகர மாணவர்கள்- இளைஞர் முன்னணி, கடலூர் மாவட்டம்.
தோழர் பாலு
(மண்டல ஒருங்கிணைப்பாளர்) கடலூர்.
மக்கள் அதிகாரம்
தோழர் ரவி
(மண்டல ஒருங்கிணைப்பாளர்) மயிலாடுதுறை
தோழர் சண்முகம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. விருதாச்சலம்
நன்றி உரை :
தோழர் பால்ராஜ்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி கடலூர் மாவட்டம்.
தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு:
97888 081100


கோவை
கோவை மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மே தினத்தில் ஜி டி என் நிறுவனத்தில் தோழர் வெள்ளைச்சாமி அவர்கள் கொடியேற்றினார் , என் டி சி நிறுவனத்தில் மண்டல சங்க செயலாளர் தோழர் ஜெகநாதன் அவர்கள் கொடியேற்றினார். மற்றும் ஸ்ரீ ரங்கநாதர் இண்டஸ்ட்ரீஸ் கிளை நிறுவனத்தில் காலை 8 மணிக்கு கொடியேற்றம் நடத்தப்பட்டது. எஸ் ஆர் ஐ கிளை தலைவர் கோபிநாத் கொடியேற்றினார்.
பின்னர் கோவை மாவட்ட அலுவலகத்தில் அரை கூட்டம் நடத்தப்பட்டது. அரை கூட்டத்தை மாவட்ட துணைத் தலைவர் தோழர் கோபிநாத் அவர்கள் தலைமையேற்று நடத்தினர். கூட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் தோழர் பாலமுரளி அவர்களும், மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் தோழர் சித்தார்த்தர் அவர்களும், மக்கள் அதிகாரம் சார்பில் தோழர் கணேசன் அவர்களும், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மாவட்ட தலைவர் தோழர் லோகநாதன் அவர்களும் உரையாற்றினார்கள்.
இறுதியாக மாவட்டச் செயலாளர் தோழர் திலீப் அவர்கள் நன்றியுரையாற்றினார்.



கோத்தகிரி
01/05/2021 மே தின உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கோத்தகிரி பகுதியில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கொடியேற்றம் மற்றும் இனிப்பு வழங்கள்ஆகியவை நடைபெற்றது.

இதில் வாகனப் பிரிவு சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் புவனேஷ் அவர்கள் கொடியேற்றினார். தலைவர் தோழர் சுப்பிரமணி அவர்கள் தொடக்க உரையாற்றினார். மக்கள் அதிகாரத்தின் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ஆனந்தராஜ் அவர்கள் மே தினம் என்பது போராட்டத்திற்கான நாள், கொண்டாடுவதற்கான நாள் அல்ல, என்பதை விளக்கி கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்தாமல் நமது எந்த பிரச்சினையும் தீரப் போவதில்லை என்பதை விளக்கியும் சிறப்புரையாற்றினார். இறுதியில் இனிப்புகள் வழங்கப்பட்டது. அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை போராட்டத்தின் அறைகூவலாக தெரிவித்துக்கொள்கிறோம்...

செய்தி : மக்கள் அதிகாரம், கோத்தகிரி.

திருச்சி
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பாக திருச்சியில் மே நாள் ஆர்ப்பாட்டம்.


தஞ்சை

மேதினி போற்றும் மேதின (2021) நிகழ்ச்சிகள்.
==================
கரோனா தொற்று இரண்டாம் அலை உச்சத்தை எட்டிக்கொண்டிருக்கிறது. டாஸ்மாக் கடையில் கூடும் கூட்டம் குறித்து வாய்திறக்காத காவல் துறை கொரோனாவை காரணங்காட்டி வியாபாரிகளை ஒன்பது மணிக்கே கடையை மூடச்சொல்லி நெருக்கடி கொடுக்கிறது. சுகாதாரத்துறை செயல்படுகிறதா என்பது கேள்விகுறியாகவே உள்ளது. மக்களின் பிரச்சனைகள் குறித்து யாரும் பேசிவிடக்கூடாது என்பதில் காவல்துறை மிக கவனமாக உள்ளது. கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தடைபோடுவது மூலம் கொரோனாவை ஒழிக்கமுடியும் என்று காவல்துறை நம்புகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில்தான் தஞ்சையில் உழைப்பாளிகள் மேதின நிகழ்சிகளை நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தஞ்சையில் நடைபெற்ற மேதின நிகழ்ச்சிகள் குறித்த ஒரு பதிவு. .
******
தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் காலை 09.00 மணிக்கு மாநகர செயலாளர் தோழர். இராவணன் தலைமையில் மகஇக தோழர். பாபு கொடியேற்றினார். மக்கள் அதிகாரம் மாநகர ஒருங்கிணைப்பாளர் தோழர். தேவா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று மேதின சபதமேற்றனர்.
தொழிலாளர் நலச்சட்டங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக திருத்தம் செய்தை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டங்களை திரும்பெறக்கோரியும் பாசிச மோடி அரசை கண்டித்தும், கார்ப்பரேட் காவி பாசிசத்தின் கோரமுகத்தை அம்பலப்படுத்தியும்,
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும்,
தொழிலாளர்கள் விவசாயிகள் ஒற்றுமையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பபட்டன.
*******
மக்களுக்கு சேவை செய்யும் போக்குவரத்துக் கழகம், மின்சாரம், வங்கி, நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார்மய ஆபத்திலிருந்து பாதுகாக்கவும், மின்சார சட்டத் திருத்தம் சுற்றுச்சூழல் சட்டத்திருத்தம் ஆகியவற்றை திரும்பப் பெறக்கோரியும், கார்ப்பரேட் காவிபாசிச ஆபாயத்திலிருந்து நாட்டைபாதுகாக்க ஒன்றிணைந்த போராட்டங்களை முன்னெடுக்கவும் உறுதியேற்கப்பட்டு கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஏஐடியூசி தொழிற் சங்கம் மேதின கொடியேற்று நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு தஞ்சாவூர் கரந்தை போக்குவரத்து கழக புறநகர் கிளை முன்பு நடந்தது.
மத்திய சங்க தலைவர் ஜி சண்முகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கக் கொடியினை ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் பி. அப்பாத்துரை ஏற்றிவைத்தார்.

ஜெபமாலைபுரம் நகர் கிளை முன்பு ஏஐடியூசி மாவட்ட செயலாளர் ஆர்.தில்லைவனம் கொடி ஏற்றினார். இந்நிகழ்ச்சிகளில் போக்குவரத்து ஏஐடியூசி சங்க மாநில துணைத் தலைவர் துரை.மதிவாணன்சிறப்புரை ஆற்றினார் .
பொதுச்செயலாளர் டி. கஸ்தூரி, துணைச் செயலாளர் டி.சீனிவாச தினேஸ்
தொழிற்சங்க நிர்வாகிகள் பீர்தம்பி, ஞானசேகரன், சுப்பிரமணியன், தங்கராசு, ரங்கதுரை, இளங்கோவன், மக்கள் கலை இலக்கியக் கழகம் மாநகர செயலர் இராவணன் சமூக ஆர்வலர் விசிறி சாமியார் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
*******
தஞ்சாவூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முத்து.உத்திராபதி கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியையும், மாநில செயலாளர் சி.சந்திரகுமார் ஏஐடியூசி கொடியையும் ஏற்றி வைத்து உரையாற்றினார். ஏஐடியூசி மாவட்ட தலைவர் தோழர் வெ.சேவையா, மாவட்ட செயலர் தில்லைவனம் மற்றும் தோழர்கள் ஆர்.பி முத்துக்குமார், ஆர்.கே செல்வகுமார், பங்கேற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி அலுவலகத்திலும், சிஐடியு சார்பு சங்கங்களிலும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
இவை தவிர ஏஐடியூசி ஆட்டோ சங்க சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.செந்தில் நாதன், கட்டுமான சங்க சார்பில் பி.செல்வம், மாலை நேர காய்கறி அங்காடி வியாபாரிகள் சங்கம் சார்பில் பாப்பாயி ,

டாஸ்மாக் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் கோட்டீஸ்வரன், நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி மாநில பொருளாளர் தி.கோவிந்தராஜ்,

என் எஃப் பி டி இ -பி எஸ் என் எல் சார்பில் மாவட்ட துணைச்செயலாளர் சின்னப்பா ஆகியோர் கொடிகளை ஏற்றினர்.
01-05-2021




புதுச்சேரி
#புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் இயங்கும் இணைப்பு சங்கமான #கோத்ரேஜ் சங்கத்தின் மே நாள் கொடியேற்றம் நடைப்பெற்றது. அதனை‌ தொடர்ந்து மே நாள் சூளுரை ஏற்று கலந்து கொண்ட அனைத்து தொழிலாளர்களும் முழக்க ஆர்ப்பாட்டத்துடன், ஆலை வாயிலில் கூட்டம் நடத்தப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான #ஸ்வஸ்திக் சங்கத்தின் சார்பில் மே நாள் கொடியேற்றத்துடன், மே நாள் சூளுரை ஏற்று அனைத்து தொழிலாளர் கலந்து கொண்டு முழக்க ஆர்ப்பாட்டம் ஆலை வாயிலில் நடத்தப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


#புதுச்சேரி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் கிளை சங்கமான #பிரைட் சங்கத்தின் சார்பில் மே நாள் கொடியேற்றத்துடன் மே நாள் சூளுரை ஏற்று அனைத்து தொழிலாளர் கலந்து கொண்டு முழக்க ஆர்ப்பாட்டம் ஆலை வாயிலில் நடத்தப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


புதுச்சேரியில் இயங்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான #வேல்_பிஸ்கட் சங்கத்தின் சார்பில் மே நாள் கொடியேற்றத்துடன், மே நாள் சூளுரை ஏற்று அனைத்து தொழிலாளர் கலந்து கொண்டு முழக்க ஆர்ப்பாட்டம் ஆலை வாயிலில் நடத்தப்பட்டது.
தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


#புதுச்சேரி, திருபுவனையில் உள்ள புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அலுவலகத்தில் மே நாள் கொடியேற்றத்துடன், மே நாள் சூளுரை ஏற்று அனைத்து தொழிலாளர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
அதன்பிறகு இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று #திருபுவனை_தொழிற்பேட்டையில் உள்ள கிளை மற்றும் இணைப்பு சங்க வாயிலில் கொடியேற்றப்பட்டது.
தகவல்: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி.


இணைய வழிக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஏற்பாடு செய்திருந்த இணையவழிக்கூட்டம் மாலையில் நடைபெற்றது. திரளானோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.