பொதுவுடைமை அமைப்பு என்றாலே அது பாட்டாளிகளுக்கான அமைப்பு என்ற எளிமையான புரிதல்தான் பலருக்கும் உண்டு. மருத்துவர் இராமதாஸ்கூட தனது கட்சிக்குப் பாட்டாளி மக்கள் கட்சி என்றுதான் பெயர் வைத்துள்ளார். அப்படியானால் அது பாட்டாளிகளுக்கான கட்சியா? பல்வேறு கட்சிகள் இயக்கங்கள்கூட தாங்கள் பாட்டாளிகளுக்காகப் பாடுபடுவதாகத்தான் கூறிக் கொள்கின்றன.
பாடுபடுபவன் -
உழைப்பவன் – அதாவது வியர்வை சிந்தி உழைப்பவன் -பாட்டாளி என்று எளிமையாகப் புரிந்து
கொள்ளலாமா? வசதி படைத்தவன்-பணக்காரன்கூடத்தான் பாடுபடுகிறான்; தான் முன்னேற ‘கடுமையாய்’
உழைக்கிறான். அப்படியானால அவனும் பாட்டாளியா?
பொதுவுடைமை சார்ந்த
இயக்கத்தவர்கள் தங்களுக்குள் கருத்து முரண் ஏற்படும் போது குட்டி முதலாளி என்கிற சொற்பிரயோகத்தை
அடிக்கடி பயன்படுத்துவார்கள். சமூகவலைதளங்களிலும் குட்டி முதலாளி என்கிற சொல் பாடாய்ப்
படுவதைக் காண முடியும். அதை ஒரு வசைச் சொல்லாகவேப் பயன்படுத்துகின்றனர்.
தனக்குக் கீழே
சில-பல ஆட்களை வைத்துக் கொண்டு ஒரு தொழிலைச் செய்பவரை முதலாளி என்றுதான் பாமரனும் புரிந்து
வைத்திருக்கிறான். அப்படியானால் குட்டி முதலாளி என்பவன் யார்? முதலாளி என்பவன் பெரிய
பணக்காரன், குட்டி முதலாளி என்பவன் சிறிய பணக்காரன் என்று புரிந்து கொள்ளலாமா?
சமூகத்தில் முதலாளி
- தொழிலாளி மட்டுமல்ல விவசாயிகள், கைவினைஞர்கள், அரசு ஊழியர்கள், படிப்பாளிகள், வழக்குரைஞர்கள்,
வணிகர்கள், தினக்கூலிகள் என எண்ணற்ற மக்கள் பிரிவினர் உள்ளனர். இந்தப் பிரிவு மக்களை
பொதுவுடைமை மொழியில் வர்க்கம் என்று விளிக்கின்றனர். ஒரு பொதுவுடைமை சமூகத்தை அமைக்க
இவர்களில் யார் யார் ஒத்துழைப்பார்கள், யார் யார் எதிராக நிற்பார்கள், இவர்களின் தன்மை
என்ன என்பதைப் புரிந்து கொள்வது பொதுவுடைமைவாதிகளுக்கு அவசியமாகிறது.
சீன சமுதாயத்தில்
வர்க்கங்களை மிகச் சரியாக மாவோ பகுப்பாய்வு செய்ததால்தான் அவரால் வெற்றிபெற முடிந்தது.
இந்தியாவில் உள்ள வர்க்கங்களின் பகுப்பாய்வைப் புரிந்து கொள்ள சீன பகுப்பாய்வு முறை
பயன்படக் கூடும் என்பதால் சீன பகுப்பாய்வு குறித்த சிலவற்றைப் பார்ப்போம்.
சீன சமுதாயத்தில வர்க்கங்கள்
1.நிலக்கிழார் வர்க்கமும்
(Landlord Class) தரகு முதலாளி வர்க்கமும் (Comprador Class): பெரும் நில உடைமையாளர்கள் மற்றும் முதலாளிகள்
இதில் அடங்குவர். இவர்கள் தங்களின் இருத்தலுக்கும் வளர்ச்சிக்கும் முழுமையாக ஏகாதிபத்தியத்தைச்
சார்ந்து இருப்பவர்கள். தரகர்கள் என்பவர்கள் அந்நிய மூலதனத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும்
நெருக்கமான உறவைக் கொண்டிருப்பவர்கள். அந்நியப் பொருளாதார நலனுக்குச் சேவை செய்பவர்கள்.
இவர்களின் நலனைக் காக்க இவர்களுக்கான அரசியல் இயக்கங்கள் உண்டு. இயல்பிலேயே இவர்கள்
புரட்சியை விரும்பாதவர்கள்; புரட்சிக்கு எதிரானவர்கள்.
திருமண
அழைப்பிதழ்களில் தன்னை நிலக்கிழார் எனப் பெருமை பேசும் நம்ம ஊர் ஒரு ஏக்கர் உழவனை இந்தப்
பிரிவில் சேர்க்கலாமா?
2.நடுத்தர முதலாளிகள் (Middle
Bourgeoisie): நகர்ப் புறங்களிலும்
கிராமப் புறங்களிலும் முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழில் செய்யும் முதலாளிகள்.
இவர்களை தேசிய முதலாளிகள் என்று அழைக்கலாம். அந்நிய மூலதனத்தின் இடர்பாடுகளின் கீழ்
துன்பங்களை அனுபவிப்பவர்கள். இவர்கள் தங்களுக்கான அரசமைப்பை உருவாக்க விழைபவர்கள்.
புரட்சியின்பால் ஊசலாடும் மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களில் ஒரு சாரார் புரட்சிக்கு
ஆதரவாகவும் மற்றொரு சாரார் எதிராகவும் போகக்கூடியவர்கள்.
3.குட்டி முதலாளி வர்க்கம்
(Petty Bourgeoisie): கைவினைஞர்கள்,
மாணவர்கள், தொடக்கப்பள்ளி-உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், அரசாங்க கீழ்நிலை ஊழியர்கள்,
அலுவலக எழுத்தர்கள், சிறு வழக்கறிஞர்கள் போன்ற கீழ் மட்ட அறிவுஜீவிகள், சிறிய வணிகர்கள்,
சொந்தமாக நிலம் வைத்திருக்கும் உழவர்கள். கைவினைஞர்கள், சொந்தமாக நிலம் வைத்திருக்கும்
உழவர்கள் சிறுவீத உற்பத்தியில் ஈடுபடுபவர்கள் இதில் அடங்குவர்.
குட்டி முதலாளிகள்
பிரிவில் மூன்று வகை உண்டு.
1.உடலுழைப்பு
அல்லது மூளை உழைப்பின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் தங்களது தேவைகளுக்குப் பயன்படுத்துவதைக்
காட்டிலும் அதிகம் சம்பாதித்து பணமாகவோ அல்லது தானியமாகவோ கூடுதலாக வைத்திருப்பவர்கள்.
பணக்காரர்களாக-நடுத்தர முதலாளிகளாக ஆக அதிகம் விரும்புபவர்கள். புரட்சி குறித்து சிறிது
அச்சப்படுகின்ற பயந்தாங்கொள்ளிகள். புரட்சியை சந்தேகிக்கக் கூடியவர்கள். இவர்கள் சிறு
எண்ணிக்கையிலானவர்கள். இதில் உள்ள ஒரு சிலர் வலதுசாரிப் பிரிவாக உருக்கொள்வர்.
2.பொருளாதார
நீதியாக தற்சார்பு உடையவர்கள். முதல் பிரிவினருடன் முற்றிலும் மாறுபட்டவர்கள். இவர்களும்கூட
பணக்காரர்களாக மாற விரும்புபவர்கள் இவர்கள் வாழ்வதற்காக அதிகாலையில் எழுந்து நீண்ட
நேரம் பணிபுரிபவர்கள். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இயக்கத்தில் சேரத் தயங்குபவர்கள்.
நடு நிலை எடுக்க விரும்புபவர்கள். ஆனால் இவர்கள் புரட்சியை ஒருபோதும் எதிர்ப்பதில்லை இவர்கள் பெரும் எண்ணிக்கையிலானவர்கள்.
3.சரிந்து
கொண்டிருக்கும் வாழ்க்கைத்தரம் கொண்டவர்கள். ஏற்கனவே இருந்த நிலையிலிருந்து சரிந்து
வெறுமனே தங்களைப் பராமரித்துக் கொள்வதே கடினம் என்றுள்ளவர்கள். ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறையைக்
காண்பவர்கள். கடன் சுமை ஏறுவதால் வாழ்க்கை மேலும் மேலும் துன்பகரமானதாக உள்ளவர்கள்.
எதிர்காலத்தைக் கண்டு திகைப்படைபவர்கள். பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள். இவர்கள்
புரட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். இடதுசாரிப் பிரிவினரான இவர்கள்
பெரும் எண்ணிக்கையிலானவர்கள்.
மேற்கண்ட
மூன்று பிரிவினரிடையெ புரட்சி குறித்து மாறுபட்ட மனப்பான்மை உண்டு என்றாலும் புரட்சி
மேலோங்கி வெற்றி கண்ணில் தெரிகிற போது இவர்கள் அனைவருமே புரட்சியில் சேர்ந்து கொள்வர்.
இந்தியாவில்,
பொதுவுடைமை இயங்கங்களில் செயல்படும் மேற்கண்ட பிரிவினரும் தாங்கள் குட்டி முதலாளிகளா
இல்லையா என்பதை உரசிப் பார்த்துக் கொள்வது நல்லது.
பிறரை குட்டி முதலாளிகள் என சமூக வலைதளங்களில் ஊளையிடுவோர் முதலில் தாங்கள் யார் என்பதை தங்களது வர்க்கத்தன்மையைக் கொண்டு உரசிப் பார்த்துவிட்டு பிறகு உளையிட்டால் நல்லது.
4.அரைப் பாட்டாளி வர்க்கம் (Semi Proletariat): இதில் ஐந்து வகையினர் உண்டு.
1.தங்கள்
சொந்த நிலங்களில் பகுதி அளவிலும், பிறரிடமிருந்து பெற்ற குத்தகை நிலங்களில் பகுதி அளவிலும்
உழைக்கக்கூடிய அரை-சொந்த நில உழவர்கள்.
2.ஏழை
உழவர்கள்
3.சிறிய
கைவினைஞர்கள்
4.கடை
உதவியாளர்கள்
5.சிறு
வணிகர்கள்
இதில் முதல் இரண்டு
வகையினரும் கிராமப்புறங்களில் அதிகமாக இருப்பவர்கள். உழவர் சிக்கல் என்பது முக்கியமாக
இவர்களுடைய சிக்கலே ஆகும். இவர்களின் பொருளாதார நிலைக்கேற்ப இவர்கள் மேல், நடுத்தர
மற்றும் கீழ் மட்டம் என மூன்று வகையாக உள்ளனர்.
அரை-சொந்த
நில உழவர்கள் - குட்டி முதலாளித்துவப்
பிரிவைச் சோந்த நிலம் வைத்திருக்கும் உழவர்களைக் காட்டிலும் அரைப் பாட்டாளி வர்க்கப்
பிரிவைச் சேர்ந்த அரை-சொந்த நில உழவர்கள் மிகவும் துன்பப்படுகிறார்கள். ஒவ்வோராண்டும்
இவர்களுக்கு உணவுத் தேவையில் பாதி பற்றாக் குறை ஏற்படுகிறது. பிறரிடமிருந்து பெற்ற
குத்தகை நிலங்கள் மூலமோ, சிறு வணிகம் செய்தோ அல்லது வேலைக்குச் சென்றோ, கடன் பெற்றோ
இப்பற்றாக்குறையை ஈடுசெய்கின்றனர். ஆனாலும் இவர்கள் ஏழை உழவர்களைக் காட்டிலும் வசதியானவர்கள்.
ஏழை உழவர்களுக்குச் சொந்த நிலம் கிடையாது.
ஏழை
உழவர்கள் - குத்தகை உழவர்களான
ஏழை உழவர்கள் நிலக்கிழார்களால் சுரண்டப்படுகிறார்கள். பொருளாதார நிலைக்கேற்ப இவர்களில்
இரு வகை உண்டு.
ஒரு வகை, தேவையான அளவு உழு கருவிகளையும், ஓரளவு நிதியையும்
பெற்றிருப்பவர்கள். இவர்கள் ஊடுபயிர் செய்தோ,மீன் வளர்த்தோ, கோழி-பன்றி வளர்த்தோ அல்லது
பகுதி நேரமாக வேலைக்குச் சென்றோ பற்றாக்குறையை ஈடுசெய்கிறார்கள். இவர்கள் அரை-சொந்த
நில உழவர்களைக் காட்டிலும் புரட்சிகரமானவர்கள்.
மற்றோரு வகை, தேவையான அளவுக்கு உழு கருவிகளின்றி, நிதியின்றி,
போதுமான எருவுமின்றி, பயிர்கள் கருகி இருக்கின்ற நிலையில் குத்தைகை செலுத்திய பின்பு
மிஞ்சியதைக் கொண்டும், பகுதி நேரமாக வேலைக்குச் சென்றும் தேவையை ஈடுசெய்பவர்கள். நெருக்கடியான
நேரங்களில் இவர்கள் தங்களது உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் மிகவும் வருந்தி
உதவி கேட்டு சில நாட்களுக்கான தானியத்தைப் பெற்று வாழ்க்கை நடத்துபவர்கள். இவர்களின்
கடன் சுமை எப்போதும் ஏறிக்கொண்டேதான் இருக்கும். உழவர்களிலேயே மிகவும் வறியவர்கள் இவர்கள்.
புரட்சிகரப் பிரச்சாரத்தை உயர்வாக ஏற்றுக் கொள்பவர்கள்.
சிறிய
கைவினைஞர்கள் - சுய வேலை வாயப்பும், ஓரளவு எளிய உற்பத்திச் சாதனங்களை
சொந்தமாகப் பெற்றிருந்தாலும் இவர்களும் கூட பகுதி அளவுக்கு வேலைக்குச் செல்லவேண்டிய
நிர்பந்தம் உள்ளது. பொருளாதார நிலையில் ஏழை உழவர்களைப் போல உள்ளனர். வேலை இல்லாத் திண்டாட்டத்தின்
அபாயத்தையும், ஏழ்மையின் நிரந்தர வேதனையையும் அனுபவிப்பவர்கள்.
கடை
உதவியாளர்கள் – கடைகளிலும்,
சேமிப்புக் கிடங்குகளிலும் பணி செய்து கொண்டு மிகக் குறைந்த சம்பளத்தில் குடும்பம்
நடத்துபவர்கள். ஒவ்வோர் ஆண்டும் விலைவாசி உயர்ந்தாலும், பல ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே
இவர்களுக்கு சம்பள உயர்வு கிடைப்பதால் எல்லையற்ற துன்பங்களுக்கு ஆளாகிறவர்கள். பொருளாதார
நிலையில் சிறிய கைவினைஞர்கள் மற்றுத் ஏழை உழவர்களை ஒத்திருப்பவர்கள். இவர்கள் புரட்சிகரப்
பிரச்சாரத்தை உயர்வாக ஏற்றுக் கொள்பவர்கள்.
சிறு
வணிகர்கள் – விற்பனைப் பொருள்களை
சுமந்து சென்று விற்பவர்கள், நடைபாதை கடைகள் மூலம் விற்பனை செய்பவர்கள் இதில் அடங்குவர்.
மிகச் சிறிய வருவாயைக் கொண்டு தங்களது உணவு-உடைத் தேவைகளைக்கூட ஈடுசெய்ய முடியாமல்
வாழ்பவர்கள். ஏறத்தாழ ஏழை உழவர்களின் நிலையை ஒத்தது இவர்களின் நிலை. இவர்களும் புரட்சிக்கு மிகவும் தேவையானவர்கள்.
5.பாட்டாளி வர்க்கம் (Proletariat): கப்பல் கட்டுதல், நெசவாலைகள், கடல் சார்ந்த
போக்குவரத்து, சுரங்கம் மற்றும் ரெயில்வே ஆகியவைகளில் பணி புரியும் பாட்டாளிகள். மிகவும்
முன்னேறிய வர்க்கம். புரட்சிகர இயக்கத்திற்கு தலைமை சக்தி. புரட்சியில் முக்கியத்துவம்
வாய்ந்தவர்கள். அதற்குக் காரணம் ஒன்று இவர்கள் ஓரிடத்தில் ஒன்று குவிக்கப்பட்டிருப்பது;
மற்றொன்று இவர்களின் அடிமட்டப் பொருளாதார நிலை. இவர்களுக்கு
கைகளைத் தவிர இழப்பதற்கு ஏதுமில்லை. எப்போதும் பணக்காரர்கள் ஆக முடியாது என்ற
நம்பிக்கை உடையவர்கள். எப்போதும் முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியங்களால் ஈவிரக்கமின்றி
நசுக்கப்படுபவர்கள். அதனால்தான் இவர்கள் நல்ல போராளிகளாக இருக்கின்றனர்.
மேலும் நகர்ப்புறங்களில்
உள்ள ரிக்ஷா ஓட்டுபவர்கள், குப்பை வண்டி ஓட்டுபவர்கள், துப்புறவுப் பணியாளர்கள் போன்ற
கூலிகளும் மிகவும் கவனத்தை ஈர்க்கக்கூடிய பாட்டாளி வர்க்கச் சக்திகளாவர். தங்கள் கைகளைத்
தவிர இழப்பதற்கு ஏதுமற்ற இவர்களும் பொருளாதார நிலையில் ஆலைத் தொழிலாளர்களைப் போலவே
இருப்பவர்கள்.
இவை தவிர நாள்-மாத-ஆண்டு
வாடகைக்கு நவீன பண்ணைகளில் பண்ணைக் கூலிகளாக வேலை செய்பவர்கள், நிலம்-உழு கருவி-பணம்
இன்றி குறைந்த கூலிக்கு நீண்ட நேரம் வேலை செய்யும் கூலிகள் இதில் அடங்குவர்.
இவை எல்லாவற்றிற்கும்
அப்பால், வேலை கிடைக்காத கைவினைஞர்களும், தங்களின் நிலத்தை இழந்து விட்ட உழவர்களும்
பெருமளவில் உதிரிப் பாட்டாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மிகவும் இடர் நிறைந்த வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்கள் தீரமிக்கப் போராளிகள்,
ஆனால் அழிவை ஏற்படுத்தக் கூடியவர்கள். முறையான வழிகாட்டுதல் கொடுத்தால் இவர்களை புரட்சிகரமான
சக்திகளாக மாற்ற முடியும்.
தொகுப்பாகப் பார்க்குமிடத்து,
ஏகாதிபத்தியத்துடன் அணிவகுக்கும் அதிகார வர்க்கம், பெரும் நிலக்கிழார் வர்க்கம், தரகு
முதலாளி வர்க்கம் இவர்களுடன் இணைந்துள்ள அறிவுத் துறையினருள் பிற்போக்குப் பிரிவினர்
நமது எதிரிகளாவர்.
புரட்சியில் தலைமை
சக்தி ஆலைப்
பாட்டாளி வர்க்கம். ஒட்டு மொத்த அரைப் பாட்டாளி வர்க்கமும்,
குட்டி முதலாளித்துவ வர்க்கமும் நமது நெருங்கிய நண்பர்கள்.
ஊசலாடும் நடுத்தர முதலாளிகளைப் பொருத்தவரை இவர்களின் வலதுாரிப் பிரிவு நமது எதிரிகளாக மாறக் கூடும். இவர்களின்
இடதுசாரிப் பிரிவு நண்பர்களாக மாறக் கூடும். ஆனால்
நாம் தொடர்ச்சியாக எச்சரிக்கையோடு இருப்பதுடன் நமது அணிகளுக்குள் குழப்பத்தை உருவாக்க
அனுமதிக்கக் கூடாது.
மேற்கண்டவாறு சீன
சமுகத்தில் வர்க்கப் பகுப்பாய்வை மாவோ செய்துள்ளார். இந்தியாவிலும் இத்தகைய பகுப்பாய்வும்
அதற்கு ஏற்ற நடைமுறையும் காலத்தின் கட்டாயம்.
தமிழ்மணி
No comments:
Post a Comment