Sunday, 18 July 2021

கை மாறும் மணல் கடத்தலும் பன்னீரின் கண்ணீரும்!

தமிழ் நாட்டில் மணல் கடத்தல் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும், ஏரிகளில் குப்பை கொட்டுவதைத் தடுக்க வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.

திருச்சி மணப்பாறை அருகில் முத்தபுடையான்பட்டியிலும், புதுக்கோட்டை காரையூர் அருகில் கீழத்தானியம் பகுதியிலும் மணல் கடத்தல் நடப்பதாகவும், தடுக்க முயன்ற காவல் துறையினரைக் கொல்ல முயன்றதாகவும் ஆளும் கட்சியினர் மீது குற்றம் சுமத்துகிறார் பன்னீர். இது போன்ற மணல் கடத்தல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருவதாக அவருக்குத் தகவல்கள் வருகிறதாம்.

ஏரிகளில் குப்பைகள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறதாம்; இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து சுற்றுச் சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும் கருத்து கண்ணாயிரமாக அவதாரம் எடுக்கிறார் பன்னீர். சுற்றுச்சூழலை நாசப்படுத்திய ஸ்டிடர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூடக் கோரி போராடிய மக்களைப் படுகொலை செய்த ஓநாய், மருத்துவக் கழிவுகளை தரம் பிரித்து கையாள மருத்துவ மனைகளுக்கு அறிவுரைகள் வழங்க உத்தரவிட வேண்டும் என இப்பொழுது சுற்றுச் சூழலுக்காக ஓலமிடுகிறது.

“குப்பைகளை கொட்டி ஏரியை சூறையாடும் அ.தி.மு.க அரசு” : 
பல்லாவரம் புத்தேரியை பாதுகாக்க திரண்ட பொதுமக்கள்!
(“குப்பைகளை கொட்டி ஏரியை ...)
மருத்துவக் கழிவுகள் மட்டுமல்ல ஊராட்சி, நகராட்சிக் கழிவுகள் எதுவாக இருந்தாலும் அவை எடுபிடி ஆட்சியின் போது ஆறுகளிலும், ஏரிகளிலும் கொட்டப்பட்ட போது நீங்கள் மிக்சர் மென்றதை நாங்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா பன்னீர்?

ஆட்சி மாறினால் மணல் கொள்ளை மட்டுமல்ல ‘காண்டிராக்ட்’ கொள்ளைகளும் கைமாறும் என்பதுதானே கடந்த கால வரலாறு. 'கழிசன்' கைமாறுகிறதே என்பதைத் தவிர பன்னீருக்கு வேறென்ன கவலை? ஆள்பவர்கள் வேறாக இருந்தாலும் அதிகார வர்க்கம் மாறாத போது குப்பை கொட்டுவது மட்டும் மாறி விடுமா என்ன?

தமிழ்மணி

செய்தி ஆதாரம்: தமிழ் இந்து, 16, 17 ஜூலை 2021.

No comments:

Post a Comment