உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரைச் சனாதனக் காவிக்குள் சிறைப்படுத்த முயலும் கவர்னர் மாளிகையின் செயல், தமிழ் மரபின் மீதான பண்பாட்டுத் தாக்குதலாகும்.
திருவள்ளுவர் முன்மொழிந்த தமிழ் நெறிக்கும், காவி போற்றும் ஆரிய நெறிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை மொழி ஞாயிறு பேராசிரியர் தேவநேயப் பாவாணர் அவர்கள் பட்டியலிட்டுத் தோலுரித்துக் காட்டுகிறார்.
1.மானுட சமத்துவம் vs வருணப் படிநிலை
ஆரிய நெறி பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும்போது, வள்ளுவம் அதை அடியோடு மறுக்கிறது:
- சமூக அந்தஸ்து: தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன் அல்ல என்பது தமிழ்க் கருத்து; ஆனால் தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன் என்பது ஆரியக் கருத்து.
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத சமத்துவக் கொள்கை தமிழ் நெறி; பிறப்பால் பார்ப்பான் உயர்ந்தவன் மற்றோர் எல்லாம் கீழானவர்கள் என்பது ஆரிய நெறி.
- குலப்பாகுபாடு: தமிழர் நெறியில் குலம் என்பது தொழிலால் அமைவது; ஆரிய நெறியிலோ அது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது.
2. உழவே தலை
காவி போற்றும் சனாதனம் உழவுத் தொழிலை சிறுமைப்படுத்தும்போது, வள்ளுவர் உழவனைத் தலைவனாகக் கொண்டாடுகிறார்:
- தமிழர் பார்வை: உழவு என்பது உயிர்களைக் காக்கும் உயரிய தொழில்.
- ஆரியப் பார்வை: உழவு என்பது உயிர்களைக் கொல்லும் 'இழி தொழில்' என ஆரிய நெறி இழிவுபடுத்துகிறது. (இதையொட்டிதான் ஆரியம் பெற்றெடுத்த பிள்ளையின் ஆட்சியில் ஒரு அமைச்சர் உழவுத் தொழிலை இழிவு படுத்துகிறாரோ?).
3. நீதி மற்றும் சமூக ஒழுங்கு
குற்றத் தண்டனை குறித்த பார்வைகளிலும் இரு துருவ முரண்பாடுகள் உள்ளன:
- குற்றத் தண்டனை: குற்றத் தண்டனை என்பது சாதி வேறுபாடின்றி நடுநிலையாக இருக்க வேண்டும் என்பது தமிழ் நெறி; ஆனால் அது குலமுறையைப் பற்றியது (சாதிக்கு ஏற்ப தண்டனை மாறுபடும்) என்பது ஆரிய நெறி. (அதனால்தான் முடி திருத்துவோனுக்கு ஒரு நீதி அர்ச்சக பாப்பானுக்கு ஒரு நீதி என்பதை அமைச்சர் ரமேஷ் நிறுவி உள்ளாரோ?).
- நாகரீகம்: இந்திய நாகரீகம் தமிழருடையது என்பது வரலாற்று உண்மை; ஆனால் அது ஆரியருடையது என்பது அவர்களின் வாதம்.
4. அறம் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்
- அறம்: அறம் என்பது யாவருக்கும் பொதுவான நல்வினை; தருமம் என்பது சாதிக்கொரு நீதி பேசும் வர்ணாசிரம ஒழுக்க வேறுபாடு
- கல்வி: கல்வி அனைவருக்கும் பொதுவானது என்பது தமிழ் மரபு; ஆனால் கல்வி பிராமணருக்கே சிறப்பு என்பது ஆரிய மரபு.
- இறப்பு: ஒரு உயிர் பிரிவதை வெறும் 'நிகழ்ச்சி'யாகப் பார்ப்பது தமிழ் நெறி; ஆனால் இறப்பது என்பது ஒரு 'நிகழ்ச்சி அன்று' (அது தீட்டு அல்லது சடங்கு சார்ந்த ஒன்று) என்பது ஆரியப் பார்வை.
4. இல்லறமே நல்லறம் - துறவற மாயை
துறவறத்தை உயர்த்திப் பிடித்து, இல்லறத்தைச் சிறுமைப்படுத்தும் காவிச் சிந்தனைக்கு வள்ளுவம் நேர் எதிரானது:
- இல்லறத்தில் இருந்தே ஒருவன் வீடுபேறு அடைய முடியும் என்பது தமிழ் நெறி; ஆனால் துறவறத்தால் மட்டுமே வீடுபேறு என்பது ஆரியக் கொள்கை.
- தமிழர் நெறி இல்லறம், துறவறம் என இரண்டாகப் பிரிக்கிறது; ஆரிய நெறியோ மாணவம், மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என நான்காகப் பிரிக்கிறது.
5. மொழி மற்றும் வழிபாட்டு உரிமை
- தமிழே கடவுள் மொழி என்பதும், கோயில் வழிபாடு தமிழில் அமைய வேண்டும் என்பதும் தமிழ் மரபு; ஆனால் வடமொழியே தேவமொழி என்பதும், வழிபாடு வடமொழியில் மட்டுமே நடக்க வேண்டும் என்பதும் ஆரியப் பிடிவாதம். (அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை மறுப்பதும் இதனால்தானோ?).
முடிவுரை
வள்ளுவர் காட்டிய நெறி என்பது மானுட சமத்துவம், உழைப்பின் மேன்மை மற்றும் பகுத்தறிவு சார்ந்தது. சனாதனத்தின் வர்ணாசிரமப் படிநிலைகளையும், பிறப்புப் பாகுபாடுகளையும் வேரறுக்கத் தோன்றியவர் திருவள்ளுவர்.
எனவே, அவருக்குக் காவிச் சாயம் பூசுவது என்பது சனாதனத்தால் வீழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் அடையாளத்தைச் சிதைக்கும் செயலாகும். பாவாணர் காட்டிய இந்தத் தெளிவு, காவியின் முகமூடியைக் கிழித்து வள்ளுவத்தின் உண்மை நிறமான சமத்துவத்தை நிலைநாட்டுகிறது.
ஊரான்
சான்று நூல்: திருக்குறள் தமிழ் மரபுரை: மொழிஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் 705, 706.

No comments:
Post a Comment