இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிறிய விபத்திற்குப் பிறகு, நான் இருசக்கர வாகனங்களைத் தொடுவதில்லை. எங்குச் சென்றாலும் ஷேர் ஆட்டோவும் அரசுப் பேருந்தும்தான் என் கால்கள்.
நேற்று வரை 10 ரூபாய் வாங்கிய ஷேர் ஆட்டோ இன்று 20 ரூபாய் கேட்கிறது. காரணம் கேட்டால்—பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்கிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. அவர்கள் கூட உழைத்து வாழும் வர்க்கம்தானே!
அதே தூரத்தைப் பேருந்தில் சென்றால் 5 ரூபாய் தான். ஆனால், பேருந்து எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. நகரப் பேருந்துகள் குறைந்து போனதால், அவற்றை நம்பிக் காத்திருந்தால் காலம்தான் கழியும். வேறு வழியின்றி, ஒரு நாளைக்கு ஒருமுறை வெளியே சென்றுவந்தாலே ஆட்டோவுக்கே 40 ரூபாய் செலவாகிறது.
இங்கேதான் என் வாழ்வின் உண்மையான கணக்கு தொடங்குகிறது.
நான் வாங்கும் EPF பென்ஷன் 2400 ரூபாய்; BHEL பென்ஷன் 3300 ரூபாய். மொத்தம் 5700 ரூபாய். நான் பணி ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகளாக இதே தொகைதான். உயர்வும் இல்லை.
என் வாழ்நாள் சேமிப்பில் சில லட்சங்களை அஞ்சலக நிரந்தர வைப்புத் தொகையாக வைத்துள்ளேன். அதிலிருந்து மாதம் சுமார் 10,000 ரூபாய் வட்டி வருகிறது. ஆனால், வட்டி விகிதமும் ஆண்டுகளாக உறைந்து கிடக்கிறது; சில நேரங்களில் குறைகிறது கூட.
ஆக, என் மொத்த மாத வருமானம் 15,700 ரூபாய்.
ஆனால் வெளியுலகம் அப்படியே நிற்கிறதா?
மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மின்கட்டணம், மருந்துச் செலவு, போக்குவரத்து—எல்லாம் ஏவுகணை வேகத்தில் உயர்கின்றன. நாங்கள் வாங்கும் பென்ஷனுக்கு அரசு ஊழியர்களைப் போல ‘பஞ்சப்படி’ (DA) கிடையாது. வட்டித் தொகைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை.
இந்த நிலையில் நான் எதை இறுக்கிக் கட்டுவது? வயிற்றையா, மற்ற பிற அவசியத் தேவைகளையா?
“நடந்து போய்வரலாம்” என்றால், விலைவாசியைப் போலவே வயதும் ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் எனக்கு 68 வயது முடிகிறது. உடல் ஒத்துழைப்பதில்லை. இனி ஆட்டோவை அதிகம் நம்பியே வாழ வேண்டிய நிலை.
“பிள்ளைகள் கவனிக்க மாட்டார்களா?” என்று சிலர் கேட்கலாம். ஆனால், இன்றைய பொருளாதார சூழலில் அவர்கள் தங்கள் குடும்பத்தையே தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அவர்களின் சுமைக்கு மேலாக நம்முடைய மருந்துச் செலவையும், போக்குவரத்துச் செலவையும் சேர்க்க எந்த சுயமரியாதை உள்ள தந்தைக்கும் மனம் வராது.
இது என்னுடைய தனிப்பட்ட சோகக் கதை அல்ல. இந்த நாட்டில் பணி ஓய்வு பெற்ற எண்ணற்ற தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை இதுதான்.
குறைந்தபட்ச EPF பென்ஷனை உயர்த்தித் தரக்கோரி நாடு முழுவதும் முதியவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “உயர்த்தப் போகிறோம்” என்ற வாக்குறுதிகளைத் தவிர இதுவரை ஒரு நயா பைசா கூட உயரவில்லை.
இந்த நாடு நிமிர்ந்து நிற்க தங்கள் இளமையையும், உழைப்பையும், வியர்வையையும் கொடுத்த தொழிலாளர்கள்—இன்று முதுமையில் விலைவாசிக்குப் பின்னால் நசுங்கிக் கிடக்கிறார்கள்.
உழைப்பவனுக்குப் பாதுகாப்பு தராத இந்த அமைப்பு, கார்ப்பரேட் லாபங்களையும் மதவாத அரசியலையும் மட்டும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
முதுமையின் இந்த எதார்த்தக் குரல், என்றுதான் ஆட்சியாளர்களின் செவிகளை எட்டப்போகிறதோ?
பொன் சேகர்
(ஊரான்)

No comments:
Post a Comment