1.உலக வரலாறும் இந்தியப் பிறழ்வும் (The Historical Paradox)
உலகெங்கிலும் மனித சமூகம் ஒரு இயல்பான வரலாற்றுப் பரிணாமப் பாதையைக் கடந்துதான் நவீன சமூகமாக மாறியது. காடுகளில் வேட்டையாடித் திரிந்த மனிதர்கள் ரத்த உறவுகளின் அடிப்படையில் தங்களை 'கணங்களாக' (Clans) சுருக்கிக் கொண்டனர்.
விவசாயமும் கால்நடை வளர்ப்பு முறையும் அறிமுகமானபோது, பல கணங்கள் ஒன்றிணைந்து பெரிய 'குலங்களாக' (Tribes) மாறின.
வர்த்தகம், நகரமயமாதல், வேளாண்மை வளர்ந்தபோது இந்தக் குலங்களுக்கு இடையே இருந்த ரத்த உறவு எல்லைகள் உடைந்தன; அவர்கள் மொழி மற்றும் நிலப்பரப்பின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒரே 'மக்கள் கூட்டமாக' (Civil Society / Nation) மாறினர். சுருக்கமாக, பழங்குடி குலங்கள் என்ற அடையாளம் அழிந்து, 'குடிமகன்' (Citizen) என்ற பொது அடையாளம் பிறந்தது.
ஆனால், இந்தியாவிலும் சிந்துவெளி மற்றும் தொடக்கக் காலங்களில் இதே போன்ற குலக் கூட்டங்கள் (Tribal Republics) இருந்தபோதிலும்,
வர்ணாசிரமக் கட்டமைப்பு பல சமூகங்களின் கலப்பை கட்டுப்படுத்தியது. குலங்கள் மக்கள் கூட்டமாக மாறாமல் தங்களுக்குள்ளேயே சுருங்கி 'சாதிகளாக' உறைந்து போயின.
இதற்கு அண்ணல் அம்பேத்கரும் மார்க்சிய அறிஞர்களும் சுட்டிக்காட்டும் முதன்மைக் காரணி: அகமண முறை (Endogamy) என்னும் இரும்புச் சுவர். குலங்கள் மக்கள் கூட்டமாக மாறுவதற்குக் குலங்களுக்கு இடையே நடந்த கலப்புத் திருமணங்கள் (Exogamy) தான் உலகெங்கும் காரணியாக இருந்தன. ஆனால் மனுதர்மம் வர்ணக் கலப்பைத் தடுக்க 'தன் சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும்' அகமண முறையைக் கடுமையான சட்டமாக்கியதால், குலங்கள் சாதித் துண்டுகளாகக் கெட்டிப்பட்டுப் போயின.
2. சங்கரா ஜாதிகளின் உற்பத்தியும், தீண்டாமையின் தோற்றமும்
இந்தியாவில் ஒவ்வொரு சாதிக்குமான தொழில் எப்படி பிறப்பின் அடிப்படையில் இறுகியது? தீண்டாமை எவ்வாறு உருவானது? இதற்கான விடையைச் சனாதன மனுதர்மத்தின் 'சங்கரா ஜாதிகள்' (Mixed Castes) என்ற தத்துவார்த்தச் சதியிலிருந்துதான் நாம் தொடங்க வேண்டும்.
வர்ணாசிரமம் நாலு வர்ணங்களை உருவாக்கியதோடு நிறுத்தவில்லை. இந்த நான்கு வர்ணங்களுக்கு இடையே நடக்கும் மீறல் திருமணங்களால் (கலப்புகளால்) பிறக்கும் வாரிசுகளைச் சனாதனம் 'சங்கரா ஜாதிகள்' என்று அழைத்தது. உயர் வர்ணத்து ஆணுக்கும், கீழ் வர்ணத்துப் பெண்ணுக்கும் பிறப்பவர்களை 'அனுலோம' (Anuloma) என்றும்; கீழ் வர்ணத்து ஆணுக்கும், உயர் வர்ணத்துப் பெண்ணுக்கும் பிறப்பவர்களை 'பிரதிலோம' (Pratiloma) என்றும் வகைப்படுத்தியது. மனுதர்மம் இந்த பிரதிலோம முறையை மிகக் கடுமையான பாவமாகக் கருதியது.
இந்த வர்ணக் கலப்பில் உருவான வாரிசுகளுக்குள்ளும், அவர்களுக்கு இடையேயும் தலைமுறை தலைமுறையாக ஏற்பட்ட அடுத்தடுத்த கலப்புகள் மூலமாகத்தான் இந்தியாவில் பறையர், நாவிதர், ஆசாரி, சக்கிலியர் உள்ளிட்ட பல்வேறு 'தனித்தனிச் சாதிகள்' உற்பத்தியாயின.
இவ்வாறு உருவான ஒவ்வொரு புதிய சாதிப் பிரிவிற்கும் சனாதன நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பு பிரத்தியேகமான, மாற்ற முடியாத தொழில்களைப் பிறப்பின் அடிப்படையில் கட்டாயப்படுத்தி ஒதுக்கியது. நெசவு, தோல் பதனிடுதல், துப்புரவு எனத் தொழில்கள் அனைத்தும் பிறப்புரிமையாக்கப்பட்டன.
தொழில்கள் பிரிக்கப்பட்டபோது வர்க்க நகர்வு (Class Mobility) மறுக்கப்பட்டு, மனிதர்கள் அந்தந்தத் தொழிலோடு பிணைக்கப்பட்டனர். அதில் சிலர் கூலி அடிமைகளாக்கப்பட்டனர்.
மனுதர்மத்தின்படி, வர்ண ஒழுக்கத்தை மீறிப் பிறந்த இந்தச் சங்கரா ஜாதிகளின் வாரிசுகள் 'ஊருக்குள்' வாழத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். இதன் விளைவாகவே, இந்தியக் கிராமங்களில் 'ஊர் வேறாகவும், சேரி வேறாகவும்' பிரிக்கும் புவியியல் வன்முறை பிறந்தது.
அவர்கள் ஊருக்கு வெளியே, ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இப்படி ஊருக்கு வெளியே தள்ளப்பட்டவர்களில் அதாவது கீழ் வர்ணத்து ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த சண்டாள (பறையர்) வாரிசுகளையும் சனாதனம் 'தீண்டத்தகாதவர்கள்' (Untouchables) ஆக்கியது. அவர்களின் நிழலோ, காற்றோ கூட உயர் வர்ணத்தினர் மீது படக் கூடாது என்ற கொடூரம் புகுத்தப்பட்டது. இதுவே இந்தியச் சமூகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடான 'தீண்டாமைக்கு' (Untouchability) அடிப்படையான வரலாற்றுத் தொடக்கமாகும்.
இதனால்தான் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர் டி.டி. கோசாம்பி, "இந்தியாவில் சாதி என்பது, பழங்குடிக் குழுக்கள் (Tribes) வர்க்கச் சமூகமாக மாற முடியாமல், சனாதன நிலப்பிரபுத்துவ அமைப்பிற்குள் அப்படியே உள்வாங்கப்பட்டு, சாதியாய் உறைந்து போன ஒரு தேக்க நிலை (Stagnation)" என்றார்.
3.புவியியல் பிரிவினை உடைப்பு: ஊரையும் சேரியையும் தரைமட்டமாக்கிய நவீன நகரங்கள்
இந்தியாவில் 'ஊர் - சேரி' என்ற பௌதிகக் கட்டமைப்பு நீடிக்கும் வரை சாதியும் தீண்டாமையும் ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். கிராமிய நிலப்பிரபுத்துவச் சூழலில் மனிதனின் இருப்பிடமே அவனது சாதியைத் துல்லியமாகக் காட்டிவிடுகிறது. இத்தகைய இருப்பிடப் புவியியல் பிரிவினையை உடைத்து, சாதி ஒழிப்பிற்கான மிக முக்கியமான ஒரு தொடக்கப்புள்ளியை இந்தியாவின் நவீனப் பொதுத்துறை மற்றும் திராவிடக் கொள்கை வடிவமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.
இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் (Public Sector Undertakings) தோற்றுவிக்கப்பட்டபோது, அவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'டவுன்ஷிப்' (Township) என்னும் குடியிருப்பு அமைப்புகள் சாதிச் சுவர்களை முதன்முதலில் பௌதிக ரீதியாக அசைத்துப் பார்த்தன. அங்கு மேலாளரும், தொழிலாளியும், வெவ்வேறு சாதியினரும் தங்களின் உத்தியோகப்பூர்வப் பதவிப் படிநிலையின் அடிப்படையில் அருகருகே வாழும் சூழல் உருவானதே தவிர, சாதிப் படிநிலைக்கு அங்கு இடமில்லாமல் போனது.
தமிழ்நாட்டில் இந்தச் சமூகப் பொறியியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவரால் கொண்டுவரப்பட்ட கே.கே. நகர், தில்லை நகர், அண்ணா நகர் போன்ற புதிய திட்டமிடப்பட்ட நகரக் கட்டமைப்புகளும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) போன்ற பொதுவான குடியிருப்புகளும், சாதி கடந்த பௌதிக வாழ்விடங்களை உருவாக்கின. எல்லாவற்றிற்கும் மேலாக, கலைஞர் உருவாக்கிய 'பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்' என்பது இந்திய வரலாற்றிலேயே சாதி ஆதிக்கப் புவியியலைத் தகர்க்க அரசு அதிகாரத்தால் கட்டப்பட்ட ஆகச்சிறந்த புரட்சிக் கோட்டைகள் ஆகும்.
ஒரே மாதிரியான வீடுகள், ஒரே மாதிரியான பொதுப் பாதைகள், ஒரே பொது நீர்த்தேக்கத் தொட்டி எனப் பல சாதியினரை அருகே அமர்த்தி வாழ வழிவகுத்தது திராவிடக் கோட்பாடு. இது போன்ற ஏற்பாடுகள்தான் வேங்கை வயல்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும்.
இந்த வாழ்விட மாற்றங்களால் விளைந்த நன்மைகள்:
- பல சாதியினர் அருகருகே வாழும்போது மனிதர்கள் சாதி கடந்து பழகத் தொடங்கினர்.
- ஆபத்துக் காலங்களில் சாதி பாராமல் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்ளும் வர்க்கத் தோழமை பிறந்தது.
- ஒருவருடைய நல்லது கெட்டதுகளில் இயல்பாகப் பங்கெடுத்துக் கொள்ளவும், பரஸ்பரம் புரிந்து கொள்ளவும் வழிவகுத்தது.
- சாதி கடந்த நட்புகளும், இளைய தலைமுறையினரிடையே இயல்பான காதல் திருமணங்களும் மலர்வதற்கும், ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து பொதுவான திருவிழாக்களையும் பண்பாட்டு நிகழ்வுகளையும் நடத்துவதற்கும் இதுவே அடித்தளமிட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கையின் பேரழிவு:
ஆனால், 1990-களுக்குப் பின் புகுத்தப்பட்ட 'புதிய பொருளாதாரக் கொள்கை' மற்றும் தனியார்மயமாக்கல் காரணமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் நசுக்கப்பட்டன; அதன் விளைவாக டவுன்ஷிப் போன்ற முற்போக்கு அமைப்புகள் சிதைந்து சிதிலமாகின. கலைஞருக்குப் பிறகு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சமத்துவபுரங்கள் போன்ற முற்போக்குக் குடியிருப்புத் திட்டங்கள் புதிய அரசுகளால் வீரியத்துடன் தொடரப்படாததால், அவை இன்று முடங்கிப் போய்விட்டன.
எனவே, மக்களின் வாழ்வோடு பிணைந்த இந்த இடஞ்சார்ந்த மாற்றங்களைத் தொடர்ந்து அரசு சார்பாக ஏற்படுத்த வேண்டும். புதிய நவீனப் பொதுக் குடியிருப்புகளை உருவாக்கி, அங்கு அனைத்து நவீன உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். ஏற்கனவே கிராமத்து ஊர்களிலும் சேரிகளிலும் முடங்கிக் கிடக்கும் மக்கள், அந்தச் சனாதன வாழ்விடங்களை விட்டுவிட்டு இந்த நவீனச் சமத்துவக் குடியிருப்புகளை நோக்கி ஓடி வருகின்ற எதார்த்த நிலையை உருவாக்க வேண்டும்.
அப்பொழுதுதான் காலப்போக்கில் சனாதனம் உயிர்ப்புடன் இருக்கும் 'ஊரும் சேரியும்' மனித நடமாட்டமற்றுத் தரைமட்டமாகும்; சாதி தீண்டாமையின் வேர்களும் பௌதிக ரீதியாகப் பலவீனமடைந்து அழியும்! ஆம்! ஊரும் சேரியும் ஒரு சேர சுடுகாடாக மாற்றப்பட வேண்டும்.
4. சாதி ஒழிப்பிற்கான இருமுனைத் திட்டம்: ஒரு தத்துவார்த்த முன்மொழிவு
வாழ்விடங்களை மாற்றுவதுடன் நின்றுவிடாமல், சாதியின் தத்துவார்த்த மற்றும் பொருளாதாரக் கால்களை ஒடிக்க, துல்லியமான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய சாதிவாரிக் கணக்கெடுப்பு (Comprehensive Caste Census) மிக மிக அவசியம். அதன் அடிப்படையில், சாதி ஒழிப்பிற்கான இந்த இருமுனைத் திட்டத்தை நாம் ஒரு நீண்ட கால விவாதப் பொருளாக முன்வைக்கிறோம்:
முன்மொழிவு 1: சாதிவாரி விகிதாச்சார இடஒதுக்கீடு
"உனக்கு இடஒதுக்கீடு இருக்கிறது, எனக்கு இல்லை; உன்னால் என் வாய்ப்பு பறிபோகிறது" என்று முற்பட்ட சாதியினர் முதல் ஒவ்வொரு சாதியினரும் பிற சாதியினர் மீது கக்கும் வன்மத்திற்கும், சாதிப் பொறாமைக்கும் இந்த 'சாதிவாரி இடஒதுக்கீடு' (Proportional Representation) தான் இறுதித் தீர்வு.
சாதிவாரி கணக்கெடுப்பின்படி, பொதுப்பிரிவினர் (OC) எவ்வளவு சதவீதமோ அவ்வளவு இடஒதுக்கீடு; பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் பட்டியலினத்தவர் (SC/ST) எவ்வளவு சதவீதமோ அவ்வளவு இடஒதுக்கீடு. இப்படி 100% இடஒதுக்கீட்டையும் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பிரித்துக் கொடுத்துவிட்டால், எவனும் அடுத்தவனுடைய பங்கைப் பறிக்க முடியாது; அடுத்தவன் மீது பொறாமைப்பட முடியாது. எவனுடைய போட்டியும் அவனவன் சாதிப் பட்டியலுக்குள் மட்டுமே இருக்கும் என்பதால், இடஒதுக்கீட்டுப் போட்டி-பொறாமைகள் முற்றிலும் ஒழியும். ஒத்த சாதிகள் ஒரே பகுப்பாக இருக்க விரும்பினால் அவர்கள் ஒரே வகுப்பாகவும் இல்லை எனில் தனித்தனி சாதிகளாகவும் தங்களுக்குரிய பங்கை பெற்றுக் கொள்ளலாம்.
முன்மொழிவு 2: சாதியற்றோர் தனிப் பட்டியல்
சாதி மறுப்பு வாரிசுகளையும், சாதியைத் துறக்க விரும்புவோரையும் இணைத்து "சாதியற்றோர் தனிப் பட்டியல்" (No Caste Category) உருவாக்கப்பட வேண்டும்.
- உண்மையான பயன் : சாதியைத் துறந்துவிட்டு வரும் SC, ST, BC. OC என அனைத்துச் வகுப்பினரும் இந்தத் தனி ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறுவார்கள்.
- சாதி ஒழிப்புக்கான நேரடி ஊக்கத்தொகை (Incentive for Caste Abolition): "நான் சாதியைத் துறந்தால், என் குழந்தைக்கு அரசு வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் 'சாதியற்றோர் தனி ஒதுக்கீடு' என்கிற பாதுகாப்பான தளம் கிடைக்கும்" என்ற எதார்த்த நிலை வரும்போது, பலரும் தங்களின் வாரிசுகளின் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்புக்காகச் சாதியைத் தூக்கி எறிய முன்வருவார்கள். சாதி மெல்ல மெல்லத் தன் சமூகப் பலத்தை இழந்து சுருங்கி அழியும்.
நிர்வாகச் சிக்கல்களுக்கான தீர்வு:
முற்போக்கு வேடமிட்டு உயர்சாதியினர் தங்களைச் 'சாதியற்றவர்களாக'க் காட்டிக்கொண்டு எளிய மக்களின் சலுகைகளை அபகரிப்பதைத் தடுக்கத் தகுந்த சமூக-சட்ட பாதுகாப்புகளும் தேவைப்படும்.
முடிவுரை
நாம் முன்வைக்கும் இந்த விரிவான திட்டம், தற்போதைய சமூகத்தில் இருக்கும் சாதி வன்மத்தை, சாதிவாரிப் பங்கீடு மூலம் தற்காலிகமாக நிறுத்தி அமைதியை ஏற்படுத்தும்; அதே நேரத்தில், சாதியற்றோர் தனிப் பட்டியல், அவர்களுக்கான தனிப் பங்கீடு மற்றும் சமத்துவப் பொதுக் குடியிருப்புகள் மூலம் சாதி அமைப்பிற்குள் இருப்பவர்களைச் சாதியற்ற நவீன குடிமக்களாக மாற்றத் தூண்டும் ஒரு மாபெரும் "சமூகப் பொறியியலை" (Social Engineering) நிகழ்த்தும்.
அண்ணல் அம்பேத்கர் கண்ட
சாதி ஒழிப்புக் கனவும், தந்தை பெரியார் கண்ட சமூகநீதிக் கனவும் இணையும் ஆகச்சிறந்த தத்துவார்த்தப் புள்ளி இதுவே!
ஆட்சிகள் வரலாம், போகலாம்; ஆனால் சாதி ஒழிப்பிற்கான இந்த நீண்ட கால தத்துவார்த்த விவாதம் தொடரட்டும்!
ஊரான்
.png)
No comments:
Post a Comment