தமிழ்நாட்டு அரசியல் களம் சந்தர்ப்பவாதத்தின் உச்சத்திற்குச் சென்று கொண்டிருப்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.
அதிமுக சார்பில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு அதிகாரப்பூர்வமாக ‘நடிகர் கட்சி’ முகாமில் இணைந்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் சட்டமன்றத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொண்டது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட ஒன்றுதான். ஆனால், இப்போது பதவியையே துறந்து, கட்சி மாறியிருப்பது மிகப் பெரிய அரசியல் கேள்விகளை எழுப்புகிறது.
'குதிரை பேரம்'
வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்
ஒரு ஜனநாயகத்தில் மக்கள் ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது அந்த நபருக்காக மட்டும் அல்ல; அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, கொள்கை, அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றிற்காகவும்தான்.
‘நடிகர் கட்சியை’ எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களை தவெக-வுக்கு மாற்று என்ற நம்பிக்கையுடன்தான் மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கைக்கே இப்போது இந்த எம்எல்ஏக்கள் துரோகம் செய்துள்ளனர்.
மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று, பின்னர் வேறு அரசியல் முகாமில் இணைவது என்பது வெறும் கட்சி மாறுதல் அல்ல; அது வாக்காளரின் அரசியல் தீர்ப்பை அவமதிப்பதாகும்.
“செலவுக்கு மேல கொஞ்சம் ஏதோ கணிசமா போட்டுத் தந்தா போதும்!”
இந்த அரசியல் அந்தரப் பல்டியின் பின்னால் இந்தியத் தேர்தல் அரசியலின் கசப்பான பொருளாதாரமும் இருக்கிறது.
தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்த அரசியல்வாதிகள், “மீண்டும் சீட்டு கிடைக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை; இந்த ஒரு வாய்ப்பிலாவது வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும்” என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
“ஐஞ்சு வருசமா பட்டினிக் கிடந்த எங்களுக்கும் பசிக்கும் இல்ல?” என்ற இந்த பிழைப்புவாத மனநிலையே இன்று கொள்கைகளைவிட பணத்தைப் பெரிய சக்தியாக மாற்றியுள்ளது.
தேர்தல் அரசியல் என்பது இன்று ஒரு அரசியல் சந்தையாக மாறி உள்ளது.
அரசியல் கணக்குகளும் அதிகார நகர்வுகளும்
இந்த ராஜினாமாக்கள் வெறும் தனிநபர் முடிவுகளா? அல்லது பெரிய அரசியல் கணக்கின் ஒரு பகுதியாகா? என்ற கேள்வியும் உடன் எழுகிறது.
இது போன்ற ராஜினாமாக்களால் சட்டமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும்போது ஆளும் தரப்பின் பெரும்பான்மை நிலை வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் உருவாகலாம்.
இத்தகைய நிலை உருவானால், ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளின் அழுத்தம் குறைந்து, ஆளுங்கட்சியின் அதிகாரம் மேலும் வலுப்படும்.
பிழைப்புவாதம்: எல்லா கட்சிகளுக்கும் பொதுவான ஒரு நோய்
இந்தச் சூழலில், “முற்போக்கு”, “சமூகநீதி”, “சாதி ஒழிப்பு” என்று பேசும் கட்சிகளுக்குக் கூட அதிகார அரசியல் மற்றும் பிழைப்புவாத அழுத்தங்கள் வராதா என்ற கேள்வி எழுகிறது.
இந்திய அரசியல் வரலாறு காட்டுவது ஒன்றுதான்:
பிழைப்புவாதம் தலைதூக்குமம் போதெல்லாம் கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
எனவே, எந்தக் கட்சியையும் தக்க தூய சக்தியாகக் கருதாமல், மக்கள் விழிப்புடன் அரசியலைக் கண்காணிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
முடிவுரை
“ஐஞ்சு வருஷமா பட்டினிக் கிடந்தா எங்களுக்கும் பசிக்கும் இல்ல!” என்று கூறிக்கொண்டு மக்கள் அங்கீகாரத்தை விற்கும் அரசியல்வாதிகளும், அவர்களை வாங்கி ஆபத்தானவர்கள்.
வாக்காளரின் தீர்ப்பை மதிக்காத இந்த அரசியல் கலாச்சாரம் தொடர்ந்தால், தேர்தல் என்பது மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடு அல்ல; அது வாங்கி விற்கப்படும் வர்த்தகமாகவே மாறிவிடும்.
அதனால்தான், இத்தகைய அரசியல் துரோகங்களை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவது அவசியமாகிறது.
— ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment