Monday, 25 May 2026

தமிழ்நாட்டில் நடப்பது நடிகர் ஆட்சியா, கவர்னர் ஆட்சியா?

இன்றைய அரசியல் பின்னணி: 

மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) சார்பாகத் திருச்சியில் நடைபெற இருந்த சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு கருத்தாளராகப் பங்கேற்க, கொளுத்தும் வெயிலின் வெக்கைக்கு ஊடாக வேலூரிலிருந்து தோழர்களுடன் திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள காதிகிராப் இடத்தை நான் சென்றடைந்தபோது மாலை 4 மணி. அந்த இடத்தில் கொடிகள் இல்லை, பேனர்கள் இல்லை, ஒலிபெருக்கிகள் இல்லை. ஒரு சில தோழர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், எண்ணற்ற காவலர்களுடன் போலீஸ் வேன்கள் வரிசைகட்டி நின்றன. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதை அந்த எதார்த்தக் காட்சிகள் உணர்த்தின.


உடனே தோழர்களைத் தொடர்புகொண்டபோது, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிந்தேன். அவ்விடம் சென்றபோது, ஊர்வலமாக வந்த தோழர்களைத் தடுத்துக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர். 

அதே நேரத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக ஒரு சில இந்து முன்னணி காலிகள், போலீசார் முன்னிலையிலேயே தோழர்களுக்கு எதிராகக் கத்திக் கொண்டிருந்தனர். இதைக் கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையின் அணுகுமுறை மற்றும் ஜனநாயக முறையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்து தோழர்களைக் கைது செய்த விதம்—இந்த அரசு சனாதனத்தைக் காப்பதற்காகவே துடிக்கிறது என்பதை அப்பட்டமாக உணர வைத்தது.



தமிழ்நாட்டில் நடப்பது நடிகர் ஆட்சி அல்ல, இது கவர்னர் ஆட்சிதான் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு முதன்முதலாகப் புரியவைத்த நிகழ்ச்சி இதுவாகும். 

கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பொதுவெளியில் மக்களிடம் பகிர வேண்டிய தங்களின் காத்திரமான கருத்துகளைத் தோழர்கள் ஒரு மண்டபத்திற்குள் கூடிப் பகிர்ந்து கொண்டனர். அது இப்போது சமூக ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது. அந்த மண்டபத்தில் நான் ஆற்றிய உரையின் தொகுப்பு இதோ:

அறிமுகம்

"சனாதனம் வீழ்க! சமூகநீதி வெல்க!"

அனைவருக்கும் வணக்கம்!

ஒரு காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழக மேடைகளில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகத் தமிழ்நாடெங்கும் தமிழ்மணி என்ற பெயரில் முழங்கியவன் நான். நீண்ட காலத்திற்குப் பிறகு, நான் அரசியல் பயின்ற இந்தத் திருச்சி மண்ணில், மீண்டும் ஒரு புரட்சிகர மேடையில் ஏறும் வாய்ப்பை எனக்கு வழங்கிய மகஇக மாநிலப் பொதுச் செயலாளர், என் அன்புத் தோழர் கோவன் அவர்களுக்கும், தலைமைக் குழுத் தோழர்களுக்கும் முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பொன்.சேகர், வழக்குரைஞர்

தோழர்களே, இந்தியாவே இன்று சனாதனம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்தபோதும், அதைக் கண்டு எள்ளளவும் துவண்டுவிடாமல், சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே எழுந்து நின்று, "சனாதனத்தை ஒழிப்போம்" என்று நெஞ்சுறுதியோடு முழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த முற்போக்கு மேடையிலிருந்து என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சனாதன எதிர்ப்பு எனும் திராவிடக் கருத்தியலுக்கு அவர் மீண்டும் ஒரு புத்துயிரை ஊட்டியிருக்கிறார்!

சனாதனம் என்றால் என்ன?

தோழர்களே... சனாதனம், சனாதனம் என்கிறார்களே, சனாதனம் என்றால் என்ன?

அதற்கு விளக்கம் சொல்லும் பண்டிதர்கள், 
"ஆதியும் அந்தமும் இல்லாதது, தொடக்கமும் முடிவும் இல்லாதது, என்றும் மாறாதது, 
அழிவில்லாதது, 
எப்பொழுதும் நிலைத்திருப்பது" என்கிறார்கள்.

One infinite, eternal, changeless existence is called Sanatana.

மாற்றமே இல்லாத, அழிவே இல்லாத அப்படிப்பட்ட ஒன்று எது என்று இன்றைய அரசியல்வாதிகளிடமும், சனாதனக் ஆதரவாளர்களிடமும் கேட்டால், ஆளாளுக்குத் தங்களின் சுயநல நோக்கத்திற்கு ஏற்ப வியாக்கியானம் பேசுகிறார்கள்!

குஷ்புவைக் கேட்டால், 'பொட்டு வைப்பதும் பூ வைப்பதும்தான் சனாதனம்' என்கிறார். அனிதா குப்புசாமியைக் கேட்டால், 'வாசல் தெளித்துக் கோலம் போடுவது அதுவும் அரிசி மாவு கோலம் போடுவது சனாதனம்' என்கிறார். இவர்களாவது யோசித்து ஏதோ சொந்தமாகத் தத்துபித்து என்று எதையோ சொல்கிறார்கள்.

ஆனால், சனாதனத்தை முட்டுக் கொடுக்கக் கவிஞர் கண்ணதாசனை வாடகைக்கு அழைத்து வருவோர் சிலர் உண்டு. அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"தாயின் அன்பு, 
பசித்தவனுக்கு உணவளிப்பது, வெறுப்பவனையும் மன்னிப்பது, சிவனைப் போல அமைதியாக இருப்பது, 
கிருஷ்ணனைப் போலத் துன்பத்திலும் சிரிப்பது, 
புத்தரைப் போல ஆசையை வெல்வது" —இதுதான் சனாதனமாம்!

இப்போது இதனுடைய 'லேட்டஸ்ட் வெர்ஷன்' நம்ம தமிழிசை அக்கா! அமைச்சர் வன்னியரசுக்கு ஒரு தாய் திருநீறு பூசுகிறார். 'திருநீறு பூசும் இந்தத் தாயின் அன்புதான் சனாதனம்' என்று புது வியாக்கியானம் பேசுகிறார் தமிழிசை.

தோழர்களே! இவர்களெல்லாம் சொல்வதுதான் சனாதனமா என்று தர்ம சாஸ்திரம் தெரிந்த ஒரு உண்மையான ஆச்சாரியாரிடம் போய்க் கேட்டால், அவர் இவர்களின் முகத்திலேயே காரித் துப்புவார்!

தோழர்களே… 
ஆதியும் அந்தமும் இல்லாத, 
தொடக்கமும் முடிவும் இல்லாத, 
என்றும் மாறாத, 
அழிவில்லாத, 
எப்பொழுதும் நிலைத்திருக்கிற அது எது தெரியுமா? வரலாற்றுத் தரவோடு சொல்கிறேன், குறித்துக் கொள்ளுங்கள்!

காசியில் 1898-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மத்திய இந்துக் கல்லூரி', பின்னாளில் 1916-இல் 'பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக' உயர்த்தப்பட்டபோது, அங்கு ஒரு பாடப்புத்தகம் வைக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா?

"An Elementary Sanatana Dharma: Hindu Religion and Ethics".

அமெரிக்காவின் கலிபோர்னியா நூலகத்தில் இருந்த அந்தப் புத்தகத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் 2007-இல் டிஜிட்டல் ஆவணமாக ஏற்றி வைத்துள்ளது. அந்த நூல் என்ன சொல்கிறது?

"வேதங்களையும், புனித நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு பல்லாண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு வழங்கப்பட்டதுதான் சனாதன தர்மம்." 

அன்று 'இந்து மதம்' என்ற ஒன்றோ, 'இந்தியா' என்ற ஒன்றோ கிடையாது. ஆரிய இனத்தை அடிப்படையாகக் கொண்ட 'ஆரிய மதம்'தான் இருந்தது. அந்த நிலப்பரப்பிற்குப் பெயர் 'ஆரிய வர்த்தம்'! இதுதான் வரலாற்று உண்மை!

சடங்குகளில் உயிர் வாழும் சனாதனத்தின் வேர்கள்

இந்தச் சனாதன தர்மத்திற்கு எது அஸ்திவாரம்?
சுருதிகள் என்று சொல்லப்படும் நான்கு வேதங்கள்தான் சனாதனத்தின் அஸ்திவாரம் (Foundation)! 

யாக்ஞவல்கியர், பராசர, நாரத, மனுதர்மம் போன்ற 18 ஸ்மிருதிகள்தான் சனாதனத்தைத் தாங்கும் சுவர்கள்! அதில் மனுதர்மம் என்கிற சுவர் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கான சுவர். 

18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் அந்தச் சுவர்களைக் காக்கும் முட்டுக் கொம்புகள்! பகவத்கீதை சைடில் கொடுக்கப்படும் ஒரு துண்டுக் கட்டை.

நமது அன்றாட வாழ்வியலுக்கான கடமைகளைச் சட்டமாகத் தொகுத்துச் சொல்வதுதான் மனுதர்ம சாஸ்திரம்! மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதுதான் சனாதனம். மற்றவர்கள் சொல்வதெல்லாம் சனாதன தர்மத்திற்குள் வராது.

உலகப் படைப்பு, கல்வி, இல்லறம், உணவு, சாதிகள், வினைப்பயன் என 12 அத்தியாயங்களில் 2685 ஸ்லோகங்களைக் கொண்டது இந்த மனுதர்மம். என்றைக்கோ, கி.மு 2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட அந்தச் சட்டம், இன்னமும் நம் வீடுகளில் அழியாமல் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் சனாதனம் அழிவில்லாததுதானோ என்ற ஐயம் நமக்கும் எழத்தானே செய்கிறது?

நம் வாழ்க்கையில் அது எப்படி அழியாமல் தொடர்கிறது? நமது இல்லங்களில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் வாழ்வியல் தீட்டுகள் வழியாகத்தான்! 

மாதவிடாய், திருமணம், சீமந்தம், குழந்தைக்குப் பெயர் சூட்டல், மொட்டை அடித்தல், கிரகப்பிரவேசம், மரணம், காரியம், திதி என அனைத்திலும் மனு சொன்னதைத்தான் நாம் இன்றும் நமது இல்லங்களில் சடங்காகச் செய்து கொண்டிருக்கிறோம்!
நம்மில் பலரும் மனுவை வாசித்திருக்க மாட்டோம். ஆனால் மனுவை வாசிக்காமலேயே, அதை எப்படிட கடைபிடிக்கிறோம்? எல்லாம் பழக்க வழக்கம் என்ற பெயரில் நமக்கு ஊட்டப்படுவதால்தான்!

எதற்காக இத்தனை சடங்குகள்? பார்ப்பனர்கள் தங்களின் வருவாய்க்காக, தங்களின் உத்தியோகத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட சுரண்டல் முறை இது! 

புரோகிதம் என்பது ஒரு கார்ப்பரேட் தொழிற்சாலை தோழர்களே! இது 'work from home' அல்ல, 'work from others home' மூலம் சம்பாதிக்கும் அரிய வகைத் தொழில் அது! 

நீங்கள் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்றால் 'குடும்பத்திற்கு ஆகாது, வாரிசுக்குக் கேடு' என்று அச்சமூட்டி, கடன் வாங்கியாவது காரியம் செய்வதையும் திதி கொடுப்பதையும் கட்டாயமாக்கி விட்டார்கள்.

சனாதனத்தின் பாதி உயிர் இந்த புரோகிதத் தொழிலில்தான் இருக்கிறது தோழர்களே! அவன் சனாதனத்தைக் காக்கப் பொதுத்துறைகளை ஒழிக்க முயற்சிக்கும் போது, நாம் ஏன் சனாதனத்தை அழிக்க இந்த புரோகிதத் தொழிலை ஒழிக்க முயற்சிக்கக் கூடாது? நம் வீட்டிற்குள் படர்ந்திருக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் எனும் சனாதன வேர்களை முதலில் வெட்டி எறிய வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.

ஷியாம் சிங்கா ராய் படத்தில் தேவதாசி முறையை ஆதரித்த ஒரு புரோகிதனை கதையின் நாயகன் நெருப்பில் தூக்கி வீசும் காட்சியைப் போல—கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் நெருப்பில் போடுகிறாயா, இதோ நீயும் நெருப்பிலேயே எரிந்து போ என்று வீசுவானே—அதைப் போல, இங்கே கிரகப்பிரவேசம் என்ற பெயரிலும் கும்பாபிஷேகம் என்ற பெயரிலும் தீட்டுக் கழிப்பு நிகழ்ச்சிகளை நடத்தும் பார்ப்பனப் புரோகிதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்து முடக்க வேண்டும்.

ஆம், அது ஒரு தீண்டாமை நிகழ்வு! கட்டிட வேலைகளின் போது சண்டாளர்கள், அதாவது பறையர்கள் வந்து போய் இருப்பார்கள், அதனால் தீட்டுப்பட்டுவிட்டது என்பதற்காக மாட்டுக் கோமியம் தெளித்துத் தீட்டுக் கழிக்கும் இழிவுதான் அது. 1940-களின் பிற்பகுதியில் வெளியான சில பழைய திரைப்படங்களின் விருந்து காட்சிகளில் கூட, ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை (பறையர்களை) இழிவுபடுத்திச் சனாதனத் திமிரோடு வசனங்கள் வைக்கப்பட்டன. அந்தச் சாதிய இழிவின் தொடர்ச்சிதான் இன்றைய புரோகிதத் தீட்டுக் கழிப்புகளும்!

இதற்கு டெல்லியின் தயவோ, ஆட்சியாளர்களின் தயவோ தேவையில்லை! தேவையற்ற வீட்டுச் சடங்குகளை நாம் கைவிட வேண்டும்; இல்லை எனில் புரோகிதன் இல்லாத 'சுயமரியாதை' முறைகளுக்கு நாம் பழக வேண்டும். மக்களை இதற்குத் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு முற்போக்கு இயக்கங்களாகிய நம்முடையது.

ஊர்-சேரி எனும் தீண்டாமைக் காடுகள்

அடுத்ததாக, சனாதனத்தின் உச்சகட்டக் கொடூரம்—சாதியத் தீட்டு!

வருணக் கலப்பு, சங்கர ஜாதிகள் உற்பத்தி, அவர்களுக்கான தொழில், உணவு, உடை, வாழ்விடம் மற்றும் தீட்டு... இவற்றை உள்ளடக்கிய 'ஊர் - சேரி' எனும் தீண்டாமைக் காடுகள்! சனாதனம் செழித்து வளர்ந்திருக்கும் இந்த ஊர்-சேரி தீண்டாமைக் காடுகளை அழித்து, பொதுக் குடியிருப்புகளை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் சாதி-தீண்டாமை எனும் சனாதனத்தைப் பலவீனப்படுத்த முடியும்!

வரலாற்றைப் பாருங்கள்...

சோசலிச மாடலில், நேரு மற்றும் இந்திரா காந்தியின் காலத்தில் உருவாக்கப்பட்ட பிஹெச்இஎல் (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களும், அவற்றுக்கான டவுன்ஷிப் (Township) குடியிருப்புகளும், கலைஞர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் (TNHB) குடியிருப்புகளும், அண்ணா நகர், கே.கே. நகர், தில்லை நகர், வள்ளலார் நகர் போன்ற நகர்ப்புற பொதுக் குடியிருப்புகளும், அதைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் உருவான பெரியார் நினைவு சமத்துவபுரங்களும் ஊர்-சேரி தீண்டாமைக்குக் குழிபறிக்கும் ஆக மிகச் சிறந்த திட்டங்கள்.

இவை பல்வேறுபட்ட சாதிகளைச் சேர்ந்த மனிதர்களை அக்கம்பக்கமாக வாழ வைத்தன! அதன் மூலம், ஊர்-சேரிகளில் நிலவிய சாதியப் பகைமை ஓரங்கட்டப்பட்டு, வர்க்கத் தோழமையும் சகோதரத்துவமும் வளர்வதற்கு அவை வித்திட்டன!

ஆனால், 1990-களுக்குப் பிறகு புகுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தனியார்மயமாக்கல் மூலமாகப் பொதுத்துறைகளை நலிவடையச் செய்து, டவுன்ஷிப் போன்ற முற்போக்குக் குடியிருப்புகளை ஒன்றிய ஆட்சியாளர்கள் ஒழித்துக் கட்டினார்கள்!

கலைஞருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளும், சமத்துவபுரங்களும் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டன.

நான் எச்சரிக்கிறேன்...

பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பதற்கான வர்க்கப் போராட்டம் என்பது, டவுன்ஷிப் போன்ற பொதுக் குடியிருப்புகளைப் பாதுகாப்பதற்கான, அதாவது சனாதனத்தை ஒழிப்பதற்கான போராட்டத்துடன் இணைந்தது! வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் போன்ற பொதுக் குடியிருப்புகளை விரிவுபடுத்தி, அங்கு அரசு மேம்பட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும். பெருமளவில் மக்களை அங்கே குடியேறுவதற்கு ஈர்க்க வேண்டும்.

அதே நேரத்தில், வாழ்விடத் தீண்டாமையை ஒழிக்கும் உத்தியாக, சாதியப் பிரிவினையைத் தக்கவைக்கும் ஊர்-சேரி கட்டமைப்புகளுக்கான வசதிகளை அரசு மெல்ல மெல்லக் குறைக்க வேண்டும். மக்களை நவீனச் சமத்துவக் குடியிருப்புகளை நோக்கி நகர்த்த இது உதவும்!

சாதியற்றோர் பட்டியல்

இறுதியாக, சனாதனத்தின் தத்துவார்த்தக் காலை ஒடிக்க வேண்டும். எப்படி ஒடிப்பது என்பதற்கான ஒரு மாற்றுத் திட்டத்தை இந்த மேடையில் நான் முன்வைக்கிறேன்!

சாதி மறுப்புத் திருமணம் செய்வோரையும், சாதியைத் துறப்போரையும் ஒருங்கிணைத்து "சாதியற்றோர் தனிப் பட்டியல்" (No Caste Category) உருவாக்கப்பட வேண்டும்! ஏற்கனவே தெலுங்கானாவில் சாதியற்றோர் பட்டியல் உள்ளது. சுமார் 3.4 சதவீதம் பேர் அங்கே சாதியற்றோர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். சாதியற்றோர் பட்டியலுக்குள் வருபவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்!

மக்கள்தொகைக்கு ஏற்ப சாதிவாரி விகிதாச்சார இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு, சாதியை ஒழிக்க முற்படுவோருக்குப் பயன்படும் வகையில் இந்தச் 'சாதியற்றோர் தனிப் பட்டியல்' மற்றும் அவர்களுக்கான தனிப் பங்கீட்டை நாம் கொண்டு வர வேண்டும்! அதற்கு முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

தோழர்களே! நம் இல்லங்களில் புரோகிதரைத் தவிர்ப்பதும், ஊர்-சேரி கட்டமைப்புகளை அழித்துப் பொதுக் குடியிருப்புகளை உருவாக்குவதும், சாதியற்றோர் தனிப் பட்டியலைக் கொண்டு வருவதும் அவ்வளவு எளிதல்ல... 

ஆனால், நீண்டகால நோக்கில், சனாதன ஒழிப்பை நோக்கிய நமது பயணத்தை நாம் இன்றிலிருந்தே, இந்தத் திருச்சி மண்ணிலிருந்தே தொடங்க வேண்டும்! இதையே கொள்கை முழக்கங்களாக முன்வைத்து, இன்றைய சமூக நலத்துறை அமைச்சர் காதுகளுக்கும் எட்டச் செய்வோம்!

முடியும் தோழர்களே... நம்மால் முடியும்! சனாதனத்தின் வேர்களை அன்றைய சித்தர்களைப் போல, மகாத்மா ஜோதிராவ் புலேவைப் போல, வள்ளலாரைப் போல, அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியாரைப் போல, முத்தமிழறிஞர் கலைஞரைப் போல நம்மால் வெட்டி வீழ்த்த முடியும்! இப்போது நம் கைகளில் கிடைக்கிற ஆயுதங்கள் சிறு சிறு கத்திகளாக இருந்தாலும் அவற்றைக் கையில் எடுப்போம்! அவை கூர்தீட்டப்பட்டு, கோடரிகளாக மாறும்போது... இந்தச் சனாதனம் வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்தப்படுவது நிச்சயம்!

கடைசியாக ஒரு செய்தியை மட்டும் சொல்லி என் உரையை முடிக்கிறேன் தோழர்களே... இங்கே வேங்கைவயல் போன்ற கொடூர தீண்டாமைகளைப் பொதுக் குடியிருப்புகளால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும்! அதேபோல, 1990-களில் உருவெடுத்த சாதியவாதக் கட்சிகளை மக்கள் ஓரம் ஒதுக்கி வைக்க வேண்டும்! 

மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகளின் பின்னால் மக்கள் திரளும்போதுதான், அகமண முறைக்கு மாற்றாகச் சமூகத்தில் சுமுகமான முறையில் புறமண முறை அதிகரிக்கும்!
அப்படி மக்கள் திரளும்போதுதான்... இளவரசன் - திவ்யா காலத்து சாதிவெறி நச்சுப் பாசறையான நாயக்கன்கொட்டாய் போல் அல்லாமல், தோழர்கள் அப்பு - பாலன் காலத்து வர்க்கப் புரட்சியின் சமத்துவ நாயக்கன்கொட்டாய்களாகத் தமிழ்நாடு மாறும்! 

அண்ணல் அம்பேத்கர் கண்ட சாதி ஒழிப்புச் கனவு நனவாவதும், இந்த நாட்டின் நக்சல்பாரிகளைப் பலப்படுத்துவதில்தான் உள்ளது என்பதைக் கூறி விடைபெறுகிறேன்!

வெல்லட்டும் சனாதன எதிர்ப்புப் போராட்டம்! நக்சல்பாரி நாடெங்கும் பரவட்டும்!
நன்றி, வணக்கம்!

முழு உரையைக் கேட்க: https://www.facebook.com/share/p/1Cipxng5sL/

பொன்.சேகர்
வழக்குரைஞர்

No comments:

Post a Comment