Wednesday, 27 May 2026

நட்பின் கோடை மழையில் துளிர்க்கும் 69.

கோடையும் குளிரும் போல, வன்மையும் மென்மையும் கலந்ததுதான் மனித வாழ்க்கை.  
கோடை வெயிலில் வாடி நிற்கும் மரங்களும் செடிகளும், திடீரெனப் பொழியும் ஒரு கோடை மழையில் புத்துயிர் பெற்று சிலிர்ப்பதைப் போல, நமது வாழ்க்கைப் பயணத்தின் அலுப்பையும் களைப்பையும் நண்பர்களின் வாழ்த்து மழை தென்றலாய் குளிர்விக்கிறது.

23.06.2018, பணி ஓய்வு விழாவின் போது..

இன்றுடன் 68 முடிந்து, 69-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறேன். மேகம் பொழியும் மழை இயற்கையை உயிர்ப்பிப்பதைப் போலவே, நண்பர்கள், தோழர்கள், உறவுகள் பொழியும் அன்பும் வாழ்த்துகளும் என் மனதை நனைத்து, புத்துணர்ச்சியூட்டுகின்றன.

இந்த இனிய நாளில், புலனம் வழியாகவும், பிற வழிகளிலும் வாழ்த்து மழை பொழிந்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பல நண்பர்கள் நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து, வாழ்த்துத் தேனை செவிகளில் பாய்ச்சினர். எழுதப்பட்ட வாழ்த்துச் சொற்கள் கண்கள் வழியே மனதிற்குள் இறங்கி நெஞ்சத்தை நெகிழ்விக்க சில நொடிகள் தாமதமாகலாம் என்பதாலோ என்னவோ, அவர்களின் குரலில் இருந்த அன்பு நேரடியாக இதயத்தைத் தொட்டது.

25.05.2026, திருச்சி

எனக்கு ஆன்மீகப் பற்று இல்லை என்பது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும். இருந்தாலும், பல நண்பர்கள் தாங்கள் நம்பும் இறைவனின் பேரருள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்தியிருக்கிறார்கள். அது அவர்களின் உள்ளார்ந்த அன்பின் அழகான வெளிப்பாடு.

மனிதர்களுக்கு இடையே வேற்றுமையை வளர்க்க சிலர் ஆன்மீகத்தைப் பயன்படுத்தும் இந்தக் காலத்தில், அதையே ஒரு நாத்திகனுக்கும் அன்பின் தூதாக அனுப்பி, தூய நட்புக்குப் பாலம் அமைக்கும் என் நண்பர்களின் பெருந்தன்மையை எண்ணி மனம் நெகிழ்கிறது.

என் வாழ்க்கைப் பயணத்தின் களைப்பைப் போக்கி, என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கும் நண்பர்கள், தோழர்கள், உறவுகள் அனைவருக்கும் இந்த 69-ஆம் அகவையின் தொடக்கத்தில் என் அன்பும், நெகிழ்ச்சியான நன்றிகளும்!

பொன். சேகர்
(ஊரான்@தமிழ்மணி)

No comments:

Post a Comment