அரசு என்ற இயந்திரத்தையும், அதன் நிரந்தர அதிகார வட்டாரங்களையும் புரிந்து கொள்ளாமல் ஆட்சியில் அமரும்போது என்ன நடக்கும் என்பதை இன்று நாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் பெரும்பாலும் கவனிக்காத ஒரு உண்மை என்னவென்றால், அதிகார மையங்களின் உள்ளே எப்போதும் சுற்றித் திரியும் நிரந்தர “காக்ரோச்சுகள்” இருக்கின்றன. புதிய எம்.எல்.ஏ-க்களையும், அமைச்சர்களையும் எப்படி தங்கள் வழிக்குக் கொண்டு வருவது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதனால்தான், “புதிய ஆட்சி” என்ற எதிர்பார்ப்பு உருவானாலும், பல நேரங்களில் நடப்பது “பழைய கள்ளு புதிய மொந்தை” என்பதுதான்.
காய்ந்த மாடு வரப்போரம் மேய்ந்தால் சேதாரம் குறைவு. ஆனால் அது கொல்லைக்குள் இறங்கிவிட்டால், நமக்கான கஞ்சிக்கே கேடு. அரசியலிலும் அதே நிலைதான். யார் எங்கே மேய வேண்டும், எவ்வளவு மேய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது பெரும்பாலும் இந்த நிரந்தர அதிகார அமைப்புகள்தான். மாடுகள் மேயப் போனாலும், கரை ஏற வேண்டுமென்றால் காக்ரோச்சுகளின் உதவி தேவைப்படும் அளவுக்கு அரசியல் அமைப்பு சிக்கலானதாக மாறியுள்ளது.
II
இதே முரண்பாடு கூட்டணி அரசியலிலும் வெளிப்படுகிறது.
“விளிம்பு நிலை சமூகத்தைச் சார்ந்தவர்கள் தலா இரண்டு இடங்களைப் பெற்றிருப்பது…” என்று ஒரு பேட்டியில் திருமாவளவன் கூறுகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கனவே:
பட்டியல் சாதியினருக்கான 46 இடங்கள்,
இஸ்லாமியர்களின் சுமார் 9 பிரதிநிதித்துவங்கள்
இருக்கின்றன. அப்படியானால் இவர்கள் எல்லோரும் “விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்” இல்லையா? அல்லது கூட்டணிக்குள் கிடைக்கும் பதவிகளே விளிம்பு நிலைப் பிரதிநிதித்துவமாக கருதப்படுகிறதா?
“உன்னால்தான் நான் தோற்றேன்…”
இதோடு மற்றொரு பெரிய கேள்வியும் இணைகிறது:
“என்னால்தான் நீ வென்றாய்…”
என்ற வசவுகள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தொடர்கின்றன. அப்படியானால் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகப் போட்டியிடட்டுமே? கூட்டணி எதற்கு?
மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்கு தருகிறார்களோ, அதற்கேற்ப சட்டப்பேரவையில் இடங்கள் கிடைக்க வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation) மட்டுமே இந்த அரசியல் வியாபாரங்களுக்கு நீண்டகால தீர்வாக அமைய முடியும்.
இல்லையெனில்:
தேர்தலுக்கு முன் கூட்டணி,
தேர்தலுக்குப் பிறகு குற்றச்சாட்டு,
பின்னால் பேரம்,
“பேக் டோர் எண்ட்ரி” அரசியல்,
முதுகில் குத்தும் துரோகங்கள்
இவை அனைத்தும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.
மக்கள் தரும் வாக்கு நேரடியாக அதிகாரமாக மாறும் அரசியல் அமைப்பு உருவானால்தான் கூட்டணி லாவணிகளும், அதிகார தரகர்களின் ஆட்டங்களும் குறையும்.
— பொன் சேகர்
.jpeg)
No comments:
Post a Comment