Thursday, 20 January 2022

இந்தியாவில் தேசிய இனச் சிக்கலும், தமிழ்த் தேச விடுதலையும்! தொடர்-9

சீமான், மணியரசன் போன்றவர்கள் ஒருபுறம் தமிழ்த்தேசியம் பேசினாலும், அவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமான ஒன்றல்ல. ஆனால் மார்க்சிய ‘ஒளியில்’ தமிழ்த் தேசியம் பேசும் மார்க்சிய-லெனினியர்களைப் புரிந்து கொள்வதுதான் சற்றே கடினமானது.

தமிழ்த் தேசியத்திற்கான அவசியத்தை, மார்க்சிய ஆசான்களை மேற்கோள் காட்டி இவர்கள் பேசினாலும், இந்தியாவில் ஒரு வலுவான ஒன்றுப்பட்ட மார்க்சிய-லெனினியக் கட்சியைக் கட்டுவதற்கான இயலாமையினாலும் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தினாலும்தான் இவர்கள் தமிழ்த்தேச விடுதலை அரசியலை முன்னெடுப்பதாகத் தோன்றுகிறது. கள  நிலவரத்தைவிட, தங்களின் சொந்த விருப்பமே இவர்களிடம் மேலோங்கி இருப்பதாகக் கருத முடிகிறது.

1917 சோசலிசப் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் மாருஷ்யர்கள், ஆர்மீனியர்கள், உக்ரேனியர்கள், லித்துவேனியர்கள், லாத்வியர்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடாக ருஷ்யா இருந்ததைப் போன்றுதான், தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், மராட்டியர்கள், பஞ்சாபிகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடாக இந்திய ஒன்றியம் உள்ளது. மொழி, பொருளாதாரம், கல்வி, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாருஷ்ய தேசிய இனத்தின் ஒடுக்குமுறை பிற தேசிய இனங்கள் மீது இருந்தபோதிலும், பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிக்காக செயல்பட்ட லெனினும், ஸ்டாலினும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து 1912-1914 வாக்கிலேயே மிகச்சரியான வழிகாட்டுதல்களைக் கொடுத்தனர்.

ருஷ்யாவில் தேசிய இன ஒடுக்குமுறை இருந்தபோதிலும், ஒவ்வொரு தேசிய இனமும், தேசிய இன விடுதலையை முன்னெடுக்க வேண்டும் என்று அன்றைய ருஷ்ய கம்யூனிஸ்டுகள் யாரும் அறைகூவல் விடுக்கவில்லை. மாறாக, தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த அதே வேளையில், ஒன்றுபட்ட ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை ஐய்க்கியப்படுத்தி, பலப்படுத்தி சோசலிசப் புரட்சியை நடத்திக் காட்டினர். தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமானது.

1990-களில் பாட்டாளி வர்க்க நலனைக் கைவிட்டுவிட்டு, முதலாளித்துவ நாடாக ருஷ்யா சிதைவுற்ற பிறகு, மாருஷ்ய தேசிய இனம் பிற தேசிய இனங்களை ஒடுக்கிய போது, அரசியல் சட்டம் வழங்கிய சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, அமைதியான முறையில் தேசிய இனங்கள் பல்வேறு தேசங்களாகப் பிரிந்து சென்று தங்களுக்கான தனித்தனி அரசுகளை ஏற்பத்திக் கொண்டன. இங்கே, தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான கோரிக்கையும் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை அல்ல; மாறாத அது அந்தந்த தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளித்துவத்தை மீட்டெடுத்த முதலாளிகளின் கோரிக்கையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நம் கண்முன்னே மிகச்சரியான ருஷ்ய அனுபவம் இருந்த போதும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையை முன்னெடுப்பதுதான் முதன்மையானது என சில மார்க்சிய-லெனினியர்கள் பேசுகின்றனர். தேசிய இனங்களின் விடுதலை பற்றிப் பேசும் இவர்களிடையே சில விசயங்களில் ஒத்த கருத்தும்கூட இல்லை.

இந்தி மொழி பேசும் 'இந்திப் பெருந்தேசிய' இனம்தான் பிற தேசிய இனங்களை ஒடுக்குவதாகச் சிலரும், இந்திய–பார்ப்பனிய ஏகாதிபத்தியம்தான் பிற தேசிய இனங்களை ஒடுக்குவதாகச் சிலரும் என வெவ்வேறு வகைகளில் தேசிய இன ஒடுக்கு முறையை விவரிக்கின்றனர்.

ஸ்டாலின் வகுத்தளித்த ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய வரையறை, ஒடுக்கும் ‘இந்திப் பெருந்தேசிய இனத்திற்குப்’ பொருந்துகிறதா என்பது பற்றியோ அல்லது லெனின் வகுத்தளித்த ஏகாதிபத்தியம் பற்றிய வரையறையின்படி, இந்திய-பார்ப்பனிய ‘ஏகாதிபத்தியம்’ பொருந்துகிறதா என்பது பற்றியோ தெளிவுபடுத்துவதற்கு இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும், தனித்தனி மொழி, ஆட்சிப்பகுதி, பொருளாதார வாழ்வு அதற்கேற்ற பண்பாடு நிலவுகிற அதே வேளையில் வருண-சாதி அடைப்படையிலான மாறுப்பட்ட மன இயல்பும் எல்லா தேசிய இனங்களுக்கிடையிலும் ஊடுருவியிருக்கிறது. இத்தகைய மன இயல்புக்கு அடிப்படையாக இருப்பது பார்ப்பன-சனாதன இந்து தர்மமாகும். தேசிய இன ஒடுக்கு முறைக்கு இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது காவி கும்பல்

தேசிய இனங்களின் தனித்தனி மொழிகளை நசுக்கி இந்தி–சமஸ்கிருத மொழித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மாட்டுக்கறி உணவுத் தீண்டாமை, ஜல்லிக்கட்டுத் தடை என பல்வேறு வடிவங்களில் தேசிய இனங்களின் மன இயல்பை-பண்பாடுகளை அழித்துவிட்டு, பார்ப்பன சனாதன ஒற்றை இந்துத்துவா பண்பாட்டை–மன இயல்பை இந்தியாவெங்கும் நிலைபெறச் செய்ய, தேசிய இனங்கள் மீதான ஒடுக்கு முறையை ஏவி வருகிறது ஆர்எஸ்எஸ் தலைமையிலான காவி கும்பல்.

பன்னாட்டு ஏகபோக நிதிமூலதனத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளும் தங்களின் சந்தையை விரிவாக்கம் செய்யவும், பலப்பத்தவும், சுரண்டலை விரிவு படுத்தவும் வேண்டி, தொழிலாளர் சட்டத் திருத்தம்-வேளாண் சட்டத் திருத்தம்-மின்சாரச் சட்டத் திருத்தம் உள்ளிட்ட எண்ணற்ற சட்டத் திருத்தங்கள், எட்டு வழிச் சாலை, ஜிஎஸ்டி-பண மதிப்பிழப்பு, ஒன்றிய அரசிடம் அதிகாரக் குவிப்பு என பல்வேறு வடிவங்களில் தேசிய இனங்களின் அதாவது மாநிலங்களின் ஆட்சிப் பகுதிகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அதிகாரங்களைப் பறித்துக் கொண்டு அவ்விடத்தில் ஒரே இந்தியா, அதற்கேற்ற ஒற்றைப் பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் மாநிலங்கள் அதாவது தேசிய இனங்கள் மீது மோடி துணையோடு கார்ப்பரேட் ஒடுக்கு முறையை ஏவி வருகின்றனர்.

அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் பார்ப்பன–பனியா பின்புலம் கொண்டவர்கள் என்பதால் இவர்கள் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா காவி சக்திகளோடு கைகோர்க்கின்றனர்.

காப்பரேட்டுகளும், காவிகளும் ஒரு வீரிய ஒட்டு ரகமாக ஒன்று சேர்ந்து கொண்டு, இந்திய உழைக்கும் மக்கள் மீதும், பல்வேறு தேசிய இனங்கள் மீதும் ஏவப்பட்டு வரும் ஒடுக்குமுறையை, அடக்கு முறையை, பாசிசத்தை வீழ்த்துவதுதான் உழைக்கும் மக்களின், பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் அனைத்து தேசிய இன மக்களின் ஒரே கடமையாகும். அதுதான் இன்றைய முதன்மைப் பிரச்சனையாகும். 

எனவே, பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்திய நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுத்த வேண்டும்.

நீண்ட கால நோக்கில், நிதிமூலதன ஆதிக்கக் கும்பலையும் வீழ்த்த வேண்டியிருப்பதால், அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம், தவிர்க்க முடியாமல்  சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டி உள்ளது.

தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதனாலேயே ஒவ்வொரு தேசிய இனமும் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தை உடனடியாக பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்க வேண்டும் என லெனினும், ஸ்டாலினும் எங்குமே வலியுறுத்தவில்லை. மாறாக, சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை வலியுறுத்துகிற அதே வேளையில், ஒவ்வொரு ஒடுக்கு முறைக்கும் எதிரானப் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கம் அன்றாடம் மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டினர்.

அனைத்து தேசிய இனங்களையும் சார்ந்த பாட்டாளி வர்க்க ஒருங்கிணைப்பை எந்த அளவுக்குப் பலப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அப்போராட்டத்தில் வெற்றியைக் காண முடியும். அதற்கான எடுப்பான உதாரணம்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்தப் போராட்டம்.

தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராக நுட்பமான, கரடு முரடான வழிகளிலும் போராட வேண்டும் என்பதை டெல்லிக்கு எதிரான ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு உணர்த்தி உள்ளது. தேசிய இன. ஒடுக்கு முறைக்கு எதிரானப் போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் கையில் எடுக்கத் தவறினால், புற்றீசல்கள் போல ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தோன்றிக் கொண்டேதான் இருப்பர்.

முற்றும்.

தமிழ்மணி

தொடர்புடைய நூல்கள்

1. மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்-ஸ்டாலின்

2. தேசிய இனங்களின் பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-லெனின்

3. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை-லெனின்

4. தேசீயக் கொள்கையும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசீயவாதமும்:  சில பிரச்சைனைகள்-லெனின்

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3



தேசம் என்றால் என்ன? தொடர்-5


தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7



No comments:

Post a Comment