Wednesday 26 January 2022

குடியரசு: கொண்டாட்ட நாளை போராட்ட நாளாக மாற்றிய மோடி!

மரபுவழி மன்னராட்சிப் பிடியிலிருந்தோ அல்லது அன்னிய நாட்டுக் காலனி ஆட்சிப் பிடியிலிருந்தோ ஒரு நாடு விடுதலை பெற்ற பிறகு, அது தனக்கான அரசியல் சட்டத்தை வகுத்துக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு மக்களுக்காக ஆளப்படும் ஆட்சியையே குடியாட்சி என்கிறோம்.

ஆனால் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு மக்களுக்கான அரசாகவாச் செயல்பட்டு வருகிறது? பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, சிறுபான்மை பார்ப்பன -பனியாக் கும்பலின் நலனுக்கான ஒரு அரசாகத்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அது குடியரசு நாள் கொண்டாட்டத்திலும் வெளிப்படுகிறது.

விடுதலைப் போரின் வீர மரபுகளை நினைவு கூறும் வகையில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், குயிலி உள்ளிட்ரோரைக் காட்சிப் படுத்திய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளில் வேல் பாய்ச்சி இருக்கிறது மோடி அரசு.

நாராயணகுரு அவர்களை காட்சிப்படுத்திய கேரள அரசின் ஊர்தியையும், சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைக் காட்சிப்படுத்திய மேற்கு வங்க அரசின் ஊர்தியையும் மோடி அரசு தடை செய்து, அம்மாநில மக்களின் உணர்வுகளை இழிவு படுத்தியிருக்கிறது.

இவை, சனாதனக் கும்பல் மேற்கொள்ளும் பண்பாட்டு வடிவிலான  தேசிய இன ஒடுக்கு முறையின் ஓர் அங்கமாகும்.

பொதுவாகவே விடுதலை நாளும், குடியரசு நாளும் ஒரு சடங்காகவே இதுநாள்வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மோடியின் மேற்கண்ட நடவடிக்கையால், இந்த ஆண்டு குடியரசு நாள் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு போராட்ட நாளாகவே மாறியிருக்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்திய மோடிக்கு எதிராக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வேலூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் மோடி அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங்  அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  தோழர் சேட்டு, துணைத் தலைவர் பாபு, தலைவர் செல்வம், ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இறுதியாக சங்க செயற்குழு உறுப்பினர் தோழர் வேல் முருகன் நன்றி உரை கூறினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.









தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்

No comments:

Post a Comment