Tuesday 18 January 2022

தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7

தொடக்க கால மனிதச் சமூகம் தனித்தனி இனக் குழுக்களாக வாழ்ந்த போது சொத்துடைமையாளர்கள் என தனியாக யாரும் இருந்ததில்லை. உடைமை வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என இருவேறு வர்க்கங்கள் இல்லை. அங்கே சுரண்டல் இல்லை; அதனால் வர்க்கப் போராட்டமும் இல்லை; இயற்கையை எதிர்த்தப் போராட்டத்தைத் தவிர!

அதன் பிறகு உருவான அடிமை உடைமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துச் சமூகங்களில் உடைமை வர்க்கமும் உழைக்கும் வர்க்கமும் இருந்ததால் வர்க்கங்களுக்கிடையில் ஓயாதப் போராட்டங்கள் தொடர்ந்தன, இன்றும் தொடர்கின்றன. 

சொத்துடைமைக்கும், சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து உருவானதுதான் பொதுவுடைமைச் சமூகம். இது வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு சமூக மாற்றமாகும். 

பழைய சமூகக் கட்டமைப்பை வீழ்த்தி விட்டுத்தான் புதிய சமூகமும் தோன்றுகிறது. அவ்வாறு தோன்றும் பொழுது பல புதிய சமூக சூழ்நிலைமைகளும் உருவாகின்றன. நிலவுடைமைச் சமூகம் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவம் வளர்ந்து வந்த 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான், மக்கள் தேசங்களாக இணைந்து அமையப் பெற்றனர். மேற்கு ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற தேசங்கள் உருவாகின. இவை தனித்தனியே ஒரே தேசமாகவும், ஒரே நாட்டரசாகவும் அமைந்தன. கிழக்கு ஐரோப்பாவில் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஆஸ்திரியா, ஹங்கேரி, ருஷ்யா போன்ற நாட்டரசுகள் தோன்றின.

நிலவுடைமைச் சமூகம் ஒழிக்கப்படாத, முதலாளித்துவ வளர்ச்சி பலவீனமாக உள்ள பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்தியா போன்ற கிழக்கிந்திய நாடுகளிலும், அரசுகளின் உருவாக்கம் இப்படித்தான் நடந்தேறின. ருஷ்யாவைப் போன்று இந்தியாவும் பல தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டரசாக உருவாகியது.


பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டரசில், பெரிய தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகள். தங்களுடைய சந்தை நலனுக்காக அரசியல், பொருளாதாரம், மொழி, கல்வி, மதம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பிற தேசிய இனங்களை ஒடுக்க முனைகின்றனர். 

முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில், முதலாளிகளே ஆளும் வர்க்கங்களாக அமைகின்றனர். முதலாளித்துவம் வளர்ந்து வருகின்ற அதே வேளையில் நிலவுடைமையும் நீடிக்கின்ற நாடுகளில் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஆளும் வர்க்கங்களாக அமைகின்றனர்.

எனவே, பல தேசிய இனங்கள் உள்ள ஒரு நாட்டில் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக, ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் தங்களுடைய சந்தை நலனுக்காகப் போராடுகின்றனர். தங்களது சொந்த நலனுக்கானப் போராட்டத்தை, நாடு/இன நலனுக்கானப் போராட்டமாக முன்வைப்பதால் அது மக்களின் ஆதரவைப் பெறுகிறது. இப்படித்தான் ஒரு தேசிய இயக்கம்-தேசியப் போராட்டம் தொடங்குகிறது.

தேசியப் போராட்டம் உண்மையில் முதலாளிகளின் நலனுக்காகவும், லாபத்திற்காகவும் நடைபெறும் முதலாளித்துவப் போராட்டமாக இருந்தாலும், ஒடுக்கும் தேசிய இனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இடம் விட்டு இடம் பெயர்தல், வாக்குரிமை, மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை மறுப்பதால் அவை தொழிலாளர்களையே அதிகம் பாதிக்கின்றன. இதனால் ஒடுக்கப்படும் தேசிய இனத்திலிருந்து அறிவாளிகள் வளர முடிவதில்லை. 

தேசிய ஒடுக்கு முறை, தொழிலாளி வர்க்க நலனுக்கு கேடு பயப்பதாகும். சமூக மற்றும் வர்க்கப் போராட்டத்திலிருந்து தொழிலாளர்களை திசை திருப்பி, தேசியப் பிரச்சனைகளிலும், முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பொதுவான பிரச்சனைகளிலும் கவனத்தைத் திசைதிருப்பி, பாட்டாளி வர்க்க நலனைத் திரித்துப் பொதுவான நலன் மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சூழ்நிலையை உருவாக்குகிறது.

அனைத்து தேசிய இனத் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு இது பெரிய தடையை ஏற்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக போலந்து தொழிலாளர்கள் முதலாளித்துவ தேசியவாதிகளின் (பிற்காலத்தில் லெக் வாலெசா) பிடியில் சிக்கிக் கொண்டதை யாவரும் அறிவோம்.

தமிழர் எதிர் கன்னடர் உள்ளிட்ட பிற தேசிய இனத்தவர், மராட்டியர் எதிர் பிற தேசிய இனத்தவர் என ஒன்றிற்கு எதிராய் ஒன்றைத் தூண்டிவிட்டு வன்முறை, படுகொலைக்கு வித்திடுகிறது தேசியப் பிரச்சனை. தொழிலாளர்களைப் பிளவு படுத்தும் இத்தகையப் போக்கு பாட்டாளி வர்க்க நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும். 

தொழிலாளி வர்க்கம் அனைத்து தேசங்களின் படையாக உருவாக வேண்டியிருப்பதால், தேசிய இன அடக்குமுறைக்கு எதிராக, நுட்பமான, கரடு முரடான வழிகளிலும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும். தேசங்களை ஒன்றுக்கொன்று எதிராகத் தூண்டிவிடும் கொள்கையை எதிர்த்து, அனைத்து வடிவங்களிலும் போராட வேண்டும்.

மேற்கண்ட நிலைமைகளைக் கணக்கில் கொண்டுதான், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் பிரகடனம் செய்கின்றனர்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3



தேசம் என்றால் என்ன? தொடர்-5


No comments:

Post a Comment