Monday 17 January 2022

இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கலாமா? தொடர்-6

முடியாட்சிகளுக்கு (dynasty) முடிவு கட்டப்பட்டு, குடியாட்சிகள் (democracy) மலர்ந்த பிறகு, மக்களிடையே புழக்கத்தில் உள்ள நாடு (country), மாநிலம் (state), பிராந்தியம் (province), தேசம் (nation), ஒன்றியம் (union), அரசு (state), அரசாங்கம் (government)  ஆகிய பல்வேறு பெயர்கள், எதை தேசம் என்று அழைப்பது, எதை நாடு என்று அழைப்பது என்பதில்  குழப்பத்தை ஏற்படுத்தத்தானே செய்கின்றன. இந்தியாவை நாடு என்று அழைப்பதா, தேசம் என்று அழைப்பதா, நடுவண் (மத்திய) அரசு என்று அழைப்பதா? என்ற குழப்பம் நிலவிய போது,  இனி ஒன்றிய அரசு (union government) என்றே அழைக்கலாம் என தமிழக மக்கள் வழிகாட்டியதால் பாஜக-வினர் கடும்  கோபம் கொண்டார்களே ஒழிய நமக்கு ஓரளவுக்குக் குழப்பம் தீரத்தானே செய்தது. 

தொழிற் தகராறு தொடர்பாக நடுவண் அரசுக்கு எதிராக ஒருவர் வழக்குத் தொடுக்க வேண்டுமானால், “Union of india represented by director, ministry of labour…”  என்றுதான் தொடுக்க முடியுமே ஒழிய “Central government or government of india represented by director ministry of labour…” என்று தொடுக்க முடியாது.  மத்திய அரசு என்பது பேச்சு வழக்கு, ஒன்றிய அரசு என்பது சட்ட ரீதியானது (Article 300). ஒன்றிய அரசு என்று தமிழர்கள் அழைப்பதில் ஒரு தேசிய இன உரிமை இழையோடுகிறது அல்லவா? அதுதான் பாஜக-வினரை கோபத்திற்குள்ளாக்குகிறது.

அமெரிக்காவும், இந்தியாவும் பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய நாடுகள்தான் என்றாலும் அவை தன்மையில் வேறுபட்டவை. அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் தேசியத் தன்மை-அதாவது தேசிய இனத் தன்மை கொண்டவை அல்ல. ஆனால் இந்தியாவில் உள்ள ஆகப் பெரும்பாலான மாநிலங்கள் முந்தைய ருஷ்யாவைப் போல, தேசிய இனத் தன்மை கொண்டவை.

வெவ்வேறு மொழி, பண்பாடு உள்ளிட்ட தன்மைகளைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியதாக ருஷ்யா இருந்ததால்தான் அது சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) என அழைக்கப்பட்டது. இந்தியாவும் அது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் இந்திய ஒன்றியம் என்று அழைப்பதுதான் சாலப் பொருந்தும். ஆனால் அமெரிக்க மாநிலங்கள் அத்தகைய தேசிய இனத் தன்மைகளைக் கொண்டிராததால் அதை ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) என்கிறோம்.

நியாயமாகப் பார்த்தால் இந்தியாவில் உள்ள தேசிய இனத் தன்மை கொண்ட தமிழகம், கேரளம், கர்நாடகம், வங்கம் உள்ளிட்டவைகளை, மாநிலம் என்று அழைப்பதைவிட தேசம் (nation) என்று அழைப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3




No comments:

Post a Comment