Friday 14 January 2022

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3

ஈழத் தமிழர்கள் மீதான சிங்களப் பேரின ஒடுக்குமுறைக்கு எதிராக 1956 வாக்கில் அமைதியாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம்,  1983  முதல் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து, 2009-ல் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம். இதே காலகட்டத்தில், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது அமைதி காத்த தமிழ்த் தேசியம் பேசும் பல அமைப்புகள் ஈழவிடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு சுயநிர்ணய உரிமை குறித்தும், தேசிய விடுதலை குறித்தும் அதிகமாகப் பேச தொடங்கின.

CPI, CPI(M) ஆகிய இரு பொதுவுடைமைக் கட்சிகளும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்பதில்லை, தனியாகப் பிரிந்து செல்வதையும் ஏற்பதில்லை. 

CPI(M)-லிருந்து வெளியேறி ‘தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி’ கண்ட மணியரசன், பொதுவுடமையைக் கைவிட்டுவிட்டு ‘தமிழ்த் தேசியப் பேரியக்கத்தில்’ பவனி வருகிறார். 

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா-லெ), தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி என்ற பெயரில் செயல்பட்டு வந்த கார்முகில் குழுவினர், ‘இந்தியாவை’க் கைவிட்டுவிட்டு தமிழ்த்தேச விடுதலையை முன்வைத்து ‘தமிழ்நாடு மார்க்சிய லெனினியக்  கட்சி’யாகத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர்.

மக்கள் யுத்தக் குழுவிலிருந்து வெளியேறிய புலவர் கலியபெருமாள், தமிழரசன் ஆகியோர் தமிழ்த்தேச விடுதலையை முன்வைத்தனர். தமிழரசன் தமிழ்நாடு விடுதலைப் படையை உருவாக்கினார்.

AMK தலைமையிலான போல்ஷ்விக் பிரிவினரும், மாவோயிஸ்ட் பிரிவினரும் தனி ஈழத்தையும் விடுதலைப் புலிகளையும் நேரடியாக ஆதரித்தனர்.

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்த அதேவேளையில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ), மாநில அமைப்புக் கமிட்டி விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை,

இவை தவிர, தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பொழிலன் தலைமையிலான தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, ஆழி செந்தில்நாதனின் தன்னாட்சித் தமிழகம், திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம், திருமொழியின் தமிழ்தேச இறையாண்மை, துரைசிங்கவேலின் மக்கள் ஜனநாயகக் குடியரசு கட்சி, அரங்க குணசேகரனின் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் உள்ளிட்ட சில பல அமைப்புகள் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைக்கின்றனர். மேற்கண்ட அமைப்புகளில், பெரும்பாலான அமைப்புகள் தொடக்க காலம் முதலே தேசிய இனங்களின் உரிமை குறித்து பேசி வருகின்றனர். திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம் (2009, மே 17) மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி (2010, மே 18) ஆகிய இரண்டும் ஈழப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு தொடங்கப்பட்டவைகளாகும்.

பெரியார் காலம் தொடங்கி இன்றுவரை பெரியார் இயக்கங்கள் தனி ஈழத்திற்கான போராட்டத்தை ஆதரிக்கின்ற அதே வேளையில், தமிழகத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக்கான கோரிக்கையை நேரடியாக முன் வைக்கவில்லை என்றாலும் தமிழர் நலன் காக்கக் குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1

திராவிடம்! தொடர் - 2

No comments:

Post a Comment