தேசம் என்பது குறிப்பிட்ட மக்களைக் கொண்ட ஒரு சமுதாயமாகும். இன அடிப்படையிலோ அல்லது குடி அடிப்படையிலோ அமைந்ததல்ல; மாறாக வரலாற்று ரீதியாக அமையப் பெற்ற நிலையான மக்கள் சமுதாயமாகும்.
அலெக்சாண்டர் போன்றவர்களின் பேரரசுகள், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, சோழப் பேரரசு, விஜயநகரப் பேரரசு, மைசூர் பேரரசு போன்ற பேரரசுகள் கூட பல்வேறு இனங்கள், பழங்குடிகளைக் கொண்டு வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற மக்கள் சமூதாயமாக இருந்த போதிலும், இவைகள் எந்தவிதப் பிடிப்புமின்றி பலவந்தமாக சேர்க்கப்பட்ட பல்வேறு குழுக்களின் சேர்க்கையாக இருந்தன. அரசனின் வெற்றி-தோல்வியைப் பொறுத்து மாறக் கூடியதால் இவை நிலையான மக்கள் சமூகமாக அமையப் பெறாததால், இவைகளை தேசங்களாகக் கருத முடியாது. அதேபோல, ஒவ்வொரு நிலையான சமூகமும் தேசமாகிவிட முடியாது.
பொது மொழி
ஒரு பொது மொழி இல்லாத சமூகம் ஒரு தேசம் ஆகிவிட முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை அதற்கென ஒரு பொது மொழி இல்லாத காரணத்தால் அதை தேசம் என்று கருத முடியாது; மாறாக மத்தியில் ஒரு அரசு இருப்பதால் அதை ‘அரசு சமூகம்’ என்று வேண்டுமானால் அழைக்கலாம். இந்தியாவில் உள்ள தமிழகம், கேரளம், கர்நாடகம், ஒடிசா, வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கென்று தனித்தனி மொழி ஒன்றைக் கொண்டிருப்பதால் இவைகளை தனித்தனி தேசங்கள் என்று அழைக்கலாம். இங்கே குறிப்பிடப்படும் மொழி என்பது தமிழ், மலையாளம் உள்ளிட்ட மக்களின் பேச்சு மொழியே ஒழிய அரசு பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், இந்தி மொழிகளை அல்ல. எனவே பொது மொழி ஒரு தேசத்தின் முதன்மை அம்சமாகும்.
பொதுவானப் பிரதேசம்
பல்வேறு மொழிகளைப் பேசக் கூடிய ஒரு நாட்டை தேசம் என்று கருத முடியாது. எனவே, இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுவதால் இந்தியா ஒரு தேசமாகிவிடாது. தலைமுறை தலைமுறையாக, நீண்ட காலம் ஒரே பகுதியில் ஒன்றாகச் சேர்ந்து வாழ ஒரு பொது மொழி அவசியம். ஒரே மொழியைப் பேசக் கூடியவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தால் அவர்கள் தனித்தனி தேசங்களாகவே அறியப்படுவர். இரண்டு தேசங்கள் ஒரு பொது மொழியைப் பேசலாம் (பிரிட்டன்-அயர்லாந்து). ஆனால், ஒரே மொழியைப் பேசும் பிரிட்டனும் அயர்லாந்தும் வேறுவேறு பிரதேசங்களாக இருப்பதால் அவை தனித்தனி தேசங்களாகவே அறியப்படுகின்றன. எனவே, பொதுவான பிரதேசம் என்பது ஒரு தேசத்தின் மற்றொரு முதன்மை அம்சமாகும்.
பொருளாதார வாழ்வு-ஒன்றிணைப்பு
ஒரு பொது மொழி, ஒரு பொதுவானப் பிரதேசம் மட்டும் இருந்து விட்டால் அவை தேசம் ஆகிவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு பொது மொழியைப் பேசும் மக்களிடையே பொருளாதார பிணைப்பு இருந்தால்தான் அதை தேசம் எனக் கருத முடியும்.
1947-க்கு முன்பு பல்வேறு சிறு சிறு அரசுகளாக, தொடர்பற்று இருந்த தமிழக நிலப்பரப்பில் ஒரு பொதுவான பொருளாதார பிணைப்பு இருந்ததில்லை. சிற்றரசுகளுக்கிடையே ஒருவருக்கொருவர் போர், கொள்ளை காரணமாக ஒருங்கிணைப்பு சீர்குலைந்து இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயக் காலனி ஆட்சி ஏற்படுத்திய முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக, சிற்றரசுகள் சிதைந்து தமிழகம் ஒரு தேசமாக உருவெடுத்தது. எனவே, பொதுவான பொருளாதார வாழ்வு மற்றும் பொருளாதார ஒன்றிணைப்பு ஒரு தேசத்தின் மற்றுமொரு முதன்மை அம்சமாகும்.
பொதுவான மன இயல்பு மற்றும் பண்பாடு
மக்களின் குறிப்பிட்ட ஒழுக்க நிலைப் பண்பு, பண்பாடு, மன இயல்பு ஒரு தேசத்தை வரையறுப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
இங்கிலாந்து, அயர்லாந்து தேசத்தவர் ஒரே மொழியைப் பேசினாலும் தமிழகம், தமிழீழம் தேசத்தவர் ஒரே மொழியைப் பேசினாலும் இவர்கள் தனித்தனி தேசத்தவர். இவர்களின் பண்பாடு, மன இயல்பு வேறு வேறானவை. இந்த மன இயல்பும் காலத்திற்கு ஏற்ப மாறக் கூடியது. எனவே, பொதுவான பண்பாட்டைத் தரக்கூடிய ஒரு பொதுவான மன இயல்பு ஒரு தேசத்தின் மற்றுமொரு முதன்மை அம்சமாகும்.
தொகுப்பாக,
“ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்” (மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும் – ஸ்டாலின்).
மேலே கூறியவற்றில், ஒரு அம்சம் குறைந்தாலும் அதை ஒரு தேசமாகக் கருத முடியாது; அனைத்து அம்சங்களும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து இருப்பதே ஒரு தேசத்திற்கான அடிப்படையாகும்.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment