Thursday, 13 January 2022

திராவிடம்! தொடர் - 2

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனுதர்ம சாஸ்திரத்திலும் (கி.மு 150-100), கி.பி 4-5 ஆம் நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படும் புராணங்களிலும் திராவிடம் குறித்த குறிப்புகள் காணப்பட்ட போதிலும், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பரங்கியன்’ கால்டுவெல்லும், இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியார் உள்ளிட்ட கன்னட-தெலுங்கு-மலையாளிகளும்தான் தமிழர்களிடையே திராவிடத்தைத் திணித்தார்கள் என்று தம்பிகள் பிதற்றி வருகின்றனர். 

வேத காலம் தொட்டு இன்றைய மோடி காலம்வரை-இடையில் மெளரியர்,  களப்பிரர் உள்ளிட்ட ஒரு சில சமண, பெளத்த ஆட்சிகளைத் தவிர-சனாதன தர்மமே இந்தியப் புவிப்பரப்பில் கோலோச்சி வருகிறது. முகலாயர் மற்றும் பரங்கியர் ஆட்சிக் காலத்திலும்கூட சனாதன ஆதிக்கத்திற்குப் பெரிய அளவில் ஆபத்து ஏதும் நேர்ந்துவிடவில்லை. பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டு அவர்களுக்குக் கல்வியும், வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டே வந்துள்ளனர். 

எடப்பாடி போன்று, பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தவர்கள் மட்டுமே ஆட்சி நடத்த அனுமதிக்கப்பட்டனர். வேதங்களை ஏற்க மறுத்த, பார்ப்பனர் சொல்படி நடக்க மறுத்த பெளண்டரம், ஒளண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் ஆகிய நாடுகளை ஆட்சி செய்த மன்னர்கள்கூட சத்ரிய நிலையிலிருந்து சூத்திர நிலைக்குத் தரம் இறக்கப்பட்டனர் அல்லது காடுகளுக்கு விரட்டப்பட்டனர் அல்லது கொன்றொழிக்கப்பட்டனர். (மனு: 7-40, 7-41, 10-43, 10-44). அவ்வாறு அழிக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட மன்னர்கள் ஹரிவம்ச நூலில் வரும் வேணன் என்கிற வீணா, விஷ்ணு புராணத்தில் வரும் நிமி மற்றும் நகுஷன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

திராவிட நாட்டில் இருந்த வேங்கட மலையை பலராமர் தரிசித்ததாக பாகவதம் கூறுகிறது (கி.பி 4-5 ஆம் நூற்றாண்டு புராணம்).

திராவிடம் என்கிற நாடு, விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென் இந்தியாவைக் குறிப்பதாகும் என்பதை அம்பேத்கர் தெளிவு படுத்துகிறார். (தொகுதி-10)  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் திராவிட நாட்டில் பேசப்பட்டதால்தான்  அந்த நாட்டைக் குறிக்கும் வகையில் அம்மொழிகளைத் திராவிட மொழிகள் என்கின்றனர். 

திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது சமஸ்கிருதச் சொல்,  பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என திரித்துப் பேசுவதன் மூலம் வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்கிற திராவிடக் கருத்தியலை நிராகரித்து பார்ப்பனியத்திற்குச் சேவை செய்ய முயல்கின்றனர் சீமானும், மணியரசனும்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவு

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1



No comments:

Post a Comment