1968, டிசம்பர் 25; அரைபடி நெல் கூலி கூடுதலாகக் கேட்டதற்காகவா 44 கூலி ஏழை விவசாயிகளை குடிசைக்குள் எரித்துக் கொலை செய்தார்கள் பண்ணையார்கள்? இது நம்பும்படியாகவா இருக்கிறது? அரை படி நெல் என்பது பண்ணையார்களுக்கு பெரிய சுமை அல்லவே! கூலியை உயர்த்திக் கொடுத்துவிட்டு அதற்கேற்ப கூடுதலாக வேலை வாங்கிக் கொள்ள பண்ணையார்களால் முடியும். பிறகு ஏன் 44 பேரை உயிரோடு எரித்தார்கள்?
தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை கிட்டத்தட்ட
அனைத்து பட்டியலினச் சாதி மக்களும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகள்தான். இவர்கள் கூலிகளாக இருப்பது மட்டுமல்ல சாதியப் படிநிலையில் ஆக கீழ்மட்டத்தில் இருக்கும் சேரி மக்கள். இவர்கள் கூலி வேலை செய்யும் நிலங்கள் சாதியப் படிநிலையில் மேல்மட்டத்தில் இருக்கும் மூப்பனார், நாயுடு போன்ற ஆதிக்கச்
சாதியினருக்குச் சொந்தமானவை. நிலவுடைமையாளர்களாக இருப்பது மட்டுமன்றி இவர்கள் உயர்சாதியினர் என்பதனால்
ஆண்டைகள் என்றே சேரி மக்களால் அழைக்கப்பட்டனர்.
நேற்றுவரை கைகட்டி, வாய் பொத்தி, கொடுப்பதை
வாங்கிக்கொண்டு கூனிக்குறுகி, வாழ்ந்த சேரி மக்கள் இன்று சங்கம் வைத்து, செங்கொடி ஏந்தி, நெஞ்சை நிமிர்த்தி, முழக்கமிட்டு கேட்டதுதான் பண்ணையாளர்களுக்குப் பிரச்சனை.
சங்கம் எதற்கு? செங்கொடி எதற்கு? கூனிக்குறுகி கேட்க வேண்டியவன்
நெஞ்சை நிமிர்த்தி கேட்பது ஆண்ட சாதிக்கு எதிரானதல்லவா? இப்படித்தான் ஆதிக்கசாதி பண்ணையார்கள் விவசாயிகளின் கூலி உயர்வுப் போராட்டத்தை பார்த்தார்கள். பண்ணை ஆதிக்கமும் சனாதன ஆதிக்கமும் சரிவதை பண்ணையார்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. விளைவு கோபாலகிருஷ்ண 'நாயுடு' தலைமையில் கீழ்வெண்மணி படுகொலை.
00000
ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் ஆட்சியதிகாரத்தைக்
கைப்பற்றிய பிறகு, ஒரு பக்கம் நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து
தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வருகிறது; மற்றொரு பக்கம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு என்கிற சனாதன தர்ம இந்து இராஷ்டிரத்தைக்
கட்டமைக்க முயன்று வருகிறது.
மேற்கண்ட இரண்டையும் எதிர்ப்பவர்களை
ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கு ஏற்ப, சட்டங்களைத்
திருத்தி பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது. இதைத்தான் கார்ப்ரேட் காவி பாசிசம் என்கிறோம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றவில்லை என்றால் இந்தியா ஈராயிரம்
ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படும். எனவே, சுரண்டப்படும் மக்கள், ஒடுக்கப்படும்
மக்கள் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரும் சனாதன சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியது காலத்தின்
கட்டாயம். இதை உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பில் 26.12.2021 அன்று மாலை ஆம்பூரில்
வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
00000
மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்தி
அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியக் குடியரசுக் கட்சி ஆம்பூர் நகரத் தலைவர் தோழர் சுரேந்திரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர்
சந்திரன் அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில துணைத் தலைவர் தோழர் ஏகாம்பரம்
அவர்களும்,
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாவட்டச்
செயலாளர் தோழர் இராஜேந்திரன் அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில சான்றோர் அணி கவிஞர் திவாகரன் அவர்களும், கவிஞர் யாழன் ஆதி அவர்களும் உரையாற்றினர்.
கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி – மக்கள் முன்னணியின் அவசியம் குறித்து மக்கள் அதிகாரம் மாநில
செயற்குழு உறுப்பினர் தோழர் நாகராஜன்
அவர்கள் இறுதியாக எழுச்சியுரை ஆற்றினார்.
இடையிடையே மக்கள்
கலை இலக்கியக்
கழக வேலூர் மாவட்ட கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்கள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழ வைத்தன. ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன்
அவர்கள் நன்றியுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. சுமார் 60 பேர்
கலந்து கொண்ட கருத்தரங்கம் கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக அனைவரும்
ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஆம்பூரில் விதைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.