Monday 27 September 2021

வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக வேலூரில் ஆர்ப்பாட்டம்!

  • விளைபொருள் ஊக்குவிப்புச் சட்டம் என்று சொல்லக்கூடிய விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகச் சட்டம்.
  • ஒப்பந்தச் சாகுபடிச் சட்டம் என்று சொல்லக்கூடிய விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம்.
  • அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்
ஆகிய மூன்று வேளாண் சட்டத் திருத்தங்களை 05.05.2020 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது மோடி தலைமையிலான சங்பரிவார பாஜக அரசு.

வேளாண் பொருள்களை இனி அரசு கொள்முதல் செய்வதை கைவிடுவதற்கும், விவசாயிகளை ஒப்பந்த முறையில் சிக்க வைத்து அவர்களை பெரும் முதலாளிகளுக்கு சேவை செய்யும் அடிமைகளாக மாற்றவும், எண்ணெய்-பருப்பு உள்ளிட்ட சில முக்கியமான வேளாண் பொருட்களை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலிலிருந்து நீக்கி பதுக்கலுக்கும் விலைவாசி ஏற்றத்திற்கும் வழி வகை செய்யும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக விவசாயிகள் விடாப்பிடியாகப் போராடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், தமிழக ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் 27.09.2021 நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியலுக்கு அறைகூவல் விடுத்திருந்தது.

இந்திய பொதுவுடமைக் கட்சி, இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), திராவிட முன்னேற்ற கழகம், காங்கிரஸ், மக்கள் அதிகாரம், CITU, AITUC, HMS, தொமுச, INTUC, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள், இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் இப்போராட்டத்தில் நேரடியாக பங்கேற்றன.

இராமச்சந்திரன் (CITU), சிம்புதேவன் (AITUC), சுப்ரமணி (LPF), திருப்பதி (HMS), சேகர் (INTUC) ஆகியோர் தலைமையில் வேலூர் தலைமை அஞ்சலகம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று, வேளாண்மை சட்டங்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான வேலூர் மாநகர "தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தைச்" சேர்ந்த தரைக்கடை வியாபாரிகள், ஆட்டோ தொழிலாளர்கள், தோழர்கள் இப்போராட்டத்தில் திரளாகப் பங்கேற்றனர்.







தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்

No comments:

Post a Comment