Showing posts with label socialist revolution. Show all posts
Showing posts with label socialist revolution. Show all posts

Sunday, 7 November 2021

வேலூரில் நவம்பர் புரட்சி விழா!

விலைவாசி உயர்வு, அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியாருக்கு, ஆலை மூடல்-ஆட்குறைப்பு, வேலையின்மை,  சுற்றுச்சூழல்-சுகாதாரக் கேடுகள், காசு உள்ளவனுக்கே கல்வி மற்றும் மருத்துவம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வரதட்சணை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதி ரீதியிலான வன்கொடுமைகள், மத-மொழி சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என மோடி ஆட்சிக் காலத்தில் இந்திய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்னல்களிலிருந்து தங்களுக்கு விடுதலை  கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

ருஷ்ய மக்களின் துன்ப துயரங்களுக்கு முடிவுகட்டி இம்மண்ணில் ஒரு பொன்னுலகைப் படைத்த 1917 நவம்பர் 7 சோசலிசப் புரட்சியைப் போன்றதொரு புரட்சியை நோக்கி பயணிப்பதன் மூலமாகத்தான் மக்கள் தங்களது துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.

சோசலிசம்தான் உழைக்கும் மக்களுக்கான ஒரே மாற்று என்றாலும்கூட கூட, இன்றைய சூழலில் இந்திய மக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் கார்ப்பரேட்-காவி பாசிச மோடி கும்பலை வீழ்த்துவதே மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது. அதற்காக, மோடிக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அறிவுத்துறையினர் ஓர் அணியில் சேர வேண்டும். இல்லையேல் காவிகள் நம்மை கபளீகரம் செய்வதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆம்! இன்றைய தேவை மோடிக்கு எதிரான ஒரு கூட்டமைப்பு. சாத்தியப்பட்ட எல்லா முனைகளிலும் தாக்குதல் நடத்தி மோடியை வீழ்த்துவதுதான் இன்றைய உடனடிக் கடமை. அதற்கான விதையை ஊன்றும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள்  நவம்பர் புரட்சி விழாவை தமிழகமெங்கும் கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக வேலூரில் நடைபெற்ற நவம்பர் புரட்சி விழா குறித்த ஒரு தொகுப்பு.

07.11.2021 மாலை, வேலூர் மாநகரில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி தலைமையில் நவம்பர் புரட்சி விழா எழுச்சியோடு நடைபெற்றது.

மக்களின் இன்றைய அவல நிலை குறித்து மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் இராவணன் அவர்களும், சங்கமாய் சேருவதன் அவசியம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் செல்வம் மற்றும் சேட்டு ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அடிமைத்தனம் மற்றும் மூட நம்பிக்கைகளை கைவிட்டு சமூக விடுதலைக்கான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து வழக்கறிஞர் பாலு அவர்களும், மீண்டும் ஒரு முறை பாஜக ஆட்சிக்கு வருமேயானால் 2025 ல், ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழாவின் போது இந்து ராஷ்டிரத்தை அறிவிக்கக் கூடும் என்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை ஒரே லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலா அவர்களும், சோசலிசத்தை நேசித்த விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் வரலாற்றை பதிவு செய்து தோழர் விசு அவர்களும், நேசம் தலைப்பில் தோழர் இரமணி அவர்களும் உரையாற்றினர்.

அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளில் நலனைக் காக்கவும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவவும் மேற்கொள்ளப்படும் மோடி அரசின் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை முறியடிக்க மோடி கும்பலுக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் ஓரணியில் ஐக்கிய முன்னணியாய் அணிசேர்வதன் அவசியத்தை வலியுறுத்தி தொழிற்சங்க முன்னோடி தோழர் மோகன்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

லெனினின் ஏன் தேவைப்படுகிறார்? என்ற தலைப்பில் மகஇக தோழர் முத்துராமன் கவிதை வாசிக்க, ‘அம்மா இல்லாம யாருமே இல்ல!’ , ‘சம்மதமா? சம்மதமா?’,  'சாமக்கோழி கூவும் நேரத்திலே,  ஊருக்கு ஊரு சாராயம்,  நாடு முன்னேறுதுங்குறான்,  மனுசங்கடா! நாங்க மனுசங்கடா!’,  டெல்லி சலோ! டெல்லி சலோ!’, உள்ளிட்ட பாடல்களை கலைக்குழு தோழர்கள் பாட, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சார்ந்த தோழர் சரவணன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

வேலூர் மாவட்டம்

விழா காட்சிகள்












காலையில் சங்கக் கிளைகளில் கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கி நவம்பர் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.











 

 

 

Friday, 6 November 2020

வேலூர்: 103 ஆம் ஆண்டு நவம்பர் புரட்சி விழா நிகழ்ச்சிகள்!

நவம்பர் 7, 1917 கையேந்தி நின்றவர்கள் கைநீட்டி எடுத்துக்கொண்ட நாள்.

உரிமை மறுக்கப்பட்டவர்கள் அதை பறித்து எடுத்துக் கொண்ட நாள்.

அடக்கி ஒடுக்கப்பட்டவர்கள் அதிகாரத்திற்கு வந்த நாள்.

வரலாறு தலைகீழாக மாறிய நாள்.

 ரஷ்ய புரட்சி நாள்.

மக்களைப் பேரழிவில் தள்ளி வரும் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் மட்டுமே. 

சோசலிசப் புரட்சிக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ள புரட்சிகர அமைப்புகளின் சார்பாக நவம்பர் புரட்சி 103 ஆம் ஆண்டு விழா - இதுதான் பாட்டாளி மக்களுக்கான விழா என்பதை உணர்த்தும் வகையில் - வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில தொழிற்சங்கத்தின் கீழ் செயல்படும் "வேலூர் மாவட்ட சாலையோர வணிகர்கள் மற்றும் சிற்றுண்டி வணிகர்கள் நலச்சங்கம்" சார்பாக வேலூரில் நவம்பர் புரட்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வேலூர் அண்ணா கலையரங்கம் கிளைச் சங்கத்தின் சார்பாக கிளைப் பொருளாளர் தோழர் வி.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிளைத் தலைவர் தோழர் இ.சுப்பிரமணி அவர்கள் கொடியேறறினார். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் அகிலன் சிறப்புரையாற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி தோழர் செல்வம் வாழ்த்துரை வழங்கினார். கிளை உறுப்பினர் தோழர் பி.பழனி நன்றி உரையாற்றினார்.


வேலூர் பழைய மீன் மார்க்கெட் கிளைச் சங்கத்தின் சார்பாக கிளை துணைச் செயலாளர் தோழர்  எ.பழனி தலைமையில் நடைபெற்ற விழாவில் கிளை உறுப்பினர் தோழர் ஜி.சுப்பிரமணி கொடியேற்றினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாவட்டத் தலைவர் தோழர் பி.சரவணன் சிறப்புரையாற்றினார். மக்கள் கலை இலக்கிய கழகம் செயற்குழு உறுப்பினர்  தோழர் வாணி வாழ்த்துரை வழங்கினார். கிளை உறுப்பினர் தோழர் இஸ்மாயில் பரீத் நன்றி உரையாற்றினார்.






தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்