Saturday, 29 April 2023

நிதி வசூல் என்ற பெயரில் வியாபாரிகள் துன்புறுத்தப்படுகிறார்களா?

கோவில் குடமுழக்குகள்-திருவிழாக்கள், இளைஞர் மற்றும் நற்பணி மன்றங்களின் ஆண்டு விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், அன்னதானங்கள், தமிழ் ஆர்வலர்களின் இலக்கியக் கூட்டங்கள், அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் பேரணிகள்-ஆர்ப்பாட்டங்கள்-பொதுக்கூட்டங்கள்-மாநாடுகள் என ஒவ்வொரு ஊரிலும் ஓராண்டில் நூற்றுக்கணக்கான நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இவைகள் அனைத்துக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிதிக்காக பெரும்பாலும் நம்பி இருப்பது வியாபாரப் பெருங்குடி மக்களைத்தான்.

வீடுகளிலும் அலுவலகங்களிலும் கூட ஒரு சிலர் நிதி வசூலிக்கின்றனர். அங்கே நிதி இல்லை என்று சொல்லிவிட்டால் அடுத்த வீட்டிற்கும், அடுத்த நபரிடமும் சென்று விடுகின்றனர். ஆனால்,  கடைவீதிகளில் அப்படி அல்ல. எந்த ஒரு வியாபாரியும் குறிப்பாக சிறு வியாபாரிகள் நிதி இல்லை என்று அவ்வளவு எளிதாகச் சொல்லி விட முடியாது. பெரும்பாலும் பெரிய கடைகள்-மால்களில்தான் முதலாளி இல்லை என்று சொல்லி நிதி தர மறுத்து விடுவார்கள்.

ஒவ்வொரு தனி நபருக்கும் ஏதோ ஒரு கொள்கையில் பிடிப்பு இருக்கும். அப்படிப்பட்ட நபர்கள் தங்களது கொள்கைக்கு ஏற்புடையவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் நிதி கொடுப்பார்கள். மாறாக எதிர் கருத்து உள்ள நிகழ்ச்சிகளுக்கு நிதி தர மறுத்து விடுவார்கள். அது அவர்களின் உரிமை. அவர்களிடம் சண்டை போட்டு எல்லாம் நிதி வாங்க முடியாது. யார் நிகழ்ச்சி நடத்தினாலும் அது மக்களுக்கானதாக இருந்தாலும் கூட நிதி தர மறுப்பவர்களும் உண்டு.

நிதி தருகின்ற தனி நபர்கள், வியாபாரிகள், முதலாளிகள் இவர்களில் எத்தனை பேர் நியாயமானவர்கள்? சுரண்டல்-வரி ஏய்ப்பு மற்றும் இலஞ்ச ஊழல் முறைகேடுகளிலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடாதவர்கள் என்பதைக் கண்டறிவது கடினம். இவற்றையெல்லாம் கண்டறிந்து நிதி வாங்கினால் நிதி கொடுப்பவர்கள் சொற்பமானவர்களாகவே எஞ்சி இருப்பர்

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூர் கடை வீதியில் ...-வின் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. கூட்டம் முடியும் தருவாயில் பார்வையாளர்களிடமும் அருகில் இருந்த கடைகளிலும் நிதி வசூல் செய்த போது, அந்தப் பகுதியில் இருந்த பிராந்திக் கடையிலிருந்து கணிசமானத் தொகையை நிதியாகக் கொடுக்க முன் வந்த போது அதை வாங்கத் தோழர்கள் மறுத்து விட்டனர். பொதுக்கூட்டத்தால் கவரப்பட்டுதான் அவர் நிதி கொடுக்க முன்வந்துள்ளார், மாறாக கைமாறு எதையும் எதிர்பார்த்து அல்ல என்பது தெரிந்தும் அந்த நிதியை தோழர்கள் மறுத்ததற்குக் காரணம், சாராயக் கடைகளிலும், வட்டிக்கடைகளிலும் நிதி பெறுவதில்லை என்கிற ... கடைபிடித்துவந்த நடைமுறைதான்.

நகரங்களில்பொது நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு சில இடங்கள் மட்டும்தான் காவல்துறையினரால் தேர்வு செய்யப்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது. பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்கள் அத்தகைய இடங்களில் அடிக்கடி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்துவதனால் அந்தப் பகுதி வியாபாரிகளிடம்தான் அடிக்கடி நிதி வசூல் செய்கின்றனர். இப்படி அடிக்கடி தங்களிடமே நிதி வசூல் செய்தால் தங்களால் எவ்வளவுதான் தர முடியும் என்ற நிலைக்கு வியாபாரிகள் தள்ளப்படுகின்றனர். அதேபோல ஒவ்வொரு வியாபாரிக்கும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கான கொள்கைகளும் கருத்துக்களும் இருக்கத்தானே செய்யும். அதன் அடிப்படையில் அவர்கள் நிதி கொடுக்க முன்வருவதும் அல்லது மறுப்பதும் அவர்களுக்கு இருக்கும் உரிமைதானே? ஆனால் அந்த உரிமையை வியாபாரிகள் கடைபிடிக்க முயலும் போது சலசலப்புகள் ஏற்படுவதும் உண்டு. அண்மையில் சேலத்திலும், மதுரையிலும் இதுபோன்ற சலசலப்புகள் நடந்ததாக சமூக ஊடகங்கள் மூலம் அறிய முடிகிறது.

எல்லாக் கட்சிகளும்,  இயக்கங்களும் தாங்கள் வசூலிக்கின்றத் தொகையை நேர்மையான முறையில் கணக்கை சரிபார்த்து முறைப்படுத்திக் கொள்கிறார்களா என்றால் அதிலும் முறைகேடுகள் நடப்பதுண்டு. குறிப்பாக கட்சிகள் இயக்கங்களில் உள்ள ஒருசில பிழைப்புவாதிள் தாங்கள் வசூலிக்கின்ற தொகையை கணக்குக் காட்டி முறையாக ஒப்படைக்காமல் வசூலித்தத் தொகையை ஆட்டையைப் போடுவதும் உண்டு. நான் அங்கம் வகித்த ஒரு குழுவில் இருந்த ஒரு நபர் இப்படி தொடர்ந்து நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதை என்னால் காண முடிந்தது. வழக்கறிஞர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து ஒரு சிலர் வெளியேறிய தருணம் அது. இதுகுறித்து கையும் களவுமாக பிடித்து அந்த நபரிடம் நான் கேள்வி எழுப்பிய போது, இனியும் இங்கே குப்பை கொட்ட முடியாது என்பதை அறிந்து அந்த 'அழகர்', 'வினவு' அணிக்குத் தாவி விட்டார். மேற்கண்ட நபர்களின் மோசடிகள் சொற்பமாக இருந்தாலும் அது சமூக மாற்றத்திற்காக செயல்படும் ஒரு இயக்கத்தையே அரித்துத் தின்றுவிடும்.

பெரு வியாபாரிகள் மற்றும் முதலாளிகளிடம் லட்சங்களிலும் கோடிகளிலும் நிதி வசூல் செய்து சுகபோகமாக வாழ்கின்ற ஒரு சில குட்டித் தலைவர்களை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். கோவையை மையமாக வைத்து கட்சி நடத்துகின்ற ஒரு சங்கி, தூத்துக்குடியில் நடைபெற்ற தனது கட்சியின் சனாதன மாநாட்டைக் காரணம் காட்டி, இராணிப்பேட்டையில் ஒரு முதலாளியிடம் 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக பெற்றுச் சென்றுள்ளான். எங்கோ இருக்கிற ஒருவன் எங்கோ நடந்த ஒரு மாநாட்டிற்கு இங்கே வந்து ஐந்து லட்சம் ரூபாயை ஆட்டையை போட்டுள்ளான் என்றல்லவா இராணிப்பேட்டைக்காரனுக்குக் கேட்கத் தோன்றுகிறது.

ஒருவர், தான் கொடுத்த நிதி உண்மையில் பயனுள்ள வகையில் மக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது என்றால் அதில் அவர் மன நிறைவு பெறுவார். மாறாக, அதை ஒரு சிலர் ஆட்டையப் போட்டது தெரிந்தாலோ அல்லது குடி-கும்மாளம் என வீணாகச் செலவழிக்கப்பட்டாலோ, இதை அறியும் நிதி கொடுத்த நன்கொடையாளர் பெரிதும் வருந்துவது மட்டுமல்ல அடுத்த முறை நிதி கொடுப்பதற்கும் தயங்குவார். நிதி கேட்பவன் ஒரு மோசடிக்காரன் என்று தெரிந்தும் ஒருவர் நிதி கொடுக்கிறார் என்றால் அவர் பிரதிபலன் எதையோ எதிர்பார்க்கிறார் என்றுதான் பொருள். சமூக மாற்றத்திற்காக பாடாட்டுகின்ற இயக்கங்கள் பிரதிபலனை எதிர்பார்க்கும் நபர்களிடம் நிதி பெறுவதும் ஏற்புடையதல்ல.

எனவே, நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் தாங்கள் வசூலிக்கின்ற தொகையை முறையாகக் கணக்கு வைத்துக்கொண்டு நியாயமான முறையில் செலவழிப்பதும், நிதி கொடுப்பவர்கள் தாங்கள் கொடுத்த நிதி உண்மையிலேயே சரியான முறையில்தான் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்வதும் அவர்களின் உரிமையாகும்.

என்ன காரணத்திற்காக நிதி தேவை என்று பிரசுரம் அடித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிதி வசூலித்தார்களோ, அதுபோலவே, அது எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பதையும் முறையாக நிதி கொடுத்தவர்களுக்கு உரிய முறையில் தெரிவிப்பது அவர்களின் கடமையும் ஆகும்.

தமிழ்மணி

x

Thursday, 30 March 2023

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை!

அதானியும் இந்தியப் பிரதமர் நரேந்திரனும் (மோடி) கூட்டு சேர்ந்து "மோதானி"யாக (MODHANI) அவதாரம் எடுத்து நாட்டு வளங்களைக் கபளீகரம் செய்ததை ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது. இதுகுறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து முறையான விசாரணையை மேற்கொண்டு உண்மை நிலையை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

"பிரதமர் நரேந்திரன், அதானியுடன் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தது ஏன்? மொரீசியஸ், கரீபியன் தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் அதானியின் பினாமி பெயரில் எந்தவித செயல்பாடும் இல்லாத ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20000 கோடி பணம் யாருடையது?" என காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி எழுப்பும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கத் திராணியற்ற பிரதமர் நரேந்திரன், பழைய அவதூறு வழக்கு ஒன்றை தூசு தட்டி, ஊராகும் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரது MP பதவியையும் பறித்துப் பழிவாங்கும் ஈனச் செயலில் ஈடுபட்டுள்ளார் நரேந்திரன்.

இது ஏதோ தனிப்பட்ட இராகுல் காந்தி மீதான தாக்குதல் மட்டுமல்ல; இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்து நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 30.03.2023 அன்று நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்கறிஞர் ராஜு தலைமையில் சென்னையில உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்வர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. 

பாஜக கும்பலை ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி எறியும் வரை "மோதானிக்கு" எதிரானப் போராட்டங்கள் மேலும் பரவட்டும். 

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டக் காட்சிகள்.












Sunday, 26 March 2023

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

தோழர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம், வெற்றிவேல் செழியன் தலைமையிலான 'மக்கள் அதிகாரம்', முத்துக்குமார் தலைமையிலான 'மக்கள் அதிகாரம்' என ஒரே பெயரில் மூன்று குழுக்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து சுமார் 20% பேரோடு வெற்றிவேல் செழியன் வெளியேறினார். உளவுத்துறை இதை 80:20 என்றுதான் குறிப்பிடுகிறது. மக்கள் அதிகாரம் கொடியில் இடது பக்கமாக கருப்பு வண்ணத்தில் இருந்த கையை வெள்ளையாக்கி வலது பக்கம் திருப்பிக் கொண்டனர். 

அதன் பிறகு சுமார் ஓர் ஆண்டுக்கு முன்பு வெற்றிவேல் செழியனுக்கு எதிராகக் கலகம் செய்து செழியனிடமிருந்த சுமார் 50% பேரோடு வெளியேறியவர்கள் முத்துக்குமார் தலைமையில் மக்கள் அதிகாரம் என்ற பெயரில் 'ரைட்ல திருப்ன' கொடியைப் பயன்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

'ரைட்ல' திருப்பிட்டா மட்டும் வண்டி ஓடுமா என்பது அந்த இருவருக்கும் மட்டும்தான் வெளிச்சம்.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், அரசியல் மற்றும் அமைப்பு காரணங்களுக்காக, அந்த இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பான  ஒன்றுதான். அவ்வாறு கருத்து வேறுபாடுகள் எழும்போது பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு, மாற்றுக் கருத்து உள்ள சிறுபான்மையினர் செயல்படுவதுதான் ஜனநாயக நடைமுறை. ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படை விதிகளில் இதுவும் ஒன்று. கம்யூனிச இயக்கங்களில் செயல்படுவோர் இதை நன்கறிவர்.

பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதே அமைப்பில் செயல்பட விரும்பாதோர், அந்த அமைப்பிலிருந்து வெளியேறி புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு, தனி ஒரு அமைப்பாக செயல்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆனால், மேற்கண்ட ஜனநாயகக் கோட்பாடுகளை சிறிதும் மதிக்காமல், வெற்றிவேல் செழியனும், முத்துக்குமாரும், மக்கள் அதிகாரம் பெயரில் செயல்படுவது மிகவும் கேடான, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் இழிவான சீர்குலைவு நடவடிக்கையாகும்.

அதே போல் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் (மகஇக) பாடகர் தோழர் கோவன் தலைமையில் பெரும்பான்யினர் செயல்படும் அதே வேளையில், மதுரையைத் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் தலைமையில் ஒரு மகஇக செயல்படுவது போலவும், தோழர் லோகநாதன் தலைமையை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டு புதிய ஜனநாயகக் தொழிலாளர் முன்னணி செயல்படும் போது, தோழர் அன்பு தலைமையை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயல்படும் போது, அதே பெயர்களில் வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் தரப்பினர் செயல்பட்டுக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 

மேலும் 'வினவு' தளத்தையும், 'புதிய ஜனநாயகம்' அரசியல் ஏட்டையும் பெரும்பான்மையினரிடம், அதாவது தோழர் ராஜூ தரப்பிடம் ஒப்படைக்காமல் சிறுபான்மை கோஷ்டியான வெற்றிவேல் செழியன் தரப்பினர் பயன்படுத்துவதும் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

பல்வேறு ஜனநாயக சக்திகளும், மேற்கண்ட உண்மைகளைப் புரிந்து கொண்டு,  தோழர் காளியப்பன் குறிப்பிட்டதைப் போல வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் தரப்பினரிடம் கேள்விகள் எழுப்ப வேண்டும். 

பிரிந்து சென்றவர்கள் தனிப் பெயரில் செயல்படும்போது காலப்போக்கில் குறிப்பிட்ட பிரச்சனைகளில் அவர்களோடு    கூட்டு சேர்ந்து செயல்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்.

சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். இல்லையேல் குழப்பமும், சீர்குலைவும் மட்டும்தான் எஞ்சி நிற்கும்.

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: 'பெல் சிட்டி’ ஊழல்! …..14, இறுதிப்பகுதி

தமிழகத்தில் இத்தனை இயக்கங்களா?

Thursday, 23 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - இறுதிப் பகுதி

 IX

ஹிண்டன்பர்க்கைப் புரிந்து கொள்ள வேண்டுமா? நாக்பூரைப் படி!

குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்றொழித்ததைப்போல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கொல்ல முடியாது என்பதால், அவர்களை நாட்டைவிட்டே விரட்டும் நோக்கத்துடன் 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு அச்சட்டம் ஷாகின்பாக்குகளில் புதைக்கப்பட்டன.

நிலத்தைவிட்டே விவசாயிகளை வெளியேற்றி, விலை நிலங்களை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்க ஏதுவாக 2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்கள், ஓராண்டு 'டெல்லி சலோ' போராட்டங்களால் புதை குழிக்கு அனுப்பப்பட்டன.

ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, 4 சட்டத் தொகுப்புகளாக்கி, தொழிலாளர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து, இனி தொழிலாளர்களை முதலாளிகள் வரைமுறையின்றி சுரண்டுவதற்கு ஏற்ப, 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள் மட்டும் ஏனோ போதிய எதிர்ப்பின்றி நடைமுறைக்கு வந்துவிட்டன.

இவை தவிர,

அரசியல் துறையில்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  எதிர்கட்சிப் பிரதிநிதிகளை மிரட்டிப் பணிய வைப்பது அல்லது விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தி மாநில அரசுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் எதிர்கட்சியினர் மீது ஆயுதப் பயிற்சி பெற்ற RSS குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது, பொய்வழக்குகள் போட்டு அடக்க முனைவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் RSSல் பயிற்சி பெற்ற தனது ஆட்களை ஆளுநர்களாக நியமித்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பது, வெளிஉறவு உள்ளிட்ட முக்கியமானத் துறைகளில் RSS ஆட்களை பணியில் அமர்த்துவது, மாநில மொழிகளை ஒழித்துக்கட்டி அவ்விடத்தில் முதலில் இந்தியைப் புகுத்தி இறுதியல் சமஸ்கிருத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது

பொருளாதாரத் துறையில்,

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த அதானி-அம்பானி போன்ற முதலாளிகள் நாட்டு வளங்களை கொள்ளையடிக்க வழிவகை செய்வது, அதற்கு ஏற்ப சட்டங்களை இயற்றுவது அல்லது திருத்துவது, பொதுத்துறை வங்கிகளில் குவிந்து கிடக்கும் மக்கள் பணத்தை முதலாளிகளுக்குக் கடனாக வாரிக் கொடுப்பது, பிறகு வாராக் கடன் என்ற போர்வையில் அவற்றைத் தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு பட்டை நாமம் போடுவது,

மோடி அரசின் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சாதி-மத-இன-மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தியே வைத்திருக்க முயற்சிப்பது, மக்களின் ஒற்றுமையை சிதைப்பதற்காக அவ்வப் பொழுது சாதி-மத-இனக் கலவரங்களை திட்டமிட்டே அரங்கேற்றுவது,

என ஒட்டு மொத்தமாக ஒரு மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

மோடியை இயக்குவது RSS. RSS-ஐக் கட்டுப்படுத்துவது பார்ப்பனர்கள். பார்ப்பனர்களின் நோக்கம் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவது. ஒரு பக்கம் நாமெல்லாம் இந்துக்கள் என அணிதிரட்டிக் கொண்டே மறுபக்கம் மற்ற சாதியினரைவிட பார்ப்பனர்களே மேலானவர்கள் என்கிற சமத்துவமற்ற படிநிலை வருண-சாதி அமைப்பு முறையை நியாயப்படுத்துவது, ஒவ்வொரு சாதியும் அவரவர் குலத்தொழிலை மேற்கொள்ள வேண்டும்  எனப் பேசுவது, இதையே இந்து தர்மம்-சனாதன தர்மம் எனக் கூறிக் கொண்டு, நாக்பூரில் திட்டம் வகுத்து அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தி வருகின்றனர்.


அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற பலர், பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் அது சாதிய அமைப்பு முறைக்கு பேராபத்து என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. எனவே தொழில் நடத்துவதிலிருந்து அரசு முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி வருகிறது மோடி அரசு. புதிய தாராளமயக் கொள்கையும் இவர்களின் நோக்கத்தோடு ஒன்று சேர்வதால் இது மேலும் தீவிரமடைகிறது.

மன்னராட்சி கோலோச்சிய நிலவுடமை காலகட்டத்தில், ஒவ்வொரு சாதியினரும் அவரவர் குலத்தொழிலை மட்டுமே செய்வதை உறுதி செய்வது, குடிமக்களிடம்  வரி வசூல் செய்வது, சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லைகளைக் காப்பது உள்ளிட்ட நிர்வாக வேலைகளை மட்டுமே மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு மேற்கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் மட்டுமே படித்தவர்களாக இருந்ததால் சாதியப் படுநிலையில் தங்களை மேலானவர்களாக நிலை நிறுத்திக் கொண்டதோடு, மன்னனே தங்களுடைய ஆலோசனைப்படிதான் ஆட்சி நடத்த வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி வந்தனர். பிற்கால சேர சோழ பாண்டியர் ஆட்சிகள் இவ்வாறுதான் நடைபெற்று வந்துள்ளன.

ஆனால் இன்று, அரசாங்கமே தொழில் நடத்துவதனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிறசாதினர் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதை பார்ப்பனர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வசதி வந்தவுடன் பிறசாதியினர் தங்களை மதிப்பதில்லை என்பதாகவும், தங்களுடைய மேலாதிக்கும் சிதைவதாகவும் கருதுகின்றனர். அதனால்தான் முதலில் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துவிட்டு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழங்கியவர்கள், அது சாத்தியமில்லை என்பதனால், தற்காலிகமாக தங்களுடைய ஆதிக்கத்தை  நிலைநிறுத்திக்கொள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டனர். 

ஆனால்  ”தொழில் நடத்துவது அரசின் வேலை அல்ல, மாறாக சிறந்த நிர்வாகத்தை வழங்குவதே அரசின் கடமை” (good governance) என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதனால்தான் பார்ப்பனர்கள் தனியார் மயத்தை வரவேற்கின்றனர், ஊக்கப்படுத்துகின்றனர்.

தொழில் நடத்துவதிலிருந்து அரசு வெளியேறுவதையும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதையும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதையும் மோடி அரசு நடைமுறைப்படுத்துவது புதிய தாராளமாக கொள்கையின் அடிப்படையிலானது மட்டுமல்ல, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது.  இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு கேள்வி கேட்பவரை அடக்கி ஒடுக்கி நசுக்குவது, அதற்காக அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக அனைத்து பஞ்சமா பாதக செயல்களையும் செய்வது என்பதுதான் மோடி வகையறாக்களின் நடைமுறையாக உள்ளது.

எனவே, நாக்பூரைப் புரிந்து கொண்டால்தான் மோடி எதற்காக அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளிகள் பக்கம் நிற்கிறார் என்பதையும் முதலாளிகள் ஏன் மோடியை ஆதரிக்கிறார்கள் என்பதையும், ஹிண்டன்பர்க் அறிக்கையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் அதிகாரத்திலிருந்து நாக்பூர் கூட்டத்தை அகற்றாத வரை இந்த அவலங்கள் மேலும் தீவிரமாக தொடரவே செய்யும்.

முற்றும்.

நன்றி

வணக்கம்

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-8


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-6

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1

Wednesday, 22 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-8

VIII

வேலை வாய்ப்பு

விலைவாசியைத்தான் கட்டுப்படுத்தவில்லை. ஏதாவதொரு நல்ல வேலை கிடைத்தால் விலைவாசி உயர்வை சமாளித்துக் கொள்ள முடியும் என்று பலர் கனவு கண்டார்கள். மோடி வெளிநாடுகளையே சுற்றிக் கொண்டிருக்கிறார், நிச்சயம் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வருவார், இந்தியாவில் தொழில் வளம் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என பலரும் நம்பினர். இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு அடிக்கடி மோடி பயணம் செய்தது அதானிக்கும் அம்பானிக்கும் தொழில் பிடித்துக் கொடுக்கத்தான் என்பதை அன்று ஏனோ நாம் உண்ராமல் போனோம்.

புதிய தொழில்கள் பெருகவில்லை என்றாலும், ஏற்கனவே இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும் என நம்பி, லட்சங்களைக் கொட்டி தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்தனர் பலர். ஐயகோ! என் செய்ய? அரசாங்கத்தை நடத்துவதற்குப் பணம் தேவை என்று சொல்லி இந்தயாவின் கோவில்கள் என்று சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கினார் மோடி.

ஜவஹர்லால் நேரு காலத்தில் 33, லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் 5, இந்திரா காந்தி காலத்தில் 66, ராஜீவ் காந்தி காலத்தில் 16, வி.பி.சிங் காலத்தில் 2, பி.வி.நரசிம்மராவ் காலத்தில் 14, ஐ.கே.குஜ்ரால் காலத்தில் 3 என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியதோடு, இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் பங்காற்றி உள்ளன.


புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்தப்பட்ட தொடக்கக் காலத்தில்கூட ஒரு சில பொதுத் துறைகள் விற்கப்பட்ட அதே நேரத்தில், புதிதாக சில பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 7 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டாலும், புதிதாக 17 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மன்மோகன் சிங் காலத்தில் 3 நிறுவனங்கள் விற்கப்பட்டாலும் புதிதாக 23 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் மோடியின் கடந்த 9 ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனம்கூட தொடங்கப்படவில்லை; மாறாக 23 பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலுமாக தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டன. குறிப்பாக IPCL நிறுவனத்தை அம்பானியின் ரிலயன்சுக்கும், BALCO வை தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்குக் காரணமான வேதாந்தாவுக்கும்,  VSNL ஐ டாடாவுக்கும் விற்பனை செய்துள்ளார் மோடி. இவை தவிர BHEL, BSNL, GAIL, NTPC, ONGC, SAIL உள்ளிட்ட இலாபமீட்டும் நவரத்னா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை படிப்படியாக விற்று வருகிறது மோடி அரசு.

அதுமட்டுமன்றி பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் வகையில் பாரபட்சமாக நடந்து வருகிறது நடுவண் அரசு. ரிலயன்சின் ஜியோவும், பாரதியின் ஏர்டெல்லும் 5 ஜியில் மிதக்கும் போது, பி.எஸ்.என்.எல் மட்டும் இன்னமும் 4 ஜிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.  கிட்டத்தட்ட பி.எஸ்.என்.எல் புதைக்கப்பட்டுவிட்டது.

பொதுத்துறைகள் விற்கப்படுவதாலும், புறக்கணிக்கப்படுவதாலும் இந்தியப் பொருளாதாரம் மட்டும் சரியவில்லை கூடவே இதுவரை இடஒதுக்கீட்டின் கீழ் இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுவந்த ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, பட்டியல்-பழங்குடி மக்களின் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. இருக்கிற ஒரு சில வேலைகளையும், ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிக்கும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முற்பட்ட சாதியினரை, அறிய வகை ஏழைகள் என அறிவித்துப் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கிடு (EWS) என்ற பெயரில் பறித்துக் கொண்டுவிட்டது மோடி அரசு.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-6

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1

Monday, 20 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-6

VI

கடன் தள்ளுபடி

ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் கோடிக்கும் மேலாகச் சரிந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில் 13.03.2023 அன்று நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், ”பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அதானியின் 9 நிறுவனப் பங்குகள் ஜனவரி 24 முதல் மார்ச் 1 வரை, 60 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது எனவும், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை, பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரித்து வருவதாகவும், 2 மாத காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், வருவாய்ப் புலனாய்வு இயக்குநரகம் (DRI) ஏற்கனவே தனது விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 முதல் 2022 வரையிலான ஐந்து ஆண்டு காலத்தில் வங்கிகளிடமிருந்து பெருநிறுவனங்கள் பெற்றுள்ள கடன் திரும்ப செலுத்தப்படாததால் அவற்றை வாராக் கடன் என பட்டியலிட்டு சுமார் ரூ.9.92 லட்சம் கோடியை தள்ளுபடி செய்துள்ளது மோடி அரசு. இதில் ரூ7.27 லட்சம் கோடி எஸ்.பி.ஐ (SBI) உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள் கொடுத்த பணம். ஒருபுறம் கார்ப்பரேட் முதலாளிகளின் இலட்சக் கணக்கான கோடி ரூபாய் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்குத் தயங்காத இவர்கள் மறுபுறம் ஏழை எளிய மாணவர்கள் பெற்றுள்ள சில ஆயிரம் ரூபாய் கல்விக் கடனைத் தள்ளுபடி செய்ய முடியாது என திமிர்த்தனமாக பேசுகின்றனர்.

அதானி குழுமத்திற்குக் கொடுக்கப்பட்டுள்ள வங்கிக் கடன் விவரங்களை வெளியிட முடியாது என ஏற்கனவே நிதி அமைச்சர் அறிவித்துள்ள நிலையில், அடுத்து எந்தெந்த முதலாளிக்கு எந்தெந்த வங்கிகளிலிருந்து எத்தனை லட்சம் கோடி தள்ளுபடி செய்யப் போகிறார்களோ தெரியவில்லை. அது அந்த நிர்மலா சீத்தாரமனுக்கே வெளிச்சம்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் கார்ப்பரேட் முதலாளிகளின் கடன் ரூ.10 இலட்சம் கோடி தள்ளுபடி

வாராக்கடனாலோ அல்லது கடன் தள்ளுபடி செய்யப்பட்டாலோ வங்கிகளின் சொத்து மதிப்புக் குறைந்து வருவாய் இழப்பு பெருமளவில் ஏற்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் மக்கள் சேமித்து வைத்துள்ள பணத்திற்கான வட்டிக் குறைப்பு, சேமிப்புக்கான போனஸ் குறைப்பு, சிறு குறு தொழில்-வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கடன் குறைப்பு அல்லது மறுப்பு, கல்விக் கடன் மறுப்பு, அரசின் நலத் திட்டங்களுக்கான நிதி மறுப்பு என ஒட்டுமொத்தமாக பொதுமக்கள் மீதான தாக்குதலாகவே இது அமைந்து விடுகிறது. இந்திய வங்கிகளால் அரசின் நலத் திட்டங்களுக்குக்கூட கடன் கொடுக்க முடியாத சூழலில்தான் உலக வங்கி உள்ளிட்ட பன்னாட்டு வங்கிகளிடம் அரசே நேரடியாக பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன் பெற்று வருகிறது. மோடி பிரதமராக பொறுப்பேற்ற 2014 ஆம் ஆண்டு, ரூ.54 லட்சம் கோடியாக இருந்த பன்னாட்டுக் கடன் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ரூ.147 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

ரூ.55000 கோடிக்குக் கடன் வழங்கிய அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்விபி வங்கி திவால் ஆகிவிட்டதாக 10.03.2023 அன்று அறிவித்துவிட்டது. இதனால் தங்களின் சேமிப்புத் தொகை திரும்பக் கிடைக்குமா என்கிற பெரும் கலக்கத்தில் உள்ளனர் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள். இதே நிலைக்குத்தான் இந்திய வங்கிகளும் தள்ளப்பட்டுள்ளன. மிகவும் பாதுகாப்பானது என கருதப்பட்ட ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) பணத்திற்கே பாதுகாப்பு இல்லை என்கிற நிலையில், இனி நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வி மட்டும்தான் எஞ்சி நிற்கிறது.

வங்கிகள் திவாலாகி இழுத்து மூடப்பட்டு விட்டால் எதிர்காலத் தேவைகளுக்காக இனி நாம் எதையும் சேமிக்க முடியாது. பிள்ளைகளின் படிப்பு, திருமணம், முதியோர்களுக்கான மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்குக்கூட பணமின்றி கந்துவட்டிக்காரர்களிடம் சிக்கி, இருக்கிற கொஞ்ச நஞ்ச சொத்தையும் விற்று ஏதிலிகளாக நாம் நடுத்தெருவிற்குத் தள்ளப்படுவோம். 

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது)

தொடர்புடைய பதிவுகள்

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7

VII

குஜராத் இனப்படுகொலை

முதலில் மோடியை குஜராத்தின் முதலமைச்சராக்கி, குஜராத்தின் வளர்ச்சி நாயகன் என்கிற பிம்பத்தைக் கட்டமைத்தது RSS. குஜராத் மாநிலம் வேகமாக வளர்ந்து வருதாகக் கதை அளந்தார்கள். அதற்கு, “குஜராத் மாடல்” என்று நாமகரணம் சூட்டி அவர்களுக்குள்ளாகவே அகமகிழ்ந்து கொண்டார்கள். குஜராத்தின் வளங்களைக் கொள்ளையடிக்க அதானிக்கும், அம்பானிக்கும் பட்டுக் கம்பளம் விரித்ததைத் தவிர மோடி வேறு எதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. அதற்குக் கைம்மாறாக அவர்கள் மோடிக்குக் கோடிகளை வாரிக் கொடுத்தனர். இவற்றை எல்லாம் மூடிமறைப்பதற்காக இஸ்லாமியர்களை இந்துக்களுக்கு எதிரானவர்களாகக் கட்டமைத்து, ஆதாரம் ஏதும் இல்லை என்ற போதிலும் கோத்ரா இரயிலை இஸ்லாமியர்கள்தான் எரித்தார்கள்  என்கிற பொய்யைத் திட்டமிட்டே பரப்பி, “இஸ்லாமியர்களுக்குப் பாடம் புகட்டுவோம்” என்று வெளிப்படையாகவே அறிவித்து, 2002 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது RSS கும்பல். இந்தத் தாக்குதல் மூலம் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்து டெல்லிக் கோட்டைக்குப் பாதை அமைத்துக் கொண்டார் மோடி. குஜராத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல் மற்றும் படுகொலைகளுக்கு மோடிதான் காரணம் என்பதை அம்பலப்படுத்தி பிபிசி நிறுவனம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் வெளியிட்ட ஆவணப்படத்தை மோடி அரசு தடை செய்ததன் மூலம், இஸ்லாமியர்களுக்கு எதிரானப் படுகொலைகளை மூடிமறைக்க முயன்றது. ஆனால் தடையையும் மீறி இரத்தக்கரை படிந்த மோடியின் கோரப் பற்கள் வெளியே தெரிவதை அவர்களால் மறைக்க முடியவில்லை.

டிஜிட்டல் பரிவர்த்தனை

2014  ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் போடுவேன் என ஆசை வார்த்தைக் கூறி அனைவரையும் வங்கிக் கணக்குத் தொடங்கச் சொல்லி நம்மை வங்கி வலைப்பின்னலில் சிக்க வைத்தார்.  குறைந்தபட்ச இருப்பு இல்லை எனக்கூறி நம் பாக்கெட்டில் இருந்த பணத்தை எல்லாம் வங்கிகள் அபகரித்துக் கொண்டதைத் தவிர வேறு எதைக் கண்டோம் நாம்?

எல்லோரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என மாயாஜாலம் காட்டினார் மோடி. நாமும் அதை நம்பி ஜி-பே, கூகுள்-பே என அதன் பின்னால் ஓடினோம். இன்று அதற்கும் கட்டணம் வசூலித்து கல்லாக் கட்டுகிறது மோடி அரசு.

ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சங்களை இழந்த பலர் கடன் சுமையிலிருந்து மீள முடியாமல் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர். ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்குத் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றினால், அதைக் கிடப்பில் போட்டு வேடிக்கைக் காட்டுவதோடு, தற்கொலைகளுக்கு வெண்சாமரம் வீசி வருகிறார் ஆளுநர்  RSS இரவி. 

பண மதிப்பிழப்பு

கள்ளப் பணம் நாட்டில் பெருகிவிட்டதாகவும், கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை பலர் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என 2016 நவம்பர் 8 அன்று திடீரென அறிவித்தார் மோடி. ஏ.டி.எம் எந்திரங்களில் இருந்த ரூபாய் நோட்டுகள் உருவப்பட்டன. கார்டைச் சொருகிய போது  .டி.எம் எந்திரங்கள் நம் முகத்தில் காரி துப்பிய போதும், அதைத் துடைத்துக் கொண்டு வெளியே வந்தேமேயொழிய மோடியின் முகத்தில் காரித்துப்ப வேண்டும் என எண்ணியதில்லை.

வங்கிக்குச் சென்று மணிக் கணக்கில் கால்கடுக்க நின்றும் வெறும் கையோடு திரும்ப வேண்டியதாயிற்று. அன்றாட தேவைக்கும், அவசரத் தேவைக்கும் பணம் கிடைக்காமல் மக்கள் பரிதவித்தனர்.  ஏதோ கருப்புப் பணம் ஒழிந்தால் சரி என மக்களும் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களைத் தாங்கிக் கொண்டனர். அதன் பிறகு புதிய 500 ரூபாய் தாள்களையும் 2000 ரூபாய் தாள்களையும் புழக்கத்திற்குக் கொண்டு வந்தனர். ஆனால் இன்று 500 ரூபாய்த் தாள்களை மட்டுமே பார்க்க முடிகிறது. 2000 ரூபாய்த் தாள்கள் எங்கே சென்றன என்பது மர்மமாகவே உள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகுதான் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கும் நடவடிக்கைகள் அதிகரித்தன. அதன் விளைவுதான் இன்று நாம் காணும் ஹிண்டன்பர்க் அறிக்கை அம்பலப்படுத்திய அதானியில் இமாலய நிதி மோசடி.

விலைவாசி உயர்வு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும், அதன் விளைவாக விலைவாசி குறையும் என நம் நாவில் தேன் தடவினார்கள். நாமும் நாக்கைத் தொங்க போட்டுக் கொண்டு மீண்டும் மோடியை பிரதமராக்கினோம். என்ன நடந்தது?

2014 க்கு முன்பு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சுமார் 400 ரூபாயாக இருந்த போது விலைவாசி விண்ணை முட்டுவதாகக் கூப்பாடு போட்டவர்கள் ஆட்சிக்கு வந்த பின் இன்று ஒரு சிலிண்டர் கேஸ் விலையை 1100 ரூபாய்க்கு மேல் உயர்த்தி விட்டனர். 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று ரூ.103. ரூ.55 க்கு விற்பனை செய்யப்பட் டீசல் விலை இன்று ரூ.95. மோடியை மீண்டும் பிரதமராக்கியது நமக்கு நாமே சூன்யம் வைத்துக் கொண்ட கதையாவிட்டது நமது கதை.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-6

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1