Wednesday, 22 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-8

VIII

வேலை வாய்ப்பு

விலைவாசியைத்தான் கட்டுப்படுத்தவில்லை. ஏதாவதொரு நல்ல வேலை கிடைத்தால் விலைவாசி உயர்வை சமாளித்துக் கொள்ள முடியும் என்று பலர் கனவு கண்டார்கள். மோடி வெளிநாடுகளையே சுற்றிக் கொண்டிருக்கிறார், நிச்சயம் அந்நிய முதலீடுகளை ஈர்த்து வருவார், இந்தியாவில் தொழில் வளம் பெருகும், வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என பலரும் நம்பினர். இலங்கை, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயல்நாடுகளுக்கு அடிக்கடி மோடி பயணம் செய்தது அதானிக்கும் அம்பானிக்கும் தொழில் பிடித்துக் கொடுக்கத்தான் என்பதை அன்று ஏனோ நாம் உண்ராமல் போனோம்.

புதிய தொழில்கள் பெருகவில்லை என்றாலும், ஏற்கனவே இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் நல்ல வேலை கிடைக்கும் என நம்பி, லட்சங்களைக் கொட்டி தங்களது பிள்ளைகளைப் படிக்க வைத்தனர் பலர். ஐயகோ! என் செய்ய? அரசாங்கத்தை நடத்துவதற்குப் பணம் தேவை என்று சொல்லி இந்தயாவின் கோவில்கள் என்று சொல்லப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக விற்கத் தொடங்கினார் மோடி.

ஜவஹர்லால் நேரு காலத்தில் 33, லால்பகதூர் சாஸ்திரி காலத்தில் 5, இந்திரா காந்தி காலத்தில் 66, ராஜீவ் காந்தி காலத்தில் 16, வி.பி.சிங் காலத்தில் 2, பி.வி.நரசிம்மராவ் காலத்தில் 14, ஐ.கே.குஜ்ரால் காலத்தில் 3 என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டு பலருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியதோடு, இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்கு மிகப் பெரிய அளவில் பங்காற்றி உள்ளன.


புதிய தாராளவாதக் கொள்கை அமல்படுத்தப்பட்ட தொடக்கக் காலத்தில்கூட ஒரு சில பொதுத் துறைகள் விற்கப்பட்ட அதே நேரத்தில், புதிதாக சில பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 7 பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்பட்டாலும், புதிதாக 17 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மன்மோகன் சிங் காலத்தில் 3 நிறுவனங்கள் விற்கப்பட்டாலும் புதிதாக 23 நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஆனால் மோடியின் கடந்த 9 ஆண்டு ஆட்சிக் காலத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனம்கூட தொடங்கப்படவில்லை; மாறாக 23 பொதுத்துறை நிறுவனங்கள் முற்றிலுமாக தனியாருக்கு விற்கப்பட்டுவிட்டன. குறிப்பாக IPCL நிறுவனத்தை அம்பானியின் ரிலயன்சுக்கும், BALCO வை தூத்துக்குடி ஸ்டெர்லைட் படுகொலைக்குக் காரணமான வேதாந்தாவுக்கும்,  VSNL ஐ டாடாவுக்கும் விற்பனை செய்துள்ளார் மோடி. இவை தவிர BHEL, BSNL, GAIL, NTPC, ONGC, SAIL உள்ளிட்ட இலாபமீட்டும் நவரத்னா உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை படிப்படியாக விற்று வருகிறது மோடி அரசு.

அதுமட்டுமன்றி பொதுத்துறை நிறுவனங்கள் நட்டத்தை சந்திக்கும் வகையில் பாரபட்சமாக நடந்து வருகிறது நடுவண் அரசு. ரிலயன்சின் ஜியோவும், பாரதியின் ஏர்டெல்லும் 5 ஜியில் மிதக்கும் போது, பி.எஸ்.என்.எல் மட்டும் இன்னமும் 4 ஜிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது.  கிட்டத்தட்ட பி.எஸ்.என்.எல் புதைக்கப்பட்டுவிட்டது.

பொதுத்துறைகள் விற்கப்படுவதாலும், புறக்கணிக்கப்படுவதாலும் இந்தியப் பொருளாதாரம் மட்டும் சரியவில்லை கூடவே இதுவரை இடஒதுக்கீட்டின் கீழ் இந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுவந்த ஆயிரக்கணக்கான பிற்படுத்தப்பட்ட, பட்டியல்-பழங்குடி மக்களின் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்பட்டு வருகின்றன. இருக்கிற ஒரு சில வேலைகளையும், ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிக்கும் பார்ப்பனர்கள் உள்ளிட்ட முற்பட்ட சாதியினரை, அறிய வகை ஏழைகள் என அறிவித்துப் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு 10 % இடஒதுக்கிடு (EWS) என்ற பெயரில் பறித்துக் கொண்டுவிட்டது மோடி அரசு.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-6

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1

No comments:

Post a Comment