Friday, 17 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3

III

மன்ஹாட்டன் மடோஃப் வழியில் அதானி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வர்த்தகம் மற்றும் நிதி ஆதார மையமாக விளங்கும் மன்ஹாட்டன் (manhatten) என்கிற பகுதியைச் சேர்ந்த பெர்னார்டு லாரன்ஸ் மடோஃப் (Madoff) என்பவன் 64.8 பில்லியன் டாலர் (இன்றைய இந்திய மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் கோடி) ஃபோன்சி (ponzi) முறைகேட்டுக்குப் பெயர் போன ஒரு நிதி மோசடிக்காரன். புதிய முதலீட்டார்களிடமிருந்து பணத்தைக் கவர்ந்து பழைய முதலீட்டாளர்களுக்கு லாபமாகத் தரும் ஒரு ஏமாற்று முறைக்குப் பெயர்தான் ஃபோன்சி முறைகேடு என்று சொல்லுவார்கள்.

அதானிக்கும் மடோஃபிதான் வழிகாட்டி போல. அதனால்தான் அதானி சொத்துக் குவிப்பு குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை மன்ஹாட்டனின் அடோஃப்ஸ் (adoff’s of manhattan) என்ற பெயரில்தான் வெளியிட்டது. கார்ப்பரேட் உலகம் இதுவரை கண்டிராத மிகப்பெரிய முறைகேட்டை, உலகின் மூன்றாவது பெரிய பணக்காரனான அதானி குழும் எப்படிச் செய்துள்ளது என்பதை விளக்கி 88 கேள்விக் கணைகளோடு ஹிண்டன்பர்க் நிறுவனம் தனது ஆய்வறிக்கையை 24.01.2023 அன்று வெளியிட்டது.

அதானி மீதான குற்றச்சாட்டுகள்

மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.70 லட்சம் கோடி. ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அதன் சொத்து மதிப்பு மேலும் ரூ.8.10 லட்சம் கோடி அதிகரித்து 2022 இறுதியில் மொத்த சொத்து மதிப்பு ரூ.17.80 லட்சம் கோடியாக உயர்ந்தது. இதில் பாதிதான் அதானியினுடையது. மீதி பாதி வங்கிகளிலிருந்து பெறப்பட்ட கடன். கிட்டத்தட்ட ரூ.9 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளிடமிருந்து திரட்டப்பட்டது என கூறப்படுகிறது. ஆனால் இதை வங்கியின் பணமாகக் காண்பிக்காமல் தனது சொத்தாகக் காட்டுகிறது அதானி குழுமம்.

அதனால்தானோ என்னவா வங்கிகளிடமிருந்து அதானி பெற்றுள்ள கடன் விவரங்களை வெளியிட முடியாது என 13.03.2023 அன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறி உள்ளாரோ?  அதானி குழுமம் கடனால் வளர்ந்த நிறுவனம் என்கிற ஹிண்டன்பர்க் அறிக்கை முன்வைக்கும் குற்றச்சாட்டை ஒதுக்கிவிட முடியாது என்பதைத்தான் நிர்மலா சீத்தாராமனின் பதில் நமக்கு உணர்த்துகிறது. என்னதான் முந்தானையைக் கொண்டு மூடி மறைக்க முயன்றாலும் அதானிக்கு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (LIC) கொடுத்துள்ள ரூ.74000 கோடியும், இந்திய ஸ்டேட் வங்கி (SBI) கொடுத்துள்ள ரூ.21320 கோடியும் முந்தானையின் கிழிசலுக்கிடையில் துருத்திக் கொண்டு வெளியே தெரியத்தானே செய்கிறது.


பெரிய அளவில் உற்பத்தியில் ஈடுபடாமலேயே இவ்வளவு சொத்துக்களை அதானியால் சேர்க்க முடிந்ததற்குக் காரணம் அது ஒரு பங்குச் சந்தை நிறுவனமாகச் செயல்படுவதால்தான். 75% பங்குகள் அதானி குழுமத்தின் பெயரிலும் மீதி 25% பங்குகள் பொது மக்கள் பெயரிலும் இருப்பது போலக் கணக்குக் காட்டி ஏய்ப்பது ஒரு வகை. இதற்காக சிங்கப்பூர், மொரீசியஸ், கரீபியன் தீவுகள் (மேற்கு இந்தியத் தீவுகள்), சைப்ரஸ், ஐக்கிய அரபு எமிரேட் என பல்வேறு நாடுகளில் பினாமி பெயரில் அதானிக்குச் சொந்தமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பினாமி நிறுவனங்களின் பெயரில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்குவதோடு கருப்புப் பணத்தை வெள்ளையாகவும் மாற்றுகின்றனர். எடுத்துக்காட்டாக ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு பொருளை அல்லது எந்திரத்தை ரூ.10 கோடியாக மதிப்பைக் கூட்டி அந்த பினாமி நிறுவனங்கள் மூலம் இந்தியாவுக்கு விற்பனை செய்வதன் மூலம் ரூ.9 கோடியை வெள்ளையாக மாற்றி அந்தப் பினாமி நிறுவனத்திற்கே அத்தொகை செல்வதால் அதானியின் பங்கு மதிப்பு மேலும் அதிகரிக்கிறது.  

22 இயக்குநர்களில் கௌதம் அதானிதான் மிகமுக்கிய நபர் என்றாலும் இவருடைய அண்ணன் வினோத் அதானி, தம்பி ராஜேஷ் அதானி, மைத்துனர் சமீர் ஹோரா உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் இதில் இயக்குநர்களாக இருப்பதால் அதானி குழுமம் ஒரு குடும்ப நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது.

அதே வேளையில் சட்டவிரோதமாக இரும்புத் தாது மற்றும் நிலக்கரி இறக்குமதி, வைர வர்த்தகத்தில் சுங்க வரி ஏய்ப்பு உள்ளிட்ட எண்ணற்ற குற்றவழக்குகள் இவர்கள் மீது நிலுவையில் இருக்கும் போது இவர்கள் எப்படி அதானி குழுமத்தில் இயக்குநர்களாக பதவி வகிக்க முடிகிறது? அயல்நாடுகளில் உள்ள அதானியின் பினாமி நிறுவனங்களின் பெயரில் உள்ள பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் அந்த நிறுவனங்களுக்கு எப்படி வந்தது? என அடுக்கடுக்காக 88 கேள்விகளை எழுப்புகிறது ஹிண்டன்பார்க் ஆய்வறிக்கை.

தொடரும்.... 

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்


No comments:

Post a Comment