Saturday, 25 April 2026

பசித்தவனுக்கு ஏதடா ருசி?

நமது நாட்டில் தேர்தல் வரும்போது மட்டும் ‘ஜனநாயகம்’ என்ற சொல் ஊர் முழுக்கத் தாரை தப்பட்டையோடு வலம் வரும். ஆனால், சாமானியனின் சட்டைப் பையைச் சல்லடை போட்டுத் தேய்க்கும் ‘கல்லா பெட்டி’ ரௌடித்தனங்கள் அன்றாடம் அரங்கேறுவதுதான் நிதர்சனம்.

அந்த நூற்றி ஐந்து ரூபாய் ‘பிரிஞ்சி’!

கடந்த வாரம் விஷாரத்திலிருந்து திரும்பியபோது, ஆற்காடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஒரு உணவகத்தில் ‘பிரிஞ்சி’ சாப்பிட நேர்ந்தது. காலை உணவைத் தவிர்த்த அகோரப் பசியில் இருந்த எனக்கு, அந்தப் ‘பிரிஞ்சி’ வந்த கிண்ணத்தைப் பார்த்தபோது அது உணவாகத் தெரியவில்லை; ஏதோ ருசி பார்க்கக் கொடுத்த ‘சாம்பிள்’ போலத் தெரிந்தது. நாகரிகமாக ‘ஸ்பூனில்’ சாப்பிட்டதால் பிழைத்தேன்; கைப்பிடியில் அள்ளியிருந்தால் இரண்டு வாய் கூடத் தேறியிருக்காது.


சாப்பிட்டு முடித்துவிட்டு 105 ரூபாய் ‘பில்லைப்’ பார்த்தபோது ‘பகீர்’ என்றது. இதேபோல மூன்று மடங்கு ‘பிரிஞ்சி’ வாலாஜாவில் நாற்பது ரூபாய்க்குத் தருகிறானே என்று எண்ணியவாறு வெளியே வந்தேன். 

அரிசி, பீன்ஸ், கேரட், பட்டை, லவங்கம் என இரண்டிலும் மூலப்பொருட்கள் ஒன்றுதான். பிறகு ஏன் இந்த மூன்று மடங்கு விலை? 

ஒப்பனை உணவகங்களில் ஜி.எஸ்.டி வேறு. பசித்தவன் உண்டதைக் கூடத் தொண்டையில் விரல் விட்டு எடுக்கும் அவலமல்லவா இது?

ருசி எனும் போதை!

உண்மையில், ருசி என்பது உணவகக்காரன் நம்மை ஏமாற்றப் பயன்படுத்தும் ஒரு மாயக்கவர்ச்சி. நடிகர் நடிகைகளின் கவர்ச்சிக்கு மயங்கும் ‘தற்குறிகளைப்’ போல, நாம் ருசி எனும் போதையில் சிக்கிக் கிடக்கிறோம்.

மைதா மாவும்... முன்னூறு ரூபாய் பன்னீரும்!

இருபது நாட்களுக்கு முன்பு முடிச்சூர் அருகே ஒரு ‘உணவகக் குடிலுக்கு’ சென்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை என்பதால் நடுத்தர வர்க்கம் தன் ருசி ஆசையைத் தீர்த்துக்கொள்ள குடும்பம் குடும்பமாக மொய்த்திருந்தது. காத்திருந்து இடம் பிடித்து மெனு கார்டைப் பார்த்தால் எல்லாம் வட இந்திய ‘நாண்’ மற்றும் ‘பன்னீர்’ ரகங்கள்.


உள்ளங்கை அளவு மைதா மாவை எடுத்து அதை வீசி வீசி அடித்து, சுடுகல்லில் போட்டு எடுத்த ஒரு நாண் தொண்ணூறு ரூபாய். அதற்குத் தொட்டுக்கொள்ள கொஞ்சம் பாலாடைக்கட்டியும் மசாலாவும் கலந்த ‘பன்னீர் பட்டர் மசாலா’ முன்னூறு ரூபாய்! ஒரு கிலோ பன்னீரே முன்னூறு ரூபாய்க்கு வாங்கிவிடலாம்.

ஆனால், இவர்கள் தரும் ஒரு சிறிய கிண்ணம் மசாலாவிற்கு இவ்வளவு விலையா? யாரிடம் கேட்க? 

இந்த விலை எல்லாம் ‘மிடில் கிளாஸ் ஓட்டல்'களில்தான். இதுவே மேட்டுக்குடிகளுக்கான நட்சத்திர ஓட்டல் என்றால் விலை கற்பனைக்கு எட்டாது.

மூலப்பொருள் ஒன்றுதான்... ஆனால் விலையோ பலவிதம்!

பிரிஞ்சி, நாண் மட்டுமல்ல... இனிப்பு, கார வகைகள், பிரியாணி, பழச்சாறுகள் என எதை எடுத்தாலும் இதுதான் நிலை. 

ஒரு கிலோ ஆட்டுக்கறி விலை எல்லாருக்கும் ஒன்றுதான்; ஒரு கிலோ சர்க்கரை விலை எல்லாருக்கும் ஒன்றுதான். ஆனால், கடையைப் பொறுத்து விலை பல மடங்கு எகிறுகிறது.

சாலையோரத்தில் 10 ரூபாய்க்குத் தாகம் தீர்க்கும் அதே எலுமிச்சை சாறு, பெரிய ஹோட்டல்களில் 'மின்ட் லெமனேட்' என்று பெயர் சூட்டப்பட்டு 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வேளாண் பொருளை உற்பத்தி செய்யும் விவசாயி தன் விளைபொருளுக்கு விலை வைக்க முடியாது; அதை வாங்கும் இடைத்தரகனோ அல்லது வியாபாரியோதான் முடிவு செய்கிறான். ஆனால், அதே பொருளைச் சமைத்து விற்கும் ஹோட்டல்காரன் மட்டும் தன் இஷ்டத்திற்கு விலை வைக்கிறான். இதைக் கேட்க ஒரு நாதியும் இல்லை.

சட்டம் ஒரு இருட்டறை!

உணவின் தரத்தைக் கட்டுப்படுத்த ‘உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் (FSSAI)’ இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், விலையைக் கட்டுப்படுத்த ஏதாவது சட்டம் இருக்கிறதா என்று பார்த்தால், “விலையைத் தீர்மானிக்க ஓட்டல்காரனுக்குச் சுதந்திரம் இருக்கிறது” என்பதே கசப்பான உண்மை. முப்பது ரூபாய் பன்னீர் மசாலாவை முன்னூறுக்கு விற்க அனுமதிக்கும் இந்தச் சட்டமும் நியாயமும் எங்கே போயின?

நாறுகிறது நாடு!

விலையைக் கட்டுப்படுத்த ஆள் இல்லை, தரத்தைக் கண்காணிக்க நேர்மை இல்லை. இந்தத் தைரியத்தில்தான் வேலூர் புதிய பேருந்து நிலையக் கழிவறையில் மூத்திரம் பெய்யக்கூட ஒரு முரட்டுத் தாடிக்காரன் பத்து ரூபாய் கேட்கிறான்.

இவை எதுவும் உரிய அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டாது. எட்டினாலும் அவர்கள் வாய்கள் ஏற்கனவே ‘எலும்புத் துண்டுகளைக்’ கவ்விக் கொண்டிருப்பதால் அவை பேசாது. 

கொள்ளைக்காரர்களுக்கு நாம் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றி ஏமாறுவது போல, நம்மை அறியாமலேயே நமது பாக்கெட்டில் இருந்து பணம் பறிபோவதை ருசியின் மயக்கத்தில் மறந்து போகிறோம்!

ஊரான்

Wednesday, 22 April 2026

கொரோனாவை விடக் கொடியது: ஒரு அரசுப் பேருந்துப் பயணத்தின் 'கலீஜ்' அனுபவம்!

தக்கோலம்-வேலூர் செல்லும் பேருந்தில் வாலாஜாவிலிருந்து விஷாரம் வரை ஒரு குறு பயணம். வழக்கமாக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும் "சரியான கட்டணம் கொடுக்கவும்", "தலை, கைகளை வெளியே நீட்டாதீர்கள்" போன்ற வாசகங்கள் நம் கண்ணில் படும். ஆனால், இந்தப் பயணத்தில் என் கண்ணில் பட்டது அந்தப் பேருந்தின் 'சுயரூபம்' தான்.


தூசு மாசுகளின் உறைவிடம்

பேருந்தின் உள்ளே நுழைந்தாலே மூக்கைத் துளைக்கும் நாற்றம். இது பேருந்தா இல்லை கோழி வண்டியா என்ற சந்தேகம் எழுகிறது. பக்கவாட்டு மைக்கா கண்ணாடிகள் முதல் அமரும் இருக்கைகள் வரை சென்டிமீட்டர் கணக்கில் அழுக்கு படிந்து கிடக்கிறது. ஒரு மனிதன் பிறந்தபோது குளிப்பாட்டப்பட்டு, பிறகு தள்ளாத வயது வரை குளிக்கவே இல்லை என்றால் எப்படியிருக்குமோ, அப்படி இருக்கிறது இந்தப் பேருந்தின் நிலை. நூறு வருஷத்து அழுக்கை மொத்தமாகச் சுமந்து கொண்டு ஓடுகிறது அந்த வாகனம்.

உயிருக்கு உலை வைக்கும் உள்கட்டமைப்பு

கூரையைப் பார்த்தால் பயம் வருகிறது. ஒயர்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. எலக்ட்ரீஷியன் வேலையில் கஞ்சத்தனம் காட்டியது போல ஆங்காங்கே இன்சுலேஷன் டேப் ஒட்டுப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒட்டடையும், தூசியும் சேர்ந்து பேருந்தை ஒரு பழைய இரும்புக்கடை போல மாற்றியிருக்கிறது.

பக்கத்தில் அமர்ந்திருப்பவர் தும்மினால் வரும் பயத்தை விட, அந்தச் சீட்டில் ஒட்டியிருக்கும் பல காலத்து வியர்வையும், அழுக்கும் தரும் பயம் அதிகம். தலையைச் சொரிந்து, மூக்கைத் துடைத்து பயணிகள் விட்டுச் சென்ற அத்தனை 'கலீஜ்களும்' அந்த இருக்கைகளில் உறைகின்றன.

இந்தப் பயணம் என்பது வெறும் பயணம் அல்ல; இது ஈஸ்னோபில் (Eosinophil) அளவை அதிகரித்து, நுரையீரலைப் பாதித்து, மூச்சுத் திணறலை உண்டாக்கும் ஒரு மெதுவான மரணப் பயணம்.


அதிகாரிகளின் அலட்சியமும், குளுகுளு கார் பயணங்களும்

பேருந்தின் முன்பக்கம் வெங்கடாஜலபதி படம் இருக்கிறது. அவர் வண்டியைக் காப்பார் என்ற நம்பிக்கை டிரைவருக்கு இருக்கலாம், ஆனால் பயணிகளின் ஆரோக்கியத்தை யார் காப்பது?

நிமிஷத்திற்கு ஒரு தரம் தங்கள் கார்களைத் துடைத்து மின்னச் செய்யும் அரசியல்வாதிகளுக்கும், குளுகுளு காரில் செல்லும் அதிகாரிகளுக்கும் சாமானியன் செல்லும் இந்தப் பேருந்து நரகத்தைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை  'பாத்ரூம் ஆசிட்' போட்டு கழுவினால் கூடப் போகும் அழுக்கு இது. ஆனால், பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு இதைக் கவனிக்க நேரமில்லை.

முடிவுரை

கொரோனா காலத்தில் மாஸ்க் போட்டோம். ஆனால், இன்றைய அரசுப் பேருந்து பயணங்களுக்கு அதைவிடக் கூடுதலான பாதுகாப்புத் தேவைப்படுகிறது. பேருந்தின் வெளியே எதுவும் தெரியாத அளவுக்குப் படிந்துள்ள இந்த அழுக்கைப் போக்க ஒரு பொதுநல வழக்குத்தான் போட வேண்டும் போலிருக்கிறது.

சாமானியன் கொடுக்கும் கட்டணத்திற்கு அவனுக்குக் கிடைப்பது ஒரு பாதுகாப்பான பயணமா? அல்லது நோய்த்தொற்று நிறைந்த நரகமா? பதில் சொல்ல வேண்டியது போக்குவரத்துத் துறையும், ஆளும் வர்க்கமுமே!

ஊரான்

Monday, 20 April 2026

உழைப்புச் சுரண்டலும் விடைதெரியா கேள்விகளும்: புதிய தொழிலாளர் சட்டங்கள் யாரைப் பாதுகாக்கிறது?

முன்னுரை: ஒரு பெண்ணின் ஓயாத போராட்டம்
அவள் பெயர் மல்லிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). விடியும் முன்னே எழுந்து தன் குடும்பத்தைப் பராமரித்துவிட்டு, நான்கு வெவ்வேறு இடங்களுக்கு வேலைக்கு ஓடுகிறாள். ஒரு காலை வேளையில் ஒரு சிறு தொழிற்சாலை, மதியம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, மாலை ஒரு வணிக வளாகம் என அவளது உழைப்பு சிதறிக் கிடக்கிறது. ஆனால், ஒவ்வொரு இடத்திலும் அவளுக்குக் கிடைக்கும் ஊதியம் வேறாக இருக்கிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் நான்கு வெவ்வேறு மாநிலங்களில் அல்லது நிறுவனங்களில் பணிபுரிந்தால், அவர்களுக்குக் கிடைக்கும் 'குறைந்தபட்ச ஊதியம்' (Minimum Wage) நான்கு விதமாக இருப்பதுதான் இன்றைய இந்தியாவின் எதார்த்தம்.
மல்லிகாவைப் போன்ற கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இன்றும் தங்களின் அடிப்படை உரிமையான குறைந்தபட்ச "சரியான கூலி"க்காக அல்லல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குறைந்தபட்ச ஊதியம்: மாநிலத்திற்கு மாநிலம் நிலவும் பாரபட்சம்
இந்தியாவில் குறைந்தபட்ச ஊதியம் என்பது மாநிலத்திற்கு மாநிலம் பெருமளவில் வேறுபடுகிறது. ஒரே வேலையைச் செய்யும் இருவருக்கு இரு வேறு மாநிலங்களில் வேறுபட்ட ஊதியம் வழங்கப்படுவது, உழைப்பின் மதிப்பைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.
இந்த ஊதிய முரண்பாடுகளைக் களைய ‘தேசிய அடிப்படை ஊதியம்’ (National Floor Wage) என்ற கருத்து சட்டத்தில் இடம்பெற்றிருந்தாலும், அது தொழிலாளர்களின் வாழ்வில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. 

நொய்டா போராட்டம்: தொழிலாளர்களின் கொந்தளிப்பு

அண்மையில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 40,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு நடத்திய மாபெரும் போராட்டம், உழைக்கும் வர்க்கத்தின் பொறுமை எல்லை மீறிவிட்டதைக் காட்டுகிறது.

தங்களுக்குச் சட்டப்பூர்வமாக வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி வழங்கக் கோரியும், புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளுக்கு (Labour Codes) எதிராகவும் இந்தப் போராட்டம் வெடித்தது.
சிறிய ஆலைகள் முதல் பன்னாட்டுப் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்துமே தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சுவதில் ஒரே நேர்க்கோட்டில்தான் பயணிக்கின்றன.

விவசாயி vs முதலாளி: ஒரு அற விழுமிய ஒப்பீடு

விவசாயத்தில் இன்று லாபம் என்பது குதிரைக்கொம்பாக மாறிவிட்டது. ஆனாலும், தன் நிலத்தில் பாடுபடும் கூலித் தொழிலாளிக்கு உரிய கூலியைக் கொடுக்க ஒரு விவசாயி தயங்குவதில்லை.

"தான் நட்டமடைந்தாலும் பரவாயில்லை, தன் நிலத்தை நம்பி வந்தவனுக்குக் கஞ்சி ஊற்ற வேண்டும்" என்கிற அந்த உயர்ந்த சிந்தனை ஒரு விவசாயியிடம் இருக்கிறது.
ஆனால், கோடிக்கணக்கில் லாபம் ஈட்டும் முதலாளிகளுக்கு இந்தச் சிந்தனை ஏன் வருவதில்லை? இன்றைய முதலாளிகள் மிகவும் திட்டமிட்டுத் தங்கள் லாபத்தைக் குறைத்துக் காட்டுகிறார்கள் அல்லது நட்டத்தையே கணக்காகக் காட்டுகிறார்கள்.
தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச பலன்களைத் தட்டிப்பறிக்க நட்டம் ஒரு கேடயமாகப் பயன்படுத்தப்படுகிறது.
புதிய தொழிலாளர் சட்டங்கள்: பாதுகாப்பா? பறிப்பா?

ஊதியம், தொழில் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை உறவுகள் ஆகிய நான்கு பிரிவுகளில் கொண்டு வரப்படும் இந்த மாற்றங்கள், உண்மையிலேயே தொழிலாளர்களைப் பாதுகாக்குமா? அல்லது வேலை நேரத்தை அதிகரிப்பதற்கும், எளிதாகத் தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்குவதற்கும் முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குமா?

மல்லிகாவைப் போன்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் உழைப்பிலேயே கழிக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான கூலி என்பது இன்னும் சட்டப் புத்தகங்களுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறது.

தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யாத எந்தச் சட்டமும் அவர்களைப் பாதுகாக்கப் போவதில்லை என்பதே கசப்பான உண்மை.
முடிவுரை

மத்திய அரசு அமல்படுத்தத் துடிக்கும் 4 புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் (New Labour Codes 2020) குறித்துப் பல்வேறு ஐயங்கள் எழுகின்றன.

லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட கார்ப்பரேட் கலாச்சாரத்தில், விவசாயியின் அந்த அறச் சிந்தனை முதலாளிகளுக்கு ஒருபோதும் வரப்போவதில்லை.

அரசு கொண்டு வரும் புதிய சட்டங்கள் முதலாளிகளின் லாபத்தைப் பாதுகாப்பதை விட, தொழிலாளர்களின் வயிற்றுப்பசியையும் உரிமையையும் பாதுகாக்க முன்னுரிமை அளிக்கவில்லை என்பதையே நொய்டா போராட்டம் உணர்த்துகிறது.

பொன்.சேகர்
வழக்குரைஞர்


Sunday, 19 April 2026

தேர்தல் கால 'எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்': அரசியல் அலப்பறைகள்!

முன்னுரை

தேர்தல் வந்துவிட்டாலே போதும். நம் அரசியல்வாதிகள் திடீரென ‘சகலகலா வல்லவர்கள்’ ஆகிவிடுகிறார்கள். நேற்று வரை ஏசி அறையில் ஓய்வை நாடியவர்கள், இன்று மாட்டுத் தொழுவத்தில் பால் கறப்பதும், மாட்டு வண்டியில் அமர்ந்து ஊர்வலம் வருவதும் பார்ப்பதற்கு உண்மையிலேயே ‘ஆஸ்கார்’ விருதுக்கான நடிப்புதான்.

கோப்புப் படம்

'மினிஸ்டர் ஒயிட்': அழுக்கை மறைக்கும் வெள்ளைத் திரை

வெயில் காலத்திற்கு வெள்ளை உடை பொருத்தமானது. ஆனால் ஆண்டு முழுவதும் ஆண் அரசியல்வாதிகள் ‘மினிஸ்டர் ஒயிட்’டில் மட்டுமே வலம் வருவது ஏன்? பெண்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைக்க ‘ஃபேரன் லவ்லி’ கிரீம் பூசுவது போல, இவர்கள் தங்கள் உள்ளத்தில் உள்ள கறையை மறைக்க இந்த வெள்ளை உடையை ஒரு கவசமாகப் பயன்படுத்துகிறார்களோ என்ற எண்ணத்தான் தோன்றுகிறது.

பெண் அரசியல்வாதிகள் வண்ணமயமான ஆடைகளில் வலம் வருகிறார்கள். அவர்களுக்கு மட்டும் வெயில் உரைக்காதா? அல்லது வெண்மை அவர்களுக்கு ஆபத்தா? சரி, உடையைப் பற்றி விவாதிப்பதை விட, உள்ளத்தில் இருக்கும் நேர்மையைப் பற்றி பேசுவது மிகவும் அவசியம்.

கற்பூர ஒளியும் 'கரன்சி' ரகசியமும்

சிலர் தேவாலயத்தில் மண்டியிடுகிறார்கள். சிலர் ஆலயங்களில் ஆசி பெறுகிறார்கள். தெருவுக்கு தெரு மகளிர் திரண்டு வேட்பாளருக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். இந்த உற்சாகத்திற்குப் பின்னால், ஆரத்தித் தட்டுகளுக்கு அடியில் ஒட்டியிருக்கும் கரன்சி நோட்டுகள் நம் கண்களுக்குத் தெரியாத ரகசியமாகவே இருக்கின்றன.

வேட்பாளருக்கு அணிவிக்கப்படும் பிரம்மாண்டமான மாலைகள், அளிக்கப்படும் பளபளக்கும் வாள்கள் — இவை வெறும் மரியாதை அல்ல. அவற்றுக்கும் வேட்பாளருக்கும் இடையில் கைமாறும் ‘சன்மானம்’ ஒரு பரம ரகசியமாகவே தொடர்கிறது.

‘இல்லை’களின் பட்டியல் – "சூமந்திரக் காளி" வித்தை

தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் அடுக்கும் “இல்லை”களின் பட்டியல் நீளமானது.

“சாலை இல்லை, குடிநீர் இல்லை, சாக்கடை இல்லை… இல்லை... இல்லை...இல்லை..., நான் வந்தால் இதையெல்லாம் சரி செய்வேன்.”

நாடு விடுதலை அடைந்து எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், அடிப்படை வசதிகள் இன்னும் செய்யப்படவில்லை என்பதை இவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். எம்.எல்.ஏ. பதவி கிடைத்தால் ஒரே இரவில் ‘சூமந்திரக் காளி’ வித்தை செய்து எல்லாவற்றையும் கொண்டு வந்துவிடுவார்கள் என நம்ப வைக்கிறார்கள்.

உண்மையில், இவை உள்ளாட்சி அமைப்புகள் செய்ய வேண்டிய பணிகள். ஆனால் அதைச் சுட்டிக்காட்டாமல், தாங்களே எல்லாவற்றையும் செய்வதாக வாக்குறுதி அளிப்பது வெறும் ஏமாற்று வித்தையே.

காணாமல் போன கரைத் துண்டுகள்

திமுக, அதிமுக உள்ளிட்ட பழைய கட்சிகளின் தோளில் இன்று கட்டம் போட்ட புதிய துண்டுகள்தான் தெரிகின்றன. ஒரு காலத்தில் கரை வேட்டிக்குச் சமமான மரியாதையைப் பெற்ற ‘கரைத் துண்டு’ இன்று வெறும் வியர்வைத் துடைக்கும் துண்டாக மாறியிருப்பது கால மாற்றத்தின் கோலமோ?

இந்த 'எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்' காட்சிகளைப் பழைய கட்சிகள் முதல் புதிதாக முளைத்த கட்சிகள் வரை அனைவரிடமும் காண முடிகிறது.

முடிவுரை

தேர்தல் என்பது மக்களுக்குச் சேவை செய்யும் களம் என்பதை மறந்துவிட்டு, அது ஒரு பெரிய ‘நடிப்புத் திருவிழா’வாக மாறிவிட்டது வேதனையான உண்மை. பால் கறப்பதாலும், மாட்டு வண்டி ஓட்டுவதாலும், எதுவும் மாறிவிடாது.

மக்கள் எப்போது இந்த அலப்பறைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை உணர்ந்து, வெறும் நடிப்பை அல்ல, செயல்பாட்டைப் பார்த்து வாக்களிக்கிறார்களோ — அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

ஊரான்

உன்னை எனக்குப் பிடிக்காது: ஏன் தெரியுமா?

முன்னுரை

மனித உறவுகளில் 'பிடிக்கும்', 'பிடிக்காது' என்பதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், மிக முக்கியமான ஒரு காரணம் - ஒருவன் நம்மை முழுமையாக அறிந்து கொள்வது. 

நம்முடைய முகமூடிகளைக் கழற்றி, நம் தவறுகளை ஒருவன் கண்டுவிட்டான் என்றால், அவனை நமக்குத் தானாகவே பிடிக்காமல் போய்விடும்.

உறவுகளில், நட்புகளில் தோழமைகளில் இதை நாம் அன்றாடம் காண முடியும். 


1.அறிதலின் பயம்

ஒருவன் என் மேன்மைகளை மட்டும் அறிந்திருக்கும் வரை அவன் என் நண்பன், தோழன். ஆனால், என் தவறுகளை அவன் தெரிந்து கொள்ளும் கணத்தில், அவன் எனக்கு எதிரியாகிறான். ஏனெனில், அவனது கண்கள் என் தவறுகளை எனக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. அவனைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு என் தவறுகளே நினைவுக்கு வருகின்றன.

2.எதிர்ப்பின் அடிப்படை

"நீ எதை ஆதரிக்கிறாயோ அதை நான் எதிர்ப்பேன்"
ஒருவனைப் பிடிக்கவில்லை என்றால், அவன் சொல்லும் உண்மைகூட நமக்கு கசக்கும்.
அவன் எதை ஆதரித்தாலும் அதை எதிர்க்கும் குருட்டுத்தனம் நம்மோடு ஒட்டிக்கொள்கிறது. 

3.போலிப் பிம்பத்தின் வீழ்ச்சி

தவறுகளைத் தெரிந்து கொண்டவன் பக்கத்தில் இருந்தால், நம்மால் தொடர்ந்து 'நல்லவனாக' நடிக்க முடியாது. அந்த நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பவனைத் தள்ளி வைப்பதன் மூலமே, நாம் மீண்டும் நம் பொய்களைத் தொடர முடியும் என்று மனம் நம்புகிறது.

முடிவுரை

உண்மையில், நம் தவறுகளைத் தெரிந்தவனைப் பிடிக்கவில்லை என்பது, நம்மையே நமக்கு பிடிக்கவில்லை என்பதன் வெளிப்பாடுதான்.
அடுத்தவர்களுக்காகத் தன்னை மாற்றிக் கொள்பவர்கள், தங்களின் உண்மையான பிம்பத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.

தமிழ்மணி

Saturday, 18 April 2026

பசியும் மானமும்!

முன்னுரை

தமிழகத்தின் அரசியல் களத்தில் அம்பேத்கர் - பெரியார் சிந்தனைகள் ஒரு பெரும் அலையை உருவாக்கியுள்ளன. தங்களைச் சிறந்த 'புரட்சியாளர்களாகக்' கருதிக்கொள்ளும் இச்சிந்தனையாளர்கள் பல நேரங்களில் சமூகத்தின் ஒரு பகுதியை மட்டுமே காண்கிறார்கள். மானமும் மரியாதையும் மனிதனுக்கு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை; ஆனால், பசியும் வறுமையும் அதைவிடப் பாரிய சவால்கள் என்பதைப் பலரும் வசதியாக மறந்துவிடுகிறார்கள்.


1. பசி: ஆகக்கொடிய உணர்வு

வயிறு பசித்த மனிதனின் வேதனையை, அந்தப் பசியை அனுபவிப்பவனைத் தவிர வேறு ஒருவராலும் உணர முடியாது. சமூகச் சீர்திருத்தங்கள் பேசும் மேடைப் பேச்சாளர்களால் இந்தப் பசியின் தீவிரத்தை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. 

"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" என்பது முதுமொழி. பசி வரும்போது ஒரு மனிதன் தன் மானத்தையும் கௌரவத்தையும் மறந்து கையேந்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான். இந்த 'யாசகம்' தான் ஒரு மனிதனின் மரியாதையைச் சிதைக்கும் முதல் புள்ளி.

2. பொருளாதார பலமே மானத்தின் அடித்தளம்

ஒரு மனிதன் ஏன் பிறரை யாசிக்க வேண்டும்? அவன் பொருளாதார ரீதியாகச் சுரண்டப்படுவதால், தன்னிறைவு அற்றவனாக இருக்கிறான். 

கம்யூனிசம் எதைப்பேசுகிறது? உழைக்கும் வர்க்கத்தின் பொருளாதார பலத்தைப் பெருக்குவதைத்தான் அது முதன்மையாகப் பேசுகிறது.
  • ஒரு மனிதன் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்று, கையேந்தாத நிலையை அடையும்போது, அவனது மானமும் மரியாதையும் தானாகவே மெல்ல மெல்ல உயரத் தொடங்கும்.
  • பசியைப் போக்காத எந்தச் சீர்திருத்தமும் ஒரு மனிதனுக்கு நிரந்தர மரியாதையைத் தந்துவிடாது. இதுவே வறுமை ஒழிப்பு குறித்த அறிவியல் பூர்வமான தீர்வு.

3. சீர்திருத்தவாதிகளும் கம்யூனிஸ்டுகளும்

பெரியார் மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள் பெரும்பாலும் மானம் மற்றும் மரியாதை என்ற சமூகத் தகுதியை (Social Status) முன்னிறுத்துகின்றன. அவர்கள் பசியையும் வறுமையையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். ஆனால், கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தின் மூலம் பொருளாதாரச் சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயல்கிறார்கள்.

இங்கே ஒரு முக்கியமான உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்: கம்யூனிசத்தை வெறுக்கின்ற பெரியார் மற்றும் அம்பேத்கர் சிந்தனையாளர்களும் உண்டு. ஆனால், சாதி இழிவை அங்கீகரிக்கின்ற கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் கிடையாது. கம்யூனிஸ்டுகள் சாதி ஒழிப்பை வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கிறார்கள்.

4. முழுமையான வெற்றி எங்கே இருக்கிறது?

பொருளாதார விடுதலை இல்லாத சமூக விடுதலை என்பது அடித்தளமில்லாத கட்டிடம் போன்றது. மானமும் மரியாதையும் வேண்டும், அதே சமயம் வறுமையற்ற வாழ்வும் வேண்டும். இந்த இரண்டையும் இணைத்துப் பேசும் ஆற்றலும், அதற்காகப் போராடும் தத்துவ வலிமையும் மார்க்சிய-லெனினிய கம்யூனிச இயக்கங்களுக்கு மட்டுமே உண்டு. 

பசியையும் வறுமையையும் ஒழிக்கும் வர்க்கப் போராட்டத்தோடு, சமூக இழிவைத் துடைக்கும் சாதி ஒழிப்பையும் இணைக்கும்போதுதான் சமூகப் புரட்சி முழுமையடையும்.

முடிவுரை

வெறும் சீர்திருத்தங்களோடு திருப்தி அடைபவர்கள் புரட்சியாளர்களாக முடியாது. பசியையும் மானத்தையும் ஒன்றாகக் கருதி, சுரண்டலற்ற ஒரு சமத்துவச் சமூகத்தைப் படைக்கப் போராடும் கம்யூனிசமே உண்மையான விடுதலையைத் தரும். பொருளாதார பலமே மானத்தைக் காக்கும் கவசம் என்பதை உணர்ந்து, புரட்சிகரப் பாதையில் பயணிப்பதே காலத்தின் கட்டாயம்!

தமிழ்மணி

Friday, 17 April 2026

சந்தையின் தந்திரங்கள்: நாம் ஏய்க்கப்படுகிறோமா?

முன்னுரை

அறிவார்ந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது, மாலை நேர சாலையோரக் கடை ஒன்றில் வாங்கிய 'செவ்வாழை' எனக்குள் சில கேள்விகளை எழுப்பியது.

“மற்ற கடைகளில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் இதே செவ்வாழை, இங்கு மட்டும் 100 ரூபாயா” என வினவிய போது, "அது ஆந்திரா சரக்கு, இது நம்ம ஊர் டேஸ்ட்" என்ற ஒற்றை வரி விளக்கம் வந்தது. இந்த 'டேஸ்ட்' என்ற மாயைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வியாபாரத் தந்திரம் என்ன?


ருசியா? சத்தா?

வாழைப்பழங்களில் பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி, பச்சைவாழை எனப் பல ரகங்கள் இருப்பதும், ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான சுவை இருப்பதும் நாம் அறிந்ததே. ஆனால், செவ்வாழை என்ற ஒரே ரகத்தில் மாநிலம் மாறினால் சத்துக்கள் மாறிவிடுமா என்ன? 

மண்ணும் நீரும் மாறினால் சுவையில் சிறு வேறுபாடு இருக்கலாம். ஆனால் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்ற முக்கிய சத்துக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்.

நாம் பழத்தைச் சுவைக்காகச் சாப்பிடுகிறோமா அல்லது சத்துக்காகவா? கூடுதல் விலை கொடுத்துச் செவ்வாழை வாங்குபவர்கள் அதன் மருத்துவக் குணத்திற்காகவே வாங்குகிறார்கள்.

அப்படியிருக்கையில், "ஆந்திரா பழம் ருசிக்காது" என்ற வியாபாரியின் வாதம், நுகர்வோரின் அறியாமையைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு 'விலை உயர்வு' தந்திரமே அன்றி வேறல்ல.

பேரிச்சம்பழம்

செவ்வாழைக்குச் சொல்லப்பட்ட அதே கதைதான் பேரிச்சம்பழத்திற்கும் பொருந்தும். அரேபிய நாடுகளிலிருந்து வரும் ஒரே வகை பேரிச்சம்பழத்திற்கு, இங்கே உள்ளூர் வியாபாரிகள் விதவிதமான 'பிராண்டு' பெயர்களைச் சூட்டுகிறார்கள். 

பழத்தின் 'சைசில்' சிறு மாற்றம் இருந்தால் கூட, அதை ஒரு 'பிரீமியம்' ரகமாகச் சித்தரித்து அதிக விலைக்கு விற்கிறார்கள். உண்மையில், இங்கே கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வேண்டுமானால் மாறுபடலாமே தவிர, சுவையிலும் சத்துக்களிலும் பெரிய வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை.

‘பிராண்டிங்’ எனும் மாயவலை (The Branding Trap)

ஒரே பொருள்தான், ஆனால் அது விளம்பரப்படுத்தப்படும் விதத்தில் அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. வட மாவட்டங்களில் 'களம்பூர் அரிசி' என்றால் அதற்குத் தனி மவுசு. வேறு பகுதியில் விளைந்த அரிசியைக் கூட... 'களம்பூர்' என்ற முத்திரையோடு விற்றால்கூட  மக்கள் ஏமாறுகிறார்கள். பொருளின் உண்மையான தரத்தைவிட அதன் பெயரே விலையை நிர்ணயிக்கும் நிலை உருவாகிறது.

ஒரு பொருளின் தரத்தைவிட, அந்தப் ‘பிராண்டின்’ மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வியாபாரிகள் பணமாக்குகிறார்கள். 
ஒரே குட்டையில் ஊறிய மட்டையை வெவ்வேறு பைகளில் அடைத்து விற்கும் நுட்பத்தை நாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோம்?

மக்களை ஏய்க்கும் சந்தை அரசியல்

விளம்பரங்களினாலும், பழகிப்போன சுவை விருப்பங்களினாலும் மக்கள் ஒரு குறிப்பிட்ட ‘பிராண்டிற்கு' அடிமையாகிறார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள், ஒரே தரத்திலுள்ள பொருளை வெவ்வேறு விலைகளில் சந்தைப்படுத்துகின்றன.
  • "உள்ளூர் தயாரிப்பு"
  • "இயற்கை உரமிட்டது"
  • "பாரம்பரிய ரகம்"
எனச் சொல்லப்படும் பல அடைமொழிகள் பெரும்பாலும் கூடுதல் விலையை நியாயப்படுத்த உருவாக்கப்படும் கற்பனைக் கதைகளே.

முடிவுரை

சாலையோரக் கடையில் 20 ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வாங்கிய அந்தச் செவ்வாழை எனக்கு ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது. நாம் வாங்குவது பழத்தை மட்டுமல்ல, அந்தப் பழத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட 'சுவை' 'சத்து' என்ற மாயக் கதையையும் சேர்த்துத்தான்.

சந்தை என்பது ஒரு மாயக் காடு. அந்தக் காட்டில் வழிகாட்டியாக இருப்பது விளம்பரங்கள்; நம்மை வழி தவறச் செய்வது வியாபாரிகளின் கதைகள். அங்கே விளம்பரங்களும், வியாபாரிகளின் வாய்ஜாலங்களும் நம்மை வழிநடத்த நாம் அனுமதித்தால், சத்துக்களுக்குப் பதில் வெறும் கதைகளையே உண்டு கொண்டிருப்போம். 

ஊரான்