Showing posts with label டாஸ்மாக். Show all posts
Showing posts with label டாஸ்மாக். Show all posts

Friday, 21 June 2024

கோவனுக்கு எதிராக நெளியும் புழுக்கள்!

கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள் நடந்த பிறகு கோவனுக்கு எதிராக சில திண்ணைத் தூங்கிகள், கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து எள்ளி நகையாடி வருகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக ஓராண்டுக்கு முன்பு அவர் பாடிய பாடல் இந்தத் திண்ணைத் தூங்கிகளுக்குத் தெரியவில்லை போலும். திருச்சியில் இரண்டு டாஸ்மாக் சாராயக்கடைகளை மகஇக போராட்டத்தின் மூலம் மூடி இருக்கிறார்கள். அப்பொழுது எழுதப்பட்ட பாடல் அது.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.


ஒரு பாடல் வைரல் ஆவதும், வைரல் ஆகாமல் இருப்பதும் சமூக ஊடகங்களைப் பொறுத்தது. ஊத்திக் கொடுத்த உத்தமியை பிரபலமாகியவர்கள் தமிழ்நாடு காவல்துறையும் சமூக ஊடகங்களும்தான்‌.

நிற்க, கலைஞர் ஆட்சி காலத்தில் கலைஞருடைய பெயரைக் குறிப்பிட்டு அவர் மேடைகளில் பாடிய பொழுது திமுக காரர்களின் நேரடி தாக்குதலுக்கெல்லாம் உள்ளாகி இருக்கிறார் என்பது இந்தத் திண்ணைத் தூங்கிகளுக்குத் தெரியாது.

நிற்க, ஒரு கலைஞனின் செயல்பாடுகள், ஏன் இப்போது அப்படி இல்லை, இப்படி இல்லை என்று புலம்புகின்ற திண்ணைத் தூங்கிகள்,  எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ  அப்படி இந்தத் திண்ணைத் தூங்கிகள் செய்வதை யார் தடுத்தது? 

திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும் கடந்த காலங்களில் பல்வேறு மேடைகளில் உயிரைப் பணயம் வைத்து அவரோடு ஒரு மேடைப் பேச்சாளராக உடன் பயணித்தவன் நான். அப்பொழுதெல்லாம் சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டம். அதனால் அத்தகைய செயல்பாடுகளை எல்லாம் கூகுளில் தேடினாலும் கிடைக்காது. தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, அவரைக் குறை கூறுவதற்கு திண்ணைத் தூங்கிகள் எவருக்கும் எந்த அருகதையும் கிடையாது. 

நெளிகிற புழுக்கள் நெளிந்து கொண்டே இருக்கட்டும். அருவருப்பாகத்தான் இருக்கும். ஆனால், புழுக்களின் காலம் மிகவும் சொற்பமானது.

தமிழ்மணி

Friday, 19 May 2023

கள்ளச்சாராயச் சாவுகள்: திமுக அரசுக்குத் துணை போவது கோவனா? அல்லது எடுபிடி ஊடகங்களா?

கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து, மகஇக கோவனையும், சமூகப் போராளிகளையும் குறை சொல்லும் பிரச்சாரம் சங்கிகளாலும், அதிமுக எடுபிடிகளாலும் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட ஒரு சில உதிரிகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

'மூடு டாஸ்மாக்கை!' என்று இன்று ஏன் கோவன் பாடவில்லை? திமுகவுக்கு கோவன் விலைபோய் விட்டாரா? என்றெல்லாம் இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மூடு டாஸ்மாக்கை என்று கோவன் பாடியது ஜெயலலிதா ஆட்சி காலத்தில். ஆனால் அதைத் தொடர்ந்து ஆட்சி செய்த எடப்பாடி ஆட்சி காலத்தில் சுமார் நான்காண்டு காலத்திற்கு மூடு டாஸ்மாக்கை என்று கோவன் பாடவில்லையே? அப்படியானால் அவர் எடப்பாடிக்கு விலை போய் விட்டார் என்று எவரும் கேள்வி எழுப்பவில்லையே?

மது ஒழிப்புப் போராளி சசிபெருமாளின் மரணம், அதைத் தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் சாராயக் கடைகளுக்கு எதிராகப் பெண்கள் நடத்தியப் போராட்டம், பொதுமக்களே சாராயக் கடைகளை அடித்து நொறுக்கியது உள்ளிட்ட புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான்  மூடு டாஸ்மாக்கை என்ற பாடலை கோவன் பாடினார். அது அன்றைய தேவையாகவும் இருந்தது. 

ஆனால், அதன் பிறகு எடப்பாடி ஆட்சி, தற்போது ஸ்டாலினின் இரண்டு ஆண்டுகால ஆட்சி என கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக டாஸ்மாக்குக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும், இன்று கோவனுக்கு எதிராகக் கம்பு சுத்தும் காகிதப் புலிகள் உட்பட,  எவருமே முன் வைக்கவில்லை. கள்ளச்சாராய மரணங்கள் நடந்த பிறகுதான் இவர்களுக்கு டாஸ்மாக்கே நினைவுக்கு வருகிறது. எனவே கோவனை குறை சொல்வதற்கு இத்தகைய நபர்கள் எவருக்கும் எந்த அருகதையும் கிடையாது.

கஞ்சா, கள்ளச்சாராயம், டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, போராளிகளைக் குறை கூறுவதன் மூலம் ஒட்டுமொத்த பிரச்சனையை திசை திருப்பி எதிர்க்கட்சிகளுக்குத் துணைபோகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்