Friday, 19 May 2023

கள்ளச்சாராயச் சாவுகள்: திமுக அரசுக்குத் துணை போவது கோவனா? அல்லது எடுபிடி ஊடகங்களா?

கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து, மகஇக கோவனையும், சமூகப் போராளிகளையும் குறை சொல்லும் பிரச்சாரம் சங்கிகளாலும், அதிமுக எடுபிடிகளாலும் மற்றும் நாம் தமிழர் உள்ளிட்ட ஒரு சில உதிரிகளாலும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

'மூடு டாஸ்மாக்கை!' என்று இன்று ஏன் கோவன் பாடவில்லை? திமுகவுக்கு கோவன் விலைபோய் விட்டாரா? என்றெல்லாம் இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். மூடு டாஸ்மாக்கை என்று கோவன் பாடியது ஜெயலலிதா ஆட்சி காலத்தில். ஆனால் அதைத் தொடர்ந்து ஆட்சி செய்த எடப்பாடி ஆட்சி காலத்தில் சுமார் நான்காண்டு காலத்திற்கு மூடு டாஸ்மாக்கை என்று கோவன் பாடவில்லையே? அப்படியானால் அவர் எடப்பாடிக்கு விலை போய் விட்டார் என்று எவரும் கேள்வி எழுப்பவில்லையே?

மது ஒழிப்புப் போராளி சசிபெருமாளின் மரணம், அதைத் தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் சாராயக் கடைகளுக்கு எதிராகப் பெண்கள் நடத்தியப் போராட்டம், பொதுமக்களே சாராயக் கடைகளை அடித்து நொறுக்கியது உள்ளிட்ட புறச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டுதான்  மூடு டாஸ்மாக்கை என்ற பாடலை கோவன் பாடினார். அது அன்றைய தேவையாகவும் இருந்தது. 

ஆனால், அதன் பிறகு எடப்பாடி ஆட்சி, தற்போது ஸ்டாலினின் இரண்டு ஆண்டுகால ஆட்சி என கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக டாஸ்மாக்குக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும், இன்று கோவனுக்கு எதிராகக் கம்பு சுத்தும் காகிதப் புலிகள் உட்பட,  எவருமே முன் வைக்கவில்லை. கள்ளச்சாராய மரணங்கள் நடந்த பிறகுதான் இவர்களுக்கு டாஸ்மாக்கே நினைவுக்கு வருகிறது. எனவே கோவனை குறை சொல்வதற்கு இத்தகைய நபர்கள் எவருக்கும் எந்த அருகதையும் கிடையாது.

கஞ்சா, கள்ளச்சாராயம், டாஸ்மாக் சாராயக் கடைகளுக்கு எதிராக மக்கள் கருத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, போராளிகளைக் குறை கூறுவதன் மூலம் ஒட்டுமொத்த பிரச்சனையை திசை திருப்பி எதிர்க்கட்சிகளுக்குத் துணைபோகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். 

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment