"ஆபாசத் திரைப்படங்களைத் தீயிட்டுக் கொளுத்துவோம்! சாராயச் சீரழிவிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுப்போம்!"
என்ற தலைப்பில்,
25 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, "பெண்கள் விடுதலை முன்னணி" சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரம்.
தமிழ்மணி
"ஆபாசத் திரைப்படங்களைத் தீயிட்டுக் கொளுத்துவோம்! சாராயச் சீரழிவிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுப்போம்!"
என்ற தலைப்பில்,
25 ஆண்டுகளுக்கு முன்பு, திருச்சி, "பெண்கள் விடுதலை முன்னணி" சார்பாக வெளியிடப்பட்ட பிரசுரம்.
தமிழ்மணி
இதுவரை நான் எடுத்துச் சொன்னவை ஒரு வகை மாதிரிதான். இப்படி எண்ணற்றத் தோழர்களின் அளப்பரிய தியாகம் மற்றும் கடும் உழைப்பால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுச் செயல்படும் அமைப்புகள்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள்.
திருச்சி பெல் நிறுவன ஊழியர்களைக் கொண்டுதான் 1982 ல் மக்கள் கலை இலக்கியக் கழகம் திருச்சி கிளை தொடங்கப்பட்டது. இராணிப்பேட்டை பெல் ஊழியர்களைக் கொண்டுதான் வேலூர் கிளையும் செயல்பட்டு வந்தது. திருச்சி, வேலூர் மட்டுமன்றி மதுரை, கோவை, கடலூர், சென்னை, சிவகங்கை ஆகிய கிளைகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்கள்தான். ஒரு சில தோழர்கள் தங்களது அலுவலக வேலையை விட்டுவிட்டு இயக்கப் பணிகளையே நிரந்தர வேலையாக மேற்கொண்டனர்.
நிரந்தரமான வேலை, அதுவும் அரசு வேலை, கை நிறைய ஊதியம் என சொகுசாக வாழ முடியும் - அதாவது 'மார்க்சியர்கள்' வார்த்தையில் குட்டி முதலாளித்துவ வாழ்க்கை வாழ முடியும்-என்ற போதிலும் கூட, தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக் கொண்டு செயல்பட முன்வந்ததற்கான அடிப்படைக் காரணம் மார்க்சியத்தின்பால் இவர்கள் கொண்ட காதல்தான். முதலாளித்துவ சுரண்டல் அமைப்பிலிருந்து மக்களை மீட்பதற்கு மார்க்சியம்தானே இன்றும் ஒரே மாமருந்தாக உள்ளது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் தொடர்ந்து விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி என அந்தந்தப் பிரிவு மக்களுக்கான அமைப்புகள் தொடங்கப்பட்டன. மிகச் சாதாரண மக்களையும் இந்த அமைப்புகள் தன்வசம் ஈர்த்தன. 2015 ல் மக்கள் அதிகாரம் தொடங்கப்பட்டு, அது முன்னெடுத்த போராட்டங்களால், பெருவாரியான மக்களை ஈர்த்ததோடு, அது ஒரு அரசியல் சக்தியாக பிறரால் அங்கீகரிக்கும் அளவுக்குப் பிரபலமடைந்தது. அரசு மற்றும் ஆலை ஊழியர்கள் மட்டுமன்றி, சிறு வியாபாரிகள், நடுத்தர விவசாயிகள் உள்ளிட்ட சகல பிரிவு மக்களையும் இந்த அமைப்புகள் தம்பக்கம் ஈர்க்கத் தொடங்கின.
மற்ற கட்சிகளில், கட்சி வேலைகள்-களப்பணி என்பது வேறாகவும், வாழ்க்கை முறை என்பது வேறாகவும் இருக்கும். பொதுவுடைமை இயக்கத்தினர் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்கள் மட்டும் இதில் விதிவிலக்காக இருப்பர். தங்களது வாழ்க்கை முறையையும் இயக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். சாதி-மத-சடங்கு- சம்பிரதாயங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை விட்டொழித்து பகுத்தறிவு வாழ்க்கை முறையை கைக்கொள்கின்றனர் பெரியாரிய சிந்தனையாளர்கள். மேற்கண்ட அம்சங்களுடன் கூடுதலாக சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்களைப் போல எளிமையான வாழ்க்கை முறையையும் மேற்கொள்கின்றனர் பொதுஉடைமை சிந்தனையாளர்கள்.
உழைப்பை மட்டுமே விற்று வாழக்கூடிய ஏழை எளிய மக்கள்தானே பாட்டாளிகள். புரட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், பொதுவுடமை இயக்கத்தில் செயல்பட முன் வருகின்ற படித்த, வசதி படைத்த பிரிவில் இருந்து வருபவர்கள் தங்களது சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையை பாட்டாளிகள் நிலைக்கு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் உணர்த்துகிறது.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மீது "நக்சலைட்" என்று முத்திரை குத்தி அச்சுறுத்த ஒரு சிலர் முயற்சி செய்தாலும், அதையெல்லாம் துச்சமெனத் தூக்கி எறிந்து செயல்பட பலர் முன் வருகின்றனர். அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டே, மாலை நேரம், விடுமுறை நாட்களை இயக்கப் பணிகளுக்காக ஒதுக்குகின்றனர். மிக முக்கியமான வேலை என்றால் சம்பள இழப்பைக் கூட பொருட்படுத்தாமல் விடுப்பு எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். தங்களுடைய வருவாயில் ஒரு பகுதியை இயக்கத்திற்கு மாதந்தோரும் நன்கொடையாக அளிக்கின்றனர்.மக்கள் கலை இலக்கியக் கழகம் தடைசெய்யப்பட்ட அமைப்பும் அல்ல; ஒரு கலை இலக்கிய அமைப்பில் ஒரு அரசு ஊழியரோ, ஆலைத் தொழிலாளியோ செயல்படுவது சட்டப்படி தவறான நடத்தையும் அல்ல என்பதையும் இவர்கள் தெரிந்தே வைத்துள்ளனர்.
தமிழகத்தின் எந்த மூலையில் போராட்டம் நடந்தாலும், நீண்ட தூரப் பயணத்தையும், பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு போராட்டங்களில் பங்கேற்கின்றனர். தங்களுடைய சேமிப்பின் பெரும் பகுதியை இயக்க வேலைகளுக்காகச் செலவிடுகின்றனர். கைது-வழக்கு-சிறை எதுவரினும் துணிச்சலோடு எதிர்கொள்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் தம்முடைய வாழ்க்கையில் கணிசமான நேரத்தையும், தங்களது வருவாயில் கணிசமானத் தொகையையும் இயக்கப் பணிகளுக்காக ஒதுக்குகின்றனர்.
இவர்களில் சிலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றினாலும், கையூட்டுப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், இவர்கள் இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை. இவர்கள் மதுபோதைக்கு ஆட்படுவதில்லை; ஆணாதிக்கத் திமிரோடு பெண்களை இழிவாக நடத்துவதில்லை. ஆதிக்கச் சாதி பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை. சாதி மறுப்புத் திருமணங்களை மிக இயல்பாக மேற்கொள்கின்றனர். பாதிக்கப்படுகிற மக்களுக்குத் தங்களால் இயன்றவரை ஓடோடி உதவிகள் செய்கின்றனர். இவர்களிடம் இழி குணம் ஏதும் இல்லை என்பதால் இவர்கள் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகின்றனர். மொத்தத்தில் இவர்கள் ஓய்வறியாப் போராளிகள்.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9
இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7
இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6
இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5
முதலில் வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள், பிறகு பேச்சுவார்த்தை என இழுத்தடித்தது நிர்வாகம். இறுதியில் இரு தரப்பும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, புதிய ஊழியர் எண்ணோடு புதிதாய்ப் பணிக்குச் சேர்ந்தோம்.
மூவர் ஹைதராபாத்திலும், ஒருவர் இராணிப்பேட்டையிலும் சேர்ந்துவிட, பெங்களூர் EDN எனை எடுக்கத் தயங்க, என்றோ நான் கேட்ட இராணிப்பேட்டை என்னைத் தேடி வந்தது. 'தமக்கெதுவும் தகவல் இல்லை' என அங்கும் மறுக்க, பிறகு தாய்ச் சொல்லை தட்டாமல், மூன்று நாள் கழித்து 26.03.1998 முன் தேதியிட்டு என்னை ஏற்றுக் கொண்டது இராணிப்பேட்டை.
திருச்சியில் என்னை இடைநீக்கம் செய்த பாபுதான் இங்கு தலைமை அதிகாரி. மூட்டு வலியிலிருந்து மீண்டவன் எனத் தெரிந்தும், பணி நிமித்தமாய் அடிக்கடி வெளியூர் செல்லும் நிர்மாணச் சேவைத் துறையில் இணைக்கப்பட்டேன். சில ஆண்டுகள் தமிழகத்தின் நரிமணம், நரிப்பையூர், ஒடிசாவின் அங்குல், டால்ச்சர் என மன நிறைவாய் பணி செய்தும், சில சமயம் முடியாத வேலைகளுக்கு, அவை பின்னால் முடிக்கப்படும் என்றாலும்கூட, முன்கூட்டியே முடிந்ததாய் கணக்கெழுத என் மனம் இடம் கொடாததால் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் உள்ள அளவீட்டியல் (metrology) பிரிவில் என்னைப் பிணைத்துக் கொண்டேன்.
மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளாய் பதவி உயர்வு பெறுவதற்கான நேர்காணலைச் சந்தித்தேன். தகுதி உடையோரில் நான் ஒருவன்தான் பட்டதாரி எனத் தெரிந்தும், திருச்சியை நினைவில் கொண்டு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. எத்தனை முறைதான் ஒரு மாட்டைத் தோலுரிக்க முடியும்? தவிர்க்க முடியா நபராய் நான் நிலை பெற்றதால், மேற்கொண்டு என்னை முடக்க முடியவில்லை.
அளவீட்டியல் பிரிவின் தலைமையாய், தரக் கட்டுப்பாட்டுத் துறை-விசிறிகள் பிரிவின் தலைமையாப் பொறுப்பேற்று, பழனிச்சாமி-ஏகாம்பரத்தின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டு, முர்மு-சுகன்யாவின் கடின உழைப்போடு
பதினைந்து ஆண்டுகளாய் அளவீட்டியல் கூடத்திற்கு இல்லாதிருந்த NABL அங்கீகாரத்தை 2017-ல் பெற்றுத் தந்து 24.06.2018-ல் பணி நிறைவு பெற்றேன். பணி நிறைவு விழாவின் போது கூட, எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், அவை 'புரோட்டாக்காலாய்' இருந்தும் கூட, மாலையையும் பொன்னாடையையும் புறக்கணித்தேன்.
பழைய ஊதியம் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதம் புதிய ஆணையில் குறிப்பிட்டிருந்த போதும், முறையீடுகளோடு அது முடிந்து போனது. அரை ஊதியத்தில் பாதி பணிக்காலம் முடிந்து, ஓய்வூதியமும் பாதிதான் என்பதால் முறையீடுகளும் தொடர்கின்றன. கிட்ட வில்லை என்பதற்காக விலங்குகள் கூட சோர்ந்து விடுவதில்லை.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9
இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7
இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6
முப்பத்தேழு வயதில் வழக்கறிஞருக்கு விண்ணப்பித்தேன். 'இதுவரை என்ன செய்தீர்?' என பார் கவுன்சில் வினவ, 'பெல்லிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டேன்' என்றபோது 'எடுத்து வா அதற்குண்டான ஆவணங்களை, என்றுரைத்து, 'அதில் இழி குணம் (moral turpitude) ஏதும் இருப்பின் இரண்டு ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக முடியாது' என்ற விதி உண்டு என்றார்கள்.
குற்ற அறிக்கை, விசாரணை முடிவுகள் அனைத்தையும் கொடுத்து விட்டுக் காத்திருந்தேன். எனது வேலை நீக்கத்தில் இழி குணம் ஏதும் இல்லை என்றாலும் தாமதமானதால், பார் கவுன்சில் உறுப்பினர் முத்துக்கிருஷ்ணன் வழிகாட்ட, சேர்மென் வேலூர் மார்க்கபந்து அவர்களுக்குத் தந்தி கொடுத்தேன். எல்லாம் இனிதே முடிந்தது. 1995 டிசம்பரில் இளம் வழக்கறிஞராய் நீதிமன்றப் படிக்கட்டுகளில்.
THE ADVOCATES ACT, 1961
வஞ்சிக்கப்படுவோருக்கு வஞ்சமின்றி உண்மையாய் வழக்காட வேண்டும் என்பதால், வழக்காடுதலை 'உன்னதத்' தொழில் என்பார்கள். பாலியல் பாவிகளும், இலஞ்ச ஊழல் பேர்வழிகளும் இதற்கு இலாயக்கற்றவர்கள் என்பதால்தான் வழக்காடிகள் இழிகுணம் அற்றோராய் இருக்க வேண்டும் என விதி வைத்தார்கள் போலும். பொதுச் சேவையில் ஈடுபடுவோருக்கு இதுவும் சாலப் பொருந்தும்தானே?
'சேகருக்கென்ன, வக்கீலாயிட்டான்?' என உறவுகளும், 'தமிழ்மணிக்கென்ன வழக்கறிஞராகிவிட்டார்?' என சகத் தோழர்களும் எண்ணியிருக்கக்கூடும்.
'சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே? உபாத்தியாயர் தொழிலுக்குப் போய்விடலாமா?' என பாரிஸ்டர் காந்தியே திண்டாடிய போது, சேகருக்கு மட்டும் திருச்சியில் தேன் மழையா பொழிந்துவிடும்? இரவு 8 மணிக்கு மேல் யார் பார்க்கப் போகிறார்கள் என்று, ஐந்து ரூபாயைக் கூட கேட்கக் கூச்சப்பட்டு டைமண்ட் பஜாரிலிருந்து உறையூர் நெசவாளர் காலனி வரை சில சமயம் நடந்து சென்றதுண்டு.
அப்பாய் மளிகையிலும், சிந்தாமணியிலும் மாதச் சாமான் வாங்கியது போய், கையிலே காசு கிட்டும்போது மட்டும் கடைக்குச் செல்வதாயிற்று. குக்கரைத் திறக்கும் போது பிள்ளைகள் வெளியில் ஓடி விடுவர். முதிர்ந்த தோழர்களே ரேசன் அரிசிச் சோற்றின் வீச்சம் கண்டு மூக்கை பொத்திக் கொள்ளும் போது பாவம் பிஞ்சுகள் என்ன செய்யும்? போஜகுமார் குறிப்பறிந்து கொடுத்த காசில் வாடகைக்குப் போக எஞ்சியதில் காலம் ஓடியது. நீதிமன்ற வளாகத்தில் அவர் வாங்கிக் கொடுக்கும் முருக்கும் சீடையுமே என் பிள்ளைகளின் நொறுக்குத் தீனி.
முசிறி தொட்டியத்தில் ஒருமுறை முத்தரையர்களுக்கும் தலித்துகளுக்கும் ஏற்பட்ட முரண் மோதலில் முடிய, பாதிக்கப்பட்ட தலித் மக்கள் ஆதரவற்று நின்றபோது திருச்சியில் முதன் முறையாய் வன்கொடுமை வழக்குப் பதியப்பட்டு மோதல் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அது முதல், 1994 ல் மதிசோழர், போஜகுமார், பொன்.சேகர் உள்ளிட்ட சிலரால் உருவாக்கப்பட்டதுதான் மனித உரிமைப் பாதுகாப்புக் குழு. (HRPC).
விஷக்கடி வைத்தியர் இராமதாஸ் அவர்கள், தஞ்சை பள்ளி அக்ரகாரத்தில் ஞாயிறுதோறும் கொடுக்கும் இலவச பஸ்பம், எனைப் பிடித்தாட்டிய சொரியாசிஸை கட்டுக்குள் வைக்கும். ஆனாலும் மெல்ல மெல்ல மூட்டுக்கள் முடங்கத் தொடங்கின. திருச்சியில் அலோபதி-ஹோமியோபதியைக் கலந்து போட்ட போதும் மூட்டு வலியில் முன்னேற்றம் இல்லை. குமாரின் ஆலோசனையால் வேலூரில் ஜக்ரியாவைச் சந்தித்தேன். அவர் கொடுத்த ஒரு 'டோஸ்' என்னை முழுமையாய் வாலாஜாவில் முடக்கிப் போட்டது. என்னைப் பராமரிக்க என் இணையர் என்னிடம் சேர, பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள இணையரின் அண்ணனும் அண்ணியும் திருச்சியில்.
நினைவு முழுமையாய் தப்பிவிட வில்லை என்றாலும் கிட்டத்தட்ட கோமா நிலை. இனி தேறுவேனா என்ற ஐயத்தோடு எண்பதைக் கடந்த எனது பாட்டி உட்பட உறவுகள் அனைவரும் பார்த்துச் சென்றனர். நண்பர்கள் கூட நாடி வந்தனர். தோழர்களும் ஓடிவந்தனர். ஹேமா சுமந்த மாதுளையும், தலையணை அடியில் மணியின் ஐநூறும் இன்றும் என் நினைவில். நாட்கள் ஓடின. மெல்ல மெல்ல நினைவு திரும்பிப் புதிதாய்ப் பிறந்தேன்.
புறத்தே இருந்த சொரியாசிசை பஸ்பம் உள்ளமுக்கி மூட்டுக்குள் தள்ளியிருக்குமோ என்கிற ஐயமும், சரியான ஹோமியோபதியை எடுத்துக்கொண்டால் பந்து எம்பி எம்பி இறங்குவதைப் போல நோயும் ஏறி ஏறி இறங்கிப் பின்னர் மறையும் என்பதையும் பின்னாளில் ஹோமியோபதியை ஆழமாகக் கற்றபோது அறிந்ததுண்டு.
ஓரளவுக்குத் தேறிய பிறகு திருச்சி திரும்பினேன். முடங்கிய மூட்டுகள் முழுதாய் மீள சில நாட்கள் ஆயிற்று. அதுவரை கையெழுத்துக்கே நடுக்கம் கண்டன எனது விரல்கள்.
வேலை நீக்கம் செய்யப்பட்ட இரு தோழர்கள் நிர்வாக இயக்குநரைச் சந்திக்கச் சென்றபோது 26.11.1992 அன்று ஏற்பட்ட தள்ளுமுள்ளையொட்டி, நிறுவனம் தொடர்ந்த வழக்கு, நாங்கள் தொடர்ந்த எதிர் வழக்கு, நேர்மையான ஒரு நீதிபதியால் எமக்குச் சாதகமாய் அமைய, நாங்கள் மீண்டும் பணியில் சேருவதற்கான பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்தது பெல் நிர்வாகம். பேச்சு வார்த்தையும் தொடங்கியது.
மூட்டு வலியில் முடங்கிப் போன சேகரை மீண்டும் வேலைக்குச் சேர்த்தால் அவரால் என்ன செய்ய முடியும் என்று எதிர் தரப்பில் எள்ளி நகையாடியோரும் உண்டு.
போஜகுமார் கொடுத்த ஊக்கத்தால் உமா-உஷாவின் உதவியோடு, நான் முடங்கிப் போகவில்லை என்பதை உணர்த்தும் வண்ணம், மூத்த வழக்கறிஞர் நடராஜ் வல்லத்தரசு அவர்களின் அணிந்துரையோடு, வழக்கறிஞரான இரண்டு ஆண்டுகளில் எனது முதல் ஆக்கமாய், 1998 ஜனவரியில் "குற்ற இயல் வழக்குகளை எதிர்கொள்வது எப்படி?" நூல் வெளியானது. ஏப்ரல் 15, 1998 இந்தியா டுடே ஏட்டிலும் இந்நூல் இடம் பிடித்தது.
தொடரும்தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
இழிகுணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8
இராணிப்பேட்டையில் 1980 ல் தொடங்கப்பட்ட பெல் ஆலைக்கு ஆட்கள் தேவைப்பட்ட காலம் அது. அங்குச் செல்வோருக்கு இரண்டு 'இன்கிரிமெண்ட்' கூடுதல் என்பதால் திருச்சியில் இருந்து பலர் முண்டியடித்தனர். ஊர், பக்கம் என்பதால் 1982 ல் நானும் முயன்றேன்; முடியவில்லை.
தம்பி, தங்கை, அக்கா மகன் ஆகியோர் படிப்புக்காக திருச்சி வர, குடும்பம் விரிந்தது.
பதவி உயர்வுக்குப் பயன்படுமே என எல்லோரையும் போல REC (NIT) ல் நானும் பொறியியல் பட்டம் பெற்றேன். இதிலும் கூட சிபாரிசு கொடிகட்டிப் பறந்ததால், 'மெக்கானிக்கலுக்குப்' பதிலாக, ET எழுத பெருமளவில் உதவாது என்றாலும், ஒரு பட்டம் இருக்கட்டுமே என 'மெட்டலர்ஜி' படித்தேன். இதுவே பின்னாளில் சட்டம் பயில உதவியது.
வேலூரிலும் மகஇக செயல்பட்டதால், இயக்க வேலைகள் தடைபடாது என்பதால் இராணிப்பேட்டைக்கு மாற்றலாகும் முயற்சியைக் கைவிடவில்லை. ஃபெலிக்சோடு 'மியூட்சுவல்' போட்டேன். தங்கை மற்றும் அக்கா மகன் இருவரின் படிப்பை வாலாசாப்பேட்டைக்கு நம்பிக்கையோடு மாற்றினேன். அவர்களைக் காக்க அத்திமூரான் கொட்டாயிலிருந்து தாய் தந்தையரும் வாலாஜா சென்றனர். எனக்கோ இரட்டிப்புச் செலவு.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் 1991 நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையின் நேரடி விளைவு, 1992 ஆம் ஆண்டு பெல் நிறுவனத்தில் முதன் முறையாக போனஸ் மறுக்கப்பட்டது. இது அநீதி என தன்னெழுச்சியாய் ஆர்ப்பரித்தனர் தொழிலாளர்கள். செல்வாக்குள்ள தொழிற்சங்கங்களாலேயே மட்டுப் படுத்த முடியாமல் போராட்டம் இரவு வரை நீடித்தது. காரணம் மகஇக தான் என நிர்வாகத்தோடு மாற்றுத் தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர், கூட்டுச் சேர்ந்து சதி செய்ததால் மூன்று தொழிலாளர்கள் விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதில் இருவர் மகஇக தோழர்கள். தொழிற்சங்கங்களில் கருங்காலிகள், உணரவைத்தப் போராட்டம் அது.
வேலை நீக்கத்தைக் கண்டஞ்சிய எமது செயலாளர் உள்ளிட்ட சங்க முன்னோடிகள் சிலர் நோட்டீஸ் அடித்துக் கொடுத்துவிட்டு கொத்தாய் ஓடிவிட, சிங்கமாய் நின்ற தலைவர் சிங்கராயராரும், விவேகமாய் வினையாற்றிய தோழர் நாராயணசாமியும், மற்ற சில தோழர்களும் சங்கத்தைக் கட்டிக் காக்கத் தூணாய் நின்றவர்கள். நினைவில் வாழும் அவர்கள் இருவரும் அன்று துவண்டிருந்தால் இன்று திருச்சியில் 'பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்' ஏது?
வேலை நீக்க உத்தரவுக்கு, நீதி மன்றம் விதித்த இடைக்காலத் தடை ஆணையை எடுத்துக் கொண்டு 25.11.1992 அன்று இரு மகஇக தோழர்களும் ஆலைக்குள் சென்றபோது ஏற்பட்ட சம்பவத்தில், நான் அவ்விடத்தில் இல்லாத போதும், நானும் கந்தசாமியும், 'ED ஒழிக!' என கத்திக் கொண்டு செக்யூரிட்டிகளைத் தள்ளிவிட்டு, அவ்விருவரையும் மெயின் கேட் வழியாக ஆலைக்குள் அழைத்துச் சென்றதாகப் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு இருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டோம்.
பொய்சாட்சிச் சொல்ல செக்யூரிட்டிகளே முன்வராததால், அன்று SSTP ஆலையில் வேலை பார்த்த ஒரு பாதுகாவல் அதிகாரியையும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு ஊழியரையும் சாட்சிகளாக 'செட் அப்' செய்தனர். புலனாய்வு ஊழியர் பிறழ் சாட்சியாய் ஆன போதும், அவ்விடத்திலேயே வேலை பார்க்காத பாதுகாப்பு அதிகாரியின் சாட்சியத்தை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் துறை விசாரணைக்குப் பிறகு 1994, அக்டோபர் 14 அன்று இருவரும் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டோம். அன்று சிசிடிவி கேமராக்கள் இருந்திருந்தால் ஒரு வேளை குற்றச்சாட்டுகளை முறியடித்திருக்க முடியுமோ?
வேலைநீக்கம் ஈவிரக்கமின்றி கழுத்தருக்கும் கொடும் பலி. தருணம் பார்த்துக் காத்திருந்து என்னைத் தீர்த்துக் கட்டி உள்ளனர் என்பதை, 'சேகருக்குப் பதிலாக வேறு ஆளைப் பாருங்கள்!' என நிர்வாகத் தரப்பில் சொன்னதாக என்னோடு இராணிப்பேட்டைக்கு 'மியூச்சுவல்' போட்ட ஃபெலிக்ஸ் மூலம் பின்னாளில் தெரிந்து கொண்டேன்.
தற்காலிகப் பணிநீக்கக் காலத்தில் கிடைத்த பாதி ஊதியத்தில் காலத்தை தள்ளியாச்சு. இனி வருவாய்க்கு என்ன செய்ய? பெல் ஊழியர்கள் பரிவோடு கொடுத்த நன்கொடையால் சிறிது காலம் ஓடியது. பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு தோழர்கள் மகஇக-வினர். கூட்டாக ஏதேனும் சிறு தொழில் செய்ய முயற்சி செய்தும், எதுவும் கைகூடவில்லை. ஒருவர் கூட்டுக் குடும்பத்தோடு ஐய்க்கியமாக, ஒருவர் செங்கல் சூளையில் ஈடுபட, ஒருவர் பெட்டிக் கடையில் சங்கமிக்க, நானோ பார் கவுன்சில் நோக்கிப் பயணமானேன்.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
வைதீகவாதிகளுக்கு மதுரை மீனாட்சி, திருவரங்கம் அரங்கநாதன் போன்ற ஆலயங்கள் வழிபாட்டுக்குரியவையாக இருக்கலாம். ஆனால் என் போன்ற அவைதீக வாதிகளுக்கு பெல் போன்ற பொதுத் துறை ஆலைகளே போற்றுதலுக்குரியவை. எண்ணற்ற ஊழியர்களின் கடும் உழைப்பால் இந்தியாவையே வெளிச்சத்தில் வைத்திருக்கும் பெல் நிறுவனத்தில் சில புல்லுருவிகளும் இருக்கவே செய்கின்றனர். கோடிகள் புரளும் இடத்தில் கொஞ்சம் எடுத்தால் என்ன, என எண்ணுவோரைக் கண்டால் கடும் கோபம் கொள்பவன் நான்.
நிறுவனத்தின் இடைநிலை மேலாண்மையாகக் கருதப்படும் மேற்பார்வையாளர் பிரிவைச் சேர்ந்தவனாய் நான் இருந்த போதும் தொழிலாளர்களுக்கான, மகஇக பின்புலத்தைக் கொண்ட 'பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்' தொழிற்சங்கத்தில் (BPWU) என்னை பிணைத்துக் கொண்டு, அதன் நிர்வாகிகளில் ஒருவனாக ஆலை ஊழியர்களின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் வினையாற்றி வந்தேன்.
1990 ஆம் ஆண்டு உணவக நிர்வாகக்குழு தேர்தலில் போட்டியிட்டு கந்தசாமியோடு நானும் வெற்றி பெற்றேன். மளிகை-காய்கறிகள் வரும்போது அவற்றை 100% சோதித்துச் சான்றளிப்பதும், சந்தை விலையை விடக் கூடுதலாக விலை போட்டிருந்தால் விலையைக் குறைத்தும், எடை குறையுமாயின் அவற்றையும் சரி செய்து இரசீதுகளில் திருத்தம் செய்தோம். அவ்வாறு செய்வதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என அச்சுறுத்தப்பட்டோம். ஊடுருவிப் பார்த்தபோது, முறைகேடுகள் நடப்பதை உணர முடிந்தது.
சிந்தாமணியிலிருந்து வாங்கிய போதே இந்த நிலை. வரும் வழியில் ஒரு மூட்டை அரிசியை நிர்வாகி வீட்டில் இறக்கி விட்டால் சோதனை ஏதுமின்றி சரக்குகள் இறக்கப்படும் என்பது பழைய நடைமுறை. எமது பின்புலத்தை அறிந்தவர்கள் என்பதால் அவர்கள் இது குறித்து எண்ணிக் கூட பார்த்ததில்லை
கிராமப்புற ஏழை எளிய விவசாயிகளிடமிருந்து அவர்கள் பயனடையும் வகையில் காய்கறிகளை வாங்கிக் கொடுப்பதாகப் பொய்த்தகவல் கொடுத்து, காந்தி மார்க்கெட்டிலிருந்து காய்கறி வாங்கிக் கொடுத்த ஒரு போலி ஒப்பந்ததாரரைக் கண்டறிந்து கையும் களவுமாக நிர்வாகத்திடம் பிடித்துக் கொடுத்து ஒப்பந்தத்தை இரத்து செய்தோம்.
உணவக நிர்வாகி என்ற முறையில் அசுத்தமானச் சாப்பாட்டுத் தட்டுகளை வெண்ணீரில் அலம்பக் குரல் கொடுத்ததற்காக எனக்கு ஓராண்டு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
உணவகக் கிடங்குக் காப்பாளர்கள் பலே கில்லாடிகள். அன்றையத் தேவைக்குக் சமையலர்கள் சரக்குக் கேட்கும் போது, எடை எந்திரத்தை கண்ணுக்குத் தெரியாமல் வைத்துக்கொண்டு, 10 சதவீதம் எடை குறைத்துக் கொடுத்து சரக்கை மிச்சப் படுத்திக்கொள்வது காப்பாளர்கள் செய்யும் தந்திரம். ஒருபக்கம் சரக்கை வைத்துக் கொண்டே மறுபக்கம் சரக்கு தீர்ந்துவிட்டது எனக்கூறி ஒரு சில ஆலை வாயில் பாதுகாவலர்களின் துணையோடு சரக்கு வந்ததாக இரசீதுகளில் முத்திரை பெற்றுக்கொண்டு ஏமாற்றும் வித்தையைக் கற்றவர்கள் இவர்கள். ஊழலைக் கண்டு பிடிக்க ஒரு சில பாதுகாவலர்களின் உதவியை நாடினோம். நெரித்து அழுத்தினால் சீழ் வெளிவராமலா போய்விடும்?
ஒரு முறை 50 கிலோ காபித் தூளுக்குப் பதிலாக கல் உப்பு வந்த போதும், சரக்கே இல்லாமல் பத்து மூட்டை சர்க்கரைக்கு இரசீதில் முத்திரை கேட்டபோதும் நேர்மையான பாதுகாவலர்களால் கையும் களவுமாக பிடிபட்டு, அதன்பிறகு உணவக ஊழல் நிரூபிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கிடங்குக் காப்பாளர்கள் அனைவரும் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். திருச்சி பெல் நிறுவனத்தின் நாலரை கோடி உணவக ஊழல் அன்று ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. ஊழல் வெளிவரக் காரணமாக இருந்ததால் எல்லோர் கவனமும் எம் பக்கம் திரும்பியது; மகஇக மீதான நன் மதிப்பும் உயர்ந்தது. அன்று சேகர்-கந்தசாமியை அறியாதோர் யாருமில்லை.
உணவக நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த போதும், ஒருநாளும் உணவகத்தின் உள்ளறையில் உணவு உட்கொண்டதில்லை. ஊழியர்களோடு ஊழியராக வரிசையில் நின்றுதான் உட்கொள்வது வழக்கம்.
புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஏடுகள், பிரசுரங்கள் விநியோகம் கையொட்டி ஓட்டுதல், நிதி வசூல் என ஆலைக்குள்ளும் இயக்கப் பணிகளை தீவிரமாய் மேற்கொண்டேன். இவை அனைத்தையுமே நிறுவன நடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்த முடியும் என்பதனால் தடயமின்றி லாவகமாய்ச் செய்ய வேண்டும். கையொட்டியில் பசை தடவி காயவைத்து, குளியலறைக் குழாயில் நனைத்து ஓரிழுப்பில் ஒட்டிவிட்டு, நொடியில் அவ்விடத்தை விட்டகலும் வித்தை கற்றதனால் பலமுறை சிக்காமல் தப்பி உள்ளேன்.
ஆனால், பங்காரப்பா ஆட்சிக் காலத்தில், கர்நாடக காவிரி நீர் பிரச்சினையையொட்டி ஒரு முறை பயிற்சி வளாகம் 'கை' அருகில் நடைபெற்ற மகஇக ஆர்ப்பாட்டம் குறித்து உணவக வாயிற் கதவில் கையொட்டி ஒட்டியதற்காகக் கொடுக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணையை திறமையாய்க் கையாண்டு முறியடித்தேன். குற்றப்பத்திரிகை கொடுத்துவிட்டால் தண்டனையிலிருந்து யாரும் தப்பியதாக வரலாறு இல்லை என்பதால் நிரூபிக்கப்படாத குற்றத்திற்கும் கண்டித்துக் (censure) கடிதம் கொடுத்தனர்.
ஆலை வாயில் கூட்டங்களில் என் உரை கேட்க அணி திறளும் தொழிலாளர்கள், உள் சென்ற பிறகும் அது பற்றிய உரையாடல்கள் ஊழியர்களிடையே தொடர்ந்ததால் வாயிற் கூட்டங்களுக்கும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டது.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
தெருமுனைக் கூட்டங்கள்தான் என்னை பொதுக்கூட்டப் பேச்சாளராக தரம் உயர்த்தியது. காளியப்பன், கதிரவன், சீனிவாசனோடு மகஇக-வின் மையப் பேச்சாளரானேன்.
சென்னை, வேலூர், திருப்பத்தூர், ஊத்தங்கரை, நல்லம் பள்ளி, பென்னாகரம், கோவை, பரமத்தி வேலூர், சேந்த மங்கலம், கரூர், துறையூர், பெருவளப்பூர், விழுப்புரம், நெய்வேலி, அரியலூர், ஊரணிபுரம், வேதாரண்யம், அதிராமப்பட்டினம், இராமேஸ்வரம், மானாமதுரை, முதுகுளத்தூர், உசிலம்பட்டி, இராஜபாளையம்-தேவிபட்டினம், திருச்சி என எண்ணற்ற ஊர்களுக்குக் கலைக்குழுவோடு பயணித்திருக்கிறேன். சிறப்புரை முடிந்து கலைக்குழுவில் கோரசும் பாடுவதுண்டு.
1987 ஆம் ஆண்டு அதிமுக அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து இராமேஸ்வரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அரசுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் நான் பேசியதாக கைது செய்யப்பட்டு பத்து நாட்களுக்கு மேல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது,
1989 ஆம் ஆண்டு திருச்சி நேரு சிலை குண்டுவெடிப்பின் போது கைது செய்யப்பட்டு துப்பாக்கி முனையில் சிபிசிஐடி போலீசாரால் மிரட்டப்பட்டதோடு சில நாட்களுக்கு அவர்களின் 'கஸ்டடியில் கடுமையான கசையடிக்கும் ஆட்பட்டது,
1991 ஆம் ஆண்டு கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டபோது அன்றைய கர்நாடக முதல்வர் பங்காரப்பா கொடும்பாவி எரிப்புத் தொடர்பாக திருச்சி பாலக்கரை போலீசாரின் கடுமையான தடியடிக்கு ஆட்பட்டது,
ஒரு முறை சங்கராச்சாரி பிரச்சனையையொட்டி, புத்தூர் அக்ரகாரம் அருகே தெருமுனைப் பிரச்சாரம் மேற்கொண்ட போது கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் சில நாட்கள் அடைக்கப்பட்டது,
புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் ஏடுகளைத் தனித்தும், சக தோழர்களோடும் திருச்சி மட்டுமன்றி மதுரை, கரூர், நாமக்கல், சேலம், துறையூர், பெரம்பலூர், விழுப்புரம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட நகரங்களில் தனியாகவும் தோழர்களோடு இணைந்தும் பேருந்துகளிலும், திருச்சி உள்ளிட்ட சில ஊர்களில் தெருமுனைக் கூட்டங்களிலும் விற்பனை செய்தது,
மாநாடுகள் பேரணிகள் மற்றும் பொதுக் கூட்டங்களுக்கான விளம்பரச் சுவரெழுத்து, சுவரொட்டி ஒட்டுதல், தனிநபர்-பேருந்து-குடியிருப்பு மற்றும் கடைவீதிகளில் நிதி வசூல் செய்வது, பல்வேறு பிரச்சனைகளுக்கு நீண்டதூரத்தையும் பொருட்படுத்தாமல் மிதிவண்டிப் பிரச்சாரம் செய்தது, குறிப்பாக திருச்சியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாக தஞ்சை சென்று செங்கிப்பட்டி வழியாக மீண்டும் திருச்சி வந்தது,
அகில இந்திய அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பின் கல்கத்தா மாநாடு, அகில இந்திய புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் திருவனந்தபுரம் மாநாடுகளில் நானும், அகில இந்தியப் புரட்சிப் பண்பாட்டு இயக்கத்தின் கொச்சி மாநாட்டில் குடும்பத்தோடும் பங்கேற்றது,
உள்ளூர் அளவிலும் தமிழக அளவிலும் நடைபெற்ற எண்ணற்ற ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மாநாடுகளில் தனிப்பட்ட முறையில் வேலை செய்ததோடு அவற்றில் குடும்பத்தோடு பங்கேற்றது, குறிப்பாக அமைப்பின் மாநாடுகள் மற்றும் தஞ்சை தமிழ் மக்கள் இசை விழாக்கள் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பெரும் பங்காற்றியது, மகஇக ஒலிப்பேழைகளின் முகவராக செயல்பட்டது,
உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் என்ற தகுதியில் நானும்,
பாரதிய ஜனதா கட்சியின் இந்துமதவெறி பாசிச அரசியலுக்கு எதிராகத் திருச்சி திருவரங்கம் கோவில் கருவறை நுழைவுப் போராட்டத்தில் சந்திரனின் இணையர் அஜிதாவோடு கருவறைக்குள்ளேயே சென்று வந்ததோடு மட்டுமன்றி வாணி, உஷா, நிர்மலா, அஜிதா, ஜெயக்கொடி ஆகியோர் ஆண்களோடு கைதாகி சுமார் மூன்று மாத காலம் சிறை வாசம்,
சீர்காழி இறால் பண்ணை அழிப்புப் போராட்டத்தில் சுமார் ஒரு மாத காலம் சுற்றுவட்டாரக் கிராமங்களில் தங்கியிருந்து களப்பணி மற்றும் போராட்டத்தில் பங்கேற்று 99 பெண் தோழர்களுடன் கைதாகி சுமார் ஒரு மாதம் சிறைவாசம்,
திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரானப் போராட்டத்தில் இறுதியாக நடந்த தஞ்சை வினோதகன் மருத்துவமனையைக் கைப்பற்றும் போராட்டத்தில் பங்கேற்றுக் கைதானது,
1994 ஆம் ஆண்டு பிரேமானந்தா சாமியாருக்கு எதிராகத் தீப்பந்த ஊர்வலம் நடத்திக் கைதாகி சில நாட்கள் சிறைவாசம்,
அமைப்பு முன்னெடுக்கும் எண்ணற்ற உள்ளூர் மற்றும் மையப் போராட்டங்களில் பங்கேற்றுக் கைதானது,
புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மற்றும் அமைப்பின் வெளியீடுகளை கடைவீதி, குடியிருப்புகளில் விற்பனை செய்வது, மேலும் போராட்டங்களுக்கு மேற்கண்ட பகுதிகளில் நிதி வசூல் செய்வது,
நான் பெல் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட காலத்தில் குடும்பச் சுமையைக் குறைக்க சோடா பாட்டில் கம்பெனியில் வேலை செய்து கொண்டே விலைவாசி எதிர்ப்புப் பெண்கள் போராட்டக் குழு, பிறகு பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பின் ஆதாரமாய்த் திகழ்ந்ததோடு எண்ணற்ற வேலைகள் மற்றும் போராட்டங்களில் பங்கேற்றது,
என பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பாளர் என்ற தகுதியில் எனது வாழ்க்கை இணையர் வாணியும்,
இயக்கப் வேலைகளில் இணைந்தே களப்பணியாற்றினோம்.
இயக்க வேலைகளின் போது பத்து வயதுக்குட்பட்ட எமது பிள்ளகளை எனது இணையர் இல்லாத போது நானும், நான் இல்லாத போது எனது இணையரும் பராமரிப்பது இயல்பாய் மாறிப்போனது.
உரையூர்-செந்தண்ணீர்புரம்-மீண்டும் உறையூர் என இயக்கத்தை வளர்க்க சுமார் ஒன்பது முறை வசிப்பிடம் மாறினோம். போராட்டம், கைது, சிறை எனக் கேள்விப்பட்ட உடனை வீட்டு உரிமையாளர்கள் அச்சப் பட்டதால் சில சமயம் வேறு வீடு மாறியதும் உண்டு. சில இன்னல்கள் இருப்பினும் பிள்ளைகளுக்குத் தமிழ் வழிக் கல்வியையே புகட்டி வந்தோம்.
திருச்சியில் சுமார் 17 ஆண்டுகளும், வேலூரில் கடந்த 22 ஆண்டுகளாகவும் இருவரின் இயக்கப் பணிகள் தொடர்கின்றன. இராணிப்பேட்டைக்கு வந்த பிறகு உடல் நலிவால் எனது வேலைகள் குறிப்பிட்ட அளவு குறைந்து விட்ட போதும், எனது இணையரின் வேலை முன்னிலும் கூடுதலாகவே இருந்தது.
ஒவ்வொரு அனுபவமும் தனித் தனிக் கட்டுரையாக எழுதுவதற்கு உரியவை என்றாலும், களப்பணி அனுபவங்களை மிகச் சுருக்கமாகவே குறிப்பிட்டுள்ளேன்.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்