Tuesday, 11 November 2025

கம்யூனிஸ்டுகளின் போர்க்களங்கள்!

சிறுத்தைகளிடமும், சிங்கங்களிடமும், ஓநாய்களிடமும், முதலைகளிடமும் சிக்கிக் கொள்ளும் ஆடுகளும், மாடுகளும், மான்களும் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள போராடுகின்றன. இதே விலங்குகள்கூட அதேவகை விலங்குகள் வேறு இடங்களிலிருந்து தங்களது எல்லைகளுக்குள் பிரவேசிப்பதையும் எதிர்த்துப் போராடுகின்றன. தாங்கள் வாழும் பகுதியை அவைகளுக்கு யாரும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லையென்றாலும், அது அவைகளுக்கான உயிர் வாழும் உறைவிடங்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தனித்தோ அல்லது கூட்டாகச் சேர்ந்தோ உயிர் வாழ்வதற்காக (struggle for survival) நடத்தப்படுகின்றன.

மனிதர்களும் இங்கே போராடுகின்றனர். தாங்கள் உயிர் வாழ்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விலங்குகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்; அதே வேளையில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும் தங்களது உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பண்ணையார்கள் போன்ற மனித விலங்குகளுக்கு எதிராகவும், அது ஆளும் அரசாயினும் எதிர்த்துப் போராடுகின்றனர். 

இந்துமதி

கருத்துரிமை, மனித மாண்பு சிதைக்கப்படும் பொழுதும், அரசியல் உரிமைகள் நசுக்கப்படும், பறிக்கப்படும் பொழுதும் மனிதர்கள் உலகம் முழுவதும் போராடுகின்றனர். முதலையின் வாயில் சிக்கிய மானைக் காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைத்து உதவும் குரங்கைப் போல, மனிதர்களும், சக மனிதர்களின் நலனைக் காக்க, அது தூரதேசமாயினும் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவாகப் போராடுகின்றனர்.

மனித குலத்தின் ஒவ்வொரு சாராரும், தங்களின் நலனுக்காகப் போராடினாலும், பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் அகிலம் முழுக்க கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

தமிழ்நாட்டிலும்கூட எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நிலவுகின்றனவோ, அது தனியார் ஆலைகளானாலும், அரசு நிறுவனங்களானாலும், பள்ளி கல்லூரிகளானாலும், முறைசாரா தொழிலாளர்கள் என்றாலும், வேளாண்மை என்றாலும் அங்கெல்லாம் கம்யூனிஸ்டுகளை மட்டுமே பார்க்க முடியும். 
ஆம்! கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஒடுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காகப் போராடுபவர்கள்.  ஒரு உழைப்பாளி சுரண்டப்படுவதையும், அவனது உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவனுக்கு உணர்த்துபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

போராட்டங்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், வெற்றியின் சுவடுகளை நினைவுகூர்வதன் மூலம், அவர்கள் மேலும் மேலும் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர்.

1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 அன்று நடைபெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சிதான் கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களில் முதன்மையாகத் திகழ்வது. ரஷ்யப் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் குதூகலத்துடன் நினைவு கூர்வதன் மூலம் அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர். 

இந்த ஆண்டு, நவம்பர் 9ஆம் தேதி அன்று, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய இரு அமைப்புகளின் சார்பில் வேலூர், தொரப்பாடி, வள்ளலார் மண்டபத்தில், நடைபெற்ற 109-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி விழா நிகழ்ச்சியில் நானும் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டேன்.

சிறுவர்களின் சிலம்பாட்டம், கலைஞர்களின் பாடல்கள், தலைவர்களின் சொற்பொழிவு என களைகட்டிய இந்த விழாவில்  எழுந்த கரவொலிகள், வேலூர் கோட்டையில் முட்டி மோதி, கீழ்த்திசை மலைகளில் தவழ்ந்த மேகங்களில் ஊடுருவி சிலாகித்தன. 

இந்த விழாவில், இளம் தோழர்  இந்துமதி அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற நேருரையைக் கேட்டபோது ஆனந்தப்பெருக்கில் எனது கண்கள் சற்றே பணிந்து நீரைச் சொரிந்தன. விழாக்கள்கூட கம்யூனிஸ்டுகளுக்கு போர்க்களம்தான். போர்க்களங்களே வீரர்களை அடையாளம் காட்டுகின்றன!

தமிழ்மணி

விழாக் காட்சிகள்






மருதையனைப் பிராண்டும் மூக்கரிப்பெடுத்தவர்கள்!

தோழர் வாலாசா வல்லவன் அவர்கள், தோழர் மருதையன் குறித்து, தனது முகநூல் பக்கத்தில் கீழ்கண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

"தோழர் மருதையன் அவர்கள்  இந்தியத் தொலைப்பேசி துறையில் நிரந்தரப்பணியில் இருந்து ஒன்பதாண்டுகளில் வேலையை உதறிவிட்டு புரட்சிகர கட்சிப் பணிக்கு வந்தவர். பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் பார்ப்பனியத்துக்கு எதிராகத் தெளிவாகப் பேசிவருகிறார்.  அவரைவிட ஈகம் செய்தவர்கள் இருந்தால் அவரை விமர்சிக்கலாம்".

இந்தப் பதிவையொட்டி, தோழர் மருதையன் மீது ஒரு சிலர் கம்பு சுத்தத் தொடங்கி விட்டனர். அங்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே.

மருதையன்

"இயக்கப் பணிகளில் நாற்பதாண்டு காலம் தோழர் மருதையனோடு கைகோர்த்து பயணித்தவன், இன்றும் நெருக்கமாக இருப்பவன் என்கிற முறையிலும், அவர் மகஇக-விலிருந்து வெளியேற்றப்பட்டாரா வெளியேறினாரா என்பது குறித்து அந்த அமைப்புக்குள் இருந்து தோழர் மருதையனுக்காக வாதாடியவன், போராடியவன் என்ற முறையிலும் சொல்கிறேன், அவர் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார் என்பதே உண்மை. 

தோழர் மருதையனுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே சிலர் அதிமேதாவிகளைப் போல எழுதி வருகின்றனர். அவர்களில் சிலர் மகஇக அமைப்பில் செயல்பட்ட காலத்தில், அவர்களின் நெறிபிறழ்வு காரணங்களுக்காகவோ அல்லது நிதி முறைகேடுகளுக்காகவோ அல்லது தான் நினைப்பது போல அந்த அமைப்பு இல்லை என்பதற்காகவோ அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள்.

அறநெறியோடு வாழும் ஒருவரின் அரசியலைக்கூட விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள் இவர்கள். கால்தூசுக்குப் பேறாதவர்களெல்லாம் மருதையனை விமர்சிக்கிறார்கள்.

தான் வெளியேற்றப்பட்டாலும், அவர் வேறு எந்த அமைப்போடும் ஒட்டிக்கொண்டு புரட்சி வேடம் போடவில்லை. 

எந்த ஒரு 'புரட்சிகர' அமைப்பிலும் இல்லாத போதும், இன்றைய அரசியல் சூழலில் எது தேவையோ அதற்காக, அவரது புரிதலுக்கேற்ப செயல்பட்டு வருகிறார். 

இவர்களே மருதையனை 'புரட்சிக்கான அத்தாரிட்டியாகக்' கருதிக் கொண்டு, 'அய்யோ போச்சே புரட்சி!' என்று புலம்புகின்றனர். 'புரட்சிகர' அமைப்பில் இல்லாத ஒருவர், 'புரட்சிக்குத் துரோகம் இழைத்து விட்டார்' என்பது கையாலாகாதவர்களின் கடைந்தெடுத்த கோழைத்தனமான பிரச்சாரம். 

ஏதோ இவர்கள் புரட்சிக்காக கையில் துப்பாக்கியோடு முன் வரிசையில் முன்னேறிச் செல்லும்போது, இவர்களுடைய கைகளை மருதையன் பிடித்து இழுப்பது போல இவர்கள் எழுதுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. மருதையனை விமர்சிக்கும் வீராதி வீரர்கள், சூராதி சூரர்களில் பலர் சொந்த வாழ்க்கைக்குத் திரும்பிவிட்ட 'மாஜி' புரட்சியாளர்கள் என்பது பலருக்கும் தெரியாது. 

நான்கு எழுத்துக்களைக் கோர்த்து முகநூலில் 'புரட்சி' என்று எழுதிவிட்டால், அதையும் நம்பும் மெய்நிகர் உலகில் இவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள் பேசுவார்கள்.

தோழர் மருதைனுடைய எழுத்தும், பேச்சும், செயல்பாடும் இன்றைய காலத்தின் அவசியம். மூக்கு அரிப்பெடுத்தவர்கள் மட்டுமே மருதையனை பிராண்டிக் கொண்டிப்பார்கள். மூக்கரிப்பெடுத்தவர்களைத்தான் SIR கூப்பிடுறாரு. அங்கே போங்க. மூக்கரிப்பாவது குறையும்.

மருதையனுடைய விவகாரம் குறித்து “எதிர்த்து நில்” மற்றும் “ஊரான்” வலைப்பூக்களில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இதற்கு மேலும் கூடுதல் விளக்கம் தேவையில்லை. எனவே, இதற்குப் பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் இங்கே யாரும் கம்பு சுத்த வேண்டாம்".

தமிழ்மணி
முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் 
மக்கள் கலை இலக்கியக் கழகம் 

பொன்.சேகர்
மாநில தலைமைக்குழு உறுப்பினர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்