பேரணி
மாலை மணி நான்கைக் கடந்தும் தலையை கிறுகிறுக்க
வைக்கும் கடும் வெயில், தஞ்சை ரயிலடி
முகப்பில் படர்ந்திருந்த பல்மர நிழலில் தோழர்கள் செங்கொடியுடன் சற்றே இளைப்பாற, மாலை ஐந்து மணிக்கெல்லாம் அரிவாளைப் பிடித்த கைகளுடன்கூடிய
கொடிகள் உயர்ந்த போது ரயிலடியே செங்கடலாய் காட்சியளிக்க, அலை அலையாய் தோழர்கள் அணியமாக, அதுவரை நிழல்
தந்து மரங்கள் எல்லாம் மௌனித்தன.
சிறுநகர் "இசைச் சமர்" கலைக்குழுவின் தாரைத் தப்பட்டைகள்
முழங்க, தருமபுரி-கிருஷணகிரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர், தோழர்
இராமலிங்கம் கொடி அசைத்துப்
பேரணியைத் தொடங்கி வைக்க, பழைய பேருந்து
நிலையம் நோக்கிச் செங்கடல் நகரத் தொடங்கியது. கடலே நகரும் போது தஞ்சை மட்டும் அதிராதா என்ன?
மூன்றில் ஒரு பங்கு மகளிர், கைக் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர்கள் என குடும்பம் குடும்பமாய் மாந்தவினத்தின் பருவமனைத்தும் கைகோர்த்த கண்கொள்ளாக் காட்சியால் தஞ்சையே வியந்தது.
அரசியல் கட்சிகள், பிற இயக்கங்கள் சங்கங்கள் சார்பாக பேரணி-மாநாடுகள்
என்றால் பெரியவர்கள் மட்டுமே பங்கேற்பதுதான் தமிழ்நாட்டு வழக்கம்.
ஆனால், 1980
களிலேயே இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து, மாநாடுகளிலும் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மறியல்களிலும், கைது சிறை என்றாலும் அதற்கும்
அஞ்சாது, குடும்பம் குடும்பமாய் அலை அலையாய் மக்களைத் திரட்டும் புதியதொரு
பரிமாணத்தை உருவாக்கியது மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயி விடுதலை முன்னணி
உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள்தான் என்றால் அது மிகையல்ல.
“வீரவணக்கம்! வீரவணக்கம்!
தியாகிகளுக்கு வீரவணக்கம்!
தெலுங்கானாவில் நக்சல்பாரியில்,
வடாற்காட்டில் தருமபுரியில்,
புன்னப்புராவில் வயலாரில்,
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக,
இன்னுயிர் ஈந்தத் தோழர்களே!
நக்சல்பாரித் தோழர்களே!
உங்களுக்கெங்கள் வீரவணக்கம்!”
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக,
இன்னுயிர் ஈந்தத் தோழர்களே!
நக்சல்பாரித் தோழர்களே!
உங்களுக்கெங்கள் வீரவணக்கம்!”
பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற, விவசாயிகள் விடுதலை
முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கம்பம் மோகன் அவர்கள் தனது தலைமை உரையில்
குறிப்பிட்டவாறு, ‘பள்ளத்தை நோக்கி வெள்ளம்
பாய்வதைப் போல’ தமிழகத்தின் பல் முனைகளிலிருந்தும்
தோழர்கள் காவிரிப்
படுகையை நோக்கிப் பாய்ந்ததால்தான் திடலே நிரம்பி வழிந்ததோ!
விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் இராவணன் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் சாமி நடராஜன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் – CPM), தோழர் மாசிலாமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர், CPI), தோழர் சுந்தர் மோகன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மகா சபை), தோழர் பழனி ராஜன் (சமவெளி விவசாயிகள் பாசன சங்கம்), தோழர் திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர்
இயக்கம்), தோழர் சின்னதுரை (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்றது) உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள், விவசாயிகள் சந்திக்கும்
பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறினர்.
கலைநிகழ்ச்சி
இடையிடையே பாடல்கள் பாடிய கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின்
மைய கலைக் குழுவினர், இறுதியில் எழுச்சிமிகு கலை நிகழ்ச்சியை நடத்தி முடிக்க,
பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் மாநாடு-பொதுக்கூட்டம் இரவு பத்து மணிக்கு இனிதே நிறைவடைந்தது.
நூல் வெளியீடு
மாநாட்டில் “விவசாயப் புரட்சியும்
மக்கள் திரள் பாதையும் தோழர் ரங்கநாதன் வாழ்க்கைப் பயணம்” என்கிற நூலை காரப்பட்டு தோழர் ஏழுமலை அவர்கள் வெளியிட, புதிய ஜனநாயகத்
தொழிலாளர் முன்னணியின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலாக்கம் குறித்து காரப்பட்டு தோழர் அம்பேத்கர் அவர்கள் விளக்கினார். (இந்நூல் குறித்துத் தனி பதிவு ஒன்றை எழுத உள்ளேன்).
இயற்கை உபாதைகளுக்காக ஒரு சிலர் எப்போதாவது இருக்கைகளை விட்டு எழுவதைத்தவிர, ஆயிரக்கணக்கானோர்
நான்கு மணி நேரம் அசையாமல், அசராமல் அமரந்திருப்பதை மகஇக-விவிமு கூட்டங்களில்தான் காணமுடியும். தேநீரோ, சுண்டல், பொறி-கடலையோ, எதுவும் இங்கே திடலுக்குள் நுழையாது என்பதால்
பார்வையாளர்களின் கவனம் சிதறாது. ஏன்? கைபேசியை நோண்டினாலே
தொண்டர்கள் எச்சரிக்கை செய்வர். அவ்வப்பொழுது நாவை நனைக்க அயராமல் தொண்டர்கள் கொடுக்கும் குடிநீர் மட்டும்தான் இங்கு ஆகாரம். சிறுவர்களைக்கூட கூட்டம் சுண்டி இழுத்துக் கொள்ளும்.
அறிவுப் பசிக்கு கீழைக்காற்றும், உணர்வுப் பசிக்கு, விவசாயிகள் விடுதலை முன்னணி, திருவெண்ணைநல்லூர் மூத்த தோழர் ஏழுமலை தொடங்கி வைத்த ஓவியர் முகிலனின் "ஓவியக் காட்சியும்" திடலில் தடம் பதித்தன.
புதிய அரசியலை மட்டுமல்ல புதிய பண்பாட்டையும் கைக்கொள்ளும் கூட்டமிது என்பதனால்
மதுப்பிரியர்களை இங்கே காண முடியாது. அதனால் திடல் ஓரங்களில், திரைமறைவுகளில் கண்ணாடிக் காடுகள் முளைப்பதில்லை. இதனால்தானே காலை மற்றும் பகல் உணவை முடிக்க, மரத்தடியை நாடாமல் கோயிலடியை எங்களால் நாட முடிந்தது.
மாநாடு முடிந்த பிறகு, அவரவர் கொண்டு
வந்த கலவை உணவை பகிர்ந்துண்ண, எமக்கோ பாலாவும் ராஜனும்
இட்டிலியை பகிர்ந்தளிக்க, பசியாறினோம்.
காலை நேரப்பயணம்-பேரணி-பொதுக்கூட்டம் என தொடர் நிகழ்வால் இரவு பதினோரு மணிக்கு உடல் ஓய்வை நாடினாலும், மாநாட்டு அனுபவத்தை அவரவர் பகிர்ந்த பிறகு, பேருந்துச் சன்னல்களின் மென்காற்று உடலை வருட ஊர் நோக்கிப் பயணமானோம்.
'பெல் சிட்டி' ஊழல்வாதிகளை கண்டும் காணாமல் இருந்த ஒரு சிறு கூட்டம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கையும் களவுமாய்
பிடிபட்டபோது, அணிகளின் கேள்விக்கனைகளை எதிர்கொள்ள அஞ்சி நடுங்கி அமைப்பை விட்டு ஓடியதால்
இடையில் ஒரு சிறு சலசலப்பு; சற்றே சலிப்பு. உண்மைகளை உணர்ந்தோர் ஓர் அணியில் ஆயிரமாயிரமாய்
இங்கே; உணராத அச்சிறு கூட்டம் மேலும்
பிளவுண்டு, கேள்வியாய், கனலாய் சீந்த நாதியற்று நடுத்தெருவில்…
நடுத்தெருவில் நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுமா என்ன?
காலை நேரப்பயணம்-பேரணி-பொதுக்கூட்டம் என தொடர் நிகழ்வால் இரவு பதினோரு மணிக்கு உடல் ஓய்வை நாடினாலும், மாநாட்டு அனுபவத்தை அவரவர் பகிர்ந்த பிறகு, பேருந்துச் சன்னல்களின் மென்காற்று உடலை வருட ஊர் நோக்கிப் பயணமானோம்.
முற்றும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
தஞ்சை: விவசாயிகள் விடுதலை முன்னணி, மாநாட்டு அனுபவம்!... தொடர்-1
நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?
மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?
No comments:
Post a Comment