Saturday, 19 August 2023

விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாடு: நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நிற்பதில்லை! தொடர்-2

பேரணி

மாலை மணி நான்கைக் கடந்தும் தலையை கிறுகிறுக்க வைக்கும் கடும் வெயில், தஞ்சை ரயிலடி முகப்பில் படர்ந்திருந்த பல்மர நிழலில் தோழர்கள் செங்கொடியுடன் சற்றே இளைப்பாற, மாலை ஐந்து மணிக்கெல்லாம் அரிவாளைப் பிடித்த கைகளுடன்கூடிய கொடிகள் உயர்ந்த போது ரயிலடியே செங்கடலாய் காட்சியளிக்க, அலை அலையாய் தோழர்கள் அணியமாக, அதுவரை நிழல் தந்து மரங்கள் எல்லாம் மௌனித்தன.

சிறுநகர் "இசைச் சமர்" கலைக்குழுவின்  தாரைத் தப்பட்டைகள் முழங்க, தருமபுரி-கிருஷணகிரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர், தோழர் இராமலிங்கம் கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைக்க, பழைய பேருந்து நிலையம் நோக்கிச் செங்கடல் நகரத் தொடங்கியது. கடலே நகரும் போது தஞ்சை மட்டும் அதிராதா என்ன?

மூன்றில் ஒரு பங்கு மகளிர், கைக் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர்கள் என குடும்பம் குடும்பமாய் மாந்தவினத்தின் பருவமனைத்தும் கைகோர்த்த கண்கொள்ளாக் காட்சியால் தஞ்சையே வியந்தது. 

அரசியல் கட்சிகள், பிற இயக்கங்கள் சங்கங்கள் சார்பாக பேரணி-மாநாடுகள் என்றால் பெரியவர்கள் மட்டுமே பங்கேற்பதுதான் தமிழ்நாட்டு வழக்கம்.
ஆனால், 1980 களிலேயே இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து, மாநாடுகளிலும் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மறியல்களிலும், கைது சிறை என்றாலும் அதற்கும் அஞ்சாது, குடும்பம் குடும்பமாய் அலை அலையாய் மக்களைத் திரட்டும் புதியதொரு பரிமாணத்தை உருவாக்கியது மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயி விடுதலை முன்னணி உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள்தான் என்றால் அது மிகையல்ல.

வீரவணக்கம்! வீரவணக்கம்!
தியாகிகளுக்கு வீரவணக்கம்!
தெலுங்கானாவில் நக்சல்பாரியில்,
வடாற்காட்டில் தருமபுரியில், 
புன்னப்புராவில் வயலாரில்,
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக,
இன்னுயிர் ஈந்தத் தோழர்களே!
நக்சல்பாரித் தோழர்களே!
உங்களுக்கெங்கள் வீரவணக்கம்!


தோழர்களின் நரம்புகளை முறுக்கேற்றும் மந்திர முழக்கங்கள் இவை. மெய்சிலிர்க்கும் இம்முழக்கங்கள் கேட்போரை திகைக்க வைக்கும். மார்ச்சிய-லெனினிய பொதுவுடமைப் போராளிகளை நக்சலைட்' என்ற கிலியூட்டும் வசைச்சொல்லாக ஆளும் வர்க்கம் அதை மாற்ற முயன்ற போது, இல்லை, இது நக்சல்பரிஎன விளித்து அதை மக்கள் மொழியாக மாற்றியது மக்கள் கலை இலக்கியக் கழகம்.
 
அகவை அறுபத்தைந்து ஆனாலும், ஆண்டுகள் பல கழித்து, முன்களத்தில் முழங்கி வந்தேன் இறுதிவரை; பின்புலத்தில் அணித்தோழர்கள் முழங்க! இது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.
 
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சங்கமித்தது செங்கடல். விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர் இராமலிங்கம் அவர்கள் கொடியேற்ற, மாலை ஆறு மணிக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது பொதுக்கூட்டம்.

பொதுக்கூட்டம்
 
பொதுக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற, விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கம்பம் மோகன் அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டவாறு, பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வதைப் போல தமிழகத்தின் பல் முனைகளிலிருந்தும்  தோழர்கள் காவிரிப் படுகையை நோக்கிப் பாய்ந்ததால்தான் திடலே நிரம்பி வழிந்ததோ!
 
விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் இராவணன் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் சாமி நடராஜன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் – CPM), தோழர் மாசிலாமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர், CPI), தோழர் சுந்தர் மோகன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மகா சபை), தோழர் பழனி ராஜன் (சமவெளி விவசாயிகள் பாசன சங்கம்), தோழர் திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்), தோழர் சின்னதுரை (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்றது) உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள், விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறினர்.



விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழமை அமைப்புகளைச் சார்ந்த தோழர் காளியப்பன் (பொருளாளர், மக்கள் அதிகாரம்), தோழர் இராவணன் (இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்), தோழர் அன்பு (மாநிலச் செயலாளர் புரட்சிகர மாணவர் இளைஞர் அணி), தோழர் பழனி (தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 
SKM அமைப்பின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான புருஷோத்தம் சர்மா மாநாட்டில் சிறப்புரையாற்றினார். SKM-இன் தமிழ்நாடு தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெங்களூர் வழக்கறிஞர் தோழர் பாலன் வராத குறையை, மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர், வழக்கறிஞர் ராஜூ அவர்கள் தனது எழுச்சி உரையின் மூலம் ஈடு செய்தார்.
 
பொருளாதார கோரிக்கைகளை பெறுவது மட்டுமல்ல, மாறாக நிலம், அதிகாரம், ஜனநாயகம் கோரும் அரசியல் உரிமையும் விவசாயிகளின் விடுதலைக்கு அடிப்படையானவைகளாகும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர் போடி செல்வராஜ் அவர்கள் மாநாட்டில் நிறைவுரையாற்றினார்.
 
மாநாட்டுத் தீர்மானங்களை விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ரவி அவர்கள் வாசித்தார்.

கலைநிகழ்ச்சி
 
இடையிடையே பாடல்கள் பாடிய கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழுவினர், இறுதியில் எழுச்சிமிகு கலை நிகழ்ச்சியை நடத்தி முடிக்க, பாட்டாளி வர்க்க  சர்வதேசிய கீதத்துடன் மாநாடு-பொதுக்கூட்டம் இரவு பத்து மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

நூல் வெளியீடு
 
மாநாட்டில் விவசாயப் புரட்சியும் மக்கள் திரள் பாதையும் தோழர் ரங்கநாதன் வாழ்க்கைப் பயணம் என்கிற நூலை காரப்பட்டு தோழர் ஏழுமலை அவர்கள் வெளியிட,  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலாக்கம் குறித்து காரப்பட்டு தோழர் அம்பேத்கர் அவர்கள் விளக்கினார். (இந்நூல் குறித்துத்  தனி பதிவு ஒன்றை எழுத உள்ளேன்).
 
இயற்கை உபாதைகளுக்காக ஒரு சிலர் எப்போதாவது இருக்கைகளை விட்டு எழுவதைத்தவிர, ஆயிரக்கணக்கானோர் நான்கு மணி நேரம் அசையாமல், அசராமல் அமரந்திருப்பதை மகஇக-விவிமு கூட்டங்களில்தான் காணமுடியும். தேநீரோ, சுண்டல், பொறி-கடலையோ, எதுவும் இங்கே திடலுக்குள் நுழையாது என்பதால் பார்வையாளர்களின் கவனம் சிதறாது.  ஏன்? கைபேசியை நோண்டினாலே தொண்டர்கள் எச்சரிக்கை செய்வர். அவ்வப்பொழுது நாவை நனைக்க அயராமல் தொண்டர்கள் கொடுக்கும் குடிநீர் மட்டும்தான் இங்கு ஆகாரம். சிறுவர்களைக்கூட கூட்டம் சுண்டி இழுத்துக் கொள்ளும்.

அறிவுப் பசிக்கு கீழைக்காற்றும், உணர்வுப் பசிக்கு, விவசாயிகள் விடுதலை முன்னணி, திருவெண்ணைநல்லூர் மூத்த தோழர் ஏழுமலை தொடங்கி வைத்த ஓவியர் முகிலனின் "ஓவியக் காட்சியும்" திடலில் தடம் பதித்தன.
 
புதிய அரசியலை மட்டுமல்ல புதிய பண்பாட்டையும் கைக்கொள்ளும் கூட்டமிது என்பதனால் மதுப்பிரியர்களை இங்கே காண முடியாது. அதனால் திடல் ஓரங்களில், திரைமறைவுகளில் கண்ணாடிக் காடுகள் முளைப்பதில்லை. இதனால்தானே காலை மற்றும் பகல் உணவை முடிக்க, மரத்தடியை நாடாமல் கோயிலடியை எங்களால் நாட முடிந்தது.
 
மாநாடு முடிந்த பிறகு, அவரவர் கொண்டு வந்த கலவை உணவை பகிர்ந்துண்ண, எமக்கோ பாலாவும் ராஜனும் இட்டிலியை பகிர்ந்தளிக்க, பசியாறினோம்.
காலை நேரப்பயணம்-பேரணி-பொதுக்கூட்டம் என தொடர் நிகழ்வால் இரவு பதினோரு மணிக்கு உடல் ஓய்வை நாடினாலும், மாநாட்டு அனுபவத்தை அவரவர் பகிர்ந்த பிறகு, பேருந்துச் சன்னல்களின் மென்காற்று உடலை வருட ஊர் நோக்கிப் பயணமானோம்.
 
'பெல் சிட்டி' ஊழல்வாதிகளை கண்டும் காணாமல் இருந்த ஒரு சிறு கூட்டம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கையும் களவுமாய் பிடிபட்டபோது, அணிகளின் கேள்விக்கனைகளை எதிர்கொள்ள அஞ்சி நடுங்கி அமைப்பை விட்டு ஓடியதால் இடையில் ஒரு சிறு சலசலப்பு; சற்றே சலிப்பு. உண்மைகளை உணர்ந்தோர் ஓர் அணியில் ஆயிரமாயிரமாய் இங்கே; உணராத அச்சிறு கூட்டம் மேலும் பிளவுண்டு, கேள்வியாய், கனலாய் சீந்த நாதியற்று நடுத்தெருவில்
 
நடுத்தெருவில் நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுமா என்ன?

முற்றும்
 
தமிழ்மணி
 

தொடர்புடைய பதிவுகள்


தஞ்சை: விவசாயிகள் விடுதலை முன்னணி, மாநாட்டு அனுபவம்!... தொடர்-1


நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?



Wednesday, 16 August 2023

நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

மக்கள் அதிகாரம் என்ற அமைப்பின் பெயரில், தமிழகத்தில் மூன்று குழுக்கள் செயல்படுகின்றன. 80% பேரைக் கொண்ட ராஜூ தலைமையிலான அணிதான் உண்மையான மக்கள் அதிகாரம் என்ற உண்மை தெரிந்தும்கூட, மற்ற இரண்டு சிறுபான்மை கோஷ்டிகளும் மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவதால் குழப்பம்தான் நீடிக்கிறது. தோழர் ராஜூ தலைமையிலான அணியினர்தான் பெரும்பான்மை அணியினர் என்பது 13.08.2023 அன்று தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் விடுதலை முன்னணியின் பேரணியும் மாநாடும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளது. 

எனவே, கூட்டு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள், மக்கள் அதிகாரம் பெயரில் செயல்படும் சிறுபான்மை கோஷ்டிகளிடம் இதுகுறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டும். சிறுபான்மை கோஷ்டிகளான வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துகுமார் கோஷ்டிகள் தங்களது அமைப்புப் பெயரை மாற்றிக் கொள்ளாதவரை அவர்களைக் கூட்டு நடவடிக்கைகளுக்கு அழைப்பதைத் தவிர்க்க வேண்டும். வேறு வழியே இல்லாத சூழலில் அவர்களை அழைக்கும் போது, குறைந்தபட்சம் மக்கள் அதிகாரம் (வெற்றிவேல் செழியன் பிரிவு), மக்கள் அதிகாரம் (முத்துக்குமார் பிரிவு)  என்றாவது பிரசுரங்களிலும், சுவரொட்டிகளிலும் போட வேண்டும் . சமூக வலைதளங்களிலும் அவ்வாறே தெரிவிக்க வேண்டும்.


இன்று, தமிழ்நாட்டில் செயல்படும் பல்வேறு முற்போக்கு ஜனநாயக இயக்கங்களில் செயல்படுவோர், ஏதோ ஒரு தாய் அமைப்பிலிருந்து வெளியேறி வந்தவர்கள்தான். அவ்வாறு வந்தவர்கள், தங்களது தாய் அமைப்பின் பெயரிலேயே செயல்படுவதில்லை; மாறாக, புதியதொரு அமைப்புப் பெயரில்தான் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், ஒரு பிரிவினர் "மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி" என்ற பெயரிலும் மற்றொரு பிரிவினர் "பாட்டாளி வர்க்க சமரன் அணி" என்ற பெயரிலும்தான் செயல்பட்டு வருகின்றனர் "மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி" தோழர்களும் அதன் பெயரிலேயே செயல்பட்டு வருகின்றனர். அவர்கள் தனித்தனியாக இருந்த போதிலும், பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் ஏற்பாடு செய்கின்ற கூட்டு நடவடிக்கைகளில் மேற்கண்ட மூன்று பிரிவினரும்கூட அதில் பங்கேற்கின்றனர். மக்கள் அதிகாரம் அமைப்பு பிளவுபட்ட அதே காலகட்டத்தில் நடந்தவைதான் மேற்கண்ட எடுத்துக்காட்டும்.

இத்தகைய கள நிலவரம் தெரிந்தும், வெற்றிவேல் செழியன் கோஷ்டியினரும் முத்துக்குமார் கோஷ்டியினரும், மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவது ஜனநாயக விரோதமானது மட்டுமல்ல, அராஜகமானதும் வன்முறையானதுமாகும்கூட.

மக்கள் அதிகாரம் அமைப்புகள் பிளவுபட்டு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், சிறுபான்மை கோஷ்டியினர் தொடர்ந்து மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுவதை பிற முற்போக்கு ஜனநாயக இயக்கங்கள் அங்கீகரிப்பதும் ஏற்றுக்கொள்வதும் "ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்" என்பதாகத்தான் கருத வேண்டி இருக்கிறது. எனவே, முற்போக்கு ஜனநாயக இயக்கங்களே! நீங்கள் தொடர்ந்து கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை!

வருத்தத்துடன்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

Tuesday, 15 August 2023

தஞ்சை: விவசாயிகள் விடுதலை முன்னணி, மாநாட்டு அனுபவம்!... தொடர்-1

2023, ஆகஸ்டு 13, அதிகாலை 4.34 மணிக்கு கைபேசி ஒலிக்கிறது. மறுமுனையில் வேலூரிலிருந்து இராவணன். காலை 7.00 மணிக்கு ஆற்காட்டில் இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறார்.

பயணத்திற்குத் தேவையான உணவை எனது இணையர்  தயார் செய்ய, 23 ஆண்டுகளாக என்னைச் சுமக்கும் எனது இணைபிரியா நண்பன் சுசுகி மேக்ஸ் 100 ஐத் தட்டிக் கொடுத்து காலை 7.20 மணிக்கு ஆற்காட்டை நோக்கி விரைகிறோம்.

எனது நண்பனுக்கு வயதாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் அவனை அதிக தூரம் விரட்டுவதில்லை. அதனால் அவனுக்குக் கால் வயிறு அளவுக்குத்தான் கஞ்சி ஊற்றுவேன். போகும் வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் நூறு ரூபாய்க்கு அவன் வயிற்றை நனைத்து, பத்து நிமிடத்தில் ஆற்காடு சென்றடைந்தோம்.

நாங்கள் பயணிக்க வேண்டிய வாகனம் ஏற்கனவே அங்கே எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. தாமதத்திற்கான குற்ற உணர்வு என்னை ஆட்கொள்ள, அருகில் இருந்த வண்டி நிறுத்தத்தில், பத்து ரூபாய் கொடுத்து எனது நண்பனை ஓரங்கட்டினேன். இதுவே பாலாற்றங்கரைக்கு வடக்கே உள்ள முத்துக்கடையிலும், வாலாசாப்பேட்டையிலும் ரூ.15/-, இது 24 மணி நேரத்திற்கு. அதுவே சென்னை போன்ற நகரங்களில் 12 மணி நேரத்திற்கு ரூ.20/-. ஏன் இத்தனை வேறுபாடு? பேராசை யாரைத்தான் விட்டது என்று எண்ணியவாறு தெற்கு நோக்கி தோழர்களுடன் பயணமானேன்.

பசியாற அங்காளத்தாள்

காலையிலேயே முழு வயிற்றை நிரப்பிக் கொண்டதால், சற்றும் களைப்பின்றி எங்களைச் சுமக்கும் வாகனம், ஆரணி மற்றும் சேத்துப்பட்டு நகரங்களைத் தாண்டி விரைந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குப் பசி எடுக்க, அருக்கம்பூண்டியில் எங்கள் ஆத்தா அங்காளத்தாள் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். பரந்து விரிந்த சிமெண்ட் தரை தளம், ஓய்வெடுக்க கொட்டகைகள், தாகம் தீர்க்க தண்ணீர்த் தொட்டி என தன்னை நாடி வருவோருக்கு தேவையான வசதிகளை செய்து கொண்டு படுகளத்தில் ஒரு ஓரமாக மல்லாக்கப் படுத்துக் கொண்டிருக்கிறாள் அங்காளத்தாள். பார்ப்பனியம் யாரைத்தான் விட்டு வைத்தது? எங்கள் ஆத்தாவையும்  ஈஸ்வரனுக்கு வைப்பாட்டியாக்கி, அவளை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியாக்கிவிட்டனர்.

இட்லி, பொங்கல், எலுமிச்சை சோறு, புளி சோறு, சப்பாத்தி  மற்றும் மாட்டுக் கறி என தோழர்கள் கொண்டு வந்த  உணவை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். கிரிவலப் பாதையில் அசைவ உணவா? என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுமானால் அங்கலாய்க்கலாம். ஆனால் எங்கள் ஆத்தாவே அசைவப் பிரியர் என்பதால் இங்கு அங்கலாய்க்க ஏதுமில்லை. தோழர் சரவணன் குடும்பத்தாரின் முன்முயற்சியால் அவர்கள் கொண்டு வந்த கூடுதல் இட்லி அனைவரின் தேவையையும் இட்டு நிரப்பியது.

நாம் எதற்காகத் தஞ்சை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை விளக்கி, தோழர்கள் அகிலன், இராவணன், சரவணன், சாமி ஆகியோர் உரையாற்ற, 'சாமக்கோழி கூவும் நேரத்திலே', 'வெள்ளி முளைக்கையிலே நெல்லறுக்கப் போயிருந்தோம்', 'ஆலைத் தொழிலாளி நாங்கடா', 'காடுவெட்டி நெல் குவித்து', போன்ற பிரபலமான மக்கள் கலை இலக்கியக் கழகப் பாடல்களைத் தோழர்கள் அகிலன், வாணி உள்ளிட்டோர் பாட, பயணம் தொடர்ந்தது.

மாநில நெடுஞ்சாலைகள் பச்சைக் கொடி காட்ட, தேசிய நெடுஞ்சாலைகளோ மோடி என்ற முகமூடியுடன் ஆங்காங்கே மறிக்கிறது. கேட்டதைக் கொடுத்தால்தான் பாதை கிடைக்கும்.

திருமாந்துறை முகமூடிக் கொள்ளையரைத் தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகி, உள்ளூர் சாலையின் ஊடாக லப்பைக்குடிக்காடு வழியாக அரியலூரை நோக்கிப் பயணமானோம். 

மருதையன் கோவிலும் ஐய்யனாரும்

பிற்பகல் மணி ஒன்றரையைத்தாண்டி விட்டதால் பசியாறுவதற்காக மாத்தூர் மருதையன்கோவில் அருள்மிகு ஐய்யனார் திருக்கோவிலுக்குள் நுழைந்தோம்.

தங்களைப் பாதுகாத்த வீரனை மதிப்பதும் வழிபடுவதும் பழந்தமிழர் வழக்கம். அத்தகைய வீரனைத்தான் இன்றும் பல்வேறு கிராமங்களில் கோவில் எழுப்பி ஐய்யனாராக தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர். ஐய்யனார் ஒருவன் அல்ல, அவன் ஒவ்வொரு ஊரிலும் இருந்த ஊர்க்காவலன். ஐய்யனாருக்கு மட்டுமன்றி, அவனது சீடர்கள், அவன் பயன்படுத்திய‌ குதிரை உள்ளிட்ட அனைவருக்கும் சிலையமைத்து அழகு பார்க்கின்றனர் தமிழர்கள். இன்று இவர்களோடு கையில் துப்பாக்கியுடன் காவலர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் சிலை அமைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஐய்யனாரையும் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு ஊருக்கும் வேறுவேறாக இருந்த ஐய்யனாரை, ஈஸ்வரனுக்கும், பெண்ணாக அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த வாரிசாகக் கதை அளந்து ஐய்யனாரை அசிங்கப்படுத்தி விட்டனர். இங்கே, மருதையன் கோவில் ஐய்யனார் கையில் வீணையைக் கொடுத்து கேவலப்படுத்தி உள்ளனர். இதுவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாகத்தான் இருக்க முடியும்.

இது அப்பகுதியில் பிரபலமான கோவில் போல. ஒரு சிலர் பொங்கல் வைத்துக் கொண்டும், ஒரு சிலர்‌ விருந்துக்கான உணவு சமைத்துக் கொண்டும் இருந்தனர்.

கோவிலுக்குள் நுழைந்தால் தண்ணீருக்குப் பஞ்சமிருக்காது என்பதனால்தான் கோவிலைத் தேர்வு செய்து தஞ்சமடைந்தோம். இங்கேயும் அவரவர் கொண்டு வந்த உணவை அனைவரும் பங்கிட்டுப் பகிர்ந்து கொண்டோம். வயிறு முட்ட உண்ணவில்லை என்றாலும் மனம் மகிழ உண்டதனால் யாருக்கும் குறையொன்றுமில்லை.

தஞ்சை ரயிலடி

மீண்டும் பயணம் தொடர்ந்தது. அரியலூர், திருவையாறு வழியாக தஞ்சையை நெருங்கினோம். விவசாயிகள் விடுதலை முன்னணியின் (வி.வி.மு) பேரணி தஞ்சை கீழ்வாசலுக்குப் பதிலாக, ரயிலடிலிருந்து தொடங்குவதாக செய்தி கிடைக்க, நேராக மாலை நான்கு மணிக்கு முன்பாகவே ரயிலடியைச் சென்றடைந்தோம். நாங்கள் சென்ற பிறகே மற்ற ஊர்களில் இருந்து தோழர்கள் வரத் தொடங்கினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கம்பம் மோகன், செல்வராஜ், காரப்பட்டு ஏழுமலை, பெருவளப்பூர் மணி, திருச்சி போஜகுமார், ராஜா, ஜீவா, ஜான், நிர்மலா, குமார், செழியன், வழக்குரைஞர் ஆதி, தருமபுரி இராமலிங்கம், தஞ்சை அருள், இராவணன், காளியப்பன், ராஜன், கோவை சித்தார்த்தன், சிவகங்கை நாகராஜ், சங்கராபுரம் இராமலிங்கம், திருவண்ணாமலை ஆனந்த், பாடகர் கோவன், வழக்குரைஞர் ராஜூ உள்ளிட்ட பழையத் தோழர்களைப் பார்த்து அளவலாவிய போது மனம் ஏனோ குதூகலித்தது. நேரம் ஆக ஆக பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள் குவியத் தொடங்கினர். ரயிலடி எங்கும் செங்கொடிகள் உயரத் தொடங்கின.


தொடரும்….

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

Tuesday, 8 August 2023

வன்னிய இளைஞர்களே; இன்றைய தேவை வாளா? எழுது கோலா?

இந்து மத சாஸ்திரப்படி தற்போது நடப்பது கலியுகம் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கலியுகத்தில் சத்திரியர்களும், வைசியர்களும் கிடையாது என்பதுதான் இந்து மத சாஸ்திரம். வன்னியர்கள் எல்லாம் சத்ரியர்கள் அல்ல, அவர்களும் சூத்திரர்கள்தான் என்பதை டாக்டர் ராமதாஸ் நன்கு அறிவார். 

தனது வாக்கு வங்கி அரசியலுக்காக அவர்களை சத்திரியர்கள் என்று உசுப்பேற்றி தன் பக்கம் தக்க வைத்துக் கொள்கிறார். வன்னியர்கள் மத்தியில் உள்ள படித்த அறிவாளிகள் யாராவது இந்த உண்மையை வன்னியர் சாதி மக்களுக்குப் புரிய வைத்தால் வாள் ஏந்தும் வன்னியர் பிள்ளைகளின் கைகளில் குறைந்தபட்சம் (எழுது) கோல் ஏந்தவாவது உதவும்.

தமிழ்மணி


Sunday, 6 August 2023

கத்தார்: நக்சல்பாரி அரசியல் கலையின் அடையாளம்!

புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொண்டு, தான் பயணித்த காலம் வரை, உயிரையும் துச்சமென மதித்து, பல்வேறு அடக்குமுறைகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு, ஆளும் வர்க்கத்தின் சிம்ம சொப்பனமாய் விளங்கிய இந்தியப் புரட்சிகரப் போராட்ட வரலாற்றில் அழியாத் தடம் பதித்த மாபெரும் புரட்சிக் கலைஞன், நக்சல்பாரிப் பாடகர் கத்தார் மறைந்தார்.

அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியின் சலங்கை ஒலியும், ஆளும் வர்க்கத்தின் காதுகளை அதிரவைக்கும். அவர் மேடையில் பாடி ஆடும் போது, அவர் போர்த்தியிருக்கும் ஆடைகூட உயிர் பெற்று ஆடத் தொடங்கிவிடும். 



காடுகளின் ஊடே, பல மைல் தூரம் கால்கடுக்க நடந்து வந்து அவரது கலை நிகழ்ச்சியைக் காணச் சென்றோர் எண்ணற்றோர்.  அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இலட்சக் கணக்காணோரை தன் மேடை நோக்கி ஈர்க்கும் ஆற்றல் மிகு கலைஞன். அவர் மேடை ஏறி பாடியவரைக்கும் அவர்தான் ஆந்திராவின் 'சூப்பர் ஸ்டார்'. மொழி புரியவில்லை என்றாலும் அவரது தெலுங்குப் பாடல்களைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கும். 

பின்னாளில் அவரது புரட்சிப் பயணத்தில் பெரும் சருக்கல்கள் ஏற்பட்டாலும் நக்சல்பாரி அரசியல் கலையின் அடையாளம் அவர். 

1990 வாக்கில் அவர் திருச்சி உறையூர் கடைவீதியில் சலங்கை கட்டி நடந்து வந்த காட்சிகளும், தில்லை நகரில் அவர் நடத்திய கலைநிகழ்ச்சியும், எனது இரண்டு வயது மகனோடு அவர் கொஞ்சிக் குலாவியக் காட்சிகளும் என் கண்முன்னே வந்து போவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை. 

கோடானுகோடி பாட்டாளி மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மகத்தான கலைஞனே! போய் வா! பொதுவுடமை அரசியல், களத்தில் உள்ளவரை உனது பெயரும் உடன் பயணிக்கும்.

கண்ணீர்த் துளிகளுடன்,

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

Friday, 4 August 2023

பார்ப்பனியம் காட்டுமிராண்டிகளின் கோட்பாடு!

இன்றைய முகநூல் பதிவுகள்

******

இராகுல் எனும் கடப்பாரையால் பார்ப்பனிய சனாதானக் கோட்டையின் காவிக் கற்கள் சிதையத் தொடங்கியுள்ளன. விரைவில் கோட்டையும் தரைமட்டமாகும்!

*****

பார்ப்பனியத்தை பின்பற்றுபவர்கள் கல் நெஞ்சக்காரர்கள். ஆம்! பார்ப்பனியம் காட்டுமிராண்டிகளின் கோட்பாடு.

*****

நீண்டகால தொலை நோக்குப் பார்வையும், கொள்கையும், கோட்பாடும் இல்லாமல் தனி நபர்களால் கட்டமைக்கப்படும் ஒரு சில கட்சிகள், இயக்கங்கள் (சில சாதிய பின்புலத்தோடு) அந்தத் தனி நபரின் மரணத்திற்குப் பிறகு அவையும் மறைந்து போகும். ஒரு சிலருக்கு வாரிசுகள் இருந்தால் சில காலம் முட்டுக் கொடுக்கப்பட்டு அதன் பிறகு அவையும் கரைந்து போகும்.

















*****

சல்லிக் காசுக்கு பெறாத பய சீமான். இன்னுமாடா நம்புறீங்க இவனை?

*****

சீமானுக்கு ஒன்றும் சளைத்தவர் அல்ல திருமுருகன் காந்தி. இவரிடம் தொலை நோக்கு திட்டம் ஏதுமில்லை. பொதுவுடமை அரசியலை நோக்கி அணிதிரள வேண்டிய தமிழ்நாட்டு இளைஞர்களை, 'ஈழம்-கருப்புச் சட்டை, சனாதன எதிர்ப்பு' என்றெல்லாம் பிதற்றி, தன் பக்கம் ஈர்த்துக் காயடிக்கும் வேலையைத்தான் இவர் செய்து வருகிறார். இன்று சீமானின் தம்பிகளில் சிலர் அவரது உண்மை முகத்தை உணர்ந்தது போல திருமுருகனின் உண்மை முகத்தை அவரது சீடர்கள் உணரும் நாள் எந்நாளோ?

*****

நெய்வேலி: "கலவரத்தில் ஈடுபட்டவர்கள் பாமக -வைச் சேர்ந்தவர்கள் இல்லை"-அன்புமணி. 

'அமைதியாகக்' போராடிய உங்களைப் போன்ற பாமக-வினர் அன்றே விடுதலை செய்யப்பட்டனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் களத்திலேயே கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் அடைக்கப்பட்டனர். 

அப்ப. பாளையங்கோட்டை சிறையில் இன்று நீங்கள் சந்தித்தது எந்தக் கட்சிக்காரர்களை டாக்டர்?


ஊரான் முகநூல் பதிவிலிருந்து.....