புரட்சிகர அரசியலை ஏற்றுக் கொண்டு, தான் பயணித்த காலம் வரை, உயிரையும் துச்சமென மதித்து, பல்வேறு அடக்குமுறைகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டு, ஆளும் வர்க்கத்தின் சிம்ம சொப்பனமாய் விளங்கிய இந்தியப் புரட்சிகரப் போராட்ட வரலாற்றில் அழியாத் தடம் பதித்த மாபெரும் புரட்சிக் கலைஞன், நக்சல்பாரிப் பாடகர் கத்தார் மறைந்தார்.
அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியின் சலங்கை ஒலியும், ஆளும் வர்க்கத்தின் காதுகளை அதிரவைக்கும். அவர் மேடையில் பாடி ஆடும் போது, அவர் போர்த்தியிருக்கும் ஆடைகூட உயிர் பெற்று ஆடத் தொடங்கிவிடும்.
காடுகளின் ஊடே, பல மைல் தூரம் கால்கடுக்க நடந்து வந்து அவரது கலை நிகழ்ச்சியைக் காணச் சென்றோர் எண்ணற்றோர். அரசியல் வேறுபாடுகளைக் கடந்து இலட்சக் கணக்காணோரை தன் மேடை நோக்கி ஈர்க்கும் ஆற்றல் மிகு கலைஞன். அவர் மேடை ஏறி பாடியவரைக்கும் அவர்தான் ஆந்திராவின் 'சூப்பர் ஸ்டார்'. மொழி புரியவில்லை என்றாலும் அவரது தெலுங்குப் பாடல்களைக் கேட்கும் போது மெய் சிலிர்க்கும்.
பின்னாளில் அவரது புரட்சிப் பயணத்தில் பெரும் சருக்கல்கள் ஏற்பட்டாலும் நக்சல்பாரி அரசியல் கலையின் அடையாளம் அவர்.
1990 வாக்கில் அவர் திருச்சி உறையூர் கடைவீதியில் சலங்கை கட்டி நடந்து வந்த காட்சிகளும், தில்லை நகரில் அவர் நடத்திய கலைநிகழ்ச்சியும், எனது இரண்டு வயது மகனோடு அவர் கொஞ்சிக் குலாவியக் காட்சிகளும் என் கண்முன்னே வந்து போவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.
கோடானுகோடி பாட்டாளி மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட மகத்தான கலைஞனே! போய் வா! பொதுவுடமை அரசியல், களத்தில் உள்ளவரை உனது பெயரும் உடன் பயணிக்கும்.
கண்ணீர்த் துளிகளுடன்,
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
No comments:
Post a Comment