Showing posts with label mai. Show all posts
Showing posts with label mai. Show all posts

Sunday, 22 September 2024

மார்க்சியவாதிகளே! மாணவர்களாய் மாறுங்கள்!

மார்க்சியம் பேசும் எல்லோருமே  கம்யூனிஸ்ட் அறிக்கை, மூலதனம், லெனின் தேர்வு நூல்கள், தேசிய இனப் பிரச்சனை குறித்து ஸ்டாலின், மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் என மூல நூல்களைத்தான் படிக்கின்றனர். 

ஓம்சின் மின்சார விதி,  பித்தாகரசின் கணித விதி, ஆர்க்கிமிடிஸின் மிதவை விதி என அறிவியலின் பலப்பல மூலவிதிகளைப் படிப்பவர்கள் அனைவருமே உலகம் முழுக்க ஒரே மாதிரியாகத்தான் புரிந்து கொள்கின்றனர், நடைமுறைப் படுத்துகின்றனர்.  ஆனால் மார்க்சிய மூல நூல்களைப் படிப்போருக்கு மட்டும் மாறுபட்டப் புரிதல்களும் நடைமுறைகளும்  இருப்பதற்குக் காரணம் என்ன? மார்க்சியம் ஒரு அறிவியல் இல்லையா? 


ஒன்று மார்க்சியம் படிப்போருக்கு மார்க்சிய விதிகள் புரியாமல் இருக்க வேண்டும் அல்லது புரிந்தாலும் தங்களின் விருப்பமே இதில் மேலோங்கி இருக்க வேண்டும். திருக்குறளை தங்கள் வசதிக்கேற்ப சங்கிகள் வேண்டுமென்றே திரித்துப் புரட்டுவதைப் போல மார்சியத்தையும் இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புரட்டுகிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் இன்று என்னவாக இருக்கிறதோ அது அதுவாகத்தான் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்வதிலும் மார்க்சியவாதிகள் வேறுபடுகிறார்களே, ஏன்? இந்தியாவின் அரசியல் பொருளாதரத்தில் பல உண்மைகள் இருக்க முடியாதே? ஒரு உண்மைதானே இருக்க முடியும்? அப்படி இருக்க மார்க்சியவாதிகளுக்கு மட்டும் பலநூறு புரிதல்கள் வருவது ஏன்? 

தான் நம்புவதுதான் (கடவுள்) உண்மை என நம்பும் ஒரு பக்தனுக்கும், தான் நம்புவதுதான் உண்மையான மார்க்சியம் என நம்பும் ஒரு மார்க்சியவாதிக்கும் என்ன வேறுபாடு?

மார்க்சியம் என்றால் இதுதான் மார்க்சியம் என்றும், இந்தியாவில் சமூக மாற்றம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றும் ஒரு முன்முடிவை வைத்துக்கொண்டு, அதற்கான ஆதாரங்களைத்தான் மூல நூல்களில் இன்றைய மார்க்சியவாதிகள் தேடுகிறார்களோ என்றுகூட ஐயுறவேண்டி உள்ளது.

அதிகத் தரவுகள் கிடைக்கும் போதுதான் ஒரு சிக்கலுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தீர்க்கவும் முடியும் என்பது இன்றைய அறிவியல் அணுகுமுறை.

சிலர் மார்க்சிய நூல்களைக் கட்டுக் கட்டாகப் புதுப்பிக்கின்றனர். இரவு பகலாகச் சிலர் படிக்கின்றனர். பலர் வண்டி வண்டியாக எழுதிக் குவிக்கின்றனர். அப்படியானால் நிறையத் தரவுகள் கிடைக்கிறது என்றுதானே பொருள். தரவுகள் அதிகரிக்க அதிகரிக்க இந்தியப் புரட்சி குறித்தப் புரிதலில் ஒத்தக் கருத்தை நோக்கி நகருவதுதானே நடக்க வேண்டும்.

ஆனால், நடைமுறையில் இவர்கள் தரவுகளைத் தேடத் தேட
சிக்கல்கள் அதிகமாவதோடு கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து ஒற்றுமைக்குப் பதிலாக பிளவுகளே எஞ்சி நிற்கின்றன.

மார்க்சியம் பேசும் பலரும் ஏற்கனவே படித்த விவரங்களிலிருந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, அந்த முடிவுக்கான ஆதாரங்களைத்தான் இவர்கள் மார்க்சிய மூலநூல்களில் தேடிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முடிவுதான் அறுதியானது, இறுதியானது என்கிற இறுமாப்பும் இவர்களைத் தொற்றிக் கொள்வதால் இவர்கள் தங்களை மார்க்சிய அதிமேதாவிகளாகக் கருதிக் கொள்வதோடு, தங்களது முடிவோடு மாறுபடுகிறவர்களை ஓடுகாலிகள், சந்தர்ப்பவாதிகள், திருத்தல்வாதிகள் என வசைபாடி, நேற்று வரை தோழர்களாகப் பழகியவர்களிடம் பங்காளிச் சண்டைக்குத் தூபம் போடுவதோடு மார்க்சியவாதிகள் மேலும் மேலும் பிளவுபடுவதற்குக் காரணமாக அமைகின்றனர்.  

என்னைப் பொறுத்த வரையில் இந்தியாவில் மார்க்சியத்தில் கரை கண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் மாணவர்கள்தான். ஆனால், ஒரு சிலரோ தங்களை ஆசிரியர்களாக, பேராசிரியர்களாகக் கருதிக் கொண்டு எல்லோருக்கும் மேலானவர்களாக தங்களை நிறுத்திக் கொள்கின்றனர். அந்த மார்க்சே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தாலும் அவருக்கே இவர்கள் வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

எனவே, மார்க்சியவாதிகளே, மாணவர்களாய் மாறுங்கள். மார்க்சியம் பற்றிப் படருவதை யாராலும் தடுக்க முடியாது. மாணவர்களே எதையும் சாதிக்க வல்லவர்கள்.

தமிழ்மணி 

Monday, 19 August 2024

கவிஞர்களே, எப்படிக் கவிதை எழுதுவது என்பதை மாவோவிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

எனக்குக் கவிதைகளில் அதிக அனுபவம் இல்லை. மரபுக் கவிதை, புதுக்கவிதை என்றெல்லாம் சொல்கிறார்கள். எதுவாயினும் உவமைகளால் நிரப்பப்படுவதுதான் கவிதைக்கு அளவுகோல் என்பது மட்டும் புரிகிறது. 

புத்தக அலமாரியைப் புரட்டிப் பார்த்தேன். மாசே துங் கவிதைகள் கண்ணில் பட்டது. எல்லாவற்றையும் படிக்கவில்லை. ஆனால், கடைசிக் கவிதையை மட்டும் படித்தேன். அதுவே என்னைக் கவர்ந்தது. உங்களோடு பகிர்கிறேன்.

மிகவும் சிக்கலான சர்வேத அரசியலை எவ்வளவு அழகாக கவிதையாய் வடித்துத் தருகிறார் மாவோ.

கவிஞர்களே! கவிதை எப்படி எழுதுவது, யாருக்காக எழுதுவது, எது பற்றி எழுதுவது என்பதை மாவோவிடம் கற்றுக் கொள்ளுங்கள்.

****

இரு பறவைகள்: ஒரு உரையாடல்
(இலையுதிர் காலம்: 1965)

அந்தப் பெரும் பறவை (1)
தன் இறகுகளை விசிறியாய் விரித்து,
தொண்ணூராயிரம் லி தொலைவு உயர்ந்து 
சீறும் புயலைக் கிளப்புகிறது.
அதன் முதுகுக்கு மேலே நீலவான் இருக்க,
ஊர்களும் நகரங்களும் உள்ளடங்கிய 
மனிதனின் உலகை அளவிட 
அது 
கீழே பார்க்கிறது;
துப்பாக்கி வெடிப்புகள் விண்ணைச் சிராய்க்கின்றன,
பீரங்கிக் குண்டுகள் நிலத்தினைத் துளைக்கின்றன.
ஒரு சிட்டுக் குருவி (2) தன் புதருக்குள்ளே 
அஞ்சி விறைந்து நிற்கிறது 
"சே, என்ன இது ஓர் குழப்பப் பாழ் நகரம்!
ஓ, நான் இதிலிருந்து நழுவிப் பறந்து விட விரும்புகிறேன்."

"எங்கே என நான் கேட்கலாமோ?" எனப் பெரும் பறவை வினவ, சிட்டுக்குருவி விடை சொன்னது: "தேவதை நாட்டு மலைகளின் மீதே இரத்தினங்கள் பதித்த மாளிகைக்கு.
இரண்டாண்டு முன்பு, 
இலையுதிர்  கால ஒளிமிகு நிலவில் மும்முனை ஒப்பந்தம் (3) கையெழுத்தானது 
உனக்குத் தெரியாதா? 
அங்கே வயிறு புடைக்கத் தின்னலாம், 
ஆவி பறக்கும் உருளைக் கிழங்குடன் 
மாட்டிறைச்சி நிறைந்த உணவு வகை உண்டு," (4) 
பெரும் பறவை சொன்னது:
"நிறுத்து உன் வெற்று உளறலை. உற்று நோக்கு - 
உலகம் தலை கீழாய்ப் புரட்டப்படுவதை." 
*****
குறிப்பு:
1. பெரும் பறவை (Roc): இது சீனப் பழங்கதைகளில் கூறப்படும் கற்பனைப் பறவை. ஆயிரம் லி நீளமுள்ள குன் எனும் வட கடல் மீன் ஆயிரம் லி நீளமுடைய பறவையாக மாறியது என்று இக்கதைகள் கூறுகின்றன. இப்பறவை தொண்ணூராயிரம் லி உயரம் பறக்கக்கூடியதாம். மேகம் போல விரியும் இதன் இறகுகள் சூறாவளியைக் கிளப்பக் கூடுமாம். இங்கு இது மார்க்சிய-லெனினியப் புரட்சியாளர்களுக்கான குறியீடாக நிற்கிறது.

2. சிட்டுக்குருவி: புரட்டலாளருக்கான குறியீடு; புரட்சி முதன்மையானதல்ல, உற்பத்தியே முதன்மையானது என்பவர்கள் இவர்கள் - உலக அளவில் குருச்சேவைத் தலைவனாகக் கொண்டவர்கள்; உலகிலும் சீனத்திலும் ஏற்பட்ட புரட்சி எழுச்சியையும் கொந்தளிப்பையும் 'குழப்பப்பாழ் நரகம்" எனக் கருதுபவர்கள்.

3. மும்முனை ஒப்பந்தம்: 1963 ஆம் ஆண்டு குருச்சேவ் காலத்தில் சோவியத் யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை செய்து கொண்ட போலித்தனமான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம்.
 
4. புரட்டலாளர்கள் குருச்சேவின் புரட்டல் கொள்கையில் நம்பிக்கை வைக்கிறார்கள். மும்முனை ஒப்பந்தத்தை மதிக்கிறார்கள். குருச்சேவின் 'மாட்டிறைச்சி - உருளைக்கிழங்கு' சோசலிசத்தைப் பாராட்டி நாடுகிறார்கள். 'பாட்டாளி வர்க்கம் தனது உலகக் கண்ணோட்டத்துக்கேற்ப உலகை மறுவார்ப்புச் செய்தல்' என்பதை மறுக்கிறார்கள் - இவைதான் சிட்டுக்குருவி உவமையில் சொல்லப்படுகின்றன. புரட்சியாளர்களோ (பெரும்பறவை) உலகம் புரட்சிகரமாக மாற்றப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1965 ஆம் ஆண்டு முதலில் எழுதப்பட்ட கவிதை மீண்டும் 1976 ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு நாளில் வெளியிடப்பட்டது. புரட்டலாளருக்கு எதிராக மாவோ நடத்திய இறுதிப் போராட்டத்தில் இக்கவிதைக்குக் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

Sunday, 7 July 2024

நக்சல்பாரி என்பவர் யார்? அவர் கொள்கை என்ன?

 

 



"கொலைக்களமாக மாறிவரும் சமூகச் சூழல்! இதற்கு முடிவே கிடையாதா?"

என்ற தலைப்பில் இன்று ஒரு கட்டரை வெளியிட்டிருந்தேன்

அந்தக் கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்திருந்தேன்.

"உள்ளாட்சி அமைப்புகளை நக்சல்பாரிகள் கைப்பற்றி,  நேர்மையோடும் போர்க்குணத்தோடும் செயல்பட முன்வராதவரை, உள்ளூர் அளவில் பிழைப்புவாதிகளும் இரவுடிகளும் தலையெடுப்பதும், அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஊழல் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், இதில் ஏற்படும் போட்டி மற்றும் மோதல்களில் படுகொலைகள் நடப்பதும் தொடரவே செய்யும்.

மக்களின் அன்றாடத் தேவைகளில் கவனம் செலுத்தி, மக்களோடு மக்களாக பயணிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுகின்ற அணுகுமுறை வெகுவாக உதவும் என்றே நான் கருதுகிறேன். இதன் போக்கில்தான் பிழைப்புவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து அரசியல் படுத்தவும் முடியும்.
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், இது குறித்த விவாதங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன்"

whatsapp குழுவில் பகிர்ந்த போது ஒரு நண்பர் கீழ்க்கண்ட கேள்வி எழுப்பி இருந்தார். 

"நக்சல்பாரி என்பவர் யார்? அவர் கொள்கை(கள்) என்ன (என்னென்ன)?"

அதற்கான எனக்கு பதில் கீழே, 

காரல் மார்க்ஸின் பொதுவுடமைக் கோட்பாடுகளை ஒட்டி, 1917 இல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசப் புரட்சிகள் நடைபெற்றன.  1949 இல் சீனாவில் மாசேதுங்கின் (மாவோ) தலைமையில் சோசலிசத்துக்கு முந்தைய கட்டமான பொதுவுடைமை கோட்பாடுகளின் அடிப்படையிலான புதிய ஜனநாயகப் புரட்சி நடைபெற்றது.

இந்தியாவைப் பொருத்தவரை 1924 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) தோன்றியது. இந்தக் கட்சி இந்தியாவில் அமைதி வழியில் சோசலிசப் புரட்சியை வலியுறுத்தியது. சீனாவில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக புரட்சியை ஒட்டி இந்த கட்சியில் இருந்த ஒரு சிலர், இந்தியாவிலும் அது போன்றதொரு மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று 1964 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியை (மார்க்சிஸ்ட்) -CPI(M) தோற்றுவித்தனர். அதே நேரத்தில் இவர்கள் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரிசபையில் பங்கேற்றனர். 

நிலவுடமை பண்ணை ஆதிக்கச் சுரண்டல் கோலோச்சியச் காலம் அது. உழுபவனுக்கே நிலம் சொந்தபாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கட்சியில் இருந்தவர்கள் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்தில் இருந்த நிலங்களைக் கைப்பற்றி ஏழை விவசாயிகளுக்கு உரிமையாக்கி அந்நிலங்களில் செங்கொடியை ஏற்றினர். அப்பொழுது மேற்கு வங்க உள்துறை அமைச்சராக இருந்த ஜோதிபாசு காவல்துறையை ஏவி அந்தப் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கினார்.


ஆனால், இந்த போராட்டம் நாடெங்கிலும் காட்டுத் தீயாய் பரவியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிவர்கள் சாரு மஜூம்தார் தலைமையில் 1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) - CPI(M-L) என்ற கட்சியைத் தோற்றுவித்தனர். 

சீனாவின் பாதையே நமது பாதை, இந்தியாவில் நீண்ட கால மக்கள் யுத்தம் என்ற போராட்ட முறையில் ஒரு புதிய ஜனநாயக அரசை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்தக் கட்சி செயல்பட்டது. ஆனால், அதே நேரத்தில் பண்ணையார்களையும் கந்துவட்டிக்காரர்களையும் படுகொலை செய்தனர். இரத்தத்தில் கை நனைக்காதவன் கம்யூனிஸ்டே அல்ல என்று முழுங்கும் அளவிற்கு இடது தீவிரவாதப் பாதையில் சென்றது. இத்தகைய படுகொலைகளைச் செய்வதன் மூலம் புரட்சியை சாதிக்க முடியாது, மாறாக ஒரு படையைக் கட்டி அரசுக்கு எதிராக போர் நடத்திதான் புரட்சி செய்ய வேண்டும் என்றும், படுகொலைகளுக்கு எதிரான கருத்துடையோர் கட்சியில் இருந்து வெளியேறி பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டனர். 

இன்று அவர்கள் பல்வேறு குழுக்களாக செயல்படுகின்றனர். ஒரு சிலர் தேர்தல் அரசியலிலும் பங்கெடுத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகவும் வருகின்றனர். 

ஆந்திராவில் செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மட்டுமே கெரில்லாப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட கம்யூனிச அமைப்பாகும்.

நக்சல்பரி கிராமத்தில் நடைபெற்ற எழுச்சிக்குப் பிறகு 1967 இல்  உருவான கட்சியின் பின்னணியில் செயல்படுபவர்களை அந்த கிராமத்தைக் குறிக்கும் வகையில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர். அரசும், போலீசும் மற்ற கட்சியினரும் அந்தச் சொல்லை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக 'நக்சலைட்' என்று அழைத்தனர்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட தமிழகத்தில் செயல்படும் ஒரு குழுவின் வெளிப்படையான மக்கள் கலை இலக்கியக் கழகத்தில்தான் நான் தீவிரமாக செயல்பட்டு வந்தேன்.

நக்சல்பாரி பின்னணியைக் கொண்டவர்கள் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள், நேர்மையாக செயல்படுவார்கள், அடக்கு முறைகளுக்கு அஞ்ச மாட்டார்கள் என்பது இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்ற நடைமுறை. ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சிலர் தவறு செய்தால் அவர்களை அந்த அமைப்பில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். பாரிய தவறு என்றால் தண்டனையும் வழங்குவார்கள். 

நக்சல்பாரி பின்னணி என்பது நாட்டுப்பற்று, நாட்டு மக்கள் நலனை மட்டுமே மையமாகக் கொண்டதொரு பாரம்பரியம்.


நக்சல்பாரி பின்னணியைக் கொண்ட இயக்கங்கள் பல்வேறு குழுக்களாக இருந்தாலும் அவர்களுடைய பொது நோக்கம் இந்தியாவில் ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவி அதன் தொடர்ச்சியாக சோசலிச, பொதுவுடமை அமைப்பை நோக்கி முன்னேற வேண்டும் என்பதுதான். இதை அடைவதற்கான நடைமுறையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால்தான் அவர்கள் பல்வேறு குழுக்களாக இருக்கிறார்கள். 

மார்க்சிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட இயக்கங்கள் உலகமெங்கிலும் எல்லா நாடுகளிலும் செயல்படுகின்றன என்பது ஒரு கூடுதல் தகவல். ரஷ்யாவில் சோசலிச வீழ்ச்சிக்குப் பிறகு உலகம் எங்கிலும் பொதுவுடமை இயக்கங்கள் பலவீனமாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால், மனிதகுல வரலாற்று நோக்கில் புராதான பொதுவுடைமைச் சமுதாயம், ஆண்டான் அடிமைச் சமுதாயம், நிலவுடமைச் சமுதாயம், முதலாளித்து சமுதாயம்,  சோசலிச சமுதாயம் என்பது தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று காலகட்டம். 

உலகம் எங்கிலும் தற்போது நடப்பது முதலாளித்துவ சமுதாயம். இது தவிர்க்க முடியாமல் சோசலிச சமுதாயத்தை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட.

மார்க்சியத்தின் மூல நூல்களைப் படித்தால் பொதுவுடமை குறித்த ஏராளமான விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

விரிவஞ்சி நான் மிக சுருக்கமாக பதிவிட்டிருக்கிறேன். 

நன்றி.

தமிழ்மணி