இதன் விளைவாகவே மக்களிடையே இனப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று—குறிப்பாக இந்தியாவில் சாதிப்பற்று (சாதிவெறி)—கொண்டவர்களாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தங்களுக்கு எதன் மீது பற்று இருக்கிறதோ, அதேபோன்ற பற்று கொண்டவர்களைத் தங்களவர்களாக ஒவ்வொருவரும் கருதுகின்றனர். இதன் காரணமாகத் 'தங்கள் ஆட்களுக்கு'ச் சாதகமாகவும், மற்றவர்களுக்குப் பாதகமாகவும் நடந்து கொள்ளும் போக்கு உருவாகிறது.
இவ்வாறு தங்களைச் சார்ந்தவர்களுக்குச் சாதகம் செய்ய வேண்டுமானால், அதற்கு அதிகாரமே முதன்மை அடிப்படையாக அமைகிறது. அதிகாரத்தில் அமர்பவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சாதகமாகச் செயல்படுவதால்தான், சமூகத்தில் ஒருசிலர் மட்டுமே பாதுகாப்பாக வாழ முடிவதும், பெரும்பான்மை மக்கள் தொடர்ந்து பாதிப்புக்குள்ளாவதும் நடக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை, மொத்த மக்கள் தொகையில் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே உள்ள பார்ப்பனர்களே நாட்டின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் தங்கள் கையில் வைத்துக்கொண்டு, தங்களுக்கானவர்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்து கொள்கின்றனர்; சலுகைகளை வாரி வழங்குகின்றனர். மற்றவர்களுக்குச் சலுகைகளைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, பாதகமாவது செய்யாமல் இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் தொடர்ந்து மற்ற சமூகங்களுக்குப் பாதகங்களையே செய்து வருகின்றனர்.
அதற்கு எடுப்பான உதாரணங்கள்: வடக்கே பாபர் மசூதி இடிப்பு முதல் தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் விவகாரம் வரை! இவை மட்டுமன்றி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான அணுகுமுறையை அவர்கள் மிகத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சனாதன நடவடிக்கைகள் சிலவற்றிற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் தடையாக இருப்பதால், அந்தச் சட்டத்தையே மாற்றியமைக்கும் முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதற்குத் தோதாக நீதித்துறையிலும் தங்களுடைய ஆதிக்கத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றால், பார்ப்பன சனாதன சக்திகளை அரசியல் அதிகாரத்திலிருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்த வேண்டும். இந்தப் போராட்டத்தின் ஊடாகவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கின்ற விழிப்புணர்வையும் நாம் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்.
இந்த நோக்கத்தைக் கொண்டு, முன்னாள் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் உள்ளிட்ட சிலரின் முன்னெடுப்பில் தொடங்கப்பட்டுள்ள ‘அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்கம்’ சார்பாகக் கலந்துரையாடல் கூட்டம் 14.08.2026 அன்று இராணிப்பேட்டை, நாவல்பூரில் நடைபெற்றது.
அக்கூட்டத்தில், இவ்வமைப்பின் அமைப்பாளர்களில் ஒருவரும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் அவர்களும், முன்னாள் அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்களும் பங்கேற்று, சென்னையில் இவ்வமைப்பு சார்பாக நடைபெறவிருக்கும் மாநாட்டின் அவசியம் குறித்து விளக்கமளித்தனர்.
அசேன்
மனோ தங்கராஜ்
பாதிரியார் ஞானசேகரன் மற்றும் மகஇக தோழர்கள்
அரசியல் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடும் அதே வேளையில், அதிகாரத்தைக் கையில் வைத்துக்கொண்டிருக்கும் சனாதன சக்திகள், கீழடி போன்ற தொல்லியல் ஆய்வு முடிவுகளை மூடிமறைத்துத் தமிழர்களின் வரலாற்றை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதையும், இந்த நாட்டின் நாகரிகமே வேத நாகரிகம்தான் என்று நிறுவ முயல்வதையும் நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.
இதை வலியுறுத்தி, ஆகஸ்ட் 22-ஆம் தேதி தஞ்சையில் நடைபெறவுள்ள மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் (மகஇக) "தமிழ் மக்கள் இசை விழா" குறித்த பிரசுரம், வேலூர் மகஇக சார்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் வழங்கப்பட்டது. நிகழ்வில் மகஇக தோழர்கள் இராவணன், அகிலன், வாணி மற்றும் தமிழ்மணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
சனாதன சக்திகளை அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டுமானால், நாம் கருத்தால் மட்டுமல்ல; களத்திலும் கைகோர்த்துப் போராட வேண்டும்!
- ஊரான்





No comments:
Post a Comment