Monday, 18 May 2026

டெலிபதி: அறிவியலா? நம்பிக்கையா?

எண்ண அலைகளும் டெலிபதியும்: அறிவியல் என்ன சொல்கிறது?

மொபைல் போன் வேலை செய்வதற்கு அலைகளை அனுப்ப ஒரு டிரான்ஸ்மிட்டரும், பெற ஒரு ரிசீவரும் தேவை என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.


மனித மூளைக்குள் கோடிக்கணக்கான நியூரான்கள் (Neurons) மின் தூண்டுதல்கள் மூலமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. இதை நாம் EEG (Electroencephalogram) கருவி மூலம் அளவிட முடியும். இதனால் மூளைக்குள்ளும் ஒரு மெல்லிய 'மின் காந்தப் புலம்' இருப்பது உண்மைதான்.

ஆனால், இதைத் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடும்போது சில முக்கியமான முரண்பாடுகள் உள்ளன:

1. டிரான்ஸ்மிட்டர் பலவீனம்:

மொபைல் போன் கோபுரங்கள் மெகா வாட் அளவில் ஆற்றலைப் பயன்படுத்தி அலைகளைப் பாய்ச்சுகின்றன. ஆனால், மனித மூளை உருவாக்கும் மின் காந்த அலைகள் மிக மிக நுட்பமானவை (Micro-volts). இவை மண்டை ஓட்டைத் தாண்டி சில சென்டிமீட்டர் தூரம் கூடப் பயணிக்க முடியாது. எனவே, ஒருவரது எண்ணம் அலைகளாக மாறி மைல்கள் கடந்து செல்வது என்பது இயற்பியல் (Physics) விதிகளின்படி சாத்தியமற்றது.

2. ரிசீவர் சிக்கல்:

ஒருவர் அனுப்பும் எண்ண அலைகளைப் பெறுவதற்கு இன்னொருவரது மூளையில் அதற்கேற்ற 'ஆன்டெனா' அல்லது 'ரிசீவர்' கிடையாது. ரேடியோவில் குறிப்பிட்ட 'அதிர்வெண்' (Frequency) வைத்தால் தான் பாடல் கேட்கும். மனித மூளையில் அப்படி ஒரு டியூனிங் வசதி இருப்பதாக அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

3. டெலிபதி (Telepathy):

டெலிபதி என்பது ஒருவரின் எண்ணங்களை இன்னொருவர் கருவிகள் ஏதுமின்றி அறிந்துகொள்வது. இது 'பாராசைகாலஜி' (Parapsychology) என்ற துறையில் விவாதிக்கப்படுகிறது. பல ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், ஒரு கட்டுப்பாடான ஆய்வுக்கூடத்தில் (Controlled Environment) ஒருவரது எண்ணம் மற்றொருவருக்குச் சென்றது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

4. தற்செயல் நிகழ்வு (Coincidence):

நாம் ஒருவரை நினைக்கும்போது அவரிடமிருந்து அழைப்பு வருவது என்பது பெரும்பாலும் ஒரு 'தற்செயல் நிகழ்வு' அல்லது 'புள்ளிவிவர வாய்ப்பு' (Probability) மட்டுமே. நாம் ஒரு நாளைக்கு நூறு பேரை நினைக்கலாம், அதில் ஒருவர் அழைக்கும்போது மட்டும் "அலைகள் வேலை செய்கிறது" என்று நம்புகிறோம். மற்ற 99 தோல்விகளை நமது மூளை கணக்கில் கொள்வதில்லை.

வாழ்த்துக்கள் வேலை செய்யுமா?

நாம் ஒருவரை வாழ்த்தும்போது, அந்த நேர்மறை எண்ணம் நமக்குள் ஒரு அமைதியைத் தருகிறது. நாம் அந்த நபரை நேரில் சந்திக்கும்போது நமது உடல் மொழி (Body Language) மற்றும் அன்பான அணுகுமுறை அவருக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. இது உளவியல் ரீதியான தொடர்பு (Psychological Connection) தானே தவிர, காற்றில் பாயும் மின்காந்த அலைத் தொடர்பு அல்ல.

முடிவு:

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், மனித மூளை ஒரு 'ரேடியோ ஸ்டேஷன்' போல அலைகளைப் பரப்புவது இல்லை. "டெலிபதி" என்பது ஒரு அழகான கற்பனையாகவும், நம்பிக்கையாகவும் இருக்கலாம்; ஆனால் அது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்ட தொழில்நுட்பம் அல்ல.


பொன்.சேகர்

தொடர்புடைய பதிவு

நமது கைபேசி எப்படி வேலை செய்கிறது? ரேடியோ அலைகள், ஆப்டிக் ஃபைபர் & கடல் அடி கேபிள்கள் – எளிய விளக்கம்

நாம் தினசரி பயன்படுத்தும் மொபைல் போன் உண்மையில் ஒரு அதிசயம். நாம் பேசும் குரலும், அனுப்பும் படங்களும் எப்படி உலகின் எந்த மூலையில் இருக்கும் நபரையும் உடனடியாக அடைகின்றன? இதை ஒரு பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய தமிழில் தொகுத்துள்ளேன்.

1. நமது குரல் மற்றும் படம் எப்படி அனுப்பப்படுகின்றன?

- நீங்கள் பேசினால், உங்கள் குரல் ‘ஒலி அலைகளாக’ மொபைலின் மைக்ரோஃபோனைத் தாக்குகிறது.

- அது முதலில் மின் சமிக்ஞையாக (மின்சார அலை) மாற்றப்படுகிறது.

- பிறகு ‘எண்களாக’ (0 & 1) மாற்றப்படுகிறது (டிஜிட்டல்).

- படங்களும் இதேபோல் புள்ளிகளாக (pixels) எண்களாக மாற்றப்படுகின்றன.

- இந்த எண்களை ‘ரேடியோ அலைகளின் மீது ஏற்றி’ (Modulation) அனுப்புகிறது மொபைல்.


2. ரேடியோ அலைகள் என்றால் என்ன?

ரேடியோ அலைகள் என்பவை ‘கண்ணுக்குத் தெரியாத மின்காந்த அலைகள்’. இவை ஒளியின் வேகத்தில் பயணிக்கும். உங்கள் மொபைலில் இருந்து வெளியேறும் இந்த அலைகள் காற்று வழியாகப் பரவுகின்றன.

இந்த அலைகளுக்கு ‘செல் டவர்கள்’ (கோபுரங்கள்) தான் முதல் இலக்கு. பொதுவாக 1 முதல் 10 கிலோமீட்டர் வரை தூரத்தில் உள்ள டவரை இந்த அலைகள் அடைகின்றன.

3.மின்காந்த அலைகள் என்றால் என்ன?

நாம் கண்ணால் பார்க்கும் சூரிய ஒளி முதல், ரேடியோ, மொபைல் சிக்னல்கள் வரை அனைத்தும் மின்காந்த அலைகளே (Electromagnetic Waves). இவை மின்சாரப் புலமும் (Electric Field), காந்தப் புலமும் (Magnetic Field) ஒன்றுக்கொன்று செங்குத்தாக அதிர்வதால் உருவாகின்றன. இவற்றுக்கு ஊடகங்கள் (காற்று அல்லது நீர்) தேவையில்லை; இவை வெற்றினத்தில் (Vacuum) கூடப் பயணிக்கும் தன்மை கொண்டவை. ஒளியின் வேகத்தில் (வினாடிக்கு சுமார் 3 லட்சம் கிலோமீட்டர்) பயணிக்கக்கூடிய இந்த அலைகள், தங்களுக்குள் ஆற்றலையும் தகவல்களையும் சுமந்து செல்கின்றன. அலைநீளம் (Wavelength) மற்றும் அதிர்வெண் (Frequency) அடிப்படையில் இவை ரேடியோ அலைகள், நுண் அலைகள் (Microwaves), எக்ஸ்-ரே எனப் பல வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

3. டவருக்கு வந்த பிறகு என்ன நடக்கிறது?

- டவரில் ரேடியோ அலைகள் பிடிக்கப்படுகின்றன.

- அங்கு அவை மீண்டும் எண்களாக மாற்றப்படுகின்றன.

- இந்த எண்கள் ‘ஆப்டிக் ஃபைபர் கேபிள்’ வழியாக மிக வேகமாக அடுத்த இடத்துக்கு அனுப்பப்படுகின்றன.

4. ஆப்டிக் ஃபைபர் என்றால் என்ன?

ஆப்டிக் ஃபைபர் என்பது ‘மிக மெல்லிய கண்ணாடி நார்கள்’ கொண்ட கேபிள். இதன் மூலம் ‘ஒளியை’ (Laser Light) அனுப்பி தகவல்களை அனுப்புகிறார்கள். 

ஒளி மிக வேகமாகவும், மிக அதிக அளவு தகவலையும் இழப்பு இல்லாமல் எடுத்துச் செல்லும். இந்தக் கேபிள்கள் நிலத்தடியிலும், ‘கடலுக்கு அடியிலும்’ (Submarine Cables) பல்லாயிரம் கிலோமீட்டர் நீளத்துக்கு பதிக்கப்பட்டுள்ளன.

5. முழு பயணம் எப்படி நடக்கிறது?

1. உங்கள் மொபைல் → ரேடியோ அலையாக டவருக்கு அனுப்பும்

2. டவர் → ஆப்டிக் ஃபைபர் வழியாக தேசிய நெட்வொர்க்குக்கு

3. தேவைப்பட்டால் கடல் அடி ஆப்டிக் கேபிள் வழியாக வெளிநாட்டுக்கு

4. பெறுபவருக்கு அருகிலுள்ள டவருக்கு தகவல் வரும்

5. அங்கிருந்து மீண்டும் ரேடியோ அலையாக மாறி பெறுபவரின் மொபைலை அடையும்

6. பெறுபவரின் மொபைல் அதை ஒலி மற்றும் படமாக மாற்றி காட்டும்

இந்த முழு செயல்முறையும் ‘பல்லாயிரம் மடங்கு வினாடியில்’ (fractions of a second) நடைபெறுகிறது.


***

ஒரு எளிய உவமை:

நீங்கள் ஒரு கடிதம் எழுதி அனுப்புவதாக வைத்துக்கொள்ளுங்கள்.  

- உங்கள் குரல்/படம் = கடித உள்ளடக்கம்  

- ரேடியோ அலை = தபால்காரன் (காற்று வழியாக)  

- செல் டவர் = உள்ளூர் தபால் அலுவலகம்  

- ஆப்டிக் ஃபைபர் = விரைவு ரயில் / விமானம்  

- மறுமுனை டவர் = பெறுபவருக்கு அருகிலுள்ள தபால் அலுவலகம்

இப்படித்தான் நமது உலகம் இன்று ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.

பொன்.சேகர்

குறிப்பு: கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ஆப்டிக் பைபர் கேபிள்களுக்கு கட்டணம் வசூலிக்கப் போவதாக ஈரான் அறிவித்துள்ளதாக தொலைக்காட்சியில் ஒரு செய்தியைப் பார்த்த பிறகு அது குறித்த விவரங்களைத் தேடியதன் விளைவு இந்தக் கட்டுரை.

நன்கொடை கலாச்சாரம்: லட்சியத்தைச் சிதைக்கும் லட்சங்கள்!

தமிழகத்தின் மூலை முடுக்குகளில் நடைபெறும் கும்பாபிஷேகங்கள், விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் முதல் கொள்கை பரப்பு இயக்கங்கள் வரை இன்று ஒரு ஆபத்தான கலாச்சாரம் வேகமாகப் பரவி வருகிறது. அது — முறைகேடாக சம்பாதிக்கும் அரசியல் பிரமுகர்களிடம் கைநீட்டி நிதி பெறும் கலாச்சாரம்.


ஒரு அமைச்சர், ஆளுங்கட்சிப் பிரமுகர் அல்லது ஆண்ட கட்சிப் பிரமுகர்,  அல்லது கஞ்சா-கள்ளச்சாராயம்-கந்துவட்டி-ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஒரு நிகழ்ச்சிக்காக ஆயிரங்களிலும் லட்சங்களிலும் நிதி வழங்கும்போது, அதை பலர் அந்த விழாவின் பெருமையாகப் பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில், அது அந்த அமைப்பின் குரல்வளை மெதுவாக நெரிக்கப்படத் தொடங்கும் தருணம் என்பதை உணர மறுக்கிறார்கள்.

இந்த லட்சங்கள் எங்கிருந்து வருகின்றன?

ஒரு மக்கள் பிரதிநிதி அல்லது அமைச்சர், அல்லது மேற்படி பிரமுகர்கள் ஒரு விளையாட்டுப் போட்டிக்கோ, கும்பாபிஷேகத்திற்கோ அல்லது பொதுநல நிகழ்ச்சிக்கோ ஆயிரங்களிலும் லட்சங்களிலும் நிதி வழங்குகிறார்கள் என்றால், அந்தப் பணம் அவர்களது சொந்த உழைப்பில் சம்பாதித்ததா? பெரும்பாலும் இல்லை.

அவை:
  • அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடாகத் திரட்டப்பட்டவை
ஊழல் மற்றும் அதிகாரத்தின் நிழலில் கிடைத்த பணத்தை வைத்து “புண்ணியம்” செய்வது தார்மீக ரீதியில் எப்படிச் சரியாகும்?

சுருங்கும் குரல்வளை

“உண்ட வீட்டிற்குத் துரோகம் செய்யாதே” என்ற மனநிலை நம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. ஒரு அமைச்சர் அல்லது அரசியல் பிரமுகரிடம் லட்சங்களைப் பெற்றுவிட்டால், அவர் நாளை தவறு செய்யும்போது நம்மால் அதைக் கேள்வி கேட்க முடியுமா? கைநீட்டி பணம் வாங்கிய அந்தச் நொடியே:
  • இயக்கத்தின் அல்லது விழாக் குழுவினரின் சுயமரியாதை சுருங்குகிறது.
  • போராட்ட வீரியம் மங்குகிறது.
  • விமர்சன குரல் மௌனமாகிறது.
மக்கள் நலனுக்காகப் போராட வேண்டிய சமூக ஆர்வலர்கள், இறுதியில் அந்த அரசியல்வாதிகளின் மறைமுகத் துதிபாடிகளாக மாறிப்போகிறார்கள்.

தன்னாட்சியை இழக்கும் இயக்கங்கள்

ஒரு இயக்கம் தனது பொருளாதாரத் தேவைகளுக்காக அதிகார மையங்களைச் சார்ந்துவிட்டால், அதன் கொள்கை சுதந்திரம் மெதுவாகச் சிதைகிறது. அவர்கள் வழங்கும் நிதி என்பது வெறும் உதவி அல்ல, அது ஒரு முதலீடு.
“நாங்கள் உங்களுக்குப் பணம் தருகிறோம்; நீங்கள் எங்களைத் தட்டிக்கேட்காமல் இருங்கள்” என்பதே அந்த மறைமுக ஒப்பந்தம். 

இதுவே பல கொள்கை இயக்கங்களை, வெறும் ‘மாநாடு-நிகழ்ச்சி நடத்தும் அமைப்புகளாக' மாற்றிவிடுகிறது.

எதற்கு அணுகலாம்? எதைத் தவிர்க்கலாம்?

அணுக வேண்டியவை: பொதுக்கூட்ட அனுமதி, காவல் பாதுகாப்பு, தண்ணீர், மின்சாரம் போன்ற நிர்வாக வசதிகளுக்காக, அமைச்சர்களை அணுகுவது தவறல்ல. ஏனெனில், அவர்கள் மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் நிர்வாகப் பொறுப்பாளர்கள்.

தவிர்க்க வேண்டியவை: விழா மலர் விளம்பரம், விளையாட்டுப் போட்டி, கலை நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை, மாநாட்டு நன்கொடை, போட்டிப் பரிசுத் தொகை, தனிப்பட்ட நிதியுதவி என்ற பெயரில் முறைகேடாக சம்பாதிக்கும் அரசியல்வாதிகளிடமிருந்து பணம் பெறுவது — பொதுநல இயக்கங்கள், சேவை அமைப்புகள் ஆகியவற்றின்  லட்சியத்திற்கு வைக்கப்படும் கொள்ளி.

மாற்று வழி என்ன?

மக்களுக்காக நடத்தப்படும் எந்த இயக்கமும் தனது நிகழ்ச்சிகளுக்கு மக்களிடமிருந்தே நிதி பெற வேண்டும்.
  • வீதி வீதியாகச் சென்று பெறப்படும் உண்டியல் வசூல்.
  • உறுப்பினர் சந்தா.
  • சிறு வணிகர்களின் வெளிப்படையான நன்கொடைகள்.
மக்களின் சில்லறைக் காசுகளில் இயங்கும் இயக்கம் மட்டுமே அதிகாரத்தின் முன் நிமிர்ந்து நிற்கும். அமைச்சர்களின் லட்சங்களில் இயங்கும் அமைப்புகள், தவறு நடக்கும் போது மௌனிப்பதைத் தவிர வேறு வழியற்று நிற்கும்.

முடிவாக…

ஒரு கிண்ணம் நஞ்சில் ஒரு துளி பால் விழுந்தால் அது பாலாகாது. அதேபோல், முறைகேடாக சம்பாதித்தப் பணத்தில் நடத்தப்படும் கும்பாபிஷேகமோ, பொதுநல நிகழ்ச்சியோ, சமூகப் பணியோ — அவை ஒருபோதும் நேர்மையானதாக இருக்க முடியாது.
உங்கள் லட்சியம் உயிரோடு இருக்க வேண்டுமெனில், அதிகாரத்தின் பணப்பைகளை அல்ல, மக்களின் கரங்களைப் பற்றுங்கள்.

தமிழ்மணி

Friday, 8 May 2026

சிதிலமடைந்த சாலைகளும் சிதைந்து வரும் விழுமியங்களும்!

காலை ஆறு மணி.  

சாலையோர வேம்பு மற்றும் புங்கை  மரங்களின் இலைகள் அசைவற்று, ஒருவித மரண அமைதியில் உறைந்திருந்தன. அந்த நிசப்தத்தைத் துணையாகக் கொண்டு கடைவீதியை நோக்கி நடந்தேன்.


நான்கு ரூபாய் கொடுத்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வை வாங்கிக் கக்கத்தில் அடக்கினேன். கறிக்கடையில் ஒரு கிலோ கோழிக்கறியும், பத்து முட்டைகளும் வாங்கிப் பையில் பக்குவப்படுத்தினேன். மெட்ரோ காபி கடையில் இரண்டு சால்ட் பிஸ்கட்டுடன் சூடான டீயைத் தொண்டைக்குள் இறக்கிவிட்டு வீடு திரும்பினேன்.

காலையில் எழுந்ததும் அனிச்சையாகத் தேநீர்க் கடைகளை மக்கள் கூட்டம் மொய்ப்பதை அன்றாடம் காண்பதுண்டு. ஆனால் இன்று, அந்த அனிச்சை என்னை அங்கே தள்ளவில்லை; உடலின் தளர்ச்சிதான் "போ... போ..." என என்னை மெல்லத் தள்ளியது.

தேர்தலில் வென்றவர்களின் மனமும், தோற்றவர்களின் மனமும் ஒருசேர சிதைந்து, புண்ணாகி, பழுதடைந்து கிடப்பதைப் போல,
தேர்தலுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு விரிவாக்கத்துக்காகச் சிதைக்கப்பட்ட சாலையோரங்கள், இன்று நாதியற்றுக் குண்டும் குழியுமாகச் சிதிலமடைந்து கிடக்கின்றன. 

சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு நாட்களாக ஓடும் விவாதங்கள் என்னுள்ளும் பெரும் அலைகளை எழுப்புகின்றன. தேர்தலுக்கு முன் உன்மத்தர்களாகக் காட்சியளித்தவர்கள், இன்று சிலருக்கு உத்தமர்களாக மாறிவிட்டார்கள். எல்லாம் தலைக்கு மேல் தொங்கும் அந்த அரசியல் தேன்கூட்டின் மாயம்தான்.

ஒரு சொட்டுத் தேனுக்காக “ஆட்சியில் பங்கு... அதிகாரத்தில் பங்கு!” என்று சிலர் ஆர்ப்பரிக்கத் தொடங்கிவிட்டனர். “மக்களே எஜமானர்கள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” எனக் கூறி தலைவரையே எச்சரிக்கும் தம்பிகளைப் பார்க்கும்போது — பெருமைப்பட வேண்டுமா, அல்லது பரிதாபப்பட வேண்டுமா என்று தெரியவில்லை.

“மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்; மக்களிடம் கற்போம்” என்று அடிக்கடி சொல்கிறார்கள். ஆனால் மக்களிடம் உள்ளது என்ன? மூடநம்பிக்கைகள், சடங்கு சம்பிரதாயங்கள், சாதி-மத வெறி, எவன் காசு கொடுத்தாலும் கைநீட்டும் கயமைத்தனம் — இவைதானே மலிந்து கிடக்கின்றன?

தன்னலமும், ஏமாற்றும், பொய்யும், புரட்டும் மலிந்துவிட்ட இன்றைய சமூகத்தில், நேர்மையாளர்களை எண்ணினால் இரு கைகளின் விரல்களே போதுமானது. இதுதான் கசப்பான யதார்த்தம்.

முன்பெல்லாம் வள்ளுவர், புத்தர், வள்ளலார் போன்ற மகான்கள் மக்களை நெறிப்படுத்தினார்கள். இன்றோ, நேற்றுவரை மகான்களாகத் தெரிந்த அண்ணன்களைத் ‘தம்பிகள்’ சீற்றத்தோடு நெறிப்படுத்துகிறார்கள். இதைத்தான் கலிகாலம் என்று ரிஷிகள் சொன்னார்களோ?

எனது நடை இப்போது முன்போல் மிடுக்காக இல்லை. வயது முதிர்ந்தால் தளர்ச்சி இயல்புதானே! வீடு வந்து நாற்காலியில் அமர்ந்தபோது, மின்விசிறியின் மெல்லிய காற்று உடல் வெக்கையைச் சற்றே தணித்தது.

ஆனால்... இந்தச் சமூகம் உள்ளுக்குள் ஏற்றியிருக்கும் வெக்கை மட்டும் எப்போது, எப்படித் தணியும்?

ஊரான்

Tuesday, 28 April 2026

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு சுமையா?

முன்னுரை

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே நம் மனம் நாடுகிறது. 


கர்ப்பம் தரித்தால், குழந்தை பிறந்தால், அதுவும் உடல் ஊனம் ஏதும் இன்றி பிறந்தால், பள்ளிக் கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்றால், கை நிறைய சம்பளம் வாங்கும் வேலை கிடைத்தால், ஒரு கனவு இல்லத்தைக் கட்டி முடித்தால், விபத்தில் சிக்கி மீண்டு வந்தால்…

இப்படி எண்ணற்ற தருணங்களில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் எது?

கர்ப்பம் தரிக்க வில்லை என்றால், பிறக்கும் குழந்தை குறைபாடுகளோடு பிறந்தால், தேர்வுகளில் தோல்வி அடைந்தால், வேலை கிடைக்கவில்லை என்றால்...  

சமூகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள், அழுத்தங்கள், இழிவான குறிச்சொற்கள்…

என ஒருவர் தான் சந்தித்த சவால்கள் பலப்பல. இத்தகைய சவால்களுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றிதான் அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஒருவேளை இவையெல்லாம் ஒருவருக்கு இயல்பாகக் கிடைத்து விட்டால், அதாவது ஒருவர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்க நேர்ந்தால் உண்மையில் அது இனிமையானதா? அல்லது 
குவாண்டம் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவரான Max Planck கூறுவது போல  அது ஒருவிதமான சுமையா? 

“தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக நாட்களைக் கழிப்பது
ஒரு மனிதனுக்குக் கடினமான சுமை.” என்கிறார் மேக்ஸ் பிளாங்க்.

“No burden is so heavy for a man to bear as a succession of happy days." – Max Planck

இது சற்று முரண்பாடாகப் பலருக்கும் தோன்றலாம் ஆனால் மனித மனதின் இயல்பை புரிந்து கொண்டால் இத்தகைய மகிழ்ச்சி ஏன் சுமையாக மாறுகிறது என்பது விளங்கும். 

மகிழ்ச்சி ஏன் சுமையாக மாறுகிறது?

மனிதன் அனுபவிக்கும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகள்
தனியாக உருவாவதில்லை; அவை ஒருவித ஒப்பீட்டின் மூலம் உருவாகின்றன. 

இருட்டை அனுபவித்தால்தான் ஒளியின் அருமை தெரியும்.
அதேபோல், சவால்கள் இல்லாத வாழ்க்கையில் கிடைக்கும் இன்பம் மெதுவாக தனது அர்த்தத்தை இழக்கத் தொடங்கும்.

போராட்டங்களின் மதிப்பு

நாம் சந்திக்கும் சவால்கள், தோல்விகள், இழப்புகளால்தான்  நமது மகிழ்ச்சியின் அருமையை நம்மால் ஆழமாக உணர முடியும்.

தோல்விகள் நமக்கு பொறுமையைக் கற்பிக்கின்றன. சவால்கள் நம்மிடம் துணிச்சலை உருவாக்குகின்றன.

மகிழ்ச்சி கஷ்டத்திலிருந்து பிறக்கிறது என்பதல்ல இதன் பொருள்.  கஷ்டத்தை அறிந்த மனம்தான் இன்பத்தை ஆழமாக உணர வைக்கிறது.

இதைத்தான்

“இன்பம் விழையான் இடும்பை இயல்பெனக்
கண்படின் துன்பம் துறும்.” (குறள் 628)

என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்.

இன்பத்தை மட்டும் விரும்பாமல்,
துன்பத்தையும் வாழ்க்கையில் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடையவனுக்கு
துன்பம் துன்பமாகத் தெரியாது.

வசதியான நாட்களைவிட அல்லது மகிழ்ச்சியான நாட்களைவிட
சவால்கள் நிறைந்த நாட்களே மனிதனை ஆழமாக மாற்றுகின்றன.

நாம் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்கள் நம்மை உடைத்து விடுவதில்லை; மாறாக, அவை நம்மை உள்ளிருந்து பலப்படுத்துகின்றன.

சவால்கள் இல்லாத வாழ்க்கை எளிதாக இருக்கலாம்; ஆனால் அது ஆழமற்றதாகவும் சலிப்பூட்டுவதுமானதாக அமையும் பொழுது நாம் அனுபவிக்கும் ‘மகிழ்ச்சி’ சுமையானதாக மாறிவிடுகிறது. 

எதிர்மறைகளின் முரண்பாடே இயக்கத்தை உருவாக்குகிறது என மார்க்சியம் கூறுகிறது. முரண்பாடு இல்லையெனில் வளர்ச்சியும் இல்லை.

அதுபோல சவால்கள் இல்லாத வாழ்க்கை எப்பொழுதும் இன்பமாக இருப்பது போலக் காணப்பட்டாலும், அது ஒரு இடத்தில் தேங்கி நின்று சுமையாக மாறும். இதுதான் மேக்ஸ் பிளாங்கின் கூற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்.

Max Planck பற்றி ஒரு குறிப்பு

Max Planck (1858–1947)
குவாண்டம் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவர்.
1900ஆம் ஆண்டு ஆற்றல் “quanta” எனும் சிறு தொகுதிகளாக வெளிப்படுகிறது என்ற புரட்சிகரக் கருத்தை முன்வைத்தார்.
இதற்காக 1918ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

அவரது வாழ்க்கை தனிப்பட்ட துயரங்களால் நிரம்பியிருந்தாலும்,
அந்த அனுபவங்களே அவரது சிந்தனைகளுக்கு ஆழத்தை அளித்தன.

முடிவுரை

வாழ்க்கை என்பது
மகிழ்ச்சி மட்டும் அல்ல; அது
முயற்சி, தோல்வி, மீண்டு வருதல் ஆகியவற்றின் கலவை.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு இலக்கு அல்ல;
வாழ்க்கையின் துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், சவால்கள், வெற்றி-தோல்வி, மகிழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை சமநிலையுடன் ஏற்றுக்கொள்வதே உண்மையான வாழ்வு.

மகிழ்ச்சி உண்மையில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால்,
அதற்குப் பின்னால் ஒரு போர்ப் பயணம் இருக்க வேண்டும்.

ஊரான்