Showing posts with label pala kovan மகஇக மருதையன் கோவன். Show all posts
Showing posts with label pala kovan மகஇக மருதையன் கோவன். Show all posts

Friday, 9 May 2025

அரசியலில் 'அப்டேட்' ஆகாத அரைகுறைகள்!

ஒரே கட்சியில், ஒரே சங்கத்தில், ஒரே அமைப்பில், ஒரே அலுவலகத்தில், ஒரே குடும்பத்தில், ஒரே தெருவில், ஒரே ஊரில் எனப் பல்வேறு தளங்களில் சக மனிதர்களோடு பயணிக்கிறவர்கள் பல்வேறு அம்சங்களில் ஒன்றுபட்டிருந்தாலும் ஒரு சில அம்சங்களில் மாறுபட்டு இருப்பார்கள். 

இந்த மாறுபாடுகள் அந்தத் தனிநபரின் ஒழுக்கம் மற்றும் நடத்தை சார்ந்ததாகவோ அல்லது அவர் ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் சார்ந்ததாகவோ, ஆக, எது வேண்டுமானாலும் இருக்கலாம். 



தரவுகள் மற்றும் புரிதலில் உள்ள வேறுபாடுகளால் மாறுபாடுகள் இருப்பது தவிர்க்க இயலாததுதான். இந்த மாறுபாடுகளோடு பயணிக்கும் போதுதான் கொண்ட இலக்கை நோக்கி நகர முடியும். எல்லாவற்றிலும் ஒத்தக் கருத்தோடு ஒருவர் பயணிப்பது என்பது அறிவியலுக்குப் புறம்பானது. ஆனாலும் ஒத்தக் கருத்தை வந்தடைவதற்கான புரிதலுக்கு தேடல் அவசியம். இந்தத் தேடல் எவர் ஒருவரிடம் இல்லாமல் போகிறதோ அங்கே மாறுபாடுகள் மோதலாக மாறி பிளவுகள் ஏற்படுகின்றன. 

இப்படித்தான் குடும்பங்கள் மற்றும் அமைப்புகள் சிதைகின்றன. ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கும் போது எதுவுமே விளங்காது. 

அண்மைக்காலமாக, இத்தகைய போக்குகள் அதிகரித்துவிட்டன. முகநூல் விவாதங்களில் நாம் இதை ஏராளமாகக் காண முடிகிறது. இதன் வெளிப்பாடாக வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் அதிகரித்து ஏற்கனவே நட்பாய் இருந்தவர்கள் பகையாய் மாறுகிறார்கள். வன்மத்தை வெளிப்படுத்தும் விதமும் மிகவும் கீழ்த்தரமானதாக மாறி வருகிறது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பலரும் லும்பன்களாக மாறி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மாறி இருக்கிறார்கள் என்பதைவிட அதுதான் அவர்களின் உண்மை சொரூபமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

அதிலும் குறிப்பாக ஏற்கனவே ஏதோ ஒரு அமைப்பில் சில காலம் பயணித்துவிட்டு அதன் பிறகு சொந்த வாழ்க்கையை நாடிச் சென்றவர்கள் செய்கின்ற அலப்பறைகள் சகிக்க முடியவில்லை.

அத்தகைய நபர் ஒருவருக்கு முகநூலில் நான் அளித்த பதில், கீழே: புரிதலுக்காக:

"அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்தால் நடப்பு அரசியல் எதுவும் புரியாது. நபர்களை என்றுமே நேசிக்கக் கூடாது. அரசியலைத்தான் நேசிக்க வேண்டும். 

எடுத்துக்காட்டாக, உங்களை ஒருவர் நேசித்திருந்தால் தற்போது நீங்கள் அரசியலில் இல்லை என்பதனால் உங்கள் மீது அவருக்கு வெறுப்புகூட வரும். 

அதேபோலத்தான், ஒருவர் நேற்று பேசிய அரசியலையே இன்றும் பேச வேண்டும் என்பது இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத அல்லது வளர்த்துக் கொள்ளாத தன்மையின் வெளிப்பாடு. அன்று பேசியதை இன்று பேசவில்லை என்று நினைத்தால் வெறுப்புதான் வரும்.

நபர்கள் மாறக்கூடும். அரசியலும் மாறக்கூடும். மாறுகிற அரசியல் சரிதானா என்பதை உரசிப் பார்க்கிற ஆற்றல் இருந்தால் குழப்பமும் விரக்தியும் எதுவும் வராது. 

தேர்தலில் ஏன் வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை தீர்மானிப்பது எதிரிகள்தான். 

எல்லாவற்றையும் முகநூலில் எழுதி புரிய வைத்துவிட முடியாது. அல்லது அடுத்தவர் சொல்லியும் புரிய வைக்க முடியாது. சுயமாகச் சிந்திக்கும் பொழுதுதான் புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் முடியும். 

இப்படித்தான் அரசியலில் இல்லாத பலர்கூட இன்றைய அரசியலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏதாவது ஒரு நோக்கம் என் போன்றவர்களை மாற்றி உள்ளது என்பது உண்மைதான். இன்று வளர்ந்து வருகிற பார்ப்பன மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் அது.

நபர்களை வைத்து நீங்கள் செய்யும் விமர்சனம்தான் காழ்புணர்ச்சி. அரசியல் நிலைப்பாட்டை விமர்சனம் செய்யுங்கள். அதுதான் ஆரோக்கியமானது. நபர்கள் மாறிவிட்டார்கள் என்றால் ஏதோ பொருளாதாரத்திற்காக மாறிவிட்டார்கள் என்கிற தொணியில்தான் பலரும் இதை வெளிப்படுத்துகிறார்கள். கோவன் உள்ளிட்டோரின் வாழ்நிலையை நேரில் கண்டால்தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். அரசியலில் இருந்து ஒதுங்கி தங்களுடைய வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டவர்களுக்கு இதன் வலி புரியாது. கோவன் வசிக்கும் இடம்தான் உங்களுக்குத் தெரியுமே. ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வாருங்கள்.

என்னை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களையும் நான் அறிந்திருக்கக்கூடும். ஆனால் நீங்கள் யார் என்று தற்போது எனக்குத் தெரியவில்லை. வாய்ப்பிருந்தால் நேரில் சந்தித்துப் பேசுவோம்."

வன்மமும் வக்கிரமும்தான் முகநூலில் நிரம்பி வழிகிறது. வன்மத்தைக் கக்குவோருடனான முகநூல் விவாதங்கள் கசப்பைத்தான் ஏற்படுத்துகிறது. அதனால் பலரையும் நான் எனது நட்பு வட்டத்திலிருந்து வெளியேற்றி வருகிறேன். 

தமிழ்மணி