Showing posts with label வன்னியர் முதலியார் சேரி வண்ணார் நாவிதர் ஐயர் சனாதனம். Show all posts
Showing posts with label வன்னியர் முதலியார் சேரி வண்ணார் நாவிதர் ஐயர் சனாதனம். Show all posts

Wednesday, 18 February 2026

வன்னியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களா?

"வன்னியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களா?" எனக் கேள்வி எழுப்பி, "வன்னியர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் என்று கூறுவது ஒரு வரலாற்றுப் பிழை" என மருத்துவர் இராமதாஸ் அவர்களின் ஆதரவாளர் ஒருவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். 


அந்தப் பதிவிற்கான எனது பதில் 

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மனுதர்ம சாஸ்திரப்படி, அதாவது சனாதன தர்மத்தின்படி பார்ப்பனர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரு பிரிவுகளாகவே பிரிக்கப்பட்டுள்ளார்கள். நால்வருண அமைப்பு முறையில் சொல்லப்படும் சத்திரியர்களும், வைசியர்களும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிடையாது என்பதே வரலாற்று உண்மை.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் முதலியார்களும் சூத்திரர்கள்தான், வன்னியர்களும் சூத்திரர்கள்தான், இதர பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் சூத்திரர்கள்தான். இதில் ஐயம் ஏதும் இருப்பின் சாஸ்திரம் தெரிந்த ஐயர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சூத்திரர்கள் அனைவருமே பார்ப்பன ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். வன்னியர்களும் சூத்திரப் பிரிவுக்குள் அடக்கம் என்பதால், அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 1871-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நடத்திய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வன்னியர்களை 'சூத்திரர்கள்' (Sudras) என்றே வகைப்படுத்தியது. இதனை எதிர்த்து 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே வன்னியர் சாதியைச் சேர்ந்த பெரியவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக்களை அனுப்பி, தங்களை 'சத்திரியர்களாக' அங்கீகரிக்கக் கோரிப் போராடினர். தங்களைச் சூத்திரப் பட்டியலில் வைத்திருப்பதே மிகப்பெரிய ஒடுக்குமுறை என்பதை அன்று அவர்கள் உணர்ந்திருந்தனர்.

ஆனால், இன்றும் அதே வர்ணாசிரமச் சங்கிலி 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்' உரிமை மறுப்பு போன்ற சூட்சும வடிவங்களில் தொடர்வதுதான் கசப்பான எதார்த்தம்.

இந்துச் சமூகம் என்பது அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல "தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை" (Graded Inequality) கொண்ட ஒரு சாதிப் படிநிலை அமைப்பாகும். அதாவது, கீழ்ப்படியில் ஒரு சாதி, அதற்கு மேல் மற்றொரு சாதி என அடுக்குமுறையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிநிலையின் உச்சியில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு மேலே யாரும் கிடையாது.

எனவே, கீழ்ப்படியில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு மேல் இருக்கும் சாதிகளால் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்படுகின்றனர்.

ஒடுக்குமுறையின் வடிவங்கள் வேண்டுமானால் காலத்திற்கேற்ப வேறுபடலாமே ஒழிய, ஒடுக்குமுறை இல்லை என்று சொல்ல முடியாது. இந்த ஒடுக்குமுறையை அனுபவிக்காதவர்கள் எவரும் இங்கில்லை. ஆனால், அந்த ஒடுக்குமுறையை அவர்கள் உணராமல் இருப்பதே இந்தச் சாதியக் கட்டமைப்பிற்குள் ஒளிந்திருக்கும் பெரும் சூட்சமம்.

இந்தச் சமூகப் படிநிலைக்கு ஏற்பவே நம் ஊர்களும், தெருக்களும், சேரிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வன்னியர் குடியிருப்புகள் பெரும்பாலும் சேரிகளை ஒட்டியே அமைந்திருப்பதை நாம் காணலாம். இதற்குக் காரணம், சூத்திரச் சாதிகளிலேயே மிகவும் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பது வன்னியர் சாதிதான். ஊர் தெருக்களின் புவியியல் கட்டமைப்பை வைத்தே இந்தச் சமூக எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். சூத்திர சாதிகளில் வன்னியர்களுக்குக் கீழே வண்ணார், நாவிதர் போன்ற சேவைச் சாதிகள் இந்தப் படிநிலை அமைப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு ஒரு எளிய உதாரணம்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் வன்னியர்கள் அர்ச்சகராவதை பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அரசு சட்டம் கொண்டு வந்தும் அதை நீதிமன்றத்தின் மூலம் முடக்கி வைத்திருப்பது யாருடைய ஆதிக்கம்? பார்ப்பனர்களைத் தவிர வன்னியர் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சகராவதைத் தடுப்பது ஒடுக்குமுறை இல்லையா?

பொருளாதார ரீதியாகவும் இச்சமூகத்தின் பெரும்பகுதியினர் இன்றும் நிலமற்ற விவசாயக் கூலிகளாகவே ஒடுக்கப்பட்டுள்ளனர். எனவே, வன்னியர்களோ அல்லது பிற சூத்திர சாதிகளோ வெறும் பழம்பெருமை பேசுவதனால் மட்டும் கள எதார்த்தத்தை மாற்றிவிட முடியாது. ஒடுக்குமுறையின் வேர்களை உணர்ந்து, சக ஒடுக்கப்பட்ட மக்களுடன் கைகோர்ப்பதே உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும்.

தமிழ்மணி