Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 19 August 2024

கவிஞர்களே, எப்படிக் கவிதை எழுதுவது என்பதை மாவோவிடம் கற்றுக் கொள்ளுங்கள்!

எனக்குக் கவிதைகளில் அதிக அனுபவம் இல்லை. மரபுக் கவிதை, புதுக்கவிதை என்றெல்லாம் சொல்கிறார்கள். எதுவாயினும் உவமைகளால் நிரப்பப்படுவதுதான் கவிதைக்கு அளவுகோல் என்பது மட்டும் புரிகிறது. 

புத்தக அலமாரியைப் புரட்டிப் பார்த்தேன். மாசே துங் கவிதைகள் கண்ணில் பட்டது. எல்லாவற்றையும் படிக்கவில்லை. ஆனால், கடைசிக் கவிதையை மட்டும் படித்தேன். அதுவே என்னைக் கவர்ந்தது. உங்களோடு பகிர்கிறேன்.

மிகவும் சிக்கலான சர்வேத அரசியலை எவ்வளவு அழகாக கவிதையாய் வடித்துத் தருகிறார் மாவோ.

கவிஞர்களே! கவிதை எப்படி எழுதுவது, யாருக்காக எழுதுவது, எது பற்றி எழுதுவது என்பதை மாவோவிடம் கற்றுக் கொள்ளுங்கள்.

****

இரு பறவைகள்: ஒரு உரையாடல்
(இலையுதிர் காலம்: 1965)

அந்தப் பெரும் பறவை (1)
தன் இறகுகளை விசிறியாய் விரித்து,
தொண்ணூராயிரம் லி தொலைவு உயர்ந்து 
சீறும் புயலைக் கிளப்புகிறது.
அதன் முதுகுக்கு மேலே நீலவான் இருக்க,
ஊர்களும் நகரங்களும் உள்ளடங்கிய 
மனிதனின் உலகை அளவிட 
அது 
கீழே பார்க்கிறது;
துப்பாக்கி வெடிப்புகள் விண்ணைச் சிராய்க்கின்றன,
பீரங்கிக் குண்டுகள் நிலத்தினைத் துளைக்கின்றன.
ஒரு சிட்டுக் குருவி (2) தன் புதருக்குள்ளே 
அஞ்சி விறைந்து நிற்கிறது 
"சே, என்ன இது ஓர் குழப்பப் பாழ் நகரம்!
ஓ, நான் இதிலிருந்து நழுவிப் பறந்து விட விரும்புகிறேன்."

"எங்கே என நான் கேட்கலாமோ?" எனப் பெரும் பறவை வினவ, சிட்டுக்குருவி விடை சொன்னது: "தேவதை நாட்டு மலைகளின் மீதே இரத்தினங்கள் பதித்த மாளிகைக்கு.
இரண்டாண்டு முன்பு, 
இலையுதிர்  கால ஒளிமிகு நிலவில் மும்முனை ஒப்பந்தம் (3) கையெழுத்தானது 
உனக்குத் தெரியாதா? 
அங்கே வயிறு புடைக்கத் தின்னலாம், 
ஆவி பறக்கும் உருளைக் கிழங்குடன் 
மாட்டிறைச்சி நிறைந்த உணவு வகை உண்டு," (4) 
பெரும் பறவை சொன்னது:
"நிறுத்து உன் வெற்று உளறலை. உற்று நோக்கு - 
உலகம் தலை கீழாய்ப் புரட்டப்படுவதை." 
*****
குறிப்பு:
1. பெரும் பறவை (Roc): இது சீனப் பழங்கதைகளில் கூறப்படும் கற்பனைப் பறவை. ஆயிரம் லி நீளமுள்ள குன் எனும் வட கடல் மீன் ஆயிரம் லி நீளமுடைய பறவையாக மாறியது என்று இக்கதைகள் கூறுகின்றன. இப்பறவை தொண்ணூராயிரம் லி உயரம் பறக்கக்கூடியதாம். மேகம் போல விரியும் இதன் இறகுகள் சூறாவளியைக் கிளப்பக் கூடுமாம். இங்கு இது மார்க்சிய-லெனினியப் புரட்சியாளர்களுக்கான குறியீடாக நிற்கிறது.

2. சிட்டுக்குருவி: புரட்டலாளருக்கான குறியீடு; புரட்சி முதன்மையானதல்ல, உற்பத்தியே முதன்மையானது என்பவர்கள் இவர்கள் - உலக அளவில் குருச்சேவைத் தலைவனாகக் கொண்டவர்கள்; உலகிலும் சீனத்திலும் ஏற்பட்ட புரட்சி எழுச்சியையும் கொந்தளிப்பையும் 'குழப்பப்பாழ் நரகம்" எனக் கருதுபவர்கள்.

3. மும்முனை ஒப்பந்தம்: 1963 ஆம் ஆண்டு குருச்சேவ் காலத்தில் சோவியத் யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை செய்து கொண்ட போலித்தனமான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம்.
 
4. புரட்டலாளர்கள் குருச்சேவின் புரட்டல் கொள்கையில் நம்பிக்கை வைக்கிறார்கள். மும்முனை ஒப்பந்தத்தை மதிக்கிறார்கள். குருச்சேவின் 'மாட்டிறைச்சி - உருளைக்கிழங்கு' சோசலிசத்தைப் பாராட்டி நாடுகிறார்கள். 'பாட்டாளி வர்க்கம் தனது உலகக் கண்ணோட்டத்துக்கேற்ப உலகை மறுவார்ப்புச் செய்தல்' என்பதை மறுக்கிறார்கள் - இவைதான் சிட்டுக்குருவி உவமையில் சொல்லப்படுகின்றன. புரட்சியாளர்களோ (பெரும்பறவை) உலகம் புரட்சிகரமாக மாற்றப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

1965 ஆம் ஆண்டு முதலில் எழுதப்பட்ட கவிதை மீண்டும் 1976 ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு நாளில் வெளியிடப்பட்டது. புரட்டலாளருக்கு எதிராக மாவோ நடத்திய இறுதிப் போராட்டத்தில் இக்கவிதைக்குக் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

Sunday, 29 November 2020

வேலூரில் களை கட்டிய நவம்பர் புரட்சி விழா!

எட்டு வழிச் சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன், கெயில் என நமது மண்ணைப் பறித்து, ஸ்டெர்லைட் போன்ற நச்சு ஆலைகளால் நீர் - நிலம் - காற்று என அனைத்தையும் கெடுத்து, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வியைப் பறித்து, இந்தித் திணிப்பு - பசு புனிதம் பேசி தமிழர் பண்பாட்டை அழித்து, அரசு - பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்து, வேளாண் திருத்தச் சட்டம் - தொழிலாளர் நல திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வைப் பறித்து, எதிர்த்துக் கேள்வி கேட்டால் கைது - சிறை - துப்பாக்கிச்சூடு - படுகொலை என மக்களுக்கு எதிரான மாபாதகச் செயலைச் செய்து வரும் கார்ப்பரேட் காவிக் கும்பலின் பாசிசக் காட்டாசிக்கு முடிவு கட்டாமல் மக்களுக்கு இனி வாழ்வு இல்லை.

உழைப்புச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவம் தொடரும் வரை மக்களுக்கு விடிவு இல்லை. முதலாளித்துவத்தை வீழ்த்தி ஒரு சோசலிச சமூக அமைப்பை கொண்டு வந்தால் மட்டுமே மக்கள் தங்களது அனைத்துத் தேவைகளையும் பெறமுடியும் என்பதை நிலை நாட்டிய ருஷ்ய சோசலிசப் புரட்சியின் 103 ஆம் ஆண்டு விழா உலகமெங்கும் உழைக்கும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து நவம்பர் 7 அன்று கிளைச் சங்கங்களில் கொடியேற்றுதல், அதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்திய பிறகு இறுதியில் குடும்ப விழா என நவம்பர் புரட்சி விழா இனிதே நிறைவு பெற்றது.

29.11.2020 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தோழர்கள் வேந்தன் மற்றும் முத்துராமன் ஆகியோர் கவிதை வாசிக்க, மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக வெளிவரவுள்ள வசந்தத்தின் இடிமுழக்கம் கவிதை நூல் குறித்து தோழர் ரமணி அறிமுகம் செய்ய, ஓவியம், கலை நிகழ்ச்சி, மாறுவேடம், சிலம்பம், பறை இசை என விழா குதூகலமாய் களைகட்டியது. 

பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் பாலு, ஆட்டோத் தொழிலாளர்களின் போராட்ட அனுபவம் குறித்து தோழர் செல்வம், டாஸ்மாக் சாராயக் கடைகளால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை குறித்து தோழர் உமா, தரைக்கடை வியாபாரிகள் சந்திக்கும் பிரச்சனைகள்-சங்கமாய் சேர்ந்து அவற்றை எதிர் கொண்ட அனுபவம் குறித்து தோழர் சுப்பிரமணி, தனியார் துறை மற்றும்  பொது துறை தொழிலாளர்களின் இன்றைய அவல நிலை குறித்து தோழர் சாமி, முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம்தான் என்பதை நிலைநாட்டிய ருசிய சோசலிசப் புரட்சியை நாம் ஏன் விழாவாகக் கொண்டாட வேண்டும் என்பது குறித்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் பொன்.சேகர் ஆகியோர் விழாவில் உரையாற்றினர்.

இறுதியாக விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு தோழர் சலீனா அவர்கள் நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. 

நூற்றுக்கும் மேற்பட்ட தோழர்கள் குடும்பத்தோடு பங்கேற்ற இந்த விழா உழைக்கும் வர்க்கத்தின் குடும்ப விழா என்பதை பறை சாற்றியது.






























தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்