மூத்த குடிமக்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் மற்றும் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் (Senior Citizens Act, 2007), “தமக்குத் தேவையான பராமரிப்புத் தொகையைப் பெற முடியாத அல்லது தங்களைத் தாமே பராமரித்துக் கொள்ள முடியாத” முதியவர்கள் மட்டுமே தங்களது பிள்ளைகளிடமிருந்து பராமரிப்புத் தொகை (Maintenance) கோரி தீர்ப்பாயத்தை அணுக முடியும் என்ற சட்டக்கூறு நடைமுறையில் உள்ளது.
மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் வழங்கிய பீமராவ் எதிர் ஆஷிஷ் (Bhimrao v. Ashish, 2026) வழக்கின் தீர்ப்பில், "சொந்த ஓய்வூதியம் (Regular Pension) மற்றும் மறைந்த மனைவியின் குடும்ப ஓய்வூதியம் (Family Pension) பெறக்கூடிய ஒரு மூத்த குடிமகன், தன்னைத் தானே பராமரிக்க இயலாதவர் என்ற வரையறைக்குள் வரமாட்டார். எனவே, அவர் பராமரிப்புச் சட்டத்தின் பிரிவு 5-இன் கீழ் பராமரிப்புத் தொகையோ அல்லது அதைச் சார்ந்த நிவாரணங்களையோ கோர முடியாது" என்று தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், இந்தத் தீர்ப்புச் சுட்டிக்காட்டும் கொள்கை நடைமுறையில் பல கேள்விகளையும், முதியோரின் பொருளாதார யதார்த்தம் குறித்த கவலைகளையும் எழுப்புகிறது.
1. குறைந்தபட்சத் தொகை எது? சட்டத்தில் நிலவும் இடைவெளி
மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படைத் தர்க்கம், "ஓய்வூதியம் பெறும் ஒருவர் சுயசார்புடையவர்" என்பதாகும். ஆனால், எவ்வளவு தொகை ஓய்வூதியமாகப் பெற்றால் அவர் சுயசார்புடையவராகக் கருதப்படுவார்? என்பதற்கான தெளிவான வரையறையோ அல்லது தொகையின் அளவுகோலோ (Quantum) சட்டத்திலோ அல்லது நீதிமன்ற வழிகாட்டுதல்களிலோ சுட்டிக்காட்டப்படவில்லை.
• சொற்ப ஓய்வூதியம் பெறோரின் நிலை: சேமநல நிதி போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மாதத்திற்கு ₹1,000 மட்டுமே ஓய்வூதியம் வாங்குபவர்களும் நாட்டில் உண்டு. பாரத மிகுமின் நிறுவனம் (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ₹2,000 முதல் ₹3,000 வரை மட்டுமே சொற்ப ஓய்வூதியம் பெறும் முதியவர்களும் இருக்கவே செய்கிறார்கள்
• இன்றைய வாழ்க்கைச் செலவு: ஒரு முதிய தம்பதியர் மருத்துவச் செலவுகள், வாடகை, உணவு மற்றும் அன்றாடப் பராமரிப்புகளுக்கு மாதம் ₹2,000 அல்லது ₹5,000 ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி இன்றைய பணவீக்கச் சூழலில் கண்ணியமாக வாழ முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்வி.
"ஓய்வூதியம் பெறுகிறார்" என்ற ஒரே காரணத்திற்காக, அத்தொகை அவரது அத்தியாவசிய உயிர்வாழ்வுக்குப் போதுமானதா என்பதைக் கணக்கில் கொள்ளாமல், பராமரிப்புச் சட்டத்தின் கதவுகளை மூடுவது சமூக நலச் சட்டத்தின் நோக்கத்திற்கே முரணாக அமைந்துவிடும் அபாயம் உள்ளது.
2. சட்டத்தின் நோக்கம்: "தேவை சார்ந்த பராமரிப்பு" (Need-based Maintenance)
மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டத்தின் முதன்மையான நோக்கம் "தேவை சார்ந்த பராமரிப்பு" (Need-based Maintenance) வழங்குவதுதான்.
• சட்டத்தின் பிரிவு 4(1)-இன் படி, ஒரு மூத்த குடிமகன் தன்னுடைய வருமானம் அல்லது சொத்துகளின் மூலம் தனது வாழ்க்கையைப் பேண முடியாத நிலையில் மட்டுமே பராமரிப்புத் தொகை கோர உரிமை பெறுகிறார்.
• உயர் நீதிமன்றத் தீர்ப்புகளில், சட்டப்பூர்வ நிவாரணங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க "நிதிச் சுயசார்பு" ஒரு தகுதியாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அந்த நிதிச் சுயசார்பு என்பது வெறும் "வருமானம் உள்ளது" என்பதைக் குறிக்கிறதா அல்லது "வாழத் தேவையான தகுந்த வருமானம் உள்ளது" என்பதைக் குறிக்கிறதா என்பதைப் பகுத்துப் பார்க்க வேண்டியது அவசியமாகும்.
3. தீர்க்கப்பட வேண்டிய அவசியக் கோரிக்கைகள்
ஒரு மூத்த குடிமகன் பராமரிப்புத் தொகை பெறத் தகுதியானவரா என்பதைத் தீர்மானிக்க, நீதிமன்றங்களும் அரசுத் தீர்ப்பாயங்களும் பின்வரும் திருத்தங்களையும் அளவுகோல்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்:
• குறைந்தபட்ச வாழ்க்கைச் செலவு நிர்ணயம் (Minimum Subsistence Level): ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடிப்படை உணவு, உறைவிடம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான குறைந்தபட்சத் தொகை எது என்பதைத் தீர்ப்பாயங்கள் அளவிட வேண்டும். ஓய்வூதியம் அத்தொகையை விடக் குறைவாக இருந்தால், மீதித் தொகையைப் பிள்ளைகளிடம் இருந்து பராமரிப்பாகப் பெற அனுமதி அளிக்கப்பட வேண்டும்.
• மருத்துவச் செலவுகளைத் தனியாகக் கணக்கிடுதல்: முதியோரின் பெரும் பகுதி வருமானம் மருத்துவச் செலவுகளுக்கே போகிறது. எனவே, ஓய்வூதிய வருமானத்திலிருந்து மருத்துவப் பராமரிப்புச் செலவைக் கழித்துப் பார்த்தே அவர்களின் நிகர வருமானத்தைக் கணக்கிட வேண்டும்.
• சட்டத் திருத்தத்தின் தேவை: ஓய்வூதியம் பெறுகிறார் என்பதற்காகவே முழுமையாக மனுவைத் தள்ளுபடி செய்யாமல், பகுதியளவு பராமரிப்புத் தொகை (Partial Maintenance) வழங்கும் வகையில் சட்டப் பிரிவுகள் நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
முடிவுரை
மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் என்பது முதியவர்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக நலச் சட்டமாகும். "ஓய்வூதியம் பெறுகிறார்" என்ற தொழில்நுட்பக் காரணத்தைக் காட்டி, சொற்ப ஓய்வூதியம் பெறும் முதியவர்களைப் பராமரிப்புச் சட்டத்தின் நிழலிலிருந்து விலக்கி வைப்பது, அவர்களைப் பிள்ளைகளின் ஆதரவோ அல்லது சட்டத்தின் துணையோ இன்றி நடுத்தெருவில் நிறுத்துவதற்குச் சமமாகும்.
எனவே, நீதிமன்றங்களும் தீர்ப்பாய சபைகளும் வெறும் "ஓய்வூதியம் பெறுகிறாரா" என்று பார்க்காமல், "அந்த ஓய்வூதியம் அவர் கண்ணியமாக உயிர் வாழப் போதுமானதா" என்பதை முதன்மை அளவுகோலாக வைத்துத் தீர்ப்புகளை வழங்க முன்வர வேண்டும்!
பொன்.சேகர்
