Sunday, 14 June 2026

வண்ணத் திரைகளில் மயங்கும் மனிதர்கள்!

இந்தக் கட்டுரையை வாசிக்கும் போதே சுற்றியுள்ள எதார்த்த உலகை ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.

நம் கண்முன்னே வாழும் விவசாயிகள், கட்டிடத் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என கோடிக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக நாள்தோறும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உழைப்பு பெரும்பாலும் அடுத்த வேளை உணவையும், குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான போராட்டமாகவே முடிகிறது.


மறுபுறம், அரசு ஊழியர்கள், ஆலைத் தொழிலாளர்கள் போன்றோர்கூட தங்களின் பணிக்காலம் முடிந்த பிறகு ஓய்வூதியம் அல்லது சேமிப்புத் தொகையின் மூலம் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள்.

ஆனால், ஏற்கனவே லட்சங்களிலும் கோடிகளிலும் சம்பாதித்து குவித்திருக்கும் திரைத்துறை மற்றும் தொலைக்காட்சி வணிக உலகம், தங்களின் வருமானம் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக "பொழுதுபோக்கு" என்ற பெயரில் எண்ணற்ற நிகழ்ச்சிகளையும் காட்சிகளையும் மக்களிடம் கொள்ளை விலைக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

எளியவர்களுக்கான ஏணியா? கனவுகளை சந்தைப் பொருளாக்கும் இயந்திரமா?

'டான்ஸ் ஜோடி டான்ஸ்', 'மகாநடிகை', 'சரிகமப', 'சூப்பர் சிங்கர்' போன்ற நடன மற்றும் பாடல் போட்டிகள், பல்வேறு ரியாலிட்டி ஷோக்கள், மெகா தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் ஆகியவை மக்களின் திறமையை வளர்க்கும் கலை மேடைகளாக இங்கே சித்தரிக்கப்படுகின்றன. "எளிய மக்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களின் வாழ்க்கையை மாற்றுகிறோம்" என்று இந்நிகழ்ச்சிகளின் பின்னால் இருப்பவர்கள் பெருமையாகக் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மை நிலை என்ன?

இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களில் மிகச் சிலருக்கே நீடித்த வாய்ப்புகள் கிடைக்கின்றன. பெரும்பாலானோர் நிகழ்ச்சி முடிந்ததும் மீண்டும் தங்களின் பழைய வாழ்க்கைக்கே திரும்பிச் செல்கிறார்கள். சிலர் உள்ளூர் மேடைகள், கோவில் திருவிழாக்கள் அல்லது சிறிய நிகழ்ச்சிகளில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் நிலையிலேயே முடங்கிப் போகிறார்கள்.

ஆனால் நிகழ்ச்சிகளை நடத்தும் தொலைக்காட்சி நிறுவனங்களும் தயாரிப்பு நிறுவனங்களும் விளம்பரங்கள், பார்வையாளர் எண்ணிக்கை ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றன. ஏழைகளின் கனவுகள் சந்தைப் பொருளாக மாற்றப்படுகின்றன; ஆனால் அதிலிருந்து கிடைக்கும் பெரும் லாபம் சிலரின் கைகளிலேயே குவிகிறது.

அரசியல் கொள்ளைக்கும் திரைத்துறைச் சுரண்டலுக்கும் இடையே ஒரு ஒற்றுமை

மக்களுக்காகவே அரசியலுக்கு வந்ததாகக் கூறும் பல பிழைப்புவாத அரசியல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தையும் அரசாங்க வளங்களையும் சுரண்டி சொத்து சேர்த்துக் கொள்கிறார்கள். ஒரு அரசியல்வாதி மக்களின் வாக்குகளை மூலதனமாக மாற்றிக் கொள்கிறான்.


அதேபோல, "மக்களின் திறமையை வளர்க்கிறோம்", "மக்களை மகிழ்விக்கிறோம்", "எளியவர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்" என்ற பெயரில் செயல்படும் பொழுதுபோக்கு வணிகமும், உழைக்கும் மக்களின் நேரத்தையும் கவனத்தையும் உணர்ச்சிகளையும் பணமாக மாற்றிக் கொள்கிறது.

வடிவத்தில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் மக்களின் நம்பிக்கையையும் உழைப்பையும் லாபமாக மாற்றும் அடிப்படைச் செயல்முறையில் பெரிய வித்தியாசம் இல்லை.

பழைய முகங்களின் புதிய மேடை

இத்தகைய நிகழ்ச்சிகளில் நடுவர் இருக்கைகளில் அமர்ந்து தீர்ப்பு வழங்குபவர்களைப் பாருங்கள். திரைத்துறையில் மார்க்கெட் இழந்த நடிகர்கள், நடிகைகள், பாடகர்கள், நடன இயக்குநர்கள் ஆகியோரே பெரும்பாலும் புதிய வடிவில் மீண்டும் சந்தைப்படுத்தப்படுகிறார்கள். "ஜட்ஜ்" என்ற புதிய அடையாளத்தோடு அவர்கள் மீண்டும் பொதுமக்களின் கவனத்தைப் பெறுகின்றனர்.

ஒரு பக்கம் புதிய திறமைகளைத் தேடுவதாகக் கூறிக்கொண்டே மறுபக்கம் அதே பழைய பிரபலங்களைக் கொண்டு சந்தை வணிகமும் நடைபெறுகிறது.

மூளையை மழுங்கடிக்கும் ரீல்ஸ் கலாச்சாரம், போதையின் புதிய வடிவம்

இந்தப் பொழுதுபோக்கு உலகம் தொலைக்காட்சியோடு மட்டும் நின்றுவிடவில்லை. இன்று இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், யூடியூப் ஷார்ட்ஸ், குறும்பட வீடியோக்கள் போன்றவை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டன. சிலர் தங்களின் வாழ்க்கையை நடத்துவதற்காகவும், சிலர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காகவும் இத்தகைய உள்ளடக்கங்களைத் தொடர்ந்து உருவாக்குகின்றனர். இது அவர்களுக்கான தொழில் என்பதில் தவறில்லை — ஆனால் இவற்றை வாய்பிளந்து பார்த்துக்கொண்டே நமது நேரத்தையும் கவனத்தையும் தொலைப்பதில்தான் சிக்கல் இருக்கிறது.

மேற்கண்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களின் அறிவு வளர்கிறதா? உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் எந்த அடிப்படை மாற்றத்திற்கும் இவை பங்களிக்கிறதா?

அறிவியல் தொடர்பான விளக்க வீடியோக்கள், சமூக விழிப்புணர்வு உள்ளடக்கங்கள் போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, பெரும்பாலான உள்ளடக்கங்கள் மனிதர்களின் சிந்தனையை மழுங்கடிப்பதற்காக மட்டுமே உருவாக்கப்படுகின்றன.

சாராயத்திற்கு அடிமையான ஒருவர் மது இல்லாமல் ஒரு நாளைக் கடத்த முடியாததைப் போல, இன்றைய மனிதன் கைபேசி திரையில்லாமல் சில மணி நேரங்களைக்கூட கழிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறான். ஒவ்வொரு காலியிடத்தையும், ஒவ்வொரு ஓய்வு நேரத்தையும், ஒவ்வொரு தனிமையான தருணத்தையும் திரைகள் ஆக்கிரமித்துவிட்டன. நாம் இழப்பது வெறும் பணத்தை மட்டுமல்ல. நமது நேரம், கவனம், சிந்தனைத் திறன், சமூக உணர்வு ஆகியவையே மெதுவாகச் சிதைக்கப்படுகின்றன.

என்ன செய்யப் போகிறோம்?

மார்க்சிய வர்க்கப் பார்வையில் சிந்தித்துப் பார்த்தால், இந்தச் சொத்துடமைச் சமூகம் தனது சுரண்டலை மறைப்பதற்காகப் பயன்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்று பொழுதுபோக்கு வணிகமாகும்.

இதனால் கலை, இசை, திரைப்படம் அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்பதல்ல. மாறாக, எது மக்களின் சிந்தனையை வளர்க்கிறது? எது வெறும் நுகர்வுப் போதையை உருவாக்குகிறது? என்பதை விமர்சனப் பார்வையுடன் அணுக வேண்டும்.

உண்மையான கலை மனிதனைச் சிந்திக்க வைக்கும். வணிகப் பொழுதுபோக்கு பெரும்பாலும் மனிதனை மறக்கச் செய்யும். இந்த வேறுபாட்டை உணராமல், நமது சிந்தனையை மழுங்கடிக்கும் இந்த வண்ணத் திரைகளின் உலகில் தொடர்ந்து மூழ்கிக் கொண்டிருந்தால், ஏமாற்றுக்காரர்களும் சுயநலவாதிகளும் நம்மை ஆளுவதைத் தடுக்க முடியாது.

திரைப்பின்னிய மாயைகளை உடைப்போம்!

அறிவியல் மற்றும் சமூக நீதிசார் கருத்துத் தெளிவோடு உலகைப் புரிந்துகொள்வோம்! உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் உண்மையான சமூகப் பிரச்சினைகளையும் மையமாகக் கொண்டு சிந்திப்போம்!

ஊரான் @ பொன். சேகர்

1 comment: