தமிழ்நாட்டில் புரட்சிகர மார்க்சிய-லெனினிய இடதுசாரி இயக்கங்கள் வேரூன்றாததற்கான காரணங்கள் – ஒரு வரலாற்று மற்றும் சமூகப் பகுப்பாய்வு
இந்திய அளவில் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’யை முன்வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மகஇக மற்றும் மக்கள் யுத்தம் போன்ற புரட்சிகர இடதுசாரி அமைப்புகள், தமிழ்நாட்டில் ஏன் ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளரவில்லை என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்படும் ஒரு கேள்வி. இதற்கான காரணங்கள் ஒரே பரிமாணத்தில் அல்ல; அரசியல், சமூக, பண்பாட்டு மற்றும் வரலாற்று காரணிகளைக் கொண்டே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
1.திராவிட இயக்கத்தின் அரசியல் ஆதிக்கமும் இடதுசாரி கோரிக்கைகளின் ‘உள்வாங்கலும்’
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய திராவிடக் கட்சிகள், புரட்சிகர இடதுசாரிகள் முன்வைத்த உழுபவனுக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம், கல்வி, வேலை வாய்ப்பு, ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை நிலச் சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கல், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கு ஏற்ப தொழிற்துறைகளை உருவாக்குதல், இட ஒதுக்கீட்டை சாதிகளுக்கிடையே விரிவுபடுத்துதல் மூலமாக தங்களது தேர்தல் அரசியலுக்குள் வெற்றிகரமாக இணைத்துக் கொண்டன.
புரட்சிகர அமைப்புகள் நீண்டகால அரசியல் கட்டமைப்பு மாற்றம் குறித்துப் பேசினபோது,
பெரியார் மற்றும் அண்ணா வழியில் சாதி ஒழிப்பு மற்றும் சமூகநீதியை முன்னிறுத்திய திராவிடக் கட்சிகள், நலத்திட்டங்கள் மூலம் மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்தன.
தொடக்க காலம் முதலே கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்) திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து செயல்பட்டன. ஆனால் ‘மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் இதை ‘சீர்திருத்தவாதம்’ என நிராகரித்தன. இதன் விளைவாக, “புரட்சி” என்பதைக் காட்டிலும் “சீர்திருத்தம்” மக்களுக்கு நடைமுறை சார்ந்ததாகத் தோன்றியது. இதனால், தீவிர இடதுசாரி இயக்கங்களுக்கு சமூக ஆதரவு விரிவாகக் கிடைக்காமல் போனது.
2. அடையாள அரசியலின் எழுச்சியும் வர்க்க அரசியலின் பின்னடைவும்
90-களுக்குப் பிறகு உருவான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) போன்ற கட்சிகள், சாதி மற்றும் சமூக அடையாள அரசியலை முன்னணிக்குக் கொண்டு வந்தன.
மக்கள் தங்களை “உழைக்கும் வர்க்கமாக” அடையாளப்படுத்துவதை விட, தங்களின் சாதி அடையாளத்தின் வழியே அரசியல் பாதுகாப்பும் அதிகாரமும் பெற முடியும் என நம்பத் தொடங்கினர்.
வர்க்க அரசியலை முன்வைத்த அமைப்புகள், சாதி ஒடுக்குமுறையை வர்க்கப் பகுப்பாய்வுக்குள் நடைமுறையாக இணைக்கத் தவறிய வெற்றிடத்தை அடையாள அரசியல் கட்சிகள் நிரப்பின. தமிழ்நாட்டின் சாதி-அடிப்படையிலான சமூக யதார்த்தத்திற்குப் பொருத்தமான முறையில் மார்க்சிய-லெனினிய அணுகுமுறையை வகுத்துக் கொண்டு செயல்படாததால் மேலும் இவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டனர்.
3. தேர்தல் அரசியலை நிராகரித்ததன் விளைவுகள்
புரட்சிகர மார்க்சிய-லெனினிய இடதுசாரி அமைப்புகள் தேர்தல் முறையை “போலி ஜனநாயகம்” எனக் கருதி "தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப் பாதை" என தேர்தல்களைப் புறக்கணித்தன. ஆனால் தமிழக மக்கள், தங்கள் வாக்குரிமையை ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் உயர் வாக்குப்பதிவு விகிதங்கள் (70-80%) இதை உறுதிப்படுத்துகின்றன.
இந்த முரண்பாடு காரணமாக, இத்தகைய அமைப்புகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறைந்து போனது. தேர்தல் அரசியல் விவாதங்களிலும் செயல்பாடுகளிலும் இவ்வமைப்புகள் பின்தள்ளப்பட்டன.
4. சித்தாந்தத் தூய்மைவாதமும் தொடர்ச்சியான பிளவுகளும்
மகஇக, மக்கள் யுத்தம் போன்ற அமைப்புகள், சித்தாந்தத் தூய்மையை முன்னிறுத்தி காலப்போக்கில் பல பிரிவுகளாகப் பிளவுபட்டன. இந்தப் பிளவுகள் பெரும்பாலும் கள அனுபவத்தில் இருந்து அல்லாமல், கோட்பாட்டு மற்றும் தலைமைகளின் முரண்பாடுகளில் இருந்து உருவானவை. உதாரணமாக, 1960களில் நக்சல்பாரி இயக்கம் நாற்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக உடைந்தது. இது தமிழ்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேற்கண்ட அதே காரணங்களுக்காக இன்றும் இத்தகையப் பிளவுகள் தொடர்கின்றன.
“தங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லாதவர்கள் எப்படி சமூக மாற்றத்தை முன்னெடுப்பார்கள்?” என்ற நம்பிக்கையின்மை மக்களிடையே நிலவுகிறது. மேலும் இந்த உள் முரண்பாடுகள் இந்த இயக்கங்களை சிறிய அளவிலேயே வைத்துள்ளன.
5. டிஜிட்டல் யுகம் மற்றும் சமூக ஊடகத் தாக்கம்
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தகவல்கள் பரவும் வேகம் மற்றும் பரப்புரை முறைகள் முற்றிலும் மாறிவிட்டன. பிரதான அரசியல் கட்சிகளும், அடையாள அரசியல் அமைப்புகளும் சமூக ஊடகங்களை (WhatsApp, Facebook, YouTube) ஒரு போர்க்களமாகப் பயன்படுத்தித் தங்களின் கருத்துகளைப் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தன.
ஆனால், புரட்சிகர அமைப்புகள் இப்போதும் பழைய பாணி துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நேரடி வகுப்புகளையே அதிகம் நம்பியுள்ளன. இருப்பினும் சில இடங்களில் இவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினாலும் அரசு கண்காணிப்பால் அது வரம்புக்குட்பட்டதாகவே உள்ளது.
நுணுக்கமான சித்தாந்தங்களை எளிய மொழியில் டிஜிட்டல் தளங்களில் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இளைஞர்களிடமிருந்து இவர்கள் அந்நியப்பட்டே உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மொபைல் மற்றும் இணையப் பயன்பாடு காரணமாக இந்த அந்நியப்படல் மேலும் அதிகரிக்கவே செய்கிறது.
6. வெறும் ‘எதிர்ப்பு அரசியல்’ மற்றும் புறநிலை–உள்நிலை தவறுகள்
ஆளும் கட்சியை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே வளர்ச்சி பெற முடியும் எனக் கருதுவது ஒரு மேலோட்டமான அணுகுமுறை. மக்களின் புறநிலைச் சூழல் (Objective conditions) மற்றும் அரசியல் விழிப்புணர்வு (Subjective conditions) ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் செய்யப்படும் எதிர்ப்பு அரசியல், மக்கள் ஆதரவைப் பெறவில்லை. உடனடி மாற்றுத் திட்டம் எதுவுமின்றிச் செய்யப்படும் விமர்சனங்கள் மக்களிடையே எடுபடுவதில்லை.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஐடி துறை, தொழில்கள்) மக்களை “புரட்சி”யை நோக்கி ஈர்ப்பதைவிட, வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதை நோக்கி ஈர்ப்பதால், இது மார்க்சிய-லெனினிய இயக்கங்களின் வர்க்கப் போராட்ட அணுகுமுறையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.
7. அரசு ஒடுக்குமுறை – ஒரு துணைக் காரணம்
தருமபுரி, வட ஆற்காடு பகுதிகளில் உருவான இவர்களின் தொடக்ககாலச் செயல்பாடுகள் அரசின் கடும் ஒடுக்குமுறையால் சிதைக்கப்பட்டன. 1970-80களில் காவல்துறை மேற்கொண்ட ஒடுக்குமுறைகள் மூலம் இவர்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. இது இந்தியா முழுவதும் மார்க்சிய-லெனினிய இயக்கங்களுக்குப் பொதுவான பிரச்சினையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இத்தகைய அமைப்புகள் சிறிய அளவிலேயே இருந்ததால் ஒடுக்குமுறை விரைவில் வெற்றி பெற்றது. இது ஒரு காரணமாக இருந்தாலும், சமூக ஆதரவு பரவலாக இல்லாததால் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் திறனை இவ்வமைப்புகள் இழந்தன.
முடிவுரை
தமிழ்நாட்டில் மார்க்சிய-லெனினிய புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் வேரூன்றத் தவறியதற்கு, திராவிட இயக்கத்தின் ஆதிக்கம் தொடங்கி, அடையாள அரசியல், உட்பிளவுகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தவறியது வரை பல காரணங்கள் உள்ளன. 1960களின் மார்க்சிய-லெனினிய இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் இன்றுவரை தொடரும் பிளவுகள் முதல் தற்கால பொருளாதார வளர்ச்சி வரை வரலாற்று சூழல்கள் இதை விளக்குகின்றன. இது இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டை வேறுபடுத்துகிறது. இந்த அமைப்புகள் பிளவுகளைத் தாண்டி, சாதி–வர்க்க உறவுகளை நுணுக்கமாகப் புரிந்து, மக்களின் தற்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த செயல்திட்டத்துடன் செயல்பட்டால் மட்டுமே தாக்கத்தை உருவாக்க முடியும். வெறும் சித்தாந்தப் பிடிவாதமும், எதிர்ப்பு அரசியலும் இவர்களைத் தொடர்ந்து ஓரங்கட்டியே வைத்திருக்கும்.
தமிழ்மணி
.png)
No comments:
Post a Comment