கவிதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு மாவோவைப் படியுங்கள்!
***
இரு பறவைகள் :
ஒரு உரையாடல்
(இலை உதிர் காலம் 1965)
அந்தப் பெரும் பறவை (1)
தன் இறகுகளை விசிறியாய் விரித்து,
தொண்ணூராயிரம் லி தொலைவு உயர்ந்து
சீறும் புயலைக் கிளப்புகிறது.
அதன் முதுகுக்கு மேலே நீலவான் இருக்க,
ஊர்களும் நகரங்களும் உள்ளடங்கிய
மனிதனின் உலகை அளவிட
அது
கீழே பார்க்கிறது;
துப்பாக்கி வெடிப்புகள் விண்ணைச் சிராய்க்கின்றன
பீரங்கிக் குண்டுகள் நிலத்தினைத் துளைக்கின்றன,
ஒர் சிட்டுக் குருவி (2) தன் புதருக்குள்ளே
அஞ்சி விறைந்து நிற்கிறது
"சே, என்ன இது ஓர் குழப்பப் பாழ் நரகம்!
ஓ, நான் இதிலிருந்து நழுவிப் பறந்து விட விரும்புகிறேன்".
"எங்கே என நான் கேட்கலாமோ?" எனப் பெரும் பறவை வினவ, சிட்டுக் குருவி விடை சொன்னது:
"தேவதை நாட்டு மலைகளின் மீதே இரத்தினங்கள் பதித்த மாளிகைக்கு.
இரண்டாண்டு முன்பு,
இலையுதிர் கால ஒளிமிகு நிலவில் மும்முனை ஒப்பந்தம் (3) கையெழுத்தானது
உனக்குத் தெரியாதா?
அங்கே வயிறு புடைக்கத் தின்னலாம்,
ஆவி பறக்கும் உருளைக் கிழங்குடன்,
மாட்டிறைச்சி நிறைந்த உணவு வகை உண்டு (4)".
பெரும் வரவை சொன்னது:
"நிறுத்து உன் வெற்று உளறலை. உற்று நோக்கு - உலகம் தலை கீழாய்ப் புரட்டப்படுவதை".
- மாவோ
****
(1)- பெரும் பறவை: இது சீனப் பழங்கதைகளில் கூறப்படும் கற்பனைப் பறவை. ஆயிரம் லி நீளமுள்ள குன் எனும் வட கடல் மீன் ஆயிரம் லி நீளமுடைய பறவையாக மாறியது என்று இக்கதைகள் கூறுகின்றன. இப்பறவை தொண்ணூறாயிரம் லி உயரம் பறக்கக் கூடியதாம். மேகம் போல விரியும் இதன் இறகுகள் சூறாவளியைக் கிளப்பக் கூடுமாம். இங்கு இது மார்க்சிய-லெனினியப் புரட்சியாளர்களுக்கான குறியீடாக நிற்கிறது.
(2)-சிட்டுக் குருவி: புரட்டலாளருக்கான குறியீடு; புரட்சி முதன்மையானதல்ல, உற்பத்தியே முதன்மையானது என்பவர்கள் இவர்கள்-உலக அளவில் குருச்சேவைத் தலைவனாகக் கொண்டவர்கள். உலகிலும் சீனத்திலும் ஏற்பட்ட புரட்சி எழுச்சியையும் கொந்தளிப்பையும் 'குழப்பப்பாழ் நரகம்" எனக் கருதுபவர்கள்.
(3)-மும்முனை ஒப்பந்தம்: 1963 ஆம் ஆண்டு குருச்சேவ் காலத்தில் சோவியத் யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை செய்து கொண்ட போலித்தனமான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம்.
(4)-புரட்டலாளர்கள் குருச்சேவின் சுரண்டல் கொள்கையில் நம்பிக்கை வைக்கிறார்கள். மும்முனை ஒப்பந்தத்தை மதிக்கிறார்கள். குருச்சேவின் 'மாட்டிறைச்சி-உருளைக் கிழங்கு' சோசலிசத்தைப் பாராட்டி நாடுகிறார்கள். 'பாட்டாளி வர்க்கம் தனது உலகக் கண்ணோட்டத்திற்கேற்ப உலகை மறுவார்ப்புச் செய்தல்' என்பதை மறுக்கிறார்கள்-இவைதான் சிட்டுக் குருவி உவமையில் சொல்லப்படுகின்றன. புரட்சியாளர்களோ (பெரும்பறவை) உலகம் புரட்சிகரமாக மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.
1965-ஆம் ஆண்டு முதலில் எழுதப்பட்ட கவிதை மீண்டும் 1976-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு நாளில் வெளியிடப்பட்டது. புரட்டலாளர்களுக்கு எதிராக மாவோ நடத்திய இறுதிப் போராட்டத்தில் இக் கவிதைக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.
***
கவிதை என்றால் உவமைகள் இப்படி அல்லவோ இருக்க வேண்டும்?
நூல்: மா சே துங் கவிதைகள்: பொதுமை வெளியீடு, 1981.
No comments:
Post a Comment