காங்கிரஸ் அம்பேத்கருக்கு எதிரியா?
நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை அவமானப்படுத்திப் பேசிய அமித்ஷாவை,
மந்திரி சபையில் இருந்து நீக்கி, அவர் மீது வழக்குத் தொடுத்து, கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடெங்கிலும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
பெருகி வரும் போராட்டங்களைக் கண்டு குலை நடுங்கிப் போன சங்கிக் கூட்டம்,
"மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் இருக்கக் கூடாது-ஒன்றியத்திற்குத்தான் அதிகாரம் இருக்க வேண்டும், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டம் 370 கூடாது, அரசமைப்புச் சட்டத்தில் சோசலிசம்-மதச்சார்பின்மை ஆகியவற்றைச் சேர்க்கக்கூடாது என்று அம்பேத்கர் சொன்னதாகவும்,
அரசமைப்புச் சட்டம் உருவாக்குவதற்கான அவையில் அம்பேத்கரை சேர்ப்பதற்கு காங்கிரஸ் இடையூறாக இருந்ததாகவும், நேரு கொடுத்த நெருக்கடியால்தான் அமைச்சர் அவையில் இருந்து அம்பேத்கர் பதவி விலகியதாகவும், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதற்கு காங்கிரஸ் எதிராக இருந்ததாகவும்,
அந்தக்காலத்திலேயே
காங்கிரஸ்தான் அம்பேத்கரை அவமானப்படுத்தியது,
மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் அம்பேத்கருக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது"
என்று நைச்சியமாகப் பிரச்சாரம் செய்து, அம்பேத்கரைத் தங்களுக்கானவராகக் காட்ட முயற்சிக்கிறது பார்ப்பன சனாதனக் கூட்டம். ஒருவேளை இவர்கள் கூற்று உண்மை என்றே ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டாலும்கூட, அதற்கும் அன்று காங்கிரசை இயக்கிய பார்ப்பனக் கூட்டமே பொறுப்பேற்க வேண்டும்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரி யார்?
பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்டத்திலேயே அம்பேத்கர் அவர்கள் வழி வகுத்திருந்த போதும், இது தொடர்பாக அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு அறிக்கையை செயல்படுத்த விடாமல் முடக்கியும், அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து அமைக்கப்பட்ட மண்டல் குழுவிற்கு எதிராகவும் மிகப்பெரிய கலவரத்தைச் செய்தவர்கள் பார்ப்பனர்கள்.
பார்ப்பனர்களால் சூழப்பட்டிருந்த அன்றைய நேரு, இந்திரா காந்தி கால காங்கிரஸ் வேறு. சமூக நீதி எனும் தெளிந்த நீரோடையில் நீந்திக் கொண்டிருக்கும் ராகுல், பிரியங்காவின் இன்றைய கால காங்கிரஸ் வேறு.
இன்று, பார்ப்பனர்கள் தங்களுக்கு என பாரதிய ஜனதா கட்சியை உருவாக்கிக் கொண்டதால் ஒட்டுமொத்த பார்ப்பனக் கூட்டமும் அங்கே அடைக்கலமாகி, ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றி, EWS உள்ளிட்ட சட்டத் திருத்தங்கள் என இந்திய அரசமைப்புச் சட்டத்தையே தங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, 'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற சட்ட திருத்தத்தைக் கொண்டு வருவதற்கான அரசமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின் போது,
ஒரு பக்கம் அம்பேத்கரின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே,
"அம்பேத்கர் பெயரைச் சொல்லுவது ஒரு பேஷனாகிவிட்டது. அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்.... என்று சொல்வதற்குப் பதிலாக கடவுளின் பெயரைச் சொன்னாலாவது ஏழு பிறப்பிலும் புண்ணியம் கிடைக்கும்" என்று கடைசியில் அம்பேத்கர் முகத்தின் மீது நரகளை வீசி இருக்கிறார் அமித்ஷா.
இதை மட்டும் கவனமாக மறைத்துவிட்டு, அம்பேத்கரின் தொகுப்புகளைப் படிக்காமல், அதிமுக பார்ப்பனர் ஹண்டேவின் குறிப்புகளை மட்டும் சுமந்து கொண்டு வருகிறது பார்ப்பனக் கூட்டம்.
ஒரு தலைவர், அவர் கொண்டிருந்த சித்தாந்தமும், தான் வாழ்ந்த காலத்தில் அவர் முன்னெடுத்தப் போராட்டங்களுமே அவர் யாருக்கானவர் என்பதைப் புரிய வைக்கும்.
தாழ்த்தப்பட்டோர் மீது திணிக்கப்பட்ட சாதி தீண்டாமைக்குக் காரணமான பார்ப்பன சனாதன இந்து மதத்தை ஒழித்துக் கட்டி, சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகத்தைப் படைப்பதைத் தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்த ஒரு தலைவரை,
இதற்கு நேர் எதிரான,
சாதித் தீண்டாமையை நியாயப்படுத்தும், சனாதானக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட இந்துராஷ்டிரத்தை அமைப்பதற்காகச் செயல்பட்டு வரும் ஒரு கூட்டம், அம்பேத்கரை சொந்தம் கொண்டாடுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.
***
வேலூரில் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள் அமித்ஷாவுக்கு எதிராக நடத்தி வரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக 21.12.2024, சனிக்கிழமை காலை 11 மணி அளவில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில்,
"அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கைது செய்! பதவி விலகு!" என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ம.க.இ.க மாவட்டச் செயலாளர் தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்,
பு.ஜ.தொ.மு மாவட்டப் பொருளாளர்
தோழர் பாபு, மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி தலைமைக் குழு உறுப்பினர் தோழர் சா.குப்பன், ஏ.ஐ.சி.சி.டி.யு மாவட்டத் தலைவர் தோழர் ஏழுமலை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டத் தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மாநகரச் செயலாளர் தோழர் பிலிப், தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தரைக்கடை கிளைச் சங்கச் செயலாளர் தோழர் சேட்டு,
சி.பி.ஐ.எம்.எல் (விடுதலை) மாவட்டச் செயலாளர் தோழர் சரோஜா, மக்கள் கலை இலக்கியக் கழக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
இறுதியாக, பு.ஜ.தொ.மு மாவட்டச் செயலாளர் தோழர் சரவணன்
நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்மணி
No comments:
Post a Comment