அதிகரித்து வரும் சமூகப் பதட்டங்கள், வேலையின்மை, பொருளாதார நிலைகள் குறித்து சில இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதோடு, ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒருசில பொதுவுடமை அமைப்புகளில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு களமாட விரும்புகின்றனர்.
சமூக எதார்த்தம் குறித்தப் போதிய அனுபவப் புரிதலின்மையால், அவர்கள் விரைவில் சோர்வுற்று, தாங்கள் சேர்ந்த அமைப்பில் ஏதோ கோட்பாட்டுப் பிரச்சனை இருப்பதாகக் குழம்பி, புதிய வழிகள் கிடைக்குமா என புத்தகங்களில் தேடுகின்றனர். நாலு புத்தகங்களைப் படித்து விட்டு அவர்களும் வேறு வேறு திசைகளில் சிந்திக்கத் தொடங்கி அவர்களுக்குள்ளும் வேறுபட்டு விரத்தியின் விளிம்புக்குச் சென்று எதுவுமே சரி இல்லை என்று புலம்பத் தொடங்குகின்றனர்.
புரட்சிக்கு புதிய வழியைக் கண்டுபிடித்து விட்டதாக அதில் சில இளைஞர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். சில பக்கங்களை எழுதி, சில கூட்டங்களை நடத்தி புரட்சி பூபாலம் பிறந்து விட்டதாக புலகாங்கிதம் அடைகின்றனர். சில மாதங்களிலேயே 'கடை விரித்தும் கேட்பாரில்லை' என்ற கதையாக மீண்டும் விரக்திக்குத் தள்ளப்பட்டு சொந்த வாழ்க்கைக்குத் திரும்பி ஏற்கனவே செயல்படும் இயக்கங்களைச் சீண்டிக் கொண்டே காலத்தை ஓட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் மார்க்சியம் பேசுவோரின் பொதுத் தன்மை இது. தமிழ்நாட்டின் மாற்று புரட்சிகர அரசியல் சக்தியாக வளர்ந்து கொண்டிருந்த மகஇக - வின் இன்றைய நிலையும் இதுதான்.
2019-20 ஆம் ஆண்டுகளில் அன்றைய மகஇக பொதுச் செயலாளர் தோழர் மருதையன் மீது காழ்ப்பு கொண்ட கட்சியின் மூத்தத் தோழர் ஒருவரால் மருதையன் அமைப்பை விட்டே வெளியேற நேர்ந்தது. இந்தப் பிரச்சினையில் அமைப்பின் பெரும்பான்மையினர் மருதையனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த போதும், அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு தோழரும் வேறு சிலரும் அமைப்பை விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர்களும் இரண்டாக உடைந்தனர்.
அமைப்பு பிளவுக்குக் காரணமாக இருந்த அந்த இரு மூத்த தோழர்களுமே தற்போது உயிரோடு இல்லை. இந்த நிலையிலாவது பிரிந்து சென்றவர்கள் ஒன்று படுவார்கள் என்று பார்த்தால், அதற்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இதில் மகஇக-விலிருந்து பிரிந்து சென்றதாக, "இளம் கம்யூனிஸ்ட் கழகம்" என்ற பெயரில் சில இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். எதற்கு இந்த வீண் முயற்சி என்று தெரியவில்லை. பிளவு பட்டவர்களை ஒன்றிணைத்து கூட்டாகச் சேர்ந்து அமைப்பில் இருப்பதாக கருதும் 'கோட்பாட்டுப் பிரச்சனையைத்' தீர்ப்பதால் மட்டும்தான் அது தோழர்களுக்கும் நல்லது பொதுவுடமையை நேசிப்பவர்களுக்கும் நல்லது. அதை விடுத்து தனியாக ஆவர்த்தனம் பாடிக் கொண்டிருப்பதால் சில காலம் கழித்து விரக்தி மட்டும்தான் மிச்சமிருக்கும். வரலாறு உணர்த்தும் பாடம் இது.
எல்லோரும் இங்கு கன்றுக்குட்டிகள்தான். உழவுக்கு பழக்கப்படாத வரை கன்றுக் குட்டிகள் துள்ளிக் கொண்டுதான் இருக்கும். பயன்பாட்டுக்குரிய எருதுகளாய் மாறுவதற்கு கூட்டு முயற்சி ஒன்றுதான் இன்றைய தேவை. ஒற்றைக் காளையால் ஒரு போதும் உழ முடியாது.
கூட்டு முயற்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்கிற அடிப்படையான அமைப்புக் கோட்பாட்டு நடைமுறை மிக மிக அவசியம். பெரும்பான்மைக்குச் சிறுபான்மை கட்டுப்பட்டு ஒன்றாகச் செயல்பட்டால் மட்டும்தான் தமிழ்நாட்டில் புரட்சிகர அரசியல் மீண்டும் உயிர் பெற்று எழ முடியும்.
பல்லாயிரக்கணக்கான தோழர்களின் அர்ப்பணிப்பு தியாகங்கள் தொகுக்கப்படாத நிலையில் அவர்களின் வலி காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது. துயரர்களின் வலியை தனது வலியாக உணர்ந்தால் மட்டுமே நோயைத் தீர்க்க முடியும்.
தமிழ்மணி
முன்னாள் மகஇக மாநில செயற்குழு உறுப்பினர்
No comments:
Post a Comment